Wednesday, February 27, 2013

பட்ஜெட் என்ற யானையின் மணி ஓசைஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் பொருளாதார கணக்கெடுப்பு அறிக்கை ஒன்றை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்யும். பட்ஜெட்டில் என்னென்ன இடம்பெறப்போகிறது என்பதற்கான முன்னோட்டமாகவும் அதைக் கருதலாம். நாளை ( 28.02.2013) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பொருளாதார அறிக்கையை மத்திய அரசு இன்று தாக்கல் செய்திருக்கிறது. மானியங்களைப் பெருமளவுக்கு குறைக்கவேண்டும் என்ற ஆலோசனையை அந்த அறிக்கை வலியுறுத்தியிருக்கிறது.இது புதிய விஷயமல்ல . ஏற்கனவே எரிபொருள் மானியம் குறைக்கப்பட்டு வருகிறது. அதனால் பெட்ரோல் டீசல் விலை அவ்வப்போது ஏறிக்கொண்டே இருப்பதைப் பார்க்கிறோம். அதன் காரணமாக அத்தியாவசியப் பண்டங்களின் விலை அதிகரித்து பணவீக்கம் கூடிக்கொண்டிருக்கிறது.இந்த நிலையில் மானியங்களை மேலும் குறைக்கவேண்டும் என்ற ஆலோசனை எங்கு போய்  முடியுமோ என்ற அச்சத்தைத்தான் ஏற்படுத்துகிறது.

" பொருளாதார வளர்ச்சி என்பது முக்கியம்தான் என்றாலும் அது தன்னளவில் முடிந்துபோகும் ஒன்றல்ல" எனக் குறிப்பிட்டிருக்கும் பொருளாதாரக் கணக்கெடுப்பு அறிக்கை ' துரிதமான, தொடர்ச்சியான , அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக ' அது இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறது. சமூக சேவைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி கணிசமாக அதிகரிக்கப்பட்டு வருவதை அந்த அறிக்கை 'பெருமிதத்தோடு' சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக நிதி ஒதுக்கப்படுகிறதென அது குறிப்பிடுகிறது. மொத்த ஜி.டி .பி யில் 2007-08 ஆம் ஆண்டில் 5.9% ஆக இருந்த இந்த ஒதுக்கீடு 201-13 இல் 7.1% ஆக உயர்ந்திருக்கிறதாம். இந்த அறிக்கையின் மோசடித்தனத்துக்கு இதுவே ஒரு உதாரணம். சுகாதாரத் துறைக்கு ஜி.டி .பி யில் 2% ஒதுக்கவேண்டும் என்று பலகாலமாக கோரிக்கைவிடப்பட்டு வருகிறது. 2011-12 ஆண்டு பட்ஜெட்டில்  அது 0.29% ஆக மட்டுமே இருந்தது. உலகிலேயே சுகாதாரத் துறைக்கு மிகக்குறைவாக நிதி ஒதுக்கும்  நாடு இந்தியாதான் . ஒரு நபருக்கு இரண்டாயிரம் ரூபாய் என்ற அளவில்தான் நிதி ஒதுக்கப்படுகிறது. நாம் மிகவும் விமர்சிக்கிற இலங்கை சுமார் ஐந்தாயிரம் ஒதுக்குகிறது. நாம் போட்டியாகக் கருதுகிற சீனாவோ சுமார் வ்ட்டாயிரம் ரூபாய் ஒதுக்குகிறது. தாய்லாந்தில் அது 13 ஆயிரமாக இருக்கிறது. இந்தக் கேவலமான நிலையில் நாம் சமூக சேவைப் பிரிவுக்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பதாகச் சொல்வது எத்தனை பெரிய பொய்!

கல்வியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். கல்விக்காக மத்திய வரிகளில் விதிக்கப்படும் மூன்று சதவீத கூடுதல் வரியை ஒழுங்காக செலவிட்டாலே போதும்  எவ்வளவோ முன்னேற்றம் நடந்திருக்கும். அந்தப் பணமெல்லாம் எங்கு போகிறது என்பது அமைச்சர் சிதம்பரத்துக்கே வெளிச்சம். கல்விக்கு ஜி.டி .பி யில் குறைந்தபட்சம் 6%ஆவது ஒதுக்கவேண்டும் எனக் கேட்கப்பட்டுவந்தாலும் இதுவரை 4% கூட ஒதுக்கவில்லை. மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டம் மிகப்பெரிய தோல்வி என்பதை எந்தவொரு பள்ளிக்குச் சென்று பார்த்தாலும் தெரிந்துகொள்ள முடியும்.ஆண்டுதோறும் வெளியாகும் ASER அறிக்கைகள் இதற்கான சான்றுகள்

ஏழ்மை குறித்து இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயமும் விவாதத்துக்குரியது. டெண்டுல்கர் கமிட்டி பரிந்துரைத்த அளவுகொகோல்களின்படி 2004-05 இல் நாட்டின் மக்கள் தொகையில் 37.2% பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள் என மதிப்பிடப்பட்டது. அது 2009-10 இல் 29.8% ஆகக் குறைந்துவிட்டதாம். அதாவது சுமார் ஐந்தேகால் கோடி பேர் வறுமையிலிருந்து விடுபட்டுவிட்டார்களாம் .என்னவொரு மாஜிக் இது! ஐந்து வருடங்களில் ஐந்து கோடி பேர் வறுமையிலிருந்து விடுபடுவதேன்றால் ஆண்டுக்கு ஒருகோடி பேர் எனக் கணக்கு வருகிறது. இந்த கணக்கின்படியே பார்த்தாலும்கூட வறுமையை முற்றாக ஒழிக்க இன்னும் முப்பது வருடங்களுக்கு மேல்  ஆகும்.
   
 உணவுப் பொருட்களின் விலை உயர்வின் காரணமாக பணவீக்கம் அதிகரித்துவருவதாக இந்த அறிக்கை சொல்கிறது. இந்த ஆண்டு நாட்டின் பல மாநிலங்களையும் கடுமையான வறட்சி பாதித்திருக்கிறது. அதனால்  பெருமளவு  தெரிகிறது எனவே இந்த பணவீக்கம் மேலும் அதிகரிக்கவே செய்யும். அது மேலும் விளைஎற்றத்திலும் வறுமையிலும் சென்றே முடியும். இத்தகைய சூழலில் மானியங்களைக் குறைக்கலாம் எனச் சொல்வது  இந்தியாவில் இருக்கும் ஏழை எளிய மக்களை மேலும் இக்கட்டில் ஆழ்த்தவே வகைசெய்யும்.

நேற்று(26.02.2013) டெல்லியிலிருந்து அவுட்லுக் பத்திரிகையின் நிருபர் என்னைத் தொடர்புகொண்டு பேசினார். ப.சிதம்பரம் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அதை நீங்கள் ஏற்பீர்களா என்று அபிப்ராயம் கேட்டார். " தமிழ்நாட்டிலிருந்து எவர் ஒருவர் பிரதமராக வந்தாலும் அதை நான் வரவேற்பேன். ஏனென்றால் பிரதமர் சார்ந்திருக்கும் மாநிலத்துக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என்ற நிலை உள்ளது . திரு ப.சிதம்பரம் அவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களில் சிறந்தவர், திறமையானவர்.நல்ல பேச்சாளர் . அவர் நிதி அமைச்சராக எப்படி செயல்பட்டார் எனக் கேட்டால், அவரது அணுகுமுறை  மத்தியதர வர்க்கத்தைப் பிழிந்தெடுப்பதாக இருந்தது,  அடித்தட்டு மக்களை மேலும் எழைகளாக்கியது.மேல்தட்டு வர்க்கத்துக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் உதவி செய்தது" என்று நான் சொன்னேன்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி-2 அரசில்  நிதி அமைச்சராக திரு ப.சிதம்பரம் சமர்ப்பிக்கும் முழுமையான கடைசி பட்ஜெட் இது. அவரது பட்ஜெட் எந்தவிதத்திலும் மக்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கப்போவதில்லை என்பதற்கான மூன்று  முன்னறிவிப்புகள் வந்துவிட்டன: ஓன்று, குடியரசுத் தலைவர் உரை, இரண்டு ரயில்வே பட்ஜெட், மூன்றாவது , பொருளாதார கணக்கெடுப்பு அறிக்கை.

