Sunday, February 28, 2016

சிறுபான்மை என்பதையே பலமாக மாற்றுவோம் -ரவிக்குமார்

சிறுபான்மை என்பதையே பலமாக மாற்றுவோம்

-ரவிக்குமார் 

 

நண்பர்களே!

பழங்குடி இருளர் மக்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் குடியிருப்பு உருவாக உதவியவர்களுக்கெல்லாம் நன்றி சொல்வதற்காக நாம் இங்கு கூடியிருக்கிறோம். என்னதான் பந்தல் போட்டிருந்தாலும் வெயிலின் உக்கிரம் நம்மை வருத்துகிறது. இன்னும் ஆறு மாதங்களில் இதை ஒரு பசுமைக் குடியிருப்பாக நாம் மாற்றவேண்டும். யாராவது இங்கே வர வழிகேட்டால் பச்சை பசேல் என இருக்கும் அந்த இடத்துக்குப் போங்கள் என வழிசொல்லவேண்டும். 

இருளர் மக்கள் நீர் நிலைகளின் அருகில் வசிப்பவர்கள். ஆறுகள்,குளங்கள்,ஏரிகள்,வாய்க்கால்கள் இவற்றின் கரையில்தான் அவர்கள் வீடுகள் இருக்கும்.மரங்களை வளர்ப்பது அவர்களுக்குப் புதிய விஷயமல்ல. அதை யாரும் அவர்களுக்கு சொல்லித்தரத் தேவையிலை. அண்மையில் மழைவெள்ளத்தின்போது கீழ் சிவரியில் இருக்கும் இருளர் குடியிருப்புக்குச் சென்று நிவாரணப் பொருட்களைக் கொடுத்தோம்.அதுவும் இப்படி ஒரு நடுப்பகல் நேரம்தான். கொஞ்சம் வீடுகளே உள்ள அந்தத் தெரு அந்த உச்சிவெயில் நேரத்திலும் குளுமையாக இருந்தது. மரத்தடியில் வைத்துதான் நிவாரணப் பொருட்களை வழங்கினோம். அதுபோல குளுமையான இடமாக இதை மாற்றவேண்டும். இங்கே அமர்ந்திருக்கும் பெண்கள் ஆளுக்கொரு மரக் கன்றை நடுங்கள், உங்கள் பிள்ளைகளோடு பிள்ளையாக அவற்றையும் வளருங்கள். 

இந்த அழைப்பில் இதை இருளர் நகர் எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். குடியிருப்புக்கு சாதியை அடையாளமாக்கவேண்டாம். நகர் எனபதால் இது நகரமாகிவிடப் போவதில்லை. இப்போது புதிதாக உருவாகும் குடியிருப்புகள் எல்லாவற்றுக்கும் நகர் என்று பெயர்வைப்பது ஒரு ஃபாஷன். அது ’ரியல் எஸ்டேட்’காரர்கள் கண்டுபிடித்த தந்திரம். அதை நாம் பின்பற்றவேண்டிய அவசியமில்லை. இதற்கு நகர் என்று பெயர் வைப்பதைவிட நகரத்தில் இருக்கும் வசதிகளை இங்கே கொண்டுவருவோம். அதைத்தான் அப்துல் கலாம் கூட வலியுறுத்தினார். அதற்காக ’புரா’ என்ற திட்டத்தை வகுத்தார். இதை ஒரு முன்மாதிரிக் குடியிருப்பாக மாற்றுவோம். இங்கே 82 வீடுகள் உள்ளன. எப்படியும் நானூறு மக்கள் இருப்பார்கள். அவர்களுக்கான வாழ்வாதாரத்தை இங்கேயே ஏற்படுத்தவேண்டும். இந்தக் குடியிருப்புக்கு இங்கே வருகை தந்திருக்கும் நீதியரசர் சந்துருவின் பெயரைச் சூட்டலாம் என்பது எனது ஆலோசனை. நீதியின் குறியீடாகத் திகழ்பவர் அவர்.  நீதிபதியாக இருந்ததால் மட்டுமல்ல வழக்கறிஞராக இருந்தபோதே நீதிக்காகப் போராடியவர். அவரது பெயரால் ‘ நீதியரசர் கே.சந்துரு முன்மாதிரிக் குடியிருப்பு ‘ என இதை அழைக்கலாம். நீங்கள் பொறுமையாக ஆலோசித்து ஒரு முடிவெடுங்கள். 

