Saturday, January 31, 2015

தமிழகத்தைச் சூழும் பெரும்பான்மைவாத ஆபத்து -ரவிக்குமார்


( 29.01.2015 அன்று நெல்லிக்குப்பம் நகரில் விசிக வின் துணை அமைப்பான ‘தியாகி முத்துக்குமார் பாசறை’ சார்பில் நடைபெற்ற ஈகி முத்துக்குமாரின் 6 ஆவது நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய சிறப்புரையின் சுருக்கம்)

 

ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில்தான் முத்துக்குமார் தீக்குளித்தார்.அன்று சட்டமன்றம் நடைபெற்றுக்கொண்டிருந்தது என நினைவு. முத்துக்குமார்தீக்குளித்த செய்தியைக் கேட்டதும் தலைவரும் நானும்மருத்துவமனைக்கு விரைந்து சென்றோம்எரிந்துகரிக்கட்டையாய் கிடத்தப்பட்டிருந்த அவரது உடலைப்பார்த்து திகைத்து நின்றோம்இப்போதும் அந்தக் காட்சிஎன் கண்ணில் தெரிகிறதுதனது மரணச்செய்தியை தலைவர் திருமாவளவனிடம் கூறுங்கள் என அவர் எழுதிவைத்துவிட்டுப்போன கடிதம் அப்புறம்தான் எங்களுக்குத் தெரிய வந்தது. அந்த அளவுக்கு நம் தலைவர்மீதும் இந்தக் கட்சியின்மீதும் அவர் நம்பிக்கை வைத்திருந்தார். 

 

முத்துக்குமார் தன்னை எந்த லட்சியத்துக்காகஎரியூட்டிக்கொண்டாரோ எதற்காக தனது இன்னுயிரை ஈகம் செய்தாரோ அதை ஈடேற்றவேண்டிய கடமை நமக்குஇருக்கிறதுசிங்களப் பேரினவாதக் கொடுமைகளிலிருந்து விடுபட்டு ஈழம் உருவாகவேண்டும்ஈழத் தமிழர்கள்சுயமரியாதையோடு சமத்துவத்தோடு அதில் வாழவேண்டும்என்பதே அந்த லட்சியம்

 

இலங்கையில் இப்போது ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறதுஆனால் தமிழர்களின் வாழ் நிலையில் மாற்றம் வரவில்லைஇறுதிப்போரின்போது ராணுவத்தால்பிடித்துச்செல்லப்பட்டவர்கள்ராணுவத்திடம் சரணடைந்தஆயிரக்கணக்கான தமிழர்கள்- அவர்களின் கதி என்னஆனதென்று தெரியவில்லை. ஓராண்டுக்குள் சொல்கிறோம் என்கிறார் இன்றைய அதிபர் மைத்ரிபால. ராஜபக்சவும் போர் முடிந்தபோது அப்படித்தான் சொன்னார். இப்போதையதிபரும் அதைத்தான் சொல்கிறார்

 

ராணுவத்தால் அபகரிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்கள்ஒப்படைக்கப்படவில்லைசிங்களக் குடியேற்றங்களோதமிழர் பகுதிகளில் ஆத்திரமூட்டும் விதத்தில்உருவாக்கப்பட்டிருக்கும் பௌத்த ஆலயங்களோஅகற்றப்படவில்லைவெள்ளை வேன்களில் கடத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்படவில்லை.ராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை. 

 

தமிழர் பகுதிகளில் சிவில் நிர்வாகப் பணிகளை இப்போதும் ராணுவம் செய்கிறது. தமிழ்நாட்டில் அரசாங்கமே டாஸ்மாக் கடைகளை நடத்துகிறது.அதை நாம் விமர்சிக்கிறோம். ஈழத் தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவம்தான் மதுக் கடைகளை நடத்துகிறது. போராளிகளின் கட்டுப்பாட்டில் அந்தப் பகுதிகள் இருந்தபோது இல்லாத சமூகச் சீர்கேடு இன்று அங்கே தலைவிரித்து ஆடுகிறது. இயக்கங்களுக்குப்போன இளைஞர்கள் இறந்தால் போராளி என்ற கௌரவம் இருந்தது. ஆனால் தமிழ் இளைஞர்கள் குடிகாரர்கள் என்ற கேவல நிலைக்கு ஆளாகிவருகிறார்கள். தமிழர்களின் நிலை முன்னைவிடவும் மோசமாகிக்கொண்டிருக்கிறது என்று இதனால்தான் சொல்லுகிறோம்.

 

13 ஆவது சட்டத் திருத்தம் குறித்துப் பேசுகிறார்களே ஒழியஅதில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லைஇப்போதுஅதிபராகியிருக்கும் மைத்ரிபாலாவும் ராஜபக்சவின்அமைச்சரவையில் பங்கு வகித்தவர்தான்தமிழர்கள்மீதானதாக்குதல்களுக்குத் துணைபோனவர்தான்எனவேதமிழ்நாட்டுத் தமிழர்கள் விழிப்போடு இருக்கவேண்டும்நாம் விழிப்போடு இருந்து குரல் கொடுத்தால்தான் அங்கிருக்கும் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கும். 

 

வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தமிழ்நாட்டுக்கு வந்தபோது ‘ தமிழ்நாட்டில் இருப்பவர்கள் தமதுபிரச்சனையில் தலையிடவேண்டாம்’ எனக் கூறினார். அது ராஜபக்ச ஆட்சி நடந்த காலம். பாராளுமன்றத்தில் பேசினாலே உளவுத்துறையின் விசாரணைக்கு ஆளாக நேர்ந்த காலம். முதலமைச்சர் ஒரு இடத்துக்குப் போவதென்றால்கூட ராணுவத்திடம் அனுமதி பெறவேண்டும் என்று கெடுபிடி செய்யப்பட்ட காலம். எனவே அவர் சொன்னது ஏன் என்று நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. இப்போதும் அவர் அப்படி சொல்லக்கூடும். அப்படி அவர் பேசினாலும்கூட நாம் ஈழத் தமிழர்களைப்பற்றிப் பேசித்தான்ஆகவேண்டும்தமிழ்நாட்டுத் தமிழர்கள் அழுத்தம்கொடுத்ததால்தான் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில்இந்திய அரசு இலங்கைக்கு எதிராக முன்னர் வாக்களித்ததுஎனவே இப்போதும் நாம் அந்தக் கடமையிலிருந்துவிலகக்கூடாதுஇன்றும்கூட அவர்களுக்குக் குரல் கொடுக்க தமிழ்நாட்டுத் தமிழர்களைவிட்டால் வேறு யாரும் கிடையாது. ஆட்சி மாறிவிட்டது இனிமேல் நாம் ஈழத் தமிழரைப்பற்றிப் பேசத் தேவையில்லை என நாம் ஒதுங்கிவிடக்கூடாது. 

 

இங்கு அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்பவேண்டும் என இப்போது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக டெல்லியிலே கூட்டம் ஒன்றைக் கூட்டியிருக்கிறார்கள். ஆனால் அகதிகளை இப்போது திருப்பி அனுப்பக்கூடாது என தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அதற்காக அவரை நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த நிலைபாட்டில் தமிழக அரசு உறுதியாக இருக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம். அங்கு இருக்கும் தமிழர்களுக்கே இன்னும் அச்சம் நீங்கவில்லை. அதற்குள் இங்கு இருப்பவர்களையும் அனுப்ப நினைப்பது அநீதியானது. 

 

அகதிகள் குறித்த ஐநா ஒப்பந்தம் எதிலும் இந்தியா இதுவரைக் கையெழுத்திடவில்லை. இங்கிருக்கும் அகதிகளின் நிலையை உலகுக்கு எடுத்துச் சொன்னது நாம் தான். அவர்களுக்கு அளிக்கப்படும் உதவிகள் எந்த அளவுக்குக் குறைவாக இருக்கின்றன என்பதை நாம்தான் தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம். தலைவரும் நானும் முகாம்களைப் பார்வையிட்டு தமிழக அரசுக்கு அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் அகதிகளின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அன்றைய முதல்வர் கலைஞரால் அவர்களுக்கான பணக்கொடை இரு மடங்காக உயர்த்தப்பட்டது. இங்கிருக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களெல்லாம் அகதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டன. டிவி முதல் திருமண உதவித் திட்டம் வரை அவர்களுக்குக் கிடைப்பதற்கு நாம் தான் காரணம். தற்காலிக முகாம்களில் இருந்தவர்கள் இன்று நிரந்தர வீடுகளில் வசிப்பதற்கு நாம் அளித்த அறிக்கைதான் காரணம். இப்போதைய அரசும் நலத் திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது.முதியோர் உதவித் தொகை அகதிகளுக்கும் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் வழங்கப்படும் உரிமைகள் இந்தியாவில் இல்லை என்றபோதிலும் மாநில அரசு தனது நிதியில் அவர்களுக்குப் பல திட்டங்களை செயல்படுத்திவருகிறது. ஆனால் இந்த உதவிகள் அவர்களுக்கு நிரந்தர தீர்வாகிவிட முடியாது. அவர்கள் விரும்பினாலன்றி அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்பக்கூடாது என்பதுதான் நமதுநிலைபாடு.

