Saturday, September 20, 2014

பத்மினி கோபாலனை சந்தித்தேன்


பத்மினி கோபாலனை சந்தித்தேன்


மான்டிசோரி கல்விமுறையை சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பிரபலப்படுத்தி வருபவர் பத்மினி கோபாலன் ' சில்வர் டங்' ஶ்ரீனிவாச சாஸ்திரியின் மகள் வழிப் பேத்தி. எண்பது வயதில் இந்த அறப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். 


இன்று ( 20.09.2014) மாலை ஐந்து மணியளவில் பேராசிரியர் கல்யாணியோடு சென்று அவரை சந்தித்தேன். சுமார் இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். வீட்டின் வரவேற்பறையில் கம்பீரமாக ஒரு பெண்மணியின் ஓவியம் மாட்டப்பட்டிருந்தது. அது அவரது அம்மாவா என்று கேட்டேன். பாட்டி- ஶ்ரீனிவாச சாஸ்திரியின் மனைவி என்றார். பெயர் லக்ஷ்மி. தஞ்சை மன்னார்குடியைச் சேர்ந்தவர். ஶ்ரீனிவாச சாஸ்திரி வலங்கைமான்காரர். உலகப் புகழ்பெற்றது அவரது ஆங்கிலப் புலமை. ஆனால் சாஸ்திரியின் மனைவி லக்ஷ்மியோ எழுதப் படிக்கத் தெரியாதவர். 


ஆசாரங்களைப் பின்பற்ற விருப்பமில்லாத சாஸ்திரியின் நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்த அவரது உறவினர்கள் அவரது மனைவியை ஒருமுறை காசி யாத்திரைக்கு அழைத்தார்களாம். முதலில் வருவதற்கு ஒப்புக்கொண்ட லக்ஷ்மி அம்மையார் எதற்காக அந்த யாத்திரை என்று கேட்டாராம். உன் கணவர் ஆசாரங்களைக் கடைபிடிக்கவில்லை அந்தப் பாவத்தைப் போக்குவதற்குத்தான் உன்னை காசிக்கு அழைத்துச் செல்கிறோம் என்று அவர்கள் பதில் சொன்னார்களாம். அதைக் கேட்ட அந்த அம்மையார் ' நானோ என் கணவரோ எந்தப் பாவமும் செய்யவில்லை. நான் காசிக்கு வரவேண்டிய அவசியமும் இல்லை' என மறுத்துவிட்டாராம். 


தனது பாட்டியைப் பற்றிப் பேசும்போது பத்மினி கோபாலன் அவர்களின் குரலில் கம்பீரம் கூடி முகம் பிரகாசித்தது. கல்வியோடு நல்ல பண்பாட்டையும் புகட்டுகிற 

மான்டிசோரி முறையைப் பரவலாக்குவதில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறார். " நான் ஒரு கல்வியாளர் அல்ல. எனது முயற்சியிலேயே பத்துக்கும் மேற்பட்ட மாநகராட்சிப் பள்ளிகளில் அந்தக் கல்விமுறையை அறிமுகப்படுத்த முடிந்திருக்கிறது. கல்வியாளர்கள் இதில் கவனம் செலுத்தினால் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கமுடியும்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் அவர். 

ஜனநாயகம் குறித்த கருத்தரங்குஇந்திய ஜனநாயகத்தின் பல்வேறு பரிமாணங்களை ஆய்வு செய்யும்விதமாக கருத்தரங்கு ஒன்றினை முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் இன்று (20.09.2014) சென்னையில் ஒருங்கிணைத்தார். சவேரா ஓட்டலில் காலை 10மணிக்குத் துவங்கிய நிகழ்வு பகல் 2 வரை நடந்தது. நான் அதில் கலந்துகொண்டு 'அம்பேத்கர் பார்வையில் பெரும்பான்மை சிறுபான்மை ' என்ற தலைப்பில் பேசினேன். நிகழ்வில் முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி பெல்லியப்பா, சென்னைப் பல்கலைக்கழக ஊடகவியல் துறையைச் சேrந்த பேராசிரியர் ரவீந்திரன், காங்கிரஸ் கட்சியின் கோபண்ணா, எழுத்தாளர் இரா. முருகன் முதலானோரும் பேசினர். 