பழங்குடி இருளர் மக்களைப்பற்றிப் பேசும்போதெல்லாம் அவர்கள் எண்ணிக்கையில் கொஞ்சமாக இருக்கிறார்கள் அதனால் அவர்களை எவரும் பொருட்படுத்துவதில்லை என கல்யாணி வேதனைப்படுவார். பழங்குடி மக்கள் இந்த மாநில மக்கள் தொகையில் ஒரு விழுக்காடுதான். விழுப்புரம் மாவட்டத்தில்தான் இருளர்கள் கொஞ்சம் கூடுதலாக இருக்கிறார்கள். நம்முடைய அரசியல் என்பது எண்ணிக்கையை மையமாகக் கொண்டது. கும்பல் அதிகம் இருந்தால் அதற்கு ஒரு பலம் வந்துவிடும். கூட்டமாக சேர்ந்துகொண்டு எதையும் செய்துவிடலாம் என்ற ஒரு நிலை இங்கே உருவாகியிருக்கிறது. அரசியலுக்குத்தான் என்ணிக்கை என்பது பலம். அனால் ஒரு நலத் திட்டத்தை செயல்படுத்த குறைந்த என்ணிக்கையே ஒரு சாதகமான அம்சம். இந்த மாவட்டத்தில் எந்தவொரு ஆதிதிராவிடக் குடியிருப்பிலும் இருநூறு வீடுகளுக்கு மேல் இருக்கும். ஆதி திராவிட மக்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் மற்ற சமூகத்தினர் அவர்களைப் போட்டியாகப் பார்க்கும் மனநிலை உள்ளது. ஆனால் இருளர் மக்களை அப்படிப் பார்ப்பதில்லை. எனவே குறைவான என்ணிக்கை என்ற பலவீனத்தையே நாம் பலமாக மாற்றமுடியும். 

இந்த குடியிருப்பில் உள்ள தாய்மார்கள் வேலைக்குப் போகிறவர்கள். அவர்களது கைக்குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள உடனடியாக இங்கே ஒரு அங்கன்வாடி வேண்டும். அதுபோலவே இங்கே இருக்கும் படிக்கும் பிள்ளைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க ஒரு இரவுப் பள்ளிவேண்டும். இந்தக் குடியிருப்பில் மரங்களை நடுவதற்கும் இரவுப் பள்ளியை நடத்துவதற்கும் நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். இரவுப் பள்ளிக்கான ஆசிரியரை நியமிப்பதற்கு இங்கே வந்திருக்கும் சகோதரி லூஸினா அவர்களின் புனித அன்னாள் சபை பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன். கல்விப் பணியில் அனுபவம் உள்ள அவர்கள் பொறுப்பேற்றால் அந்தப் பள்ளி சிறப்புற தொடர்ந்து நடக்கும். 

இங்கே இருக்கும் மக்கள் பெரும்பாலும் செங்கல் சூளைகளில் வேலை செய்பவர்கள். ஒரு இடத்தில் தங்காமல் இடம்பெயர்ந்துகொண்டே இருப்பவர்கள். அதனால்தான் அவர்களது வாழ்க்கையில் பல்வேறு இடையூறுகள். இவர்கள் நாடற்றவர்களாக வீடற்றவர்களாக இருக்கும்வரை முன்னேற்றம் காணமுடியாது. அவர்கள் தற்சார்போடு இருந்தால்தான் தன்மதிப்போடு வாழமுடியும். எனவே இங்கே இருப்பவர்கள் இங்கேயே தமது வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்ள முடியும். அதற்கான ஏற்பாடுகளை நாம் செய்யவேண்டும். இங்கிருப்பவர்களுக்கு சுயதொழில் செய்ய பயிற்சியளிக்கவேண்டும். உற்பத்தி தொடர்பான தொழில்களைவிட ப்ராசஸிங் தொடர்பான தொழில்களில் ஈடுபடுத்தலாம். இங்கே என்ன வாய்ப்பிருக்கிறது எனப் பார்த்து அதற்கான பயிற்சியை அளித்து தொழில்செய்ய வைக்கலாம். இந்த மக்கள் உழைக்கத் தயங்காதவர்கள். அவர்கள் நிச்சயம் அதை வெற்றிகரமாக மாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இங்கே அகரம் பவுண்டேஷனைச் சேர்ந்த நண்பர் ஞானவேல் வந்திருக்கிறார். அந்த சுய தொழிலுக்கான சிறு முதலீட்டை ஸீட் மணியை அவர் அகரத்தின்மூலம் ஏற்பாடு செய்தால் பயனுள்ளதாக இருக்கும். 