 

இலங்கை அரசியலுக்கும் இந்திய அரசியலுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இரண்டு நாடுகளிலுமே பெரும்பான்மைவாதத்தை முன்னெடுக்கும் கட்சிகள் ஆட்சிக்கு வந்துள்ளன. இது இந்திய அரசியலில் ஒரு புதிய பரிமாணம். பண்பு ரீதியான மாற்றம். சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவையில்லை, தலித் வாக்குகள் தேவையில்லை என்ற எண்ணம் கொண்டவர்கள் பெரும்பான்மை பலத்தோடு மத்தியிலே ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் அதுதான் நடந்திருக்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமலேயே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருப்பது பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தானது. 

 

பாஜகவின் கொள்கையை எதிர்ப்பதாகச் சொன்னாலும்கூட தமிழ்நாட்டிலிருக்கும் பெரிய கட்சிகளான திமுகவும் அதிமுகவும் அதே பெரும்பான்மைவாத அணுகுமுறையை நோக்கி நகர்கின்றன என்பதைத்தான் அவர்களது அண்மைக்கால அணுகுமுறைகள் காட்டுகின்றன. அது 2016 சட்டமன்றத் தேர்தலில் மிகவும் துலக்கமாக வெளிப்படும். அதை நாம் பார்க்கத்தான் போகிறோம். சாதிப் பெரும்பான்மைவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு மதப் பெரும்பான்மைவாதத்தை ஆதரிப்பதில் எந்த சிக்கலும் இருக்கப்போவதில்லை. இதை தமிழ்நாட்டிலிருக்கும் சிறுபான்மை மக்களும், தலித்துகளும், ஜனநாயக சக்திகளும் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதில்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது. 

 

முத்துக்குமாரின் ஈகம் ஈழத் தமிழர்களுக்கானது என்று பொத்தாம் பொதுவாக மட்டும் நாம் புரிந்துகொள்ளக்கூடாது. பெரும்பான்மை சிங்கள இனத்தின் மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடும் சிறுபான்மை தமிழ் இனத்தின் உரிமைக்கானது என அதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். அப்படிப் பார்த்தால்தான் இங்கும் நாம் பெரும்பான்மைவாதத்தை எதிர்க்கவேண்டியதன் முக்கியத்துவம் புரியும். முத்துக்குமாரின் இந்த நினைவு நாளில் மதப் பெரும்பான்மைவாதத்தையும், சாதிப் பெரும்பான்மைவாதத்தையும் எதிர்த்துப் போராட உறுதி ஏற்போம்.    

 

 

 

Thursday, January 29, 2015

”மதசார்பின்மை” : சிவசேனா கட்சியின்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? -ரவிக்குமார்


 
மதச்சார்பின்மை என்ற சொல்லை அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து நீக்கவேண்டும் என சிவசேனா கட்சி கோரியிருக்கிறது. பாஜகவைவிட தாங்களே இந்துத்துவாவை உயர்த்திப்பிடிப்பதாகக் காட்டிக்கொள்வதற்கு அக்கட்சி பல தந்திரங்களைக் கையாண்டு வருகிறது. அதில் இந்தக் கோரிக்கை இப்போது சேர்ந்திருக்கிறது.

சிவசேனாவின் கோரிக்கை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் புறம்பானதாகும். தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான இந்திய சட்டக் கமிஷனின் பரிந்துரைகளுக்கும்கூட இக்கருத்து முரணானதாகும்.

ரஷ்யா போன்ற நாடுகள்கூட சிதறித் துண்டு துண்டாகிவிட்ட நிலையில் இந்தியாவை ஒரே நாடாகக் காப்பாற்றிக்கொண்டிருப்பது அரசியலமைப்புச் சட்டம்தான். அதன் ஆன்மாவாக இருப்பது மதச்சார்பின்மை என்ற கருத்தாக்கம். அதை அழிப்பது இந்தியாவைத் துண்டாடவே வழிவகுக்கும். அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்மாவான மதச்சார்பின்மையை அழிக்கும்விதமாக சிவசேனா முன்வைத்திருக்கும் கோரிக்கை இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது.

இந்தியாவில் மேற்கொள்ளவேண்டிய தேர்தல் சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்த இந்திய சட்டக் கமிஷன் தனது 170 ஆவது அறிக்கையில் ” ஜனநாயக நெறிமுறைகளைத் தன்னளவில் மதிக்காத ஒரு அரசியல் கட்சி இந்த நாட்டை ஆளும்போது அதைப்பின்பற்றும் என நாம் எதிர்பார்க்கமுடியாது. உள்ளுக்குள் சர்வாதிகாரமாகவும் வெளியில் ஜனநாயகமாகவும் அதன் செயல்பாடு இருக்க முடியாது”   எனக் குறிப்பிட்டிருந்தது. மதச்சார்பின்மைக்கு எதிரான கருத்துகொண்ட ஒரு கட்சி சட்டமன்றம் பாராளுமன்றம் முதலான அமைப்புகளில் பங்கேற்பது நாட்டுக்கு ஆபத்தாகவே முடியும். அதற்கு சிவசேனா ஒரு உதாரணம்.

S.R.Bommai v.  Union of India (1994 (3) SCC1)என்ற வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் “"Inspired by the Indian tradition of tolerance  and fraternity,  for  whose  sake,  the greatest son of Modern India, Mahatma Gandhi, laid  down  his  life and  seeking  to  redeem  the  promise of religious  neutrality held forth by the  Congress  Party,  the   Founding  Fathers  proceeded  to  create  a  State, secular in  its  outlook  and  egalitarian  in  its  action...   if  any  party or organisation seeks to  fight the elections on the basis of plank which has the  proximate  effect  of  eroding   the   secular philosophy  of  the Constitution it would certainly be guilty of following an  unconstitutional  course of action....    if  the  Constitution requires the State to be secular in thought and action, the same requirement attaches to political parties as well." என்று கூறியிருக்கிறது.

சிவசேனாவின் கோரிக்கை பற்றி கருத்து தெரிவித்திருக்கும் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து மதச்சார்பின்மை என்ற சொல்லை நீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் கூறியிருக்கிறார். ஆனால் அத்துடன் பிரச்சனை முடிந்துவிடவில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் பின்புலத்தில் சிவசேனா கட்சியின்மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன்வரவேண்டும்.
Saturday, January 24, 2015

வெள்ளை இருள் கறுப்புச் சூரியன் - ரவிக்குமார்

 