Sunday, February 24, 2013

ஈழம் : ரவிக்குமார் கவிதைகள்

வாக்குமூலம் 1

தாயின் உதிரத்தில்
தாகம் தணிபவர்கள்
தந்தையின் தலைகொய்த மரபினர்
சகோதரனோ சகோதரியோ
எமக்கில்லை, எல்லாம் பிறர்தான்
பிள்ளைக்கறி கேட்டதெம் கடவுள்
எம்மிடத்தில்
காட்டுகிறாய் பாலகன் ஒருவனின் சடலத்தை
கருணை சுரக்குமென எதிர்பார்த்து.

எமக்கோ
நாக்கு சுரக்கிறதுவாக்குமூலம் 2

வானூர்தியின் இரைச்சல் கடக்கும் முன்
வெடித்துச் சிதறுகிறது தாயின் உடல்
பதுங்கு குழிகளில் அலறும்
பிள்ளைகளின் குரல்களை அமுக்குகிறது
இன்னொரு வெடிப்பு
பொருள் எது உடல் எது
எங்கும் சிதறல்கள்
இடைக்கிடை பேசுகிறவர்களின்
வாய்களிலிருந்து தெறிக்கிறது ரத்தம்

பின்புலத்தில் அடர்ந்தெழும்  
புகையின் கறுப்புக்கும்
ரத்தத்தின் சிவப்புக்கும் இடையிலான
முரண் அழகை ரசிக்கிறதெம் மனம்
வாக்குமூலம் 3

கதவுகள் இல்லா வீட்டைத்
தட்டிக்கொண்டிருப்பது
உனது தவறு
தொழுநோயாளியின் சருமத்தில்
உஷ்ணம் உரைப்பதில்லை
ஒரு லட்சம் சடலங்கள்
என்கிறாய்
அவ்வளவையும்
ஒரு சுவரொட்டிக்குள் அடக்குவது எவ்விதமென
யோசிக்கிறேன் நான்
  
பா. அகிலன் கவிதை

பெரு நிலம்:
மண்ணடுக்குகள் பற்றிய அறிமுகம்

பூண்டும் புராணிகமும்
நீரும் இல்லும் சேர்த்துப் பொத்தப்பட்ட
பெரு நகரத்திற்குக் கீழே
பகலிரா ஓயா
தெருக்களும் கிளைகளும் மொய்த்துப் பரவி
சனங்கள் நெரிந்து
வாகனங்கள் விரையுமொரு நிலப்பரப்பிற்கு இன்னும் கீழே
கீழிறங்கிப் போனால்

சாம்பரால் ஆன வெம்மையடங்காவொரு புயற்பரப்பு
நீங்கி
மேலும் நடந்து கீழிறங்கிப்போனால்
அழுகையும், கதறலும் பரவியொட்டிய ஒலியடுக்கு
அதற்கும் கீழே
முடிவடையாத குருதியால் ஒரு திரவப் படுக்கை
அதற்கும் கீழே
கெட்டிபட்டு முள்ளடர்ந்து மண்டிய நினைவடுக்கு
அதற்குக் கீழே
மரங்களின் வேர்களும் முட்டாதவொரு மௌனப்பரப்பு
நீங்கி இன்னும் மேல் நடந்து
கீழிறங்கினால்

ஒரு முதிய பெண்
காலங்களை விரித்தெறிந்த தோலாசனத்தின் மீதொரு
துறவிப் பெண்                


பங்குனி 2010

Saturday, February 23, 2013

தலித் மகளிர் அமைப்பின் தேவைஆசிட் தாக்குதலுக்கு ஆளான வித்யா இறந்த செய்தியை இன்று காலை ஆறு மணிக்கு ஊடக நண்பர் ஒருவரின் குறுந்தகவல் சொல்லியது. சில நாட்களுக்கு முன்னர் இப்படியான தாக்குதலில் உயிரிழந்த வினோதினியை நினைத்துக்கொண்டேன். அவருக்குக் கிடைத்த ஊடக கவனம் வித்யாவுக்குக் கிடைக்கவில்லை. வர்மா கமிட்டி அறிக்கை ஏற்படுத்தியிருந்த தாக்கம் இப்போது குறைந்துவிட்டது என்பது ஒரு காரணம். அதைவிடவும் முதன்மையான காரணம் வித்யா ஒரு தலித். 

வினோதினி வழக்கில் பாதிக்கப்பட்டவரும் குற்றமிழைத்தவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். வித்யா வழக்கில் அப்படி அல்ல. வித்யா தலித், ஆசிட் வீசிய இளைஞர் வன்னியர். அதனால்தான் ஊடகங்கள்கூட இதில் அவ்வளவாக அக்கறை செலுத்தவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது. 

வித்யா வன்னியராக இருந்து ஆசிட் ஊற்றியவர்  தலித்தாக இருந்திருந்தால் மீடியா இப்படி மௌனம் காத்திருக்குமா? என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ளவேண்டும்.

எல்லா கட்சிகளும் மகளிர் அமைப்புகளை வைத்திருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பான அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மட்டும்தான் தீவிரமாக செயல்படும் அமைப்பாக இருக்கிறது. தலித் பெண்களுக்கான பிரச்சனைகள் வேறுபட்டவை அவர்களுக்கென தனியே அமைப்பு தேவை என நீண்டகாலமாக பேசப்படுகிறது. ஆனால் குறிப்பிடும்படியான தலித் மகளிர் அமைப்பு எதுவும் இல்லை.

வித்யாவின் மரணம் ஆற்றல் மிக்க தலித் மகளிர் அமைப்பின் தேவையை வலியுறுத்துகிறது, கருத்தியல் தளத்தில் அதற்கான விவாதம் நடத்தப்படவேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. 


ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டம்: இந்தியா செய்யப்போவது என்ன ?

ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரப்போவதாக  அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கு ஆதரவாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் வாக்களிக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துவந்தன. அந்தப் பிரச்சனையும் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. அமெரிக்கத்  தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என பிரதமர் மன்மோகன் சிங் தமிழகக் காங்கிரஸ் தலைவர்களிடம் உறுதி அளித்திருப்பதாகச்  செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படுத்தும் எந்தவொரு காரியத்தையும் இந்தியா செய்யாது . அதற்கு மாறாக இலங்கையை இயன்றவரைக் காப்பாற்றவே அது முயற்சிக்கும். இந்தியாவின் அணுகுமுறை எப்படியிருக்கும் என்று சிந்திக்கும்போது பினவரும் சாத்தியங்கள் நமக்குத் தென்படுகின்றன: 

1. அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதில் பெரிய சிக்கல் ஒன்றும் இருக்கப்போவதில்லை. ஆனால் அந்தத் தீர்மானம் எப்படியிருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றக்கூடும் . கடந்த முறை, தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்ததைப்போல இம்முறையும் இந்தியா  மறைமுகமாக இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படலாம்.அதற்கான அறிகுறிகள் துலக்கமாகத் தெரிகின்றன. புலிகளால் கொல்லப்பட்ட இந்திய அமைதிப்படை வீரர்களுக்கு இந்தியத் தூதர் அசோக் கே. காந்தாவும்  இலங்கை ராணுவத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கேவும்  கூட்டாக அஞ்சலி செலுத்தியிருக்கும் நிகழ்வு அதற்கொரு சான்று. 

கடந்தமுறை செய்ததுபோல அமெரிக்க தீர்மானம் வெளியானபிறகு அதில் மாற்றம் செய்ய முற்படாமல் தீர்மானம் வெளிவருவதற்கு முன்பே அதில் இந்தியா தலையீடு செய்யலாம். அதற்கான வேலைகள் இப்போதே நடந்துகொண்டிருக்கலாம். 

2. ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலின் ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் அளித்திருக்கும் 18 பக்க அறிக்கையின் இறுதியில் இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிக்க 'சுயேச்சையான சர்வதேச விசாரணை ' வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். இப்போது நம் எதிரில் இருக்கும் கேள்வி : சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடப்படுமா? அல்லது மேலும் இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கப்படுமா ? என்பதுதான். இந்தியாவின் யுக்தி இலங்கைக்குக் கால அவகாசம் பெற்றுத் தரும் வகையிலேயே இருக்கக்கூடும் . 

3. ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலில் இடம்பெற்றிருக்கும் நாடுகள் சிலவற்றை இந்தியா தனது ராஜீய உறவுகளின் மூலமாக நிர்ப்பந்திக்க முடியும். எனவே அவற்றைத் தனது நிலைக்கு ஆதரவாக செயல்படவைத்து அமெரிக்காவின்மீதும், ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலின்மீதும் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா மறைமுகமாகத் திணிக்கமுடியும். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் கியூபாவை அப்படித்தான் இந்தியா பயன்படுத்தியது. 

4. ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் நடைபெறும் இந்த நேரத்தில் ஜப்பான்,நைஜீரியா, ரொமேனியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் சார்பில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அவர்களிடம் சில நாட்களின் முன் கையளிக்கப்பட்டிருக்கும் 'ரகசிய அறிக்கை' தற்போது  பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியிருக்கிறது. இப்படியொரு சந்திப்புக்கு பான்  கி மூன் எப்படி ஒப்புக்கொண்டார் என்ற கேள்வி ஒருபுறமிருக்க,அக்கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்டிருக்கும் பத்திரிக்கை செய்தி இலங்கை அரசின் நடவடிக்கைகளைப் பாராட்டுவதாக இருப்பது அதிர்ச்சியடைய வைக்கிறது. இந்த 'ரகசிய அறிக்கையின்' பின்னணியில் இந்தியா இருக்கிறதா என்பதும் ஆய்வுக்குரியதாகும். 

இவை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் இந்தியாவின் அணுகுமுறை   எப்படியிருக்கும் என்பதை நாம் யூகிக்க முடியும். அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தை நீர்த்துப்போகவைத்து இலங்கைக்கு மேலும் கால அவகாசம் பெற்றுத் தருவது என்பதாகவே அது அமையும். இதைச் செய்வதற்காக இந்தியா சில பொருளாதார பலன்களை இலங்கையிடம் கேட்டுப் பெறக்கூடும். 13 ஆவது சட்டத் திருத்தம் குறித்தும் , வடக்கு  கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம் என்பது குறித்தும் இந்தியா இப்போது பேசுவது,  இலங்கையோடு மறைமுகமாக நடைபெற்றுவரும் பேரங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்குத்தானே தவிர இந்தியாவுக்கு அதில் உண்மையான அக்கறை எதுவும் இல்லை என்பதை கடந்தகால நிகழ்வுகள் காட்டியுள்ளன. 

இந்நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் எத்தகைய கோரிக்கைகளை முன்வைப்பது என்பதைப் பற்றி சிந்திக்கவேண்டியது அவசியம். அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என்ற பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்காமல் இந்தியா மீது உண்மையான அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய கோரிக்கைகளை அடையாளம் காணவேண்டும். 

"இலங்கை அரசின் இனப்படுகொலை குறித்த சுயேச்சையான சர்வதேச விசாரணை வேண்டும்" என்பதைத் தீர்மானமாக நிறைவேற்றுவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் தமது ஆற்றல் அனைத்தையும் ஒருங்கிணைத்துச் செயல்படவேண்டும்.ஆனால்,  ஊடகக் கவனத்தைக் கவர்வதற்காக சிறு குழுக்கள் சாகசவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது இத்தகைய கருத்தொற்றுமையை  உடைப்பதாக இருக்கிறது. இப்படியான சிறு குழுக்கள் ஈழத் தமிழ் அமைப்புகளின் மறைமுக ஆதரவோடு செயல்படுகின்றன என்பதை அறியும்போது நமக்கு ஒரு கேள்வி எழுகிறது: தமிழக அரசியல் கட்சிகளின் ஒருமித்த குரலை சிதைத்து இலங்கை அரசைக் காப்பாற்றக்கூடிய நடவடிக்கைகளை ஈழத் தமிழ் அமைப்புகள் சில ஏன்  ஊக்குவிக்கின்றன ?  என்பதே அந்த கேள்வி. இதற்கு அந்த அமைப்புகள்தான் பதில்சொல்லவேண்டும்.

PUCL Statement on Hyderabad Bomb Blast
People's Union for Civil Liberties, National Office Delhi


Delhi / 23rd February, 2013PUCL strongly condemns the serial blasts in Hyderabad on 21.02.2013 which has resulted in loss of life and grievous injuries to many. PUCL extends its sympathies to the families of all those who lost relatives and hopes that the injured recover speedily.

PUCL re-iterates its stand that all organizations – whether State or non- state players - functioning for the people and in the public arena are accountable and answerable for their acts. PUCL appeals to all organizations to refrain from acts of mindless violence, especially when they endanger innocent persons. Violence can never offer a solution to any issue however genuine it may be.

In the past such blasts have invariably been followed by motivated targeting and illegal detention by the police of scores of educated and young members of the minority community, physical and mental torture, prosecution under as many draconian sections and laws as possible and repeated implication of the same persons in multiple cases thereby stigmatising a section of the population of the minority community who live for years with the shame of being a “terrorist”. The stigma is never erased even when prolonged trials end in acquittal the acquitted persons and their families forever live devastated lives, ostracized and feared by their own community. Such unlawful motivated police action has ended up in immense alienation and disaffection of an already traumatized community.

PUCL reiterates that the State and Central police and various intelligence agencies inquiring into the incidents should uphold the principles of fair, independent and unbiased investigation. This will strengthen rule of law and ensure investigations and interrogations in a civilized manner. Only such conduct of investigating agencies will reinforce established and accepted norms of fair and lawful investigation. We caution the police not to indulge in baselessly targeting of persons belonging to any particular community, especially those from the minority communities.

PUCL is apprehensive that the current events provide fodder for partisan politics and use of the tragedy to score political points. It is crucial that political parties respond with sensitivity and work to create a sense of confidence and amity amongst different social sections.

PUCL is concerned over some sections of the media indulging in speculative reporting and alluding to the alleged involvement of some groups, even when investigation is still underway. Such competitive posturing and motivated reporting fans communal hatred, creates mass paranoia and vitiates communal harmony.

In this time of tragedy and disturbance PUCL appeals to citizens, be they in media, political parties or state agencies, not to fall prey to rumours inciting reprisal by fanning enmity between communities.

Those guilty of this ghastly incident should be expeditiously brought to book. The situation demands that we, as a nation, should remain calm, restrained and peaceful.

Sd./-
(Dr. V. Suresh)
National General Secretary, PUCL
Contact No.: V. Suresh, +91-9444231497

சிறிலங்கா படைகளின் பாலியல் கொடுமைகள்
சிறிலங்கா படைகளின் பாலியல் கொடுமைகள்  
மூவரின் சாட்சியங்கள்

சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தமிழர்கள் மீது பாலியல் கொடுமைகள் குறித்து வரும் திங்களன்று வெளிவரவுள்ள அறிக்கையில், இடம்பெற்றுள்ள 75 பேரின் சாட்சியங்களில், மூவரினது சாட்சியங்களை மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் ( Human Rights Watch ) வெளியிட்டுள்ளது.
2011ம் ஆண்டு நொவம்பர் மாதம் கொழும்பிலுள்ள தனது வீட்டில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பிடித்துச் செல்லப்பட்ட 31 வயதான தமிழ்ப்பெண் கூறுகிறார்
கொழும்பில் நாலாம் மாடியில் உள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவு பணியகத்துக்கு நான் கொண்டு செல்லப்பட்டேன். எனக்கு குடிக்க நீரோ, உணவோ தரப்படவில்லை. அடுத்த நாள், சீருடை அணிந்த ஒரு அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் என்னைப் படம் பிடித்தனர். எனது கைவிரல் அடையாளங்களைப் பதிவுசெய்தனர். வெற்றுத்தாளில் எனது கையொப்பத்தைப் பெற்றுக் கொண்டனர்.
எனது கணவர் பற்றிய எல்லா விபரங்களையும் தாம் வைத்துள்ளதாகவும், அவர் எங்கே பதுங்கியுள்ளார் என்ற விபரத்தைக் கூறிவிடுமாறும் அவர்கள் என்னிடம் கேட்டனர். எனது கணவர் வெளிநாடு சென்று விட்டதாக அவர்களுக்குக் கூறினேன். அவர் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக, அவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டினர்.
பல்வேறு பொருட்களால் நான் தாக்கப்பட்டேன். விசாரணையின்போது, சிகரெட்டால் சுடப்பட்டேன். மணல் நிரப்பிய குழாயினால் தாக்கப்பட்டேன். அடித்துக் கொண்டே எனது கணவர் பற்றிய விபரங்களை கேட்டனர். ஒரு இரவில் நான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டேன்.
சாதாரண உடையில் இரண்டுபேர் எனது அறைக்கள் வந்தனர். எனது ஆடைகளை அவிழ்த்து விட்டு இருவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர். அவர்கள் சிங்களத்தில் பேசினர். வேறு எதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது இருளாக இருந்ததால், அவர்களின் முகங்களை தெளிவாகப் பார்க்க முடியவில்லை.”
2012 ஓகஸ்ட் மாதம் பிடிக்கப்பட்ட இன்னொரு 23வயது இளைஞர் கூறுகிறார் -

அவர்கள் எனது கண் கட்டை அவிழ்த்து விட்டபோது, நான் ஒரு அறைக்குள் இருப்பதை கண்டேன். அங்கு மேலும் நால்வர் இருந்தனர். நாற்காலி ஒன்றுடன் சேர்த்துக் கட்டப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகளுடனான எனது தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட்டேன். அண்மையில் வெளிநாடு சென்றதற்கான காரணம் என்ன என்று கேட்டனர். என்னைக் கட்டி வைத்து அடிக்கத் தொடங்கினர்.
மின் வயரினால் அடித்தனர். சிகரெட்டால் சுட்டனர். பெட்ரோல் நிரப்பிய பாலித்தீன் பைக்குள் அமுக்கினர். பின்னர் அன்றிரவு, நான் சிறிய அறை ஒன்றுக்குள் கொண்டு செல்லப்பட்டேன். தொடர்ந்து மூன்று நாட்களாக நான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டேன். முதல் நாள் இரவு ஒருவர் தனியாக வந்து வல்லுறவுக்கு உட்படுத்தினார்.
இரண்டாவது மூன்றாவது நாட்களில் இரண்டு ஆண்கள் எனது அறைக்கு வந்தனர். அவர்கள் என்னை பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தியதுடன் வாய் வழி உறவு வைத்துக் கொள்ளவும் நிர்ப்பந்தித்தனர்.
பாலியல் வல்லுறவுகளை அடுத்து எனக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளதாக கூறும் ஆவணத்தில் நான் கையெழுத்திட்டுக் கொடுத்தேன்.”

2009 மே மாதம் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த மற்றொரு இளைஞர் கூறுகிறார்-

இரண்டு அதிகாரிகள் எனது கைகளை பின்புறம் பிடித்திருக்க, ஒருவர் எனது ஆணுறுப்பைப் பிடித்து அதனுள் உலோகத்துண்டு ஒன்றை செலுத்தினார். எனது ஆணுறுப்பினுள் அவர்கள் சிறிய உலோகக் குண்டுகளை செலுத்தினர். சிறிலங்காவில் இருந்து நான் தப்பி வந்த பின்னர் அவை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.”
இதற்கு ஆதாரமான மருத்துவ அறிக்கையும் உள்ளது என்று கூறியுள்ளது மனிதஉரிமைகள் கண்காணிப்பகம்.
இதுபோன்ற சித்திரவதைகள், பாலியல் கொடுமைகளைத் தாங்கமுடியாமல் பலரும் தமக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளதாக ஒப்புக்கொள்ளும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளனர். இவ்வாறு சாட்சியம் அளித்துள்ளவர்கள் எவரும் முறைப்படியாக விடுதலையாகவில்லை.

அதிகாரிகளுக்கு உறவினர்கள் இலஞ்சம் கொடுத்தத்தை அடுத்து தப்பிக்க அனுமதிக்கப்பட்டவர்கள் என்றும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
நன்றி : புதினப்பலகை