இதையெல்லாம் செய்வதற்கு ஒரு ஆண்டு போதும். இரவுப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் உற்சாகப் பேச்சுகளுக்கிடையே, இங்கிருக்கும் தாய்மார்கள் வளர்த்த மரங்களின் நிழலில், சுயச்சார்புகொண்ட சுயமரியாதைகொண்ட மக்களுக்கிடையே அடுத்த ஆண்டு இதே நாளில் நாமெல்லோரும் இங்கே கூடுவோம். நன்றி. 

( 28.02.2016 அன்று விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கம் மடம் கிராமத்தில் அரசு சார்பில் பழங்குடி இருளர் மக்களுக்காகக் கட்டப்பட்டிருக்கும் குடியிருப்பில் நடைபெற்ற விழாவில் ஆற்றிய உரை )

Friday, February 26, 2016

வாரிசு அரசியலின் இலக்கணம் - ரவிக்குமார்எனக்கொரு மகன் பிறப்பான் 
அவன் என்னைப்போலவே இருப்பான்
தனக்கொரு பாதை வகுக்காமல் என்
தலைவன் வழியிலே நடப்பான் " 

என்று எம்ஜிஆர் பாடுவதாக வரும் பாடலை தொலைக்காட்சி சேனல் ஒன்றில் இன்று கேட்டேன். 1965 ஆம் ஆண்டு வெளியான பணம் படைத்தவன் என்ற படத்தின் பாடல் அது. மொழிப்போராட்ட களத்தில் தமிழ் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு தமிழ்நாடே கொந்தளித்துக்கொண்டிருந்த காலம். திமுக ஆட்சி அதிகாரத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த நேரம். அப்போது எம்ஜிஆர் நடித்த திரைப்படங்கள் திமுகவின் பிரச்சார சாதனங்களாகத் திகழ்ந்தன. அவர் பாடுவதாக இடம்பெற்ற பாடல்கள் அக்கட்சியின் கொள்கை விளக்கங்களாகக் கொண்டாடப்பட்டன. இந்தப் பாடலை எழுதியவர் வாலி. இப்பாடலில் வெளிப்படும் கருத்து வாலியின் கருத்து என்பதைவிட எம்ஜிஆரின் மூலம் சொல்லப்பட்ட அன்றைய திமுகவின் கருத்து என்றே சொல்லவேண்டும். 

இந்தப் பாடலில் வெளிப்படும்  'மகன் பிறப்பான்' என்ற நம்பிக்கை ஆணாதிக்கம் எந்த அளவுக்கு அப்போது வலுவாக இருந்தது என்பதன் அடையாளம்.

'தனக்கொரு பாதை வகுக்காமல் தலைவன் வழியில் நடப்பது' தொண்டரின் லட்சணம் மட்டுமல்ல அவர் தனது வாரிசின் கடமையாகவும் அதை மாற்றவேண்டும். மகன் பிறக்காமல் மகள் பிறந்துவிட்டால் அவள் தனது கணவனின் வழியிலே நடக்கவேண்டும் என்பது இதன் உள்ளே புதைந்திருக்கும் இன்னொரு அர்த்தம். 

இதே பாடல் ஒரு தலைவர் பாடுவதாக இருந்திருந்தால் அதன் வரிகள் இப்படி இருந்திருக்காது என்பதில் சந்தேகமில்லை. 

தலைவரின் வாரிசு தலைவராக இருக்கவேண்டும், ஆனால் தொண்டரின் வாரிசும் தொண்டராகத்தான் இருக்கவேண்டும். அதை அந்தத் தொண்டரின் வாயாலேயே சொல்லவைக்கவேண்டும். அடடா என்னவொரு தொலைநோக்கு! என்னவொரு அரசியல் தத்துவம்!

Thursday, February 25, 2016

#SaveLibrary

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நூலகங்களுக்கு மணற்கேணி ஒருங்கிணைப்பில் ஈஷா மையத்தின் சார்பில் நூல்கள் நன்கொடையாக வழங்கும் விழா. இயன்ற நண்பர்கள் வருக!

Wednesday, February 24, 2016

கிங்கா ? கிங் மேக்கரா? -மக்களாட்சிக் காலத்தில் தொடரும் மன்னராட்சிக்கால எச்சங்கள் - ரவிக்குமார்தமிழ்நாட்டு அரசியல் களத்தில் கடந்த சில நாட்களில் அதிகம் விவாதிக்கப்பட்ட விஷயம் கிங்கா ? கிங் மேக்கரா?. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் தொண்டர்களை நோக்கி திருமதி பிரேமலதா அவர்களால் எழுப்பப்பட்ட இந்தக் கேள்வியையும், அதற்குத் தொண்டர்கள் அளித்த பதிலையும் கேட்டவர்கள் ' தேமுதிக தலைவர் திரு விஜயகாந்த் இந்தத் தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக ஒப்புக்கொள்கிறவர்களோடுதான் கூட்டணி அமைப்பார்' என்ற முடிவுக்குத்தான் வந்திருப்பார்கள். 