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம். வாக்களிப்பதற்காகக் காத்திருக்கும் நிண்ட கியூ. வெள்ளையர் ஒருவர் தனக்கு முன்னே நிற்கும் கறுப்பரிடம் நட்புணர்வோடு கேட்கிறார்:
‘‘ரொம்ப நேரமா வெய்ட் பண்றீங்களா?’’
அதற்கு அந்த கறுப்பர் பதிலளிக்கிறார்:
‘‘ஆமாம்! இருநூறு வருஷங்களா வெய்ட் பண்ணிக்கிட்டிருக்கிறோம்’’
உண்மைதான்! கறுப்பின மக்களின் சுமார் இருநூறு வருடம் காத்திருப்பு வீண்போகவில்லை. ஒபாமா வெற்றி பெற்றுவிட்டார். அமெரிக்காவின் நாற்பத்து நான்காவது அதிபராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கறுப்பர் ஒருவர் அமெரிக்க அதிபராகவேண்டும் என்ற கனவு இப்போது நனவாகியிருக்கிறது.
உலகமெங்கும் ஒபாமாவின் வெற்றியைத் தங்களது வெற்றியாக மக்கள் கொண்டாடுகிறார்கள். அதன் பொருள், அமெரிக்க அதிபரைத் தமது நாட்டு அதிபராக அவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்பதல்ல. ஒபாமாவைத் தங்களில் ஒருவராக அவர்கள் கருதுகிறார்கள் என்பதே அதன் அர்த்தம். ஒபாமா ஒரு நபர் அல்ல. இப்போது அவர் ஒரு அடையாளம்! ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவர் அதிகாரத்தின் உயர் நிலைக்கு வர முடியும் என்பதன் அடையாளம். ஜனநாயகத்தின் வலிமையை எடுத்துக்காட்டும் அடையாளம்.
இந்த நாள் & அமெரிக்க வரலாற்றில் ஒரு பொன்னாள் என்று சொல்வதைக் காட்டிலும் இந்த நாள் அமெரிக்க வரலாறு புதிதாக எழுதப்படும் நாள் என்று கூறுவதே பொருத்தமாயிருக்கும். உலகத்துக்கெல்லாம் ஜனநாயகம் பற்றிப் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் வரலாறு கறை படிந்தது. அடிமைத்தனமும், நிறவெறியும் அமெரிக்க ஜனநாயகத்தை மாசுபடுத்தி வந்தன. வெகுகாலம் வரை அங்கே பெண்களுக்கும், கறுப்பின மக்களுக்கும் வாக்குரிமை மறுக்கப்பட்டு வந்தது. இதைத்தான் ஒபாமா மிகவும் நுட்பமாகத் தனது சிகாகோ பேச்சில் குறிப்பிட்டார்.
‘‘இந்தத் தேர்தல் ‘முதன்முதல்’ என்று சொல்லத்தக்க பல விஷயங்களைப் பெற்றிருக்கிறது. தலைமுறை தலைமுறையாக சொல்லப்படப்போகும் பல கதைகளைக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்றிரவு எனது மனதில் பதிந்திருக்கிறது ஒரு காட்சி. அட்லாண்டாவில் வாக்களித்தார் ஒரு பெண். வரிசையில் நின்று வாக்களித்த லட்சக்கணக்கானவர்களில் அவரும் ஒருவர்தான். ஒரே ஒரு வித்தியாசம். ஆன் நிக்ஸன் கூப்பர் என்ற அந்தப் பெண்மணிக்கு நூற்று ஆறு வயது. அவர் இந்த நாட்டில் அடிமை முறை ஒழிக்கப்பட்டதற்கு அடுத்து வந்த தலைமுறையில் பிறந்தவர். அது சாலைகளில் இந்த அளவுக்குக் கார்கள் செல்லாத காலம், வானில் இவ்வளவு விமானங்கள் பறக்காத காலம். இவரையத்தவர்கள் இரண்டு காரணங்களால் வாக்களிக்க முடியாதிருந்த காலம் & ஏனென்றால் அவர் ஒரு பெண், அடுத்தது அவரது தோலின் நிறம் கறுப்பு’’ என்று மிகவும் கவித்துவத்தோடு அதை ஒபாமா குறிப்பிட்டார்.
இப்போது அமெரிக்காவில் பெண்கள் வாக்களிக்க எந்தவிதத் தடையும் இல்லை. ஆனால் கறுப்பின மக்களின் நிலை அப்படியானதல்ல. அவர்களுக்கு வாக்குரிமை இருக்கிறது என்றபோதிலும் அதைப் பயன்படுத்துவதற்கு ஏராளமான கட்டுப்பாடுகள். உலகில் மிக அதிகமான சிறைக் கைதிகளைக் கொண்ட நாடு அமெரிக்கா. கைதிகளில் பெரும்பான்மையோர் கறுப்பினத்தவர்தான். கைதிகளாக இருந்து விடுதலை செய்யப்பட்டாலும்கூட வாக்குரிமையை மீண்டும் பெறுவது அங்கே அவ்வளவு எளிதல்ல. இப்படி வாக்குரிமை பறிக்கப்பட்ட லட்சக்கணக்கான கறுப்பின மக்கள் அமெரிக்காவில் உள்ளனர். வாக்களிப்பதற்கான அடையாள அட்டை கறுப்பினத்தவரில் பலரிடம் கிடையாது. இப்படிப் பல்வேறு தடைகள் இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றையெல்லாம் தாண்டித்தான் கறுப்பினத்தவர் பெருமளவில் வாக்களித்தார்கள். இப்போது ஒபாமா வெற்றி பெற்றிருக்கிறார்.
வெள்ளை மாளிகையில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் நுழைகிறார். ஏற்கனவே கறுப்பினத்தைச் சேர்ந்த பலர் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்திருக்கிறார்கள். ஆனால் அதிபராக அல்ல. வேலைக்காரர்கள் செல்லும் பின்கட்டு வழியாகப் போயிருக்கிறார்கள். அமெரிக்க அதிபரை கறுப்பர் ஒருவர் சந்திப்பதேகூட ஒரு காலத்தில் அபூர்வமாக இருந்தது. ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது அவரை கறுப்பினத் தலைவர் ஃப்ரடெரிக் டக்ளஸ் மூன்று முறை சந்தித்துப் பேசினார். அது அப்போது கறுப்பினத்தவரால் கொண்டாடப்பட்டது.
வெள்ளை மாளிகைக்கு விருந்தாளியாகச் செல்வது வேறு. அங்கேயே அதிபராகத் தங்கியிருப்பது வேறு. 1940ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முதல் கறுப்பரான ஜார்ஜ் எட்வின் டெய்லர் என்பவர் கறுப்பினத்தவர் செய்ய வேண்டிய புரட்சியைப்பற்றித் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அது வன்முறையான புரட்சி அல்ல. வாக்குச்சீட்டுகளின் மூலமான புரட்சி. நூறு ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது அந்தப் புரட்சி நடந்திருக்கிறது.
கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் 2000ஆவது ஆண்டில் அமெரிக்க அதிபராக வருவார் என குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஜேக்கப். கே. ஜேவிட்ஸ் என்பவர் 1958ஆம் ஆண்டிலேயே கணித்திருந்தார். அவர் எத்தகைய நபராக இருப்பார் என்ற வர்ணனையையும் அவர் வெளியிட்டிருந்தார். ‘‘அவர் மெத்தப்படித்தவராக, பல நாடுகளுக்கும் பயணம் செய்தவராக இருப்பார். உலகில் அமெரிக்காவின் முக்கியத்துவம் என்ன என்பதை உணர்ந்தவராக இருப்பார். அவர் அர்ப்பணிப்பு மிக்க சர்வதேசியப் பார்வை கொண்டவராக இருப்பார்’’ என்று அவர் கணித்திருந்தார். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஒபாமா என்று ஒருவர் தனது கணிப்புக்குப் பொருத்தமாக வருவாரென்று ஜேவிட்ஸ் நினைத்திருக்கமாட்டார்.
ஒபாமாவின் வெற்றி கறுப்பினத்தவரால் கொண்டாடப்பட்டாலும் அதற்குக் காரணமானவர்கள் அவர்கள் மட்டுமே அல்ல. பெண்களும், வெள்ளை இன இளைஞர்களும் பெருமளவில் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். கறுப்பினத்தவரின் சிவில் உரிமைகளுக்கான போராட்ட வரலாற்றை முன்னிலைப்படுத்தாமல் அமெரிக்காவின் எதிர்காலத்துக்கே ஒபாமா தனது தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியத்துவம் தந்தார். ‘மாற்றம்’ என்ற அவரது கோஷம் அமெரிக்க இளைஞர்களை கவர்ந்திழுத்தது. அதற்குப் பொருத்தமாக அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாபெரும் வீழ்ச்சியும் அமெரிக்க மக்களை சிந்திக்க வைத்தது. ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்பதை மட்டுமே சொல்லி அமெரிக்க மக்களை இனி ஏமாற்ற முடியாது என்பதன் வெளிப்பாடுதான் இந்தத் தேர்தல் முடிவு.
ஒபாமா தனது தேர்தல் பிரச்சாரத்தின் மையமான விஷயமாக சாதாரண அமெரிக்க மக்களின் பிரச்சனைகளைத்தான் எடுத்துக் கொண்டார். தேர்தல் முடிவுக்குப்பிறகு சிகாகோவில் அவர் நிகழ்த்திய வெற்றிப் பேருரையிலும் அது வெளிப்பட்டது. ‘‘நாம் இங்கே நிற்கின்ற இந்த இரவில் வீரம் செறிந்த அமெரிக்கர்கள் ஈராக்கின் பாலைவனங்களிலும், ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதிகளிலும் விழித்திருக்கிறார்கள். நமக்காக அவர்கள் தமது உயிர்களைப் பணயம் வைத்திருக்கிறார்கள். தமது குழந்தைகள் தூங்கிய பிறகு தந்தையரும், தாய்மார்களும் அவர்களின் கல்லூரிப் படிப்புக்கு எப்படி பணம் சேர்ப்பது, தமது மருத்துவ செலவை எப்படி சமாளிப்பது என்று தூங்காமல் கவலையோடு சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.’’
‘‘புதிய ஆற்றல் உருவாக்கப்பட வேண்டும்; புதிய பள்ளிகள் கட்டப்படவேண்டும். அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டும், கூட்டணிகளை செப்பனிட வேண்டும்.’’
‘‘நமக்கு முன்னே உள்ள பாதை மிக நீண்டது, ஏற வேண்டிய உயரமோ செங்குத்தானது’’ என்று ஒபாமா அதைத்தான் குறிப்பிட்டார்.
இளைஞர்களின் வேலைவாய்ப்பு, கல்வி வசதிகளையும் மருத்துவ வசதிகளையும் மேம்படுத்த வேண்டியதன் அவசியம் போன்ற அடிப்படையான பிரச்சனைகளைத்தான் ஒபாமா கவனப்படுத்தியிருந்தார். இப்போது மட்டுமல்ல, 2004ஆம் ஆண்டு கடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஜான் கெர்ரியை ஆதரித்துப் பேசியபோதும் அவர் இவற்றைத்தான் வலியுறுத்தி வந்தார். அப்போது நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் நோக்கவுரை ஆற்றிய ஒபாமா, ‘‘சிக்காகோவின் தென்பகுதியில் ஏதோ ஒரு குழந்தை படிக்க முடியாமல் இருக்குமானால் அது எனக்கு முக்கியமான விஷயம், அந்தக் குழந்தை எனது குழந்தை இல்லையென்றாலும்கூட; ஏதோ ஓரிடத்தில் ஒரு முதியவர் மருந்து வாங்குவதற்குப் பணமில்லாமல் தவித்தால் அது என்னை பாதிக்கிறது, அவர் எனது தாத்தாவாக இல்லாவிட்டாலும்கூட; அமெரிக்காவின் ஏதோ ஒரு பகுதியில் அரபு அமெரிக்கக் குடும்பம் ஒன்று போலீசால் சுற்றி வளைக்கப்பட்டு எவ்வித சட்ட உதவியுமின்றி துன்புறுத்தப்பட்டால் அது எனது சிவில் உரிமைகளைப் பாதிப்பதாகவே உணர்கிறேன்’’ என்று உணர்ச்சி ததும்பக் குறிப்பிட்டார்.
ஒபாமாவின் வெற்றி இதனால்தான் பலருக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நடக்கும் போர்கள் முடிவுக்கு வருமென்ற நம்பிக்கை, ஈரான் மீதான அச்சுறுத்தல் குறையுமென்ற நம்பிக்கை. இலங்கைத் தமிழர்கள்கூட ஒபாமாவின் வெற்றி தங்களது அவல வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்குமென நினைக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் நடக்குமா?
ஒபாமாவே சொல்லியிருப்பதுபோல, ‘‘அரசாங்கம் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிட முடியாது.’’ ‘‘இந்த வெற்றியே ‘மாற்றம்’ ஆகிவிடாது. இது அந்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான வாய்ப்பு மட்டுமே. நாம் பழைய வழியிலேயே சென்றால் அந்த மாற்றம் சாத்தியப்படாது’’ என்று அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். வெள்ளை இன மக்களும், கறுப்பின மக்களும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். கொள்கையில் மாற்றம், அணுகுமுறையில் மாற்றம். அதை ஒபாமா செய்வாரா? என்பதுதான் கேள்வி. அமெரிக்காவின் வரலாற்றைப் பார்த்தால் அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே எண்ணத் தோன்றுகிறது.
உலகிலேயே மிகப்பெரிய ‘‘போர் எந்திரம்’’ அமெரிக்காவால் உருவாக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் யாவும் சேர்ந்து செய்யும் ராணுவ செலவைவிட அமெரிக்க நாட்டின் ராணுவ செலவு அதிகம். அந்தப் ‘‘போர் எந்திரத்தை’’ ஒரே நாளில் தகர்த்துவிட முடியாது. அதற்குக் காலம் பிடிக்கும். ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டு அல்ல அதற்கும் மேல் இன்னுமொரு முறை அவர் அதிபராக வரவேண்டியதுகூட அவசியமாகலாம். ஆனால் அதை அமெரிக்கா அனுமதிக்குமா? அந்தப் ‘‘போர் எந்திரத்தால்’’ பயனடைகிறவர்கள் அனுமதிப்பார்களா? இதற்கு எளிதாகப் பதில்சொல்லிவிட முடியாது.
ஒபாமா என்ன செய்ய வேண்டும்? புகழ்பெற்ற அமெரிக்க கறுப்பினப் பெண் எழுத்தாளர் ஆலிஸ் வாக்கர் ஒபாமாவுக்கு எழுதியுள்ள திறந்த மடலில் சொல்கிறார்: ‘‘மற்றவர்களின் எதிரிகளை உங்களது எதிரிகளாகக் கருதாதீர்கள். அச்சத்தால், அவமானத்தால், வேதனையால்தான் அவர்கள் நமக்குக் கெடுதல் செய்கிறார்கள். அத்தகைய உணர்வுகள் நம் எல்லோரிடத்திலும் உள்ளன... நீங்கள் இப்போது அமெரிக்காவின் முப்படைகளுக்கும் தலைவராகப் போகிறீர்கள், நமது நாட்டைக் காக்கும் பெரும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. எனது அம்மா அடிக்கடி சொல்லும் பைபிள் வாசகம் ஒன்றை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். ‘‘பாவத்தை வெறுங்கள், ஆனால், பாவிகளை நேசியுங்கள்.’’ அதைத்தான் நாமும் ஒபாமாவுக்குச் சொல்ல வேண்டும்.
எல்லாவற்றையும் தாண்டி இந்தத் தருணம் கொண்டாடுவதற்கு உரியது என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டு சுந்திரப் பிரகடனம் கையெழுத்திடப்பட்டபோது, அப்போதிருந்த கறுப்பின மக்களின் தலைவர் ஃப்ரடெரிக் டக்ளஸ் கூறியது இப்போதும் பொருந்துகிறது. அவர் கூறினார்: ‘‘இந்த நாள் பேசுவதற்கான நாளல்ல, கட்டுரை எழுதுவதற்கான நாளல்ல. இந்த நாள் கவிதைக்கான நாள், புதிய பாடல் ஒன்றைப் பாடுவதற்கான நாள்.’’