நீதிபதி திரு.சந்துருJustice Chandru
சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதி  திரு சந்துரு அவர்கள் மார்ச் மாதத்தில்  பணியிலிருந்து ஓய்வுபெற்ற இருக்கிறார். தனக்கு பிரிவு உபச்சார விழா எதுவும் நடத்தக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திரு சந்துரு அவர்களுக்கு ஒய்வு என ஓன்று இருக்கப்போவதில்லை. நிச்சயம் அவர் மக்கள் நலனுக்கான பணிகளில் தன்னை ஒப்படைத்துக்கொள்வார். அவர் வழங்கிய இரண்டு முக்கியமான தீர்ப்புகள் குறித்து நான் ஜூனியர் விகடனில் 26.09.2008 அன்று எழுதிய கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதைப்போல அற்புதமான தீர்ப்புகள் பலவற்றை அவர் வழங்கியிருக்கிறார். திரு சந்துரு அவர்கள் உச்சநீதி மன்றத்துக்குப் பதவி உயர்வு பெற்று போயிருந்தால் வரலாற்றில் நிலைத்துநிற்கக்கூடிய  தீர்ப்புகள் பலவற்றை வழங்கியிருப்பார்.
திரு சந்துரு அவர்களுக்கு நன்றி பாராட்டி இக்கட்டுரையை இங்கே பதிவு செய்கிறேன்.  ஜனநாயகத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் தூண்களில் முக்கியமானது நீதித்துறை. அரசியல் மீதும், நிர்வாகத்துறையின் மீதும் நம்பிக்கை இழக்கிற மக்களுக்கு கடைசிப் புகலிடமாகவும், ஆறுதலாகவும் விளங்கிக் கொண்டிருப்பது அதுதான். மற்ற துறைகளைப் போல நீதித்துறையும் அவ்வப்போது விமர்சனத்துக்கு ஆளாகிறது என்றபோதிலும், ஒப்பீட்டளவில் அது இப்போதும் நம்பிக்கைக்குரியதாகவே விளங்குகிறது. சில நல்ல நீதிபதிகள் அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாய்த் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நீதிபதியானவர் ஒரு வழக்கின் வாதப்பிரதிவாதங்களைக் கேட்டு சட்டங்களின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்த்து தனது முடிவை அறிவிக்கின்றார். ஒரு வழக்கின் இறுதியில் வழங்கப்படுவது தீர்ப்பா? அல்லது நீதியா? என்பது சிந்திக்க வேண்டிய ஒரு விஷயமாகும். சட்டங்களின் வரம்புகளுக்கு உட்பட்டு சொல்லப்படுகிற தீர்ப்புகளை நாம் அறிவோம். சட்டங்களை மட்டுமே பார்க்காமல் நியாயங்களையும் நினைவில் கொண்டு வழங்கப்படுகிற ஒரு தீர்ப்பு நீதி என்ற மதிப்பைப் பெறுகிறது. அத்தகைய நீதியை வழங்குகிற நீதிபதிகள் நமது நாட்டில் இப்போதும் இருக்கவே செய்கிறார்கள். பி.என்.பகவதி, வி.ஆர்.கிருஷ்ணய்யர், பி.ஏ.தேசாய், சின்னப்பரெட்டி என்று நாம் பெருமையோடு நினைவு கூர்கிற நீதிபதிகள் நமது சட்டங்களின் எல்லைகளை விரிவுபடுத்தி இந்திய ஜனநாயகத்துக்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். அந்த வரிசையில் வைத்து குறிப்பிடத்தக்க அளவுக்கு முக்கியமான தீர்ப்புகளை இப்போது வழங்கிக்கொண்டிருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் திரு. சந்துரு அவர்கள். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அவர் அண்மையில் வழங்கியுள்ள சில தீர்ப்புகள் நமக்கு அத்தகைய நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற திரு. கே.ராமசாமி அவர்களை ஒருமுறை நான் சந்தித்து பேட்டி கண்டேன். அப்போது தனது நீதித்துறை அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார். உச்சநீதிமன்றத்தில் அதிக தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி அவர்தான் என்று சொல்லப்படுகிறது. அதிகமான தீர்ப்புகளை மட்டுமல்ல முக்கியமானத் தீர்ப்புகளையும் அவர் வழங்கியிருக்கிறார். ‘‘நான் எனது தீர்ப்புகளை ஓப்பன் கோர்ட்டில் அப்படியே டிக்டேட் செய்வேன்’’ என்று அவர் அப்போது குறிப்பிட்டார். அவர் வழங்கிய தீர்ப்புகளைப் படித்தபோது அவை ஒரு ஆய்வுக் கட்டுரையின் தரத்துக்கு இணையாக இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். பல துறைகளைப் பற்றியும் ஞானம் இல்லாமல் அத்தகைய தீர்ப்புகளை வழங்க முடியாது. நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் வழங்கிய தீர்ப்புகளைப் படிக்கும்போதும் அப்படியான ஒரு பிரமிப்புதான் நமக்கு ஏற்படும். இப்போது நீதிபதி திரு. சந்துரு அவர்கள் வழங்கி வருகின்ற தீர்ப்புகளைப் படிக்கும்போது அவரது பல்துறை அறிவும், அதை அவர் பயன்படுத்துகிற பாங்கும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி அவர் வழங்கிய தீர்ப்பொன்றில் கலீல் ஜிப்ரானின் அற்புதமான கவிதை ஒன்றை மிகப் பிரமாதமாக அவர் மேற்கோள் காட்டியிருக்கிறார் (W.P. (MD) No.1034 of 2008 and M.P.(MD) No.1 of 2008). விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த நல்லூர் ஊராட்சி மன்றத்தில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் நூலகம் ஒன்றைக் கட்டுவதாக முடிவு செய்யப்பட்டது. அந்த நூலகத்தைக் கட்டுவதற்குத் தெரிவுசெய்யப்பட்ட பொது இடத்தில் அதை கட்டக்கூடாது என்று அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதை வலியுறுத்தி அந்த ஊராட்சி மன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், அந்தத் தீர்மானத்தைச் செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் கேட்டிருந்தார். நூலகம் கட்டப்பட்டால் அது தனது வீட்டிற்குச் செல்லும் பாதைக்கு இடையூறாக இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்த அவர், நூலகம் கட்டுவதற்காகத் தீர்மானிக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் ஏற்கனவே நாடக அரங்கம் ஒன்று கட்டப்பட்டு இருப்பதாகவும், முன்பு சில சந்தர்ப்பங்களில் அங்கே ஆதிதிராவிட சமூகத்தவருக்கும் பிற சமூகத்தினருக்கும் இடையில் மோதல்கள் நடந்திருப்பதாகவும் தனது மனுவில் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் ‘‘கிராம மக்களின் நலனை உத்தேசித்து’’ நூலகத்தை வேறு எங்காவது கட்டுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தை அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரு. சந்துரு அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 51&ஏ ஒவ்வொரு குடிமகனுக்கும் சில கடமைகளை வரையறுத்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி மனுதாரரின் கோரிக்கை அதற்கு எதிரானதாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். ஆதிதிராவிட மக்கள் தமது பகுதிக்கு வந்து விடாமல் தமது பகுதியை ‘தீட்டுப்படாத’ ‘புனிதமான’ ஒன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என அந்த கிராமத்தில் உள்ள பிற சமூகத்தினர் எண்ணிய காரணத்தினால்தான் அப்படியொரு தீர்மானத்தை ஊராட்சி மன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்று கூறிய அவர், அந்தக் கிராம மக்களின் மனநிலை கவிஞர் கலீல் ஜிப்ரான் தனது ‘வெள்ளைக்காகிதத்தின் கூற்று’ என்ற தலைப்பிலான கவிதையில் விவரித்துள்ளவற்றுக்கு ஒப்பானதாக இருக்கிறது எனக்குறிப்பிட்டு அந்தக் கவிதை முழுவதையும் தனது தீர்ப்பில் மேற்கோள் காட்டியிருக்கிறார்.
‘‘நான் தூய்மையானவளாக படைக்கப்பட்டேன். அப்படியேதான் எப்போதும் இருப்பேன். மையினால் கறைபடுவதைவிடவும் எரிந்து சாம்பலாவதையே நான் விரும்புவேன் என்று ஒரு வெள்ளைக்காகிதம் கூறியது. மை குப்பி ஒன்று அதைக்கேட்டது. தனது கறுத்த மனதுக்குள் சிரித்துக்கொண்டது. காகிதத்தின் பக்கம் அது நெருங்கவில்லை. வண்ண வண்ணப் பென்சில்கள் அதைக்கேட்டன. அவையும் அந்தக் காகிதத்தின் பக்கம் செல்லவில்லை. அந்த வெள்ளைக்காகிதம் தூய்மையாக, புனிதமாக கற்போடு காலமெல்லாம் இருந்தது. வெறுமையாக’’ என்பதுதான் அந்தக் கவிதை. நூறு பக்கங்களில் சொல்வதைவிட மிக அழுத்தமாக அந்த ஊர்க்காரர்களின் அறியாமையை இந்தக் கவிதையின் மூலம் நீதிபதி அவர்கள் எடுத்துக்காட்டி விட்டார்கள்.
கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி அவர் வழங்கியுள்ள தீர்ப்பு இன்னும் முக்கியமானது (W.P.(MD) No. 9704 of 2007 M.P. (MD) Nos. 1 of 2007 and 1 of 2008).  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவைச் சேர்ந்த நல்லுத்தேவன் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு துர்க்கையம்மன் கோயிலில் பூசாரியாக பணிபுரிந்து வந்த பின்னியக்காள் என்பவர் தொடுத்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு அது. அந்தக் கோயிலில் பின்னியக்காளின் தந்தை பின்னத்தேவர் என்பவர் பூசாரியாக பணியாற்றி வந்தார். அவர் 2004ஆம் ஆண்டுவாக்கில் நோய்வாய்ப்பட்ட நிலையில் அவரது ஒரே மகளான பின்னியக்காள் கோயில் பூஜைகளை செய்து வந்தார். பின்னத்தேவர் 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இறந்து விட்டார். அவருக்குப் பிறகு தொடர்ந்து பின்னியக்காளே கோயில் பூஜைகளை நடத்தி வந்தார். இந்நிலையில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பின்னத்தேவருக்கு ஆண் வாரிசு எவரும் இல்லாத காரணத்தால் பூஜை செய்யும் உரிமை அவரது குடும்பத்தைச் சார்ந்த பிற தாயாதிகளுக்குத்தான் வரவேண்டும். அதை ஒரு பெண் செய்யக்கூடாது என்று பிரச்சனை கிளப்பினார். அதற்கு அந்த ஊர்க்காரர்களும் ஆதரவு தெரிவித்தார்கள். இதனிடையே தாசில்தார் முன்னிலையில் கிராமத்தார்களின் கூட்டம் நடத்தப்பட்டு அந்தக் கோயிலின் பூசாரியாக ஆண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த முடிவு செல்லாது என அறிவித்துத் தன்னையே தொடர்ந்து பூசாரியாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று பின்னியக்காள் நீதிமன்றத்தைக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரு. சந்துரு அவர்கள் அந்தக் கோயிலில் பூசாரியாக பெண் ஒருவர் இருக்கக்கூடாது என சட்டம் எதுவும் இல்லை. இந்த விஷயத்தைத் தாசில்தார் தீர்மானிக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் அந்தக் கோயிலின் வழிபாட்டுக்குரிய தெய்வமாகப் பெண் தெய்வமான துர்க்கையம்மன்தான் உள்ளது. அந்தத் தெய்வத்துக்கு பூஜை செய்ய ஒரு பெண்ணுக்கு அனுமதி மறுப்பது வேடிக்கையாக இருக்கிறது என்று தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
‘‘அதிர்ஷ்ட வசமாக இந்தக் கோயில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட ஒன்று அல்ல. இந்தியாவின் தென் பிராந்தியங்களில் அமைந்துள்ள உப பண்பாடுகளைச் சேர்ந்த தெய்வங்கள் மனு ஸ்மிருதியின் தளைகளிலிருந்து விடுபட்டவையாகும். எனவே பெண்ணை வீட்டு வேலைகளோடு மட்டுமே அடக்கி வைத்திருக்கும் நிலைமை இங்கு எழவில்லை. புகழ் பெற்ற தத்துவ அறிஞர் ஒருவர் குறிப்பிட்டதுபோல பெண்கள்தான் இந்த பிரபஞ்சத்தின் பாதியை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். மனிதகுலம் முன்னேறிச் செல்லவேண்டுமென்றால் அது ஆண், பெண் என்ற இரண்டு கால்களாலும் நடந்தால்தான் சாத்தியம். கடவுளின் சன்னதிகள் ஆண், பெண் பாகுபாடுகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமானவையாக விளங்க வேண்டும்’’ என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள அவர், பின்னியக்காளே தொடர்ந்தும் அந்தக் கோயிலில் பூசாரியாக பணி புரியலாம் எனக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டுக் கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற புரட்சிகரமான சட்டத்தைத் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் கொண்டு வந்திருக்கிறார். அந்தச் சட்டம் குறித்துத் தமிழக சட்டப்பேரவையில் பேசியபோது, ‘‘இந்து அறநிலையத்துறைக்கு உட்படாத கிராமக் கோயில்களுக்கும்கூட இந்தச் சட்டம் பொருந்தக்கூடியதாக அமைக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் பெண்களும் அர்ச்சகராவதற்கு இந்தச் சட்டத்தில் வகை செய்யப்பட வேண்டும்’’ என்று நான் கோரிக்கை விடுத்தேன். இப்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தையேகூட நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் மடங்கள், சமணக் கோயில்கள் உட்பட இந்து அறநிலையத்துறையின் கீழ் 38,422 கோயில்கள் உள்ளன. அதில் ஆண்டுக்கு பத்து லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் வருகிற கோயில்கள் 160. பத்தாயிரத்துக்கும் குறைவாக வருமானம் வருகிற கோயில்கள் 34,415 ஆகும். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வராத கிராமக்கோயில்கள் எவ்வளவு உள்ளன என்பது துல்லியமாகக் கணக்கிடப்படவில்லை.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள ஆறு மையங்களில் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் மொத்தம் 207 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களில் நாற்பது பேர் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஐம்பத்தைந்து பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பையும், எண்பத்தெட்டு பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பையும், இருபத்துநான்கு பேர் இதர வகுப்புகளையும் சேர்ந்தவர்கள். அவர்களுள் பெண்கள் எவரும் கிடையாது.