இதைத் தாண்டி இதில் இன்னொரு கேள்வியும் இருக்கிறது. நவீன காலத்தின் மக்களாட்சி அரசியலை ஏற்றுக்கொண்டு அறுபது ஆண்டுகளுக்குமேல் ஆனபோதிலும் ஏன் நமது அரசியல்வாதிகள் மன்னராட்சிக்கால சொற்களையும், மதிப்பீடுகளையும் பயன்படுத்துகிறார்கள் என்பதே அது. 

'அரியணை', 'ஆட்சிக்கட்டில்' 'வீரவாள்' ' செங்கோல்' 'கோட்டை' - என தமிழ்நாட்டின் அரசியல் வெளியில் புழங்கும் சொற்கள் ஏராளம். இந்த சொற்கள் இவற்றைப் பயன்படுத்துவோரது மனோபாவத்தின் வெளிப்பாடுகள். இதன் ஒரு அங்கமாகவே ' கிங்கா கிங் மேக்கரா' என்ற கேள்வியும் இருக்கிறது. கிங் என்று சொன்னால் அது முதலமைச்சரைத்தானே குறிக்கும் என்று இதற்கு விளக்கம் அளிக்கப்படலாம். இதை இங்கு புழக்கத்திலிருக்கும் வேறுபல எதிர் நவீனத்துவ ( anti modern ) செயல்பாடுகளுடன் இணைத்துப் பார்த்தால்தான் இதன் ஆபத்து புரியும். 

அரசியல் நவீனத்துவத்தின் ( political modernity) வெளிப்பாடாக முகிழ்த்த திமுக பண்பாட்டுத் தளத்தைத் திறம்படப் பயன்படுத்தியதை அனைவரும் அறிவோம். நவீனகால தொழில்நுட்பங்களான சினிமா உள்ளிட்ட அனைத்தையும் அது தனது அரசியலுக்கு உபயோகப்படுத்திக் கொண்டது. ஆனால் பண்பாட்டுத் தளத்தில் நவீனத்துக்கு முந்தைய மதிப்பீடுகளிலிருந்து அது முற்றாக  விடுபட்டுவிடவில்லை. அதன் விளைவைத்தான் இத்தகைய சொற்களின் நீடித்த பயன்பாட்டிலும் மன்னர்களாகத் தம்மை உருவகித்துக்கொண்ட நடவடிக்கைகளிலும் பார்க்கிறோம். 

மக்களாட்சியைப் பலப்படுத்துவதென்பது பிரக்ஞைபூர்வமானதொரு செயல்பாடு. பழமைவாதம் கொள்ளைநோயாகப் பரவிக்கொண்டிருக்கும் காலம் இது. நாம் பயன்படுத்தும் சொற்கள் முதல் பின்பற்றும் நடைமுறைகள் வரை எல்லாவற்றையும் குறித்து விழிப்போடு இல்லாவிட்டால் அந்தக் கொள்ளை நோயின் தாங்கிகளாக நாம் மாறிவிடுவோம்! 


இந்துமயமாகும் யாழ் பல்கலைக்கழகம் - ரவிக்குமார்

 

இலங்கையில் தமிழர் பகுதியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக ( University of Jaffna ) நிர்வாகம் வகுப்புக்கு வரும் மாணவர்களுக்கான புதிய விதிகளை அறிவித்துள்ளது.

1. மாணவர்கள் வகுப்புகளுக்கு ஜீன்ஸ் பேண்ட், டி ஷர்ட் அணிந்து வரக்கூடாது

2. வெள்ளிக்கிழமைதோறும் மாணவிகள் சேலை அணிந்துவரவேண்டும்

3. மாணவர்கள் தாடியுடன் வகுப்புக்கு வரக்கூடாது

17.02.2016 அன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் ஒருபோதும் இத்தகைய நடைமுறைகள் அங்கு பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. 

