தீக்குளித்து உயிர்நீத்த செங்கொடி |
மக்கள் மன்றம் தோழர்களுக்கு |
தமிழ்நாட்டில் ஒவ்வொருநாளும் மரணதண்டனைக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருகிறது. பேரறிவாளன், சாந்தன்,முருகன் ஆகியோரது மரண தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று முழங்கி செங்கொடி என்ற இளம்பெண் தீக்குளித்து உயிர் துறந்திருக்கிறார்.
காஞ்சிபுரத்தில் உள்ள மக்கள் மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்த செங்கொடி ஓரிக்கை என்ற கிராமத்தில் பிறந்தவர்.சிறுவயதிலேயே தாயை இழந்துவிட்ட அவரை சுமார் எட்டு வயதாக இருக்கும்போதே மக்கள் மன்றத்தில் கொண்டுவந்து வளர்த்துள்ளனர். இப்போது அவருக்கு வயது இருபத்தொன்று. கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அரசியல் பாடல்களைப் பாடுவதிலும், ஆடுவதிலும் தேர்ச்சி பெற்றவர் செங்கொடி. அரசியல் ரீதியான விழிப்புணர்வுள்ளவர், பலவிதமான நூல்களையும் தேடிப்பிடித்துப் படிப்பவர். அண்மைக்காலமாக மரண தண்டனைக்கு எதிரான போராட்டங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்துகொண்டிருந்தார். நேற்று இரவு மக்கள் மன்றத்தின் பொறுப்பாளர் தோழர் மகேஷ் அவர்களோடு பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்குத் தண்டனை குறித்து அவர் வெகுநேரம் கவலையோடு விவாதித்திருக்கிறார். இன்று மக்கள் மன்றத் தோழர்கள் மறைமலை நகரில் நடைபெற்ற மரண தண்டனை ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுவிட்ட நிலையில் செங்கொடிகடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் வந்து மாலை ஐந்தரை மணியளவில் 'மரண தணடனை ஒழிக!' என முழக்கம் எழுப்பியவாறு தான் கொண்டுவந்திருந்த கேன்களில் இருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றி தனது உடலில் தீவைத்துக்கொண்டிருக்கிறார். அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு அவரது உயிர் பிரிந்துவிட்டது. அவர் உயிரிழந்த செய்தி மாநாட்டு மேடையில் இருந்தபோது எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. மாநாடு முடிந்ததும் தலைவர் திருமாவளவன் அவர்களோடு காஞ்சிபுரம் சென்றேன். அங்கு இருந்த மக்கள் மன்றம் தோழர்களுக்கு ஆறுதல் சொன்னோம். 29 அல்லது 30 ஆம் தேதி செங்கொடியின் இறுதி நிகழ்ச்சி நடத்தப்படலாம்,அதுவரை அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
தோழர் செங்கொடி மிகவும் ஏழ்மையான இருளர் என்ற பழங்குடியினக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.அவர் எழுதிவைத்துவிட்டுச் சென்ற கடிதம்:
“ தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியதுபோல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரைக் காப்பாற்றப் பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.
இப்படிக்கு
தோழர் செங்கொடி”
No comments:
Post a Comment