ஆகம விதிகளின்படி பூஜை செய்வது பரம்பரை உரிமையாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. வேத காலத்தில் பெண்களும் ஆண்களுக்கு சமமாக உரிமை பெற்றிருந்தார்கள் எனச் சொல்லப்பட்டாலும், அதற்குப் பிறகு பெண்களுக்கு வேதங்களைப் படிப்பதற்கான உரிமை மறுக்கப்பட்டது. அதனால் பூஜை செய்கிற உரிமையையும் அவர்கள் இழந்தார்கள். இன்று ஆண்களுக்குச் சமமாக அனைத்துத் துறைகளிலும் அவர்கள் உரிமைகளையும், வாய்ப்புகளையும் பெற்றபோதிலும் மதம் சார்ந்த நிறுவனங்களுக்குள் அவர்கள் பாரபட்சமாகவே நடத்தப்படுகிறார்கள். அதன் ஒரு அடையாளம்தான் பெண்கள் அர்ச்சகராக முடியாது என்ற நிலைமை ஆகும்.
நீதிபதி சந்துரு அவர்கள் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு நல்லுத்தேவன்பட்டி கிராமத்தில் உள்ள துர்க்கையம்மன் கோயிலுக்கானதுதான் என்றபோதிலும், அதை அனைத்துக் கோயில்களுக்கும் பொருத்திப்பார்க்க முடியும். தென்னிந்தியாவில் உள்ள கோயில்கள் மனுஸ்மிருதியில் இருந்து விடுபட்டவை என்று அவர் கூறியிருப்பது மிகவும் முக்கியமானதொரு கூற்றாகும். தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இந்தத் தீர்ப்பை தமிழக அரசு எடுத்துக்கூறுவது பயனுள்ளதாய் இருக்கும்.
இன்றைய சூழலில் பாதுகாப்பு போன்ற காரணங்களைச் சொல்லி அரசாங்கங்கள் உருவாக்குகிற சில சட்டங்கள் ஜனநாயகத்தின் எல்லையை சுருக்கிக் கொண்டிருக்கிற நிலையில் இத்தகைய தீர்ப்புகளே அதை விரிவுபடுத்தவும், வலிமையாக்கவும் உதவுகின்றன. நீதிபதி சந்துரு அவர்களே, இப்படியான தீர்ப்புகள் பலவற்றை தொடர்ந்து நீங்கள் வழங்க வேண்டும். இந்திய நீதித்துறையில் புகழ் பெற்று விளங்கிய நீதிபதிகளின் வரிசையில் உங்கள் பெயரும் இடம் பெறுவது தமிழர்களுக்கு, தமிழ் நாட்டுக்குப் பெருமை.

Friday, February 22, 2013

உயிருக்குப் போராடும் தலித் பெண் வித்யா:டாக்டர் ராமதாஸ் என்ன சொல்கிறார்?
அமில வீச்சுக்கு ஆளாகி அண்மையில் உயிரிழந்த காரைக்காலைச் சேர்ந்த வினோதினிக்குப் பிறகு இப்போது சென்னை, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த வித்யா உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். தந்தையை இழந்த வித்யா தனது குடும்பத்தைக் காப்பாற்ற இண்டர்நெட் மையம் ஒன்றில் பணிபுரிந்து வந்திருக்கிறார். நர்சிங் படிக்கவேண்டுமென அவர் விரும்பினாலும் குடும்பத்தின் ஏழ்மை அவரது விருப்பத்துக்குத் தடை போட்டுவிட்டது.அந்த மையத்துக்கு அடிக்கடி வந்துபோன விஜய் பாஸ்கர் என்ற இளைஞர் வித்யாவைக் காதலித்திருக்கிறார். வித்யாவும் அவரை விரும்பியிருக்கிறார். தனது தாய் சரஸ்வதியிடம் அதைக் கூறியிருக்கிறார்.

தந்தை இல்லாத நிலையில் தனது மகளைப்பற்றி எவரும் தவறாகப் பேசிவிடக்கூடாது என அஞ்சிய வித்யாவின் அம்மா சரஸ்வதி  விஜயபாஸ்கரிடம் பேசியிருக்கிறார். தனது குடும்பத்தினரோடு வந்து முறைப்படி பெண் கேட்டு திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியிருக்கிறார். அங்குதான் சிக்கல் வந்திருக்கிறது. வித்யா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரைக் காதலித்த விஜயபாஸ்கரோ வன்னியர் சாதியைச் சேர்ந்தவர். விஜயபாஸ்கரின் வீட்டில் அவரது காதலுக்கு சம்மதம் கிடைக்கவில்லை. ஆனால் விஜயபாஸ்கர் விடவில்லை. எங்காவது ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளலாம் என வித்யாவிடம் வலியுறுத்தியிருக்கிறார். அத்ற்கு வித்யா சம்மதிக்கவில்லை. பெற்றோரின் சம்மதத்தோடு முறைப்படி திருமணம் செய்துகொள்வதே நல்லது எனக் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த விஜயபாஸ்கர் வித்யாமீது அமிலத்தை வீசியிருக்கிறார்.