தமிழ்நாட்டு அரசியல் தலைவர் ஒருவர் ஜீன்ஸ் அணிவதையும் டி ஷர்ட் போடுவதையும் தலித் இளைஞர்களின் அடையாளமாகக் குறிப்பிட்டுப் பேசியதை நாம் மறந்திருக்க முடியாது. ஒருவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகமும் அதே கருத்தைக்கொண்டிருக்கிறதா எனத் தெரியவில்லை. வெள்ளிக்கிழமைகளில் மாணவிகள் அனைவரும் சேலை அணியவேண்டும், மாணவர்கள் தாடி வளர்க்கக்கூடாது என்ற விதிகள் அது பல்கலைக்கழகம்தானா என்ற ஐயத்தை நமக்கு எழுப்புகின்றன. 

இந்த விதிமுறைகள் நிச்சயம் பேரினவாத ஆட்சியாளர்களால் திணிக்கப்படுபவை அல்ல. 'தமிழ்ச் சான்றோர்கள்'தான் இதைச் செய்கிறார்கள். 

யாழ்ப்பாண சமூகம் 19 ஆம் நூற்றாண்டை நோக்கி இழுத்துச் செல்லப்படுகிறதோ என்ற ஐயம் அங்கு மீண்டும் முழுவீச்சுடன் சாதிய பாகுபாடுகள் உயிர்ப்பிக்கப்பட்டபோதே எனக்கு எழுந்தது. பஞ்சம மக்களுக்கு சிறிதளவு உரிமையும் கொடுக்காத சாதித் தமிழர்கள் இப்போது தமது சாதி உணர்வுகளுக்கு முட்டுக்கொடுக்க மதத்தை இழுத்து வருகிறார்கள். இதை ஜனநாயக உணர்வுள்ளோர் ஏற்க மாட்டார்கள் என நம்புகிறேன். 

பதுங்கு குழிகளிலிருந்து எழுந்துவரும் இந்தமாதிரியான பிற்போக்குத்தனங்களை ஒழித்துக்கட்டாமல் சமத்துவத்துக்கான குரலை இனி எழுப்பமுடியாது என்பதை ஈழத் தமிழர்கள் உரத்து முழங்கவேண்டும். 

( இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் உத்தரவின் நகல் கவிஞர் சேரனின் Cheran Rudhramoorthy முகநூல் பதிவிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டது )

நளினியின் பரோலை நீட்டிக்கவேண்டும்


நளினியின் பரோலை நீட்டிக்கவேண்டும்
======

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்று வேலூர் சிறையில் இருக்கும் நளினியின் தந்தை திரு சங்கரநாராயணன் காலமானதையொட்டி விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தனது தந்தை மறைவையொட்டி பரோலில் வந்துள்ள நளினியையும் அவரது தாய் மற்றும் தம்பியையும் சந்தித்து ஆறுதல் கூறினார். அவரோடு நானும் சென்றிருந்தேன்.

நான் புதுச்சேரி மாநில பியுசிஎல் தலைவராக இருந்தபோது மரணதண்டனை ஒழிப்புக்கென இரண்டுநாள் மாநாட்டை நடத்தியதையும் அதில் அப்போது தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்த மோகினி கிரி கலந்துகொண்டதையும் அவரிடம் நாங்கள் கொடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் அவர் திருமதி சோனியா காந்தி அவர்களிடம் பேசியதன் பிறகுதான் நளினியின் மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது என்பதையும் நளினியிடம்  நினைவுகூர்ந்து பேசினேன். மோகினி கிரி இப்போது எப்படி இருக்கிறார் என நன்றிப்பெருக்குடன் நளினி கேட்டார். 

நாங்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது எமது தலைவர் கூறிய கருத்துகள்: 

1. ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி உள்ளிட்ட அனைவரையும் அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161 வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழக அரசு விடுவிக்கவேண்டும். 

2. இந்திய அளவில் 25 ஆண்டுகளுக்குமேல் சிறையில் இருக்கும் ஒரே பெண் நளினிதான். இதை தமிழக முதல்வர் பரிவோடு கவனத்தில்கொள்ளவேண்டும். 

3. தனது தந்தையின் ஈமச்சடங்குகளைச் செய்வதற்கு நளினிக்கு 12 மணி நேரம் மட்டுமே பரோல் வழங்கப்பட்டுள்ளது. இது வேதனை அளிக்கிறது. இன்னும் சில நாட்களுக்கு பரோலை நீட்டிக்கவேண்டும். 

4. நடிகர் சஞ்சய் தத்துக்கு மாதக் கணக்கில் பரோல் வழங்கும்போது நளினிக்கு இப்படி பாகுபாடு காட்டுவது கண்டனத்துக்குரியது.