( ஒபாமா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது 06.11.2008 ல் ஜூனியர் விகடனில் எழுதியது. ) 

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலும் தலித் வாக்குகளும் -ரவிக்குமார்ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இடைத் தேர்தல் என்றாலே அதில் ஆளும் கட்சி வேட்பாளர்தான் வெற்றிபெறுவார் என்ற வினோதமான நிலை தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்றபோதிலும் இந்தத் தொகுதியில் 2001 முதல் அதிமுக தான் வெற்றிபெற்று வருகிறது என்பதால் இந்தத் தேர்தலின்  முடிவு எப்படி இருக்கும் என்பதை யூகிப்பது சிரமம் இல்லை. இப்போதைக்கு நான்கு கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. 

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தத் தொகுதியில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மேல் நகரப்பகுதிகளில் வசிக்கிறவர்கள். 

தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட்டபோது 2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்துக்கொண்டார்கள். அப்போது ஸ்ரீரங்கம் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 290417 அதில் தலித் வாக்காளர்கள் 49579 அதாவது 17.07%. திருச்சி நகரத்தில் இந்தத் தொகுதியில் இடம்பெற்றிருக்கும் ஆறு வார்டுகளில் வார்டுகள் 1,4, 6 ஆகிய வார்டுகளில் தலித் வாக்காளர்களின் எண்ணிக்கை 10 முதல் 18 விழுக்காடு வரை இருக்கிறது. 