எனது உரையைக் கேட்க விரும்புவோர் தமது மின்னஞ்சல் முகவரியை அனுப்புங்கள்

Friday, September 19, 2014

பள்ளிகளில் பாகுபாடு

மணற்கேணி பதிப்பகத்தின் அடுத்த வெளியீடு


பள்ளிகளில் பாகுபாடு


தமிழில்: பேராசிரியர் சே. கோச்சடை


பள்ளிகளில் இருக்கும் சாதிய பாகுபாடுகளைக் களைவதற்கான தேசிய அறிவுரை மன்றத்தின் (NAC) செயல்திட்ட அறிக்கை. இந்தியப் பள்ளிகளில் நிலவும் சாதிய பாகுபாடுகளை வகைப்படுத்தி அட்டவணையிட்டிருக்கும் இந்த அறிக்கை அவற்றைக் களைவதற்கு ஆசிரியர்களும், அரசாங்கமும், சமூகமும் செய்தவேண்டிய பணிகளை ஒரு செயல்திட்டமாக முன்வைக்கிறது. சமத்துவத்தின்மீது நம்பிக்கைகொண்ட அனைவர் கையிலும் அவசியம் இருக்கவேண்டிய ஆவணம். ஆங்கிலத்தில் வெளியான இந்த அறிக்கையை பேராசிரியர் சே. கோச்சடை எளிமையாகப் புரியும் விதத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். 56 பக்கங்கள் 

25/- ரூபாய் 
Monday, September 15, 2014

மணற்கேணி வழங்கும் ' நிகரி' விருதுவகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் பள்ளி& கல்லூரி ஆசிரியர் இருவருக்கு செப்டம்பர் 24 பூனா ஒப்பந்த நாளில் மாலை 6 மணிக்கு விழுப்புரம் போதி அய்.ஏ. எஸ் அக்கடமியில் வழங்கப்படுகிறது. 


2014 ஆம் ஆண்டுக்கான விருது பெறுவோர்: 


ஆசிரியர் இரா. நடராசன்

பேராசிரியர் கி. நாச்சிமுத்து


வாழ்த்துரை: 


பேராசிரியர் பா. கல்யாணி

எழுத்தாளர் இமையம்


விருதுகள் வழங்கி சிறப்புரை: 


மூத்த பத்திரிகையாளர் ஞாநி


சமத்துவத்தில் நம்பிக்கைகொண்ட அனைவரும் வருக! 

Saturday, September 13, 2014

1. என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?

அகிலேத் ஷகார் என்னும் இராகத்தில் பாடி, இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)


1. என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு இரட்ச்சியாமலும் செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?

2என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவு பதிலில்லை; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை.

3இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்.

4எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்.

5உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாதிருந்தார்கள்.

6நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.

7என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி:

8கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்கிறார்கள்.

9நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என் தாயின் மார்பில் இருக்கும் போதே என்னை உம்மேல் நம்பிக்கையாய் இருக்கப்பண்ணினீர்.

10கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாயிருக்கிறீர்.

11என்னைவிட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து நெருங்கியிருக்கிறது, சகாயரும் இல்லை.

12அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டன.

13பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்.

14தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டன, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.

15என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்.

16நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கினறன; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.

17என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

18என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போடுகிறார்கள்.

19ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்.

20என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் கொடூரத்திற்க்கும் தப்புவியும்.

21என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் பதிலருளினீர்.

22உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.

23கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள்.

24உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.

25மகா சபையிலே நான் செலுத்தும் துதி உம்மாலே உண்டாகும்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.

26சிறுமைபட்டவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும்.

27பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய வம்சங்களெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்.

28ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர்.

29பூமியின் செல்வந்தர் யாவரும் புசித்துப் பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக்கூடாதே.

30ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.

31அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிற ஜனங்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள்.

Thursday, September 11, 2014

அக்டோபர் – 12 செம்மொழி நாள் ஆய்வரங்கு


வணக்கம்


ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல்தேதியை செம்மொழி நாளாகக் கடைப்பிடிக்க கேரள அரசு முடிவுசெய்திருக்கிறது. மலையாள மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் கொடுக்கப்பட்டதையடுத்து கேரள அரசு இதை அறிவித்திருக்கிறது. 