Sunday, February 14, 2016

தோழர் அபராஜிதா : மாணவர் போராட்டங்களின் குறியீடு - ரவிக்குமார்ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பிஎச்டி ஆய்வை மேற்கொண்டிருக்கும் தோழர் அபராஜிதா அங்கே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் பெருமன்றத்தின் (AISF) தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் தோழர் ராஜாவின் மகளான அபராஜிதாவின் அரசியல் செயல்பாடுகள் அங்குள்ள ஏபிவிபியினருக்கு ஆத்திரமூட்ட்டியுள்ளன. 

ஆளும் பாஜகவினரால் இப்போது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள்மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதலின் இலக்காக தோழர் அபராஜிதாவும் ஒருவராகஉள்ளார். பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அபராஜிதாவையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைதுசெய்யவேண்டுமென துண்டறிக்கை வெளியிட்டுள்ளது. அவரைப் போலிஸ் தேடுகிறது என்று இன்றைய தினமலர் நாளேட்டில் செய்தி வெளியாகியிருக்கிறது. தோழர் ராஜாவுக்கும் அபராஜிதாவுக்கும் கொலைமிரட்டல்களும் விடப்பட்டுள்ளன. 

இன்று தோழர் டி.ராஜாவிடம் பேசினேன். இயல்பான அரசியல் உறுதியையும் தாண்டி அவரது குரலில் ஒரு தந்தையின் கவலையை உணரமுடிந்தது. அபராஜிதாவுக்கு எதிராக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் ஆனால் ஏபிவிபி யினர் அவரையும் கைதுசெய்யுமாறு வலியுறுத்துகிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார். 

கடந்த ஆண்டு புதுச்சேரியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு தோழர் ராஜா வந்திருந்தார். அவரோடு தோழர் ஆனி ராஜாவும் அபராஜிதாவும் வந்திருந்தனர். அந்த மாநாட்டுப் பணிகளில் ஒரு volunteer ஆக அபராஜிதா சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார். 

கம்யூனிஸ்ட் தோழர்களின் முன்மாதிரியான குடும்பங்களில் தோழர் ராஜாவின் குடும்பமும் ஒன்று. ராஜா ஆனி தம்பதியினருக்கு ஒரே மகள் அபராஜிதா. அவர் அந்தக் குடும்பத்தில் முதல் தலைமுறையாக பிஎச்டி வரை சென்றிருப்பவர். நாடறிந்த தலைவர்களின் மகளாயிருப்பது மிகவும் சவால் நிறைந்தது. அவர்களது புகழ் வெளிச்சம் படாமல் தனது தனித்துவத்தை காப்பாற்றிக்கொள்ள அவருக்கிருக்கும் ஆர்வத்தை அபராஜிதாவின் பேச்சில் நான் உணர்ந்தேன். அந்தத் தற்சார்பு அவரைப்பற்றிய மரியாதையைத் தந்தது. தோழர் ராஜாவுக்கு அபராஜிதாவின்மீதிருக்கும் பிரியம் ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்படும். 'குழந்தை' என்றுதான் அவர் அன்போடு அபராஜிதாவைக் குறிப்பிடுவார். 

அபராஜிதாவைப் போலவே முதல் தலைமுறை மாணவர்களாக உயர்கல்வி பயில வருகிறவர்கள்தான் கல்வி வளாகங்களில் சமூகப் பொறுப்போடு மாணவர்களின் பிரச்சனைகளைக் கையிலெடுத்துப் போராடுகிறார்கள். அவர்களைக் குறிவைத்துதான் இப்போது தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. மத அடிப்படைவாதத்தோடு ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வியை மறுக்கும் உயர்சாதி வெறுப்பும் இதில் கலந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. 

தோழர் ராஜாவுக்கும் அபராஜிதாவுக்கும் தார்மீக ஆதரவைத் தெரிவிக்குமாறு நண்பர்களை வேண்டுகிறேன்.

Wednesday, February 10, 2016

விதவைப் பெண்கள் வாழ்வுரிமையைப் பாதுகாப்போம் - ரவிக்குமார்விதவைகள்/ கணவனால் வஞ்சிக்கப்பட்ட பெண்கள் ஒன்றிணைந்து விதவைப் 'பெண்கள் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். அதன் சார்பில் சில கோரிக்கைகளை முன்வைத்து அவற்றைத் தேர்தல் அறிக்கையில் சேர்த்துக்கொள்ளுமாறு அரசியல் தலைவர்களை சந்தித்துவருகின்றனர். அவர்கள் அளித்துள்ள கோரிக்கைகள் முக்கியமானவை. 

