Friday, August 26, 2011

அம்பேத்கர் வழியில் வந்த அவர்களை வணங்குகிறேன்!


இன்று (26.08.2011) காலை சுமார் பதினொரு மணியளவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி) முன்னாள் தலைவர் திரு.எஸ்.கே.தோரட் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டார்.அவர் இந்து நாளேட்டில் லோக்பால் குறித்து எழுதியிருந்த கட்டுரையைச் சுட்டிக்காட்டிப் பாராட்டினேன். அவருடைய கட்டுரை வெளியானதற்கு முந்தைய நாள்தான் அருந்ததி ராயின் கட்டுரை வெளியாகியிருந்தது .(இதை எழுதும்போது இந்து நாளேட்டின் இணையதளத்தை சோதித்தேன். அருந்ததியின் கட்டுரைக்கு 1031 எதிர்வினைகள் பதிவாகியிருந்தன. தோரட்டின் கட்டுரைக்கு 229 எதிர்வினைகள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டிருந்தன.) இரண்டு கட்டுரைகளுமே அண்ணா அசாரேவின் வழிமுறைகளை ஏற்கவில்லை என்றபோதிலும் வேறுவேறு அணுகுமுறைகளைக் கொண்டிருந்தன.

கடந்த சில நாட்களாக இந்திய ஊடகங்களின் உயிர்க்காற்றாக மாறிவிட்டிருக்கும் லோக்பால் பிரச்சனையை மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு எப்படி தீர்க்கப்போகிறது எனத் தெரியவில்லை. பிரதமர் மன்மோகன் பேசியதற்கும், ராகுல் பேசியதற்கும் இடையே நிறைய வேறுபாடுகள்  இருக்கின்றன. மன்மோகனின் சரணாகதிப் பேச்சிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக ராகுலின் பேச்சு இருந்தது.நாளையதினம் நாடாளுமன்றத்தில் வெளிப்படப்போவது மன்மோகனின் கருத்தா அல்லது ராகுலின் கருத்தா என்பதைக் கவனிக்கவேண்டும். மன்மோகன்சிங் ஓய்வெடுக்கப் போவதற்கான நேரம் நெருங்கிவிட்டது என்பது தெளிவாகிவிட்டது. அவர் இனிமேலும் பிரதமர் பொறுப்பிலிருந்துகொண்டு சிரமப்படத் தேவையில்லை. அவர் பதவியில் நீடித்தால் பாரதிய ஜனதாவுக்கென்று தனியே ஒரு தலைவரை நியமிக்கத் தேவையிருக்காது. அந்த அளவுக்கு பி.ஜே.பியை வளர்க்கின்ற பணியில் ஈடுபட்டிருக்கிறார் மன்மோகன் சிங்.  இது காங்கிரஸின் உள்கட்சிப் பிரச்சனை என்று நாம் ஒதுங்கிக்கொள்ள முடியாது. நரசிம்ம ராவ் வளர்த்துவிட்ட இந்துத்துவம் இந்த நாட்டையே சூறையாடியது,  பல்லாயிரக் கணக்கான உயிர்களைப் பலிவாங்கியது. அதுபோல மன்மோகன் சிங்கின் சரணாகதி அணுகுமுறையும் எதிர்கால இந்தியாவை நாசம் செய்யப் போகிறது. அதில் சந்தேகமே இல்லை.

தோரட்டோடு பேசிக்கொண்டிருந்தபோது அவரிடம் லோக்பால் குறித்த என் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். தற்போது அரசுப் பணிகளில் மட்டும்தான் இட ஒதுக்கீடு இருக்கிறது.அதுவும் சரிவர நிரப்பப்படுவதில்லை. ’பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவோம்’ என்பது அரசியல் கட்சிகளின் போலி வாக்குறுதிகளில் ஒன்றாகிவிட்டது.பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு இல்லை என்றார்கள், உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும்கூட பல மாநிலங்களில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை. தட்டுத் தடுமாறி தலித் ஒருவர் பதவி உயர்வுக்குத் தகுதி பெற்றால் அவர்மீது இல்லாததும் பொல்லாததுமான குற்றச்சாட்டுகளைச் சொல்லி அவருக்கு ‘மெமோ’ கொடுத்து , பதவி உயர்வுக்குத் தகுதியில்லாமல் ஆக்கிவிடுவது ஆதிக்க சாதியினரின் சதிவேலைகளில் ஒன்று. அப்படியான சூழலில் அண்ணா அசாரேவின் லோக்பால் மசோதா சட்டமாகிவிட்டால் அதனால் தலித்துகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஏற்றத் தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட இந்திய சமூகத்தில் எல்லையற்ற அதிகாரத்தோடு ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டால் ,அதில் தலித்துகள் இடம்பெறுவதற்கு வழியில்லையென்றால் நிச்சயம் அது சாதிய சமூகத்தின் பாரபட்சங்களை மறு உற்பத்தி செய்யும். செல்வாக்கு உள்ளவர்களையும், வலிமையானவர்களையும் லோக்பால் அமைப்பு தண்டிக்கும் என்று சொல்ல முடியாது, ஆனால் தலித்துகள் நிச்சயம் அதனால் பலியிடப்படுவார்கள். இந்த ஆபத்தை உணர்ந்தே தலித் அறிவுஜீவிகள் லோக்பால் மசோதாவை, அண்ணா அசாரேவை எதிர்க்கிறார்கள்.

தோரட் ஒரு யோசனையைத் தெரிவித்தார். ’தலித் ஒருவரைப் பற்றி லோக்பால் அமைப்பிடம் புகார் தெரிவிக்கப்பட்டால் அந்தப் புகாரில் சாதிய காழ்ப்பு இருக்கிறதா என்பதை ஆராயவேண்டும். அப்படி ஆராய்வதற்குத் தனியே ஒரு அமைப்பை உருவாக்கத் தேவையில்லை. தற்போது மத்தியிலும் மாநிலங்களிலும் இருக்கின்ற தாழ்த்தப்பட்டோர் ஆணையமே அதற்குப் போதும்’ என்று தோரட் சொன்னார்.அதைப்பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுதி  அதை நாடாளுமன்ற தலித் உறுப்பினர்களிடையே சுற்றுக்கு விட்டிருப்பதாகவும் சொன்னார்.

பாபர் மசூதி இடிப்பின்போதும் அதற்குப் பிறகான வன்முறைகளிலும் எஸ்.சி/எஸ்.டி பிரிவைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டதாகப் பழிபோட்டார்கள். அதுபோலத்தான் குஜராத் கலவரத்துக்குப் பிறகும் சொன்னார்கள். லோக்பாலைப் பற்றியும் அப்படியொரு விமர்சனம் வந்திருக்கலாம். ஆனால் அதற்கு வாய்ப்பெதுவும் தராமல் தலித்துகள் சரியாகத் தமது உணர்வுகளை,ஐயங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அம்பேத்கர் வழியில் வந்த அவர்களை வணங்குகிறேன்!

1 comment:

  1. It is an open secret that deemed universities proliferated when Thorat was heading UGC.Do these deemed universities have reservations for Dalits.Why he could not ensure that.Why minority institutions are exempted from any reservation.

    ReplyDelete