வித்யா இப்போது உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். விஜயபாஸ்கர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். வினோதினி இறந்தபோது தமிழ்த் தேசிய அமைப்புகள் அவரது உடலை ஊர்வலமாக எடுத்துச்சென்றன. அந்த அமைப்புகளின் தலைவர்கள் ஆவேசமாகப் பேட்டிகளைக் கொடுத்தார்கள். வித்யாவை இதுவரை எந்தத் தலைவரும் சென்று பார்க்கவில்லை. அவரது அம்மாவுக்கு ஆறுதலும் சொல்லவில்லை. அந்தப் பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி தேவை என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. அதற்கும் எந்தப் பலனும் இல்லை. தமிழக அரசியல் இயக்கங்கள் வித்யா செத்தபிறகு களத்தில் குதிக்கக்கூடும்.உயிரோடு இருப்பவர்களுக்காகப் பரிந்து பேசுவதில் அவர்களுக்கு அவ்வளவாக ஆர்வம் இருப்பதில்லை.  போராட்டங்கள் நடந்தால் மட்டுமே சுரக்கும்விதமான கருணை சுரப்பிகளைக்கொண்டிருக்கும் தமிழக அரசும் வித்யாவைப்பற்றிக் கவலைப்படவில்லை.

தலித் இளைஞர்கள் வன்னியர் சாதிப் பெண்களை மயக்கி நாடகத் திருமணங்களை நடத்துவதாக ஊர் ஊராகச் சென்று  கூட்டம் நடத்தி வெறுப்புப் பிரச்சாரம் செய்துவரும் சாதியவாதிகள், வித்யாமீது அமிலம்வீசித் தாக்கிய இளைஞரைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? டாக்டர் ராமதாஸ் என்ன சொல்கிறார்?