மல்லியம்பத்து,சோமரசம்பேட்டை,கள்ளிக்குடி கம்பரசம்பேட்டை, குழுமணி, சிறுகமணி, தொப்பம்பட்டி என தலித் மக்கள் அடர்த்தியாக வாழும் ஊர்கள் இந்தத் தொகுதியில் இருக்கின்றன.  

இந்தத் தொகுதியின் வாக்காளர்களில் ஆறில் ஒரு பகுதியினர் தலித்துகளாக இருந்தபோதிலும் அவர்களது வாக்குகளை இங்கே களமிறங்கியிருக்கும் பெரிய கட்சிகளான தி.மு.க,அ.தி.மு.க,பா.ஜ.க ஆகிய கட்சிகள் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கின்றனவா எனத் தெரியவில்லை. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்  தலித் ஒருவரை வேட்பாளராக  நிறுத்தியிருக்கிறது. பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளரை நிறுத்துவது பெரிய கட்சிகளுக்கு  வழக்கமில்லை.      அ .தி.மு.க கூட திருச்சி மக்களவை இடைத் தேர்தலில் 2001 ஆம் ஆண்டு தலித் எழில்மலையை  நிறுத்தி வெற்றிபெறச் செய்திருக்கிறது. ஆனால் மற்ற கட்சிகள் இதில் கறாராகவே இருக்கின்றன. மார்க்சிஸ்ட் கட்சி மட்டும்தான் இதில் விதிவிலக்கு. 

வேட்பாளராக தலித்தை அறிவிக்கவேண்டாம். அந்தத் தொகுதியில் இருக்கும் தலித் வாக்குகளைக் கவர்வதற்காக அவர்கள் தொடர்பான வாக்குறுதிகளையாவது பெரிய கட்சிகள் முன்வைக்கின்றனவா என்றால் அதுவும் இல்லை. அந்த அளவுக்குத்தான் தலித் வாக்குகளுக்கு அங்கே மதிப்பிருக்கிறது. இதே அளவு மக்கள் தொகை ஒரு தொகுதியில் முஸ்லிம்களுக்கோ கிறித்தவர்களுக்கோ இருந்தால் அதன் மதிப்பு எப்படி இருக்கும்  என்பதை சிந்தித்துப் பார்த்தால் தலித் மக்களை அரசியல்படுத்துவதில் இன்னும் தலித் இயக்கங்கள் எவ்வளவு தூரம் பயணம் செய்யவேண்டும் என்பது புரியும். 

Thursday, January 22, 2015

எது வீரவணக்க நாள்? - ரவிக்குமார்

எது வீரவணக்க நாள்?- - ரவிக்குமார்


+++++++++++++++++


·         27.01.2015 மொழிப்போர் தியாகி மாணவர் ராசேந்திரன் நினைவுப் பொன்விழா நாள் !


·         மொழிப்போர் தியாகி மாணவர் ராசேந்திரன் புதைக்கப்பட்ட பரங்கிப்பேட்டையில் நினைவுச் சின்னம் எழுப்புக!


·        மேம்பாலத்துக்கு அவரது பெயரை சூட்டுக!


+++++++++++++++++  


1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் ராசேந்திரன் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி எதிர்வரும் 27.01.2015 அன்று ஐம்பது ஆண்டுகள் நிறைவடைகிறது.மொழிப்போரில் துப்பாக்கிக்க்குண்டுக்கு முதலில் பலியானவர் ராசேந்திரன்தான். அவர் அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி (கணிதம்) இரண்டாமாண்டு பயின்றுகொண்டிருந்தார்.அவரது சொந்த ஊர் சிவகங்கை. அவரது தந்தை காவல்துறையில் காவலராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். 


ராசேந்திரனின் சொந்த ஊரான சிவகங்கையில் அவரது நினைவாக ஏதும் உள்ளதா அவரது உறவினர்கள் இப்போதும் அங்கு வாழ்கிறார்களா என அங்குள்ள நண்பர்கள் மூலம் இன்று விசாரித்தேன். அப்படியொன்றும் இல்லை என்றார்கள். ராசேந்திரனின் உறவினர்களையும் கண்டறியமுடியவில்லை என்று கூறினார்கள். அந்தப் போராட்டத்தில் முனைப்போடு பங்காற்றியவரும் முன்னாள் துணைவேந்தருமான திரு க.ப.அறவாணன் அவர்களிடமும், ஓய்வுபெற்ற பேராசிரியர் திருமாவளவன் அவர்களிடமும், அந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததற்கும் அடுத்த ஆண்டில் அங்கு படிக்கச் சென்ற திரு அரணமுறுவல் அவர்களிடமும் இன்று (22.01.2015) அந்தப் போராட்ட அனுபவங்களைக் கேட்டறிந்தேன்.


மத்திய அரசின் கட்டாய இந்திக் கொள்கையை எதிர்த்து 1965 ஆம் ஆண்டு தமிழகமெங்கும் கிளர்ந்தெழுந்த மாணவர் போராட்டத்தின் அங்கமாக அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ” “ அப்போது சி.பி.ராமசாமி அய்யர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். பேராசிரியர்கள் என்றாலே மாணவர்கள் அஞ்சி நடுங்குவார்கள்.. குடியரசு தினமான ஜனவரி 26 க்கு மறுநாள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து சிதம்பரம் நகரை நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டோம். எங்களைக் காவல்துறையினர் மறித்தார்கள். அவர்களது தடுப்புகளைத் தாண்டிக்கொண்டு போக முயன்றோம். அப்போது தடியடி நடத்தப்பட்டது. மாணவர்கள் சாலையோரம் கொட்டப்பட்டிருந்த கற்களை எடுத்து போலிஸ்காரர்கள்மீது வீசத் தொடங்கிவிட்டார்கள். அதனால் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசப்பட்டது. அதை எதிர்பார்த்திருந்தநாங்கள் தயாராக வைத்திருந்த வெங்காயத்தைப் பிழிந்து கண்களில் விட்டுக்கொண்டு போலிஸாரை எதிர்த்துப் போராடினோம். போலிஸார் விரட்டியபோது மாணவர்கள் வழி தெரியாமல் ஒரு முட்டு சந்துக்குள் நுழைந்துவிட்டார்கள். மேலே போக வழியின்றித் திரும்பிவந்த மாணவர்களை போலிஸ்காரர்கள் தலையிலேயே தடியால் அடித்தார்கள். அந்தத் தடியடியில் பல மாணவர்களுக்கு மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது. அதன் பின்னர்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தற்போது ராசேந்திரன் சிலை வைக்கப்பட்டிருக்கிறதே அதற்கு முன்னால் 100 அடி தூரத்தில் ஆசிரியர்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரு மரம் இருந்தது அதன்கீழேதான் குண்டடிபட்டு ராசேந்திரன் விழுந்து கிடந்தார். தமிழ் படித்துக்கொண்டிருந்த மாணவரான நெடுமாறன் தோளில் குண்டடிபட்டு ரத்தம் பீறிட ஓடினார். நாங்களெல்லாம் சிதறி ஓடினோம்” எனப் பேராசிரியர் திருமாவளவன் கூறினார்.


“ அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டம் நடந்ததது. தஞ்சையில் ம.நடராசன் அந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்தார். பெ.சீனுவாசன், காளிமுத்து, எல்.கணேசன் முதலானவர்களின் பணி முகாமையானது. நாங்கள் தயாரித்த துண்டறிக்கைகள் ஆயிரக் கணக்கில் தமிழ்நாடு முழுதும் பரப்பப்பட்டன. பெருஞ்சித்திரனாரும், இறைக்குருவனும் எங்களுக்கு மிகவும் ஊக்கமாக இருந்தனர். பெங்களூரிலும் போராட்டக் குழு அமைக்கப்பட்டது. அங்கு ஏற்பாடுசெய்யப்பட்ட கூட்டத்தில் மேற்கு வங்கத்திலிருந்தும்கூட மாணவர்கள் வந்து கலந்துகொண்டனர் ” என்று திரு க.ப.அறவாணன் அந்த நாட்களை நினைவுகூர்ந்தார்.


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் குண்டடிபட்டு வீழ்ந்த ராசேந்திரனின் உடல் பரங்கிப்பேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது. ” ராசேந்திரனின் நினைவு நாளில் ஆண்டுதோறும் அங்கு சென்று மாணவர்கள் மரியாதை செய்வது வழக்கம். அங்கு படிக்கும்போது நானும் அப்படிப் போயிருக்கிறேன்” என அரணமுறுவல் சொன்னார். 