 கேரள மாநில கலாச்சாரத் துறையும், கேரள சாகித்ய அகாதமியும் இணைந்து மாவட்டம்தோறும் நிகழ்ச்சிகளை இதற்காக ஏற்பாடு செய்யவிருக்கின்றன. கேரள சாகித்ய அகாதமி மலையாளத்தில் இருக்கும் பழமையான ஆயிரம் நூல்களை எண்வயத் தொழில்நுட்பத்தின்மூலம் ( Digitisation)  பிரதியெடுத்து நூலகங்களுக்கு இலவசமாக வழங்க முடிவுசெய்திருக்கிறது. மொழிபெயர்ப்புக்கென தனியாக ஒரு பிரிவும் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்தத் தகவல்களை கேரள கலாச்சாரத் துறை அமைச்சர் கே.சி.ஜோசப் தெரிவித்திருக்கிறார்.


 தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் வழங்கப்பட்டதுகுறித்துப் பெருமைபடப் பேசி மகிழும் நாம் அந்த அங்கீகாரம் கிடைத்த நாளை நினைவுகூரும் விதமாக எதையும் செய்யவில்லை என்பதை  நினைத்தால் வருத்தமே எஞ்சுகிறது.அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி  தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்கும் ஆணையை  மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது( அரசாணை எண்: IV-14014/7/2004-NI-II dated 12.10.2004.) அந்த நாளை நாம் ஏன் கேரள அரசு செய்வதுபோல செம்மொழி நாளாகக் கடைபிடிக்கக்கூடாது?  மாநில அரசாங்கம்தான் இதைச் செய்யவேண்டும் என்பதில்லை.நாமே முனைந்து இதை முன்னெடுத்தாலென்ன? 


மணற்கேணி ஆய்விதழ் சார்பில் எதிர்வரும் அக்டோபர் 12 , ஞாயிறன்று ’ செம்மொழி நாள் ஆய்வரங்கு ‘ ஒன்றை விழுப்புரத்தில் ஏற்பாடுசெய்ய விரும்புகிறேன். தமிழ் மொழியைக் கொண்டாடுவதோடு மட்டுமின்றி அதை மேலும் வளப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை வகுப்பதாகவும் இந்த ஆய்வரங்கு அமையவேண்டும். 


இந்த ஆய்வரங்கில் பங்கேற்று ஆய்வுரை வழங்கிடுமாறு சிலரிடம் கேட்டிருக்கிறேன். இந்த ஆய்வரங்கைப் பயனுற நடத்துவதற்கு ஆலோசனைகளை வரவேற்கிறேன். 


   

அன்புடன்,

ரவிக்குமார்    

ஆசிரியர், மணற்கேணி

Tuesday, September 9, 2014

குரோஷிய கவிஞர் மிர்கோ போஸிக் கவிதை தமிழில்: ரவிக்குமார்

 