3. இலங்கை ஒரு இனப்படுகொலை நாடு


            ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின்போது சர்வதேச நியதிகள் யாவும் மீறப்பட்டன என்பது உலகுக்கே தெரியும். போரின் கடைசி நாட்களில் இலங்கை அரசோடு புலிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையும், ஆயுதங்களைக் கைவிட முன்வந்ததையும் நாம் அறிவோம். அவர்களை வெள்ளைக் கொடியேந்தி சரணடையச் சொன்னதின்பேரில் அதை ஏற்று முன்னே சென்றவர்கள் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்டதையும் உலக நாடுகள் அறிந்துதான் உள்ளன. பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்திருந்த அப்பாவி மக்கள் அப்படியே புல்டோசர்களால் புதைத்து சமாதியாக்கப்பட்டது உலகில் எங்குமே நடந்திராத பச்சைப் படுகொலையாகும். அப்படி கொல்லப்பட்டவர்கள் ஒருவர், இருவர் அல்ல. நூறு பேர் இருநூறு பேர் கூட அல்ல. ஆயிரக்கணக்கான மக்கள் அவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட மே 17ஆம் தேதிக்குப் பிறகும்கூட முள்ளிவாய்க்கால் பகுதியில் தொடர்ந்து படுகொலைகள் அரங்கேற்றப்பட்டு வந்துள்ளன. ஆங்காங்கே தப்பியோடிப் பதுங்கியிருந்த ஒன்றிரண்டு பேர்களையும்கூட விட்டுவைக்காமல் தேடித்தேடி இலங்கை ராணுவம் படுகொலை செய்திருக்கிறது.
            போரின் இறுதியில் பிடித்துச் செல்லப்பட்ட தமிழ் இளைஞர்களை நிர்வாணப்படுத்தி அவர்கள் கண்களையும், கைகளையும் கட்டி அவர்களை சுட்டுக்கொல்லும் வீடியோ காட்சிகள் சில மாதங்களுக்கு முன்னால் உலகமெங்கும் வெளியாகின. அப்போது அவையெல்லாம் பொய்யான காட்சிகள் என்று சிங்கள அரசாங்கம் மறுத்து வந்தது. ஆனால், அந்த வீடியோ காட்சிகளை அறிவியல் பூர்வமாக சோதனை செய்த .நா. சபை அது உண்மையான காட்சிதான் என்பதை இப்போது உறுதி செய்துள்ளது. .நா. சபையில் உள்ள சட்டவிரோதமான படுகொலைகள் குறித்து ஆராயும் பிரிவுக்கு பொறுப்பாயுள்ள பிலிப் ஆல்ஸ்டன் என்பவர் இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி கடந்த டிசம்பர் 18ஆம் தேதி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்‌ஷேவுக்குக் கடிதம் ஒன்றையும் அவர் எழுதியிருக்கிறார். அதில், விடுதலைப்புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகியோர் அவர்களது குடும்பத்தினரோடு கடந்த மே 17ஆம் தேதி இரவு இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டது பற்றி உண்மை விவரங்களை தெரிவிக்குமாறு அவர் கூறியிருக்கின்றார். ‘‘இலங்கை அரசு போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்த நாளுக்கு முன்தினமான 2009, மே 17ஆம் தேதி நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகிய புலிகளின் மூன்று தலைவர்களும் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதிக்கு வடக்குப் புறமாக ஒரு இடத்தில் சிக்கிக் கொண்டனர். தூதர்களின் மூலமாக அவர்கள் உங்கள் அரசைத் தொடர்பு கொண்டு இலங்கை ராணுவத்திடம் தாங்கள் சரணடைய விரும்புவதாக தெரிவித்துள்ளனர். ராணுவத்துறை செயலாளரும், உங்கள் அரசுக்கு ஆலோசகர்களில் ஒருவராக உள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் அவர்களை வெள்ளைத் துணியேந்தி வருமாறு கூறியுள்ளனர். அந்த சமயத்தில் போர் முனையிலிருந்த இலங்கை ராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவின் தலைவருக்கு ராணுவ ஆலோசகரிடத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. சரணடைய வந்த புலிகளின் தலைவர்கள் மூவரையும் சுட்டுக்கொல்லுமாறு அதில் கூறப்பட்டுள்ளது. மே பதினெட்டாம் தேதி அதிகாலையில் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகிய மூவரும் வெள்ளைத் துணிகளைப் பிடித்தபடி ராணுவத்தை நோக்கி சரணடைய வந்தபோது அவர்களை இலங்கை ராணுவத்தினர் சரமாரியாக சுட்டு அவர்களைப் படுகொலை செய்துள்ளனர். அவர்களோடு வந்த அவர்களது குடும்பத்தினரையும் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர்’’ என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பிலிப் ஆல்ஸ்டன், இந்த விவரங்களையெல்லாம் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் எனவும், சம்பவம் நடத்த நேரத்தில் இலங்கை ராணுவத்தோடு சென்று கொண்டிருந்த பத்திரிகையாளர் சிலரும் இந்தத் தகவல்களை உறுதி படுத்தியுள்ளனர் என்றும் ஆல்ஸ்டன் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
            1949ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட ஜெனிவா ஒப்பந்தத்தில் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் பிரிவு 3 போர்க்காலத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய நியதிகள் பற்றி கூறியுள்ளது. ‘‘போரில் நேரடியாக பங்கெடுக்காதவர்கள், போரில் ஈடுபட்டுள்ள வீரர்களின் குடும்பதினர், ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய முன்வந்தவர்கள், காயத்தாலோ, நோயாலோ பாதிக்கப்பட்டவர்கள், சிறை பிடிக்கப்பட்டவர்கள் ஆகியோர் மனிதாபமான முறையில் நடத்தப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளது. அதுபோலவே சர்வதேச மனித உரிமை சட்டங்களும், ஆயுதங்களைக் கைவிட்டவர்களைக் கொல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி உள்ளன. இந்நிலையில் இலங்கையில் நடைபெற்றுள்ள இனப்படுகொலை என்பது சர்வதேச சட்டங்களுக்கும், நியதிகளுக்கும் மாறானதாக நடத்தப்பட்டுள்ளது. எனவே இதைப்பற்றி இலங்கை அரசு விளக்கமளிக்க வேண்டும் என பிலிப் ஆல்ஸ்டன் கூறியிருக்கிறார். அவர் எழுதிய கடிதத்தின் இறுதியில் மூன்று பிரச்சனைகளை வலியுறுத்தி உள்ளார். ”போரில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் உண்மைதானா? அதை நீங்கள் மறுப்பீர்களேயானால் அப்படி இனப்படுகொலை எதுவும் நடக்கவில்லை என்று ஆதாரங்களோடு உங்கள் அரசு நிரூபிக்க முன்வர வேண்டும். நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரது குடும்பத்தினர் கொல்லப்பட்டது குறித்து நீங்கள் தரும் விளக்கம் என்ன? இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்து நாங்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை பரிசீலித்து அதற்கு நீங்கள் பதில் கூறவேண்டும்” என ஆல்ஸ்டன் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
            இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைகளுக்காக .நா. சபையே விளக்கம் கேட்டுள்ள நிலையில், .நா. சபையைச் சேர்ந்த அதிகாரிகளே இத்தகைய இனப்படுகொலைகளுக்கு காரணமாக இருந்தார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. .நா. பொதுச்செயலாளரின் தலைமை காரியதரிசியாக இருக்கும் விஜய் நம்பியார் ஈழத்தில் நடந்த யுத்தத்தின் கடைசி கட்டத்தில் ஒரு சமாதானத் தீர்வை எட்டுவதற்காகப் பலரிடமும் அணுகிப் பேசி வந்தார். யுத்தத்தின் கடைசி நாட்களில் புலிகளின் மூத்த தலைவர்கள் சிலர் விஜய் நம்பியார் வழியாக சமாதானம் பேச முற்பட்டனர். அவர்கள்தான் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். புலிகளின் மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதில் விஜய் நம்பியாருக்கும் பங்கு உள்ளது என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே, அவர்மீது முதலில் .நா. சபை விசாரணை நடத்தட்டும் என்று தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
            ஈழத்தில் இறுதி யுத்தம் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் அங்கே தமிழர்கள் கொல்லப்படுவது நின்றபாடில்லை. ‘மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்கள்வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்போதும்கூட சிங்கள ராணுவம் இப்படி சித்திரவதை செய்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி டெக் என்னும் நிறுவனத்தின் இயக்குனராயிருந்த கதிர்வேலு தயாபர ராஜா என்பவர் எப்படி கொல்லப்பட்டார் என்ற விவரத்தை அந்த அறிக்கை வெளியிட்டுள்ளது. புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த பாலகுமார் தனது மகனோடு சரணடைந்து ராணுவத்தினால் கூட்டிச் செல்லப்பட்டும் அவர் எங்கு இருக்கிறார் என்பதை ராணுவம் ரகசியமாக வைத்துள்ளது என்று குற்றம் சாட்டியிருக்கும் அந்த அறிக்கை தயாபர ராஜாவுக்கு நடந்ததை விரிவாக எடுத்துக் கூறியுள்ளது.
            வன்னி டெக் என்ற அமைப்பு சுயேட்சையாக நடத்தப்பட்டு வந்த ஒரு அமைப்பாகும். சில காலத்துக்குப்பிறகு புலிகள் அந்த அமைப்பை தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டனர். அதற்கு தேவையான டீசல், ஜெனரேட்டர் முதலானவற்றைப் புலிகள் வாங்கி வந்தனர். இன்னும்கூட அந்த நிறுவனம் சுதந்திரமாகவே செயல்பட்டு வந்தது. அதன் இயக்குனராக இருந்த தயாபர ராஜா தனக்கென்று சம்பளம் எதையும் வாங்கிக்கொண்டதில்லை. அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த உதயகலா என்பவரும் தயாபர ராஜாவும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். அந்த திருமணம் புலிகளுக்கு உடன்பாடாக இல்லாத காரணத்தால் அவர் தனது பதவியை விட்டு விலகி விட்டார். அந்த நேரம் புதுக்குடியிருப்பு பகுதியில் யுத்தம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. தனது பதவியிலிருந்து விலகி மனைவியோடு வெளியேறிய தயாபர ராஜா இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். உளவுத்துறையின் விசாரணைக்கென்று அவர் அழைத்து செல்லப்பட்டார். கொழும்புவுக்கும் அதன் பின்னர் அடையாளம் தெரியாத ஒரு முகாமுக்கும் அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தயாபர ராஜாவும், உதயகலாவும் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டனர். போர் முடிந்து பல மாதங்கள் வரை அவர்கள் சித்ரவதை செய்யப்படுவதை நிற்கவே இல்லை. இடையிடையே தயாபர ராஜாவின் மனைவியான உதயகலாவின் பாட்டி அவர்களை சென்று சந்தித்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் சித்ரவதை செய்யப்பட்ட விவரம் அவருக்கு நன்றாகத் தெரியும். இதனிடையே கடந்த 2009 செப்டம்பர் பதினைந்தாம் தேதி தயாபர ராஜா இறந்து விட்டார். அதற்கு முன் இப்படி யாராவது இறந்தால் அவர்களை புலிகள் தான் கொன்றுவிட்டார்கள் என்று இலங்கை ராணுவம் எளிதாக பொய் சொல்லி தப்பித்து விடும். ஆனால், புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்ட இன்றைய சூழலில் இலங்கை ராணுவம் பழி போடுவதற்கு யாரும் இல்லை. ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தயாபர ராஜா சடலமாக கண்டெடுக்கப்பட்டபோது, அவரது மார்பில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த காயம் இருந்தது. உதயகலா இப்போது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், அவரால் நடக்கக்கூட முடியாத நிலை. அந்த அளவுக்கு அவர் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்.
            இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்து எவ்வாறு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சியாகும். தமிழர்களின் உரிமைகளுக்காக போராடிய புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழர்களுக்கென்று பாதுகாப்பாக எவரும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இருக்கிற தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் மும்முரத்தில் தீவிரமாக இருக்கின்றன. அங்கு அதிகாரத்துக்காக போட்டியிடும் இரண்டு கொலைக்காரர்களில் எவருக்கு வாக்களிப்பது என்பதில் அவர்கள் போட்டாபோட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இலங்கை அரசின் இனப்படுகொலை குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க வேண்டியது மிக மிக அவசியமாகும். அந்த கடமை தமிழ்நாட்டு தமிழர்களுக்கு அதிகம் உள்ளது.
            இலங்கை அரசின் மீது போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் சில முன்முயற்சி எடுத்தபோது அதை தடுத்து இலங்கை அரசை காப்பாற்றியது இந்தியாதான். இன்று மீண்டும் அத்தகைய சூழல் உருவாகியிருக்கிறது. .நா. சபையின் அதிகாரி பிலிப் ஆல்ஸ்டனின் அறிக்கைக்குப் பிறகு சர்வதேச சூழல் சற்றே மாறியிருக்கிறது. இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டு இலங்கை அரசின் மீது போர்க் குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என நாம் வலியுறுத்த வேண்டும். இலங்கையை ஒருஇனப்படுகொலை செய்த நாடுஎன்று அறிவிக்குமாறு .நா. சபையை இந்திய அரசு வலியுறுத்தினால் நிச்சயமாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். இலங்கை பிரச்சனையை புலிகளை மட்டுமே மையமாக வைத்த அணுகிக்கொண்டிருந்த இந்திய அரசு அதே வித அணுகுமுறையை இப்போதும் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனைக்குரியதாகும். தற்போது இலங்கையின் ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு இந்தியாவுக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள் என்பது முன்பைவிட இப்போது அதிகம் தெளிவாகி உள்ளது. இந்நிலையிலேனும் இந்தியாவின் பாதுகாப்பை கருதியாவது இலங்கை ஆட்சியாளர்கள் மீது போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்று இந்தியா வலியுறுத்த வேண்டும். இதற்காக தமிழ் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் யாவும் கட்சி பேதம் பாராமல் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும்.