1969 ஆம் ஆண்டு ராசேந்திரனுக்கு சிலை அமைக்கப்பட்டது. அப்போது நினைவு மலர் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. 1967இல் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு ராசேந்திரன் சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றி விசாரணைக் கமிஷன் அமைக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் ஆனால் அது ஏற்கப்படவில்லையென்றும் செய்திகள் உண்டு.


இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் நினைவாக ஜனவரி 25 ஆம் நாளை மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளாக தி.மு.கவும் பிற கட்சிகளும் கடைப்பிடித்து வருகின்றன. 1965 ஜனவரி 26 ஆம் தேதி நடக்கவிருந்த போராட்டம் ஒரு நாள் முன்னதாக அந்த நாளில் துவக்கப்பட்டு எராளமானோர் கைதுசெய்யப்பட்டனர் என்பது தவிர 1965 ஆம் ஆண்டில் அந்த நாளுக்கு வேறு முக்கியத்துவம் ஏதுமில்லை. ஆனால் 1964 ஆம் ஆண்டு அந்த நாளில் கீழப் பழூர் சின்னசாமி என்ற திமுக தொண்டர்  திருச்சியில் தீக்குளித்து தியாகியானார். மொழிப்போரில் தீக்குளித்த முதல் இளைஞர் அவர்தான்! அறிஞர் அண்ணாவும் பிற போராட்டக்காரர்களும் விடுதலை செய்யப்படவேண்டும் என அவர் கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார். 


இந்தி எதிர்ப்புப் போரில் 1939 ஆம் ஆண்டு முதல் களப்பலியான நடராசனின் நினைவு நாளான ஜனவரி 15 ஆம் தேதியை வீரவணக்க நாளாக அறிவித்திருந்தால் அந்த தியாகம் மதிக்கப்பட்டிருக்கும். பல்வேறு கட்சிகளும் பங்கேற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் நீண்ட வரலாறும் அங்கீகரிக்கப்பட்டிருக்கும். 


அதுபோலவே 1965 ஆம் ஆண்டு துப்பாக்கி சூட்டில் முதல் பலியாகி தியாகியான ராசேந்திரனின் நினைவு நாளான ஜனவரி 27 ஆம் தேதியும் நாடு தழுவிய அளவில் நினைவுகூரப்பட்டிருக்க வேண்டும். அப்படி செய்யப்பட்டிருந்தால் இந்தி எதிர்ப்பு உணர்வு மாணவர்களிடம் தொடர்ந்து காப்பாற்றப்பட்டிருக்கும். 

ராசேந்திரனின் நினைவுப் பொன்விழா நாளான 27.01.2015 அன்று அண்ணாமலை நகரில் இருக்கும் ராசேந்திரனின் சிலைக்கு மட்டுமின்றி பரங்கிப்பேட்டையில் அவர் புதைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று வீரவணக்கம் செலுத்தவும், பரங்கிப்பேட்டையில் அவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்புமாறு தமிழக அரசை வலியுறுத்தவும் தமிழ் உணர்வாளர்கள் முன்வரவேண்டும். 


சிதம்பரம் நகரை அண்ணாமலை நகரோடு இணைத்துக் கட்டப்பட்டிருக்கும் மேம்பாலத்துக்கு ராசேந்திரன் பெயரை சூட்டவேண்டும் என நான் வலியுறுத்தினேன். அது கடந்த ஆட்சியில் ஏற்கப்படவில்லை. ராசேந்திரனின் நினைவுப் பொன்விழா ஆண்டான இந்த ஆண்டிலாவது தமிழக அரசு அதை நிறைவேற்ற வேண்டும்.

பேராசிரியர் இரா.இளவரசு மறைந்தார் - ரவிக்குமார்

 

தமிழ் அறிஞரும் தமிழியக்க முன்னோடிகளில் ஒருவருமான பேராசிரியர் இரா. இளவரசு (1939-2015) இன்று சென்னை மருத்துவமனை ஒன்றில் காலமானார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலிவுற்றிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று மறைந்தார். பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டும் பதிப்புகளைச் செய்தும் பெரும்பணியாற்றியவர் பாரதிதாசனின் 125 ஆவது பிறந்தநாளைக் காணும் முன் மறைந்துவிட்டார். 

தமிழ்ப் பணியில் மட்டுமின்றி ஆசிரியர் இயக்கப் பணிகளிலும் முன்னின்றவர். அதனால் சிறைசென்றவர்.தமிழ்வழிக் கல்விக்காகவும், ஈழத் தமிழருக்காகவும் பல போராட்டங்களை நடத்தியவர். 

பேராசிரியர் இரா.இளவரசு அவர்களின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது. பேராசிரியருக்கு எனது அஞ்சலி! 

Wednesday, January 21, 2015

பெ.முருகன், பெருமாள் முருகன் ஆவார்! - ரவிக்குமார்


சைவ வைணவ ஒற்றுமையை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் சிவன் பெயரையும் பெருமாள் பெயரையும் சேர்த்து பெயர்சூட்ட்டிக்கொள்வது என்பதும் ஒன்று. ஆனால் முருகன் பெயரும் விஷ்ணுவின் பெயரும் சேர்த்து சூட்டப்படுவது அபூர்வம்தான். பெருமாள் முருகன் என்று பெயர் வைத்து சமயப் பொறையைக் காட்டுவது ஒருபுறமிருக்க முருகனே பெருமாள் ஆன நிகழ்வு கோயமுத்தூர் வரலாற்றில் இருக்கிறது. கோயமுத்தூரின் வரலாற்றை 1939 இல் எழுதி 1949 இல் வெளியிட்ட கோவை கிழார் ’ இதுவோ எங்கள் கோவை’  என்ற அந்த நூலில் ( கோவை நிலையப் பதிப்பகம் , கோயமுத்தூர் முதற் பதிப்பு 1949 ) மேற்குறிப்பிட்ட நிகழ்வை விவரித்திருக்கிறார். 

கோயமுத்தூரில் இப்போது கோட்டைமேடு என வழங்கப்படும் இடத்தில் முன்னர் பெரிய கோட்டை இருந்தது. அந்தக் கோட்டைக்குள் ஈஸ்வரன் கோயிலும் பெருமாள் கோயிலும் இருந்தன. மொகலாயப் படையெடுப்புக்கு அஞ்சி கோயில்களில் இருந்த உற்சவ மூர்த்திகளை நிலத்துள் புதைத்துவிட்டு அர்ச்சகர்கள் ஊரைவிட்டுச் சென்றுவிட்டார்களாம். படையெடுப்பு முடிந்த பின்னால் சில அர்ச்சகர்கள் ஊர் திரும்பினார்கள், சிலர் திரும்பவில்லை. பெருமாள் கோயில் அர்ச்சகர் ஊர் திரும்பவில்லை. பெருமாளின் உற்சவ மூர்த்தியைப் புதைத்த இடம் அவருக்குத்தான் தெரியும், புதிதாக நியமிக்கப்பட்டவருக்குத் தெரியவில்லை. 

இதனிடையில் ஆங்கில ஆட்சி ஏற்பட்டு அரசாங்கத்தார் 1842 ஆம் ஆண்டு இனாம் உறுதி செய்தார்கள். உற்சவ மூர்த்திகளைக் கொண்டுவந்து காட்டியவர்களுக்கே இனாம் உறுதி செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துவிட்டது. என்ன செய்வதென்றுதெரியாத பெருமாள் கோயில் புது அர்ச்சகர் ஈஸ்வரன் கோயில் அர்ச்சகரோடு கலந்து பேசினாராம். “சந்திரசேகரரைக் குருக்கள் கொண்டு காட்டுவதென்றும், சுப்பிரமணிய மூர்த்தியை அர்ச்சகர் பெருமாள் உருவம் ஆக்கி கொண்டுபோய்க் காட்டுவதென்றும் தீர்மானித்தர்கள்.இது சுலபமாக இருந்தது. சுப்பிரமணிய மூர்த்திக்கு ஒரு தலை நான்கு புஜம் இரண்டு தேவிமார் உண்டு. பெருமாளுக்கும் ஒரு தலை நான்கு புஜம் இரண்டு நாய்ச்சியர் உண்டு. சங்கு சக்கரங்கள் சேர்க்கப்பட்டன, வேலாயுதம் எடுக்கப்பட்டது. இந்த மாறுதல்களோடு மூர்த்திகளைக் கொண்டுபோய்க் காட்டி இரண்டு கோயில் பணியாளர்களும் தஸ்தீக் பணதைப் பெற்றுக்கொண்டார்கள். . . .  அதுமுதல் முருகப் பெருமான் தன் மாமனார் ஆகிய பெருமாள் கோலத்துடன் அருள் புரிந்துவந்தார். இவ்விதம் 1917 வரை நடந்து வந்தது. தேவஸ்தானச் சபையில் ஒரு சைவர் தலைவரானார். இம்மாறுதலை அறிந்த அவர் 1000 ரூபாய் செலவு செய்வித்து வேறாகப் பெருமாள் உபய நாச்சியார்களைச் செய்வித்துப் பெருமாள் கோயிலில் எழுந்தருளப்பண்ணிப் பழைய முருகப் பெருமாள் தேவிமார்களுடன் பழைய உருவத்திற்குக் கொண்டுவந்து தம் சொந்த ஆலயத்தில் எழுந்தருளப் பண்ணினார்” என கோவை கிழார் அந்த நூலில் விவரித்துள்ளார். ( பக்கம் 103 – 105 )