இந்தக் கூட்டமைப்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும்  11 அமைப்புகள் உள்ளன. அவற்றின் பொறுப்பாளர்கள் அனைவரும் விதவைகள். அவர்கள் எப்படி விதவை ஆனார்கள் எனக் கேட்டேன். எல்லோருமே மதுவால் விதவை ஆனதாகத் தெரிவித்தார்கள். 

நாகப்பட்டினத்தில் செயல்படும் ' விதவைப்பெண்கள் வாழ்வுரிமை இயக்கத்தின்' பொறுப்பாளர் மூகாம்பிகை தனது கணவர் மதுவுக்கு அடிமையாகி குறைந்த வயதிலேயே இறந்துவிட்டதாகக் கூறினார். அவரோடு வந்திருந்த இந்திரஜோதி( கரூர்) ராமேஸ்வரி ( வத்தலகுண்டு) பெர்ஸி ( பெரம்பலூர்) செல்வி ( தரங்கம்பாடி) ஆகியோரின் வாழ்க்கைக் கதைகள் கண்ணீர் மல்கச்செய்தன. 

விதவை ஆகிவிட்டோமே என முடங்கிப்போய்விடாமல் தம்மைப்போன்ற பெண்களின் நல்வாழ்வுக்காக இயக்கம் கட்டிப் போராடும் இந்தப் பெண்களைப் பார்க்கும்போது பெருமையாகவும் இருந்தது.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்திய அளவில் 59 கோடி பெண்கள் இருப்பதாகவும் அதில் 5.5 கோடி விதவைகள் என்றும் குறிப்பிட்டுள்ள இந்தக் கூட்டமைப்பின் அறிக்கையில் - 

* தற்போது தமிழக அரசால் வழங்கப்படும் விதவை உதவித் தொகையை ஆயிரம் ரூபாய் என்பதிலிருந்து 3000 ஆக உயர்த்தவேண்டுமென்றும், 

* விதவைகள் பாகுபாடு வன்கொடுமைத் தடுப்பு சட்டம் இயற்றப்படவேண்டும்; 

*இரண்டு ஆண்டுகளுக்குமேல் கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள் அனைவருக்கும் விதவைகளுக்கான நலத் திட்டங்கள் அனைத்தையும் வழங்கவேண்டும்;

*குடியின் காரணமாக கணவனைப் பறிகொடுத்த பெண்களுக்கு உடனடி நிவாரணமாக ஐந்து லட்சம் ரூபாயும் மாதாந்திர உதவித்தொகையாக ஐந்தாயிரம் ரூபாயும் தரவேண்டும் 
    - என்பவை உள்ளிட்ட பல கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. 

இந்தக் கோரிக்கைகளை மக்கள் நல கூட்டணி தலைவர்களின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதோடு அக்கூட்டணியின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெறச் செய்வேன் என அவர்களிடம் கூறினேன். 

தன்னம்பிக்கை கொண்ட அந்த சகோதரிகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்! 

Sunday, February 7, 2016

மதுவின் பிடியிலிருந்து புதுச்சேரியை மீட்போம்! - ரவிக்குமார்( 06.02.2016 அன்று புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் நல கூட்டணி பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம் ) 

தோழர்களே!

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே வழிகாட்டிய மண் இந்த புதுச்சேரி மண். மக்கள் தலைவர் என்று அழைக்கப்படுவதற்குப் பொருத்தமானவராகத் திகழ்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் வ.சுப்பையா அவர்கள் களமாடிய மண் இது. இன்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்புக்கென தனி இயக்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள். 1933 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி வ.சுப்பையாவும் வேறு சில தலைவர்களும் இதே புதுச்சேரியில் தீண்டாமை ஒழிப்புக்கென அரிசன சேவா சங்கத்தை உருவாக்கினார்கள். இன்று கிறித்தவ மதத்தில் இருக்கும் தலித்துகளின் உரிமைகளுக்காக நாம் பேசுகிறோம், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறோம். ஆனால் 1930 களிலேயே கிறித்தவத்தில் இருக்கும் தீண்டாமையைக் கண்டித்துக் குரல் கொடுத்தவர் நோயல். தேவாலயத்திலிருந்த தீண்டாமை சுவரை இடிக்கச் செய்தவர். தான் நடத்திவந்த புதுவை முரசு பத்திரிகையின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். அவர் வாழ்ந்த சிறப்புமிக்க மண் இந்தப் புதுவை மண். 