ஹிரோஷிமா

=====

ஒரு சராசரி அணுகுண்டு 

ஒரு காலையில் 

ஒரு சராசரி நகரில் விழுந்தது 

மிகவும் சராசரியான மனிதர்களை 

சராசரி தூசாக மாற்றிவிட்டது

Monday, September 8, 2014

அல்பேனியக் கவிஞர் விஷார் ஷைதி கவிதைகள் தமிழில்: ரவிக்குமார்

1. அதலபாதாளம்


எங்கள் தேசம் மரித்தோரிடையே வாழ்கிறது

வாழ்வோரிடையே மரித்துப்போகிறது


சில நேரங்களில் 


2. ஹோமரின் சமுத்திரம்


அந்த கடற்கரைக்கு நான்

அடிக்கடி செல்கிறேன் 

கடல் நீரில் என் காலணிகளை அவிழ்த்து விடுகிறேன்

என்ன நடக்கிறதென அறியேன் 

எனது காலணிகள் பெரிதாகி பெரிதாகி 

கப்பல்களாகின்றன 

அதில் ஏராளமான யுலிசஸ்கள்

கரைக்குத் திரும்புகிறார்கள் 


வெறுங்காலோடு அவர்களை வரவேற்கச் செல்கிறேன் 

தழுவிக்கொள்கிறேன்


3.சின்ன விஷயங்கள்


ஒரேயொரு இலையை வைத்துக்கொண்டு கானகத்தைப்பற்றிப் பேசமுடியுமா

ஒரேயொரு நட்சத்திரம்

நீங்கள் தனித்து இல்லை என்பதை உறுதிப்படுத்தும், 

கைவிடப்பட்ட ஒரு காலணி 

உயிர்ப்பிக்கிறது அந்தமில்லா சாலைகளை 

பரோமதீயஸின் நெருப்பில்

ஒரு சிகரெட்டைப் பற்றவை 4. காலம்


எனது விரல்களில் தனது மோதிரங்களை அணிவிக்காமல் எப்படி அது நழுவிச் செல்கிறது


நான் வெறுமனே அதன் காதலனாய் இருக்கின்றேன்

Sunday, September 7, 2014

வாசிப்பின் அரசியல்

ஆங்கிலத்தில் Historian of Books என்று சிலரை அழைக்கிறார்கள். Robert Darnton அதில் முக்கியமானவர். ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Roger Chartier குறிப்பிடத்தக்க இன்னொரு சிந்தனையாளர். அப்படியானவர்கள் தமிழில் இல்லை. வாசிப்பு குறித்த ஆழமான ஆய்வுகளும் இல்லை. அச்சுக் கலை, தமிழும் கிறித்தவமும் போன்ற நூல்களுக்கும்கூட ஒரு தொடர்ச்சி இல்லை. நண்பர் ஆ.இரா.வெங்கடாசலபதி முயன்றால் இந்த வெற்றிடத்தை ஓரளவுக்கு நிரப்பலாம். 


தமிழ்நாட்டிலிருந்த/ இருக்கும் lending libraries, circulation libraries குறித்த ஆய்வுகள் நம்மிடம் இல்லை. ஒரு புத்தகம் எத்தனை பிரதிகள் விற்கிறது என்பதைக்கொண்டு அதன் தாக்கத்தை மதிப்பிடுவதைக்காட்டிலும் அது எப்படி வாசிக்கப்படுகிறது உள்வாங்கப்படுகிறது என்பதை வைத்து அதன் தாக்கத்தை மதிப்பிடுவது சரியாக இருக்கும் என்பது என் கருத்து. அதிக பக்கங்கள் கொண்ட புதினங்களை வாங்குவோர் அனைவரும் அதைப் படிப்பதில்லை. பூமணியின் அஞ்ஞாடி நாவல் குறித்து நான் விசாரித்து அறிந்துகொண்ட செய்தி இது. அவரது பிறகு நாவல் ஏற்படுத்திய தாக்கத்தை இந்த நாவல் ஏற்படுத்தவில்லை. சுந்தரராமசாமியின் ஜேஜே சில குறிப்புகள் நாவலைவிட அவரது கடைசி நாவலான ஆண்கள், பெண்கள்... அதிகம் விற்றிருக்கலாம் ஆனால் அதை வாங்கியவர்கள் எல்லோரும் முழுமையாகப் படித்தார்கள் என்று சொல்லமுடியாது. அந்த நாவல் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் போனதற்கு இதுவொரு காரணம் எனத் தோன்றுகிறது. 


புத்தகக் கண்காட்சி விற்பனை குறித்த தகவல்களில் பூசப்பட்டிருக்கும் பொய்களை உதிர்த்துவிட்டுப் பார்த்தால் உற்சாகம் தரும் செய்தி எதுவும் நமக்குத் தெரிவதில்லை. 


மணற்கேணி பதிப்பகம் வெளியிட்ட நீதிபதி கே. சந்துருவின் " அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள் ' என்ற நூல் கடந்த நான்கு மாதங்களில் ஏழாயிரம் பிரதிகள் விற்றுள்ளது. அதன் விற்பனையிலிருந்து இரண்டு லட்ச ரூபாயை திண்டிவனம் தாய்த் தமிழ்ப் பள்ளிக்கு அளித்திருக்கிறோம். தமிழ்நாட்டின் பலபகுதிகளில் சுமார் இருபது கூட்டங்கள் அந்த நூலுக்கென நடந்துள்ளன. ஆனால் தமிழ் சுயதம்பட்ட அறிவுஜீவிகள் அந்த நூலை வாசித்ததாகவும் தெரியவில்லை;  சிற்றிதழ்கள் என சொல்லப்படுபவற்றில் அந்த நூலுக்கு மதிப்புரையும் வெளியாகவில்லை. அப்படியிருக்கிறது நம் வாசிப்பு!