”பெருமாள் முருகன் என்ற எழுத்தாளன் இறந்துவிட்டான். பெ.முருகன் என்ற ஆசிரியன் மட்டும்தான் இப்போது இருக்கிறான்” என எழுத்தாளர் பெருமாள் முருகன் அறிவித்தது இப்போது பெரிய அளவில் விவாதிக்கப்படுகிறது. கோட்டையிலிருந்த பெருமாளை மொகலாய படையெடுப்புக்கு அஞ்சி மண்ணுக்குள் புதைத்ததுபோல இப்போது இந்துத்துவ தாக்குதலுக்கு அஞ்சி பெருமாள் என்ற தனது முன்னொட்டை அவர் புதைத்திருக்கிறார். அந்தப் பெருமாள் விக்கிரகம் மீண்டும் கண்டெடுக்கப்பட்டு தற்போது லண்டன் நகரில் இருக்கிறதாம். அதுபோல பெ.முருகனால் புதைக்கப்பட்ட ‘பெருமாளும்’ தோண்டி எடுக்கப்படுவார் என்று நம்புவோம்!

Monday, January 19, 2015

ரஜினி கோத்தாரி காலமானார்

 

சிந்தனையாளர் ரஜினி கோத்தாரி (1928-2015) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். CSDS, PUCL ஆகிய அமைப்புகளை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர். செயல்பாட்டாளர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் பாலமாக இருந்த Lokayan அமைப்பைத் தோற்றுவித்தவர். சிலகாலம் திட்டக்குழு உறுப்பினராக இருந்தவர். 
சாதி மதம் குறித்த கவனிக்கத்தக்க ஆய்வுகளைச் செய்தவர். 

PUCL அமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார். தர்மபுரியில் போலி என்கவுண்டர்களில் நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டபோது அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பேராசிரியர் ரஜினி கோத்தாரியும் தோழர் எஸ்விஆரும் தான் வழக்கு தொடுத்தனர். 

இந்திய சிவில் உரிமை இயக்க வரலாற்றிலும், சிந்தனையாளர்களின் வரிசையிலும் எப்போதும் நினைவுகூரத்தக்கவர் பேராசிரியர் ரஜினி கோத்தாரி. அவருக்கு என் அஞ்சலி. 

Sunday, January 18, 2015

தலித் பெண் எழுத்தாளர் தேன்மொழியின் மூன்று நூல்கள்

எழுத்தாளர் தேன்மொழியின் மூன்று நூல்களை மணற்கேணி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. கவிஞராக அறிமுகமாகி சிறுகதை எழுத்தாளராக அங்கீகாரம்பெற்ற  தேன்மொழியின் மூன்று புதிய நூல்களை மணற்கேணி பதிப்பகம் இப்போது வெளியிட்டிருக்கிறது.

கூனல் பிறை – 18 சிறுகதைகள் விலை 150/-
நீலவானை நெய்தல் – பாகிஸ்தான் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தமிழாக்கம் விலை 90/-
புலப்படா சுயம் – பெண்ணிய நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகள் விலை 60/-

                  ஆகிய மூன்று நூல்களையும் எழுத்தாளர் அம்பை ஜனவரி 5 ஆம் தேதி திருச்சியில் வெளியிட்டார். அம்பை பேசும்போது,    ” ஓவியத்தில் இம்ப்ரஷனிஸ்ட் ஓவியம் என ஒரு வகை உண்டு. அதுபோல எழுத்தில் ‘ இம்ப்ரஷனிஸ்ட் எழுத்தைக் கொண்டுவந்திருப்பவர் தேன்மொழி.இது மிகவும் வித்தியாசமானதொரு முயற்சி. ஆனால் அவருடைய சிறப்பு என்னவென்றால் அதை அவர்  வலிந்துசெய்யவில்லை, இயல்பாகவே அப்படி எழுதியிருக்கிறார் . அவர்  கதைகளில் நாம் இதுவரை படித்திராத பல விஷயங்கள் வரும். நமக்கு மிகவும் தெரிந்த விஷயங்களைக்கூட அவர் சொல்லும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கும்.” என்று குறிப்பிட்டார்.

தலித் பெண் எழுத்தாளரான தேன்மொழியின் படைப்புகள் ஆக்ஸ்போர்டு பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்ட தமிழ் தலித் எழுத்துகளின் தொகுப்பிலும், அவரது கவிதைகள் திரு கல்யாணராமன் அவர்களின் மொழிபெயர்ப்பில் ப்ரதிலிபி இணைய இதழிலும் வெளிவந்து பாராட்டப்பெற்றவை. ( http://blog.pratilipi.in/poems-thenmozhi/ )

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு 2011 ஆம் ஆண்டில் அவரை இந்திய அளவிலான பத்து முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்து கௌரவித்தது. (http://archive.indianexpress.com/news/best-young-writers/817825/3 )

இந்த மூன்று நூல்களின் மொத்த விலை. 300/- ரூபாய். மூன்றையும் சேர்த்து வாங்குபவர்களுக்கு 200/- ரூபாய்க்கு கூரியர் மூலம் அனுப்பப்படும்.

நூல் வேண்டுவோர் பின்வரும் வங்கிக் கணக்கில் தொகையை செலுத்திவிட்டு 97915 57360 என்ற தொலைபேசி எண்ணுக்கு முகவரியை குறுஞ்செய்தியாக அனுப்பவும்.

வங்கிக் கணக்கு :
Manarkeni Publication,
OD account 9601 140 0000 398 ,
Syndicate Bank, Pondicherry Branch ,
IFSC Code: SYNB 000 9601

எள்ளலைக் கொல்லும் ‘நம்பிக்கை’ - ரவிக்குமார்


16.01.2015

பிற மதத்தவரைக் கேலி செய்தால் அவமதித்தால் முகத்திலே குத்து விழுவதை எதிர்பார்க்கத்தான் வேண்டும்” என போப்பரசர் தெரிவித்திருக்கிறார். “ என் அம்மாவை இழிவுபடுத்தும் வார்த்தைகளை ஒருவர் சொன்னால் அவரது மூக்கில் குத்து விழும்” என்று குறிப்பிட்ட போப்பரசர் ” எவரும் ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபடக்கூடாது. இன்னொருவரின் நம்பிக்கையை அவமதிக்கவோ கேலிசெய்யவோ கூடாது”  என்று தெரிவித்திருக்கிறார். இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு பிலிப்பைன்ஸுக்குச் செல்லும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இந்தக் கருத்துகளை தெரிவித்திருக்கிறார். “ கடவுளின் பெயரால் கொலை செய்வது பிறழ்ச்சி” எனவும் அவர் கூறியிருக்கிறார். (http://time.com/3668875/pope-francis-charlie-hebdo/ )
சார்லி ஹெப்தோ பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பத்திரிகையாளர்கள், கேலிச் சித்திரக்காரர்கள் உள்ளிட்ட 12 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கருத்து சுதந்திரம் குறித்த விவாதம் உலகெங்கும் எழுந்துள்ளது. பாரிஸ் நகரில் பதினைந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டு பயங்கரவாதத்துக்கு எதிரான பேரணியை நடத்தியுள்ளனர். அதில் உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் போப்பரசர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். 

போப்பரசரின் கருத்து மதவாதிகளுக்கு ஊக்கம் தருவதாக இருப்பது கவலை அளிக்கிறது. ’நம்பிக்கை’ என்பதன் பெயரால்தான் இன்று பெரும்பாலான வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. இந்த வன்முறைகளில் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டது மட்டுமின்றி கோடிக்கணக்கான மக்கள் தமது நாடுகளைவிட்டு விரட்டப்பட்டு ஏதிலிகளாக அலையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் இந்த வன்முறைகள் யாவும் நம்பிக்கை என்ற ஒற்றைச் சொல்லைக்கொண்டுதான் நியாயப்படுத்தப்படுகின்றன. 

” மத சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் அடிப்படை உரிமைகள்” என போப்பரசர் கூறியிருக்கிறார். கருத்து சுதந்திரம் என்பது விமர்சிப்பதற்கான, சிரிப்பதற்கான சுதந்திரத்தையும் உள்ளடக்கியதுதான். எள்ளல் என்பதை நாகரிகமான விமர்சன முறையாகத்தான் உலகம் அங்கீகரித்து வந்திருக்கிறது. சார்லி ஹெப்தோ பத்திரிகைமீது தாக்குதல் நடத்தப்பட்ட ஃப்ரான்ஸ் நாட்டில் எள்ளலை விமர்சனமாகக் கையாண்ட புகழ்பெற்ற எழுத்தாளர் வரிசை ஒன்று இருப்பதை வரலாற்றறிஞர் ரோபர் டார்ண்டன் சுட்டிக்காட்டியிருக்கிறார். ரெபெலே, புஸ்ஸி ரபுதின்,பூமார்ஷெ,ஷாம்ஃபோர், வோல்தேர்- என  அந்த வரிசையைப் பட்டியலிட்டிருக்கிறார். எள்ளலை மிக ஆற்றலோடு கையாண்ட வோல்தேர் அதை கிறித்தவ பழமைவாதிகளுக்கு எதிராக எப்படிப் பயன்படுத்தினார் என்பதையும், “ நகைப்பை நம் பக்கம் கொண்டுவரவேண்டும்” என்ற அவரது புகழ்பெற்ற வாசகத்தையும் டார்ண்டன் சுட்டிக்காட்டியிருக்கிறார். (http://www.nybooks.com/blogs/nyrblog/2015/jan/09/charlie-hebdo-laughter-terror/ ) எள்ளலை அடிப்படையாகக்கொண்ட ரெபெலேவின் எழுத்துகளது முக்கியத்துவத்தை மிகைல் பக்தினின் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. 

நம்பிக்கையின் பெயரால் மிகப்பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன்றைய சூழலில் போப்பரசரின் கருத்து ஜனநாயகத்துக்கும், கருத்துரிமைக்கும், படைப்பு சுதந்திரத்துக்கும் எதிரானதாகவே வெளிப்பட்டுள்ளது. வன்முறையைத் தூண்டும் விதமாக அமைந்துள்ள அவரது கருத்துகளை சார்லி ஹெப்தோ தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி மதவாதத்தைக் கையிலெடுத்திருக்கும் எல்லோருமே ஆதரிப்பார்கள். இந்தியாவில் மதச் சிறுபான்மையினராக இருக்கும் கிறித்தவர்களுக்கு எதிராக போப்பரசரின் கருத்து பயன்படுத்தப்பட்டால் நாம் வியப்பதற்கில்லை.

கும்பலாட்சி: கொடுங்கோன்மையின் முன்னறிவிப்பு - ரவிக்குமார்’சமூகம்’ என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மக்கள் தமக்குள் கலந்துறவாடி பொதுவாழ்வில் பங்கேற்று, பகிர்ந்து வாழ்வதைக் குறிக்கும் ஒரு சொல். ஆனால், இந்தியாவிலோ அது சாதியைக் குறிப்பதற்கான இன்னொரு சொல்லாகவே புழங்கிவருகிறது. இதை பெருமாள்முருகன் நாவல் தொடர்பான ஊடக விவாதங்களிலும் நாம் பார்க்க முடிகிறது.

 ” நாடுகள் எவ்வாறு தம் தன்னலம் கருதித் தனித்திருக்க முற்படுகின்றனவோ அப்படியே பல்வேறு சாதிகளும் சுயநலம் கருதிப் பிறரோடு உறவின்றி வாழ முற்படுகின்றன. இந்தச் சுயநலம், சமூக உணர்வுக்கு ஏதிரானதாகச் செயல்படுவதால் சமூக விரோதத் (Anti Social ) தன்மையைக் கொண்டுள்ளது.” என அம்பேத்கர் குறிப்பிட்டார். இதன் காரணமாக ’இந்தியாவில் சமூகம் என்பதே இல்லை, சாதிகளின் தொகுப்புதான் இருக்கிறது’ என அவர் விளக்கமளித்தார். ஆனால், இதற்கு மாறாக, எதிராகச் செயல்படுகிறது இலக்கியம். யதார்த்தத்தில் இல்லாத ’சமூகத்தை’ இலக்கியம் உருவாக்க முயற்சிக்கிறது. அதனால் இயல்பாகவே அது சமூகச் சார்புத் தன்மை கொண்டதாக இருக்கிறது. பெருமாள் முருகனின் இந்தக் குறிப்பிட்ட நாவலில் மட்டுமல்ல, படைப்பு குணத்தோடு விளங்கும் எந்தவொரு எழுத்திலும் இதை நாம் உணரலாம்.
சாதியை நேரடியாக விமர்சிக்காவிட்டாலும்கூட சமூக சார்புத் தன்மை கொண்டதாக இருக்கும் இலக்கியப் படைப்பை சமூக விரோதத்தன்மையை உள்ளீடாகக் கொண்டிருக்கும் சாதிய மனம் ஒருபோதும் ஏற்காது. தன் சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரை எதிரியாகவே பார்க்கும். இதற்கு பெருமாள் முருகன் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல் ஒரு உதாரணம். பாரதி முதற்கொண்டு இப்படி சாதிய மனங்களால் நிந்திக்கப்பட்ட தமிழ்ப் படைப்பாளிகள் பலரை நாம் பட்டியலிட முடியும்.

இந்தியாவில் 18 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகான காலத்தை “சமூகங்கள் இல்லாத அரசுகள்” என பர்ட்டன் ஸ்டெய்ன் என்ற வரலாற்றறிஞர் வகைப்படுத்தினார். காலனிய அரசு தனது அதிகாரத்தை மையப்படுத்திக்கொள்ள உள்ளூரில் ஆதிக்கம் பெற்று விளங்கிய சமூக நிறுவனங்களை பலமிழக்கச் செய்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் மீண்டும் அந்த நிறுவனங்கள் மெள்ள மெள்ள வலுவடைந்து இப்போது உச்சகட்டத்தை எட்டியிருக்கின்றன.வரலாற்றைப் பின்னோக்கி இழுத்துச் சென்று “ சாதி / மத நிறுவனங்களும் அரசும் ஒத்திசைந்து செயல்பட்ட நிலையை “ மீண்டும் கொண்டுவர முயற்சிக்கின்றன. இப்போதிருக்கும் மக்களாட்சி முறையை உருக்குலைத்து சர்வாதிகார முறையைக் கொண்டுவரப்பார்க்கின்றன.

மக்களாட்சியிலிருந்து சர்வாதிகாரத்துக்கு மாறிச்செல்வதற்கு இடையில் உருவாவதுதான் ‘ கும்பலாட்சி’ என கிரேக்க தத்துவ அறிஞர் பாலிபியஸ் கூறினார். கும்பலாட்சி என்பது சட்டபூர்வமான நிறுவனங்களை செயலிழக்க வைக்கும்; உணர்ச்சியால் பகுத்தறிவைப் பதிலீடுசெய்யும்; பெரும்பான்மைவாதத்தை ஊக்குவிக்கும். பெருமாள் முருகன் பிரச்சனை எழுத்து, இலக்கியம் தொடர்பானது மட்டுமல்ல. அது மக்களாட்சிக்கு வந்திருக்கும் ஆபத்தின் வெளிப்பாடு. கொடுங்கோன்மையை விரும்புகிறவர்கள் மட்டும்தான் இதைக்கண்டு மௌனமாக இருக்க முடியும். 

நன்றி : இந்தியா டுடே