இத்தனை பெருமைகள் கொண்ட புதுச்சேரி இன்று எதற்காகப் புகழ்பெற்றிருக்கிறது? இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் தற்கொலைகள் நிகழும் மாநிலம் என்ற பெயரைத்தான் இப்போது ஆளும் முதல்வர் ரங்கசாமி ஏற்படுத்தியிருக்கிறார். தற்கொலைகளின் தலைநகரமாக இதை மாற்றியதுதான் அவரது சாதனை. நாட்டின் சராசரியைவிட நான்குமடங்கு அதிகமாக புதுச்சேரியில் தற்கொலைகள் நிகழ்கின்றன. இந்த அளவுக்கு தற்கொலைகள் நிகழக் காரணம் என்ன? மதுக்கடைகள்தான் இதற்குக் காரணம். மக்கள் தொகைக்கும் மதுக்கடைகளுக்கும் இடையிலான விகிதம் இங்கே அதிகம். இங்கே சுமார் 500 அயல்நாட்டு மதுபானக் கடைகள் உள்ளன. சுமார் 150 கள்ளுக் கடைகளும் சுமார் 120 சாராயக் கடைகளும் இருக்கின்றன. 

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை அரசாங்கமே நடத்துகிறது. எத்தனைபேர் தாலி அறுத்தாலும் பரவாயில்லை பணம் வந்தால்போதும் என்ற எண்ணத்தில் இலக்கு நிர்ணயித்து மதுவை விற்பனை செய்கிறது. இங்கோ மதுபானக் கடைகளை அரசாங்கமே நடத்துகிறது. ஆனால் கள் சாராயக் கடைகளை தனியாருக்கு ஏலம் விட்டுவிடுகிறார்கள். அந்த சாராய வியாபாரிகள்தான் இங்கே அரசியல் கட்சிகளை ஆதிக்கம் செய்கிறார்கள். 

மது ஒழிப்பு என்பது தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் பிரச்சனையாகிவிட்டது. " நாங்கள் ஆட்சி அமைத்தால் மது ஒழிப்புக்குத்தான் முதல் கையெழுத்து" என தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான கட்சிகள் கூறுகின்றன. அதே கட்சிகள் புதுச்சேரியில் அதைப்பற்றிப் பேசுவதில்லை. மது ஒழிப்பைப்பற்றிப் பேச இந்த மேடையில் உள்ள தலைவர்களுக்குத்தான் தகுதி இருக்கிறது. தமிழ்நாட்டில் மதுவை ஒழிப்போம் எனக் கூறும் திமுக இங்கே அதை அறிவிக்குமா? அந்தத் துணிச்சல் புதுச்சேரி திமுகவுக்கு இருக்கிறதா? அங்கே மது ஒழிப்புக்காகப் போராடுகிறாரே ஈவிகேஎஸ் இளங்கோவன், நடை பயணம் போகிறாரே அய்யா குமரி அனந்தன் - அவர்களெல்லாம் அங்கம் வகிக்கும் கட்சி காங்கிரஸ். புதுச்சேரியை நீண்ட காலமாக ஆண்ட கட்சி அது. இப்போதும் ஆட்சியைப் பிடிக்க முனைப்போடு இருக்கும் கட்சி. அந்த காங்கிரஸ் கட்சி மதுவிலக்கை கொண்டுவருவோம் எனக் கூறுமா? அந்தத் துணிச்சல் அதற்கு இருக்கிறதா? பாரதிய ஜனதாவுக்கு அந்தத் துணிச்சல் இருக்கிறதா? மதுவிலக்குக்கு நாங்கள்தான் உரிமைகொண்டவர்கள் அதற்காகவே அவதரித்திருக்கிறோம் என்று பேசுகிற கட்சி ஒன்று இருக்கிறது. அந்தக் கட்சிக்காரர்கள் புதுச்சேரி எல்லையைத் தொட்டதும் அந்தக் கொள்கையை சுருட்டி பைக்குள் வைத்துக்கொள்வார்கள். மதுக்கடைகளை மூடுவோம் என அவர்களால் இங்கே அறிவிக்க முடியுமா? மக்கள்நலக் கூட்டணிக்கு அந்தத் துணிச்சல் இருக்கிறது. இங்கே வெளியிடப்பட்டிருக்கும் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் 36 ஆவது திட்டமாக அதைத் தெளிவாகக் கூறியிருக்கிறோம். 

மதுவை ஒழித்துவிட்டால் அரசாங்கத்துக்கு வருமானம் என்னாவது? என்று கேட்கிறார்கள். அதில் அப்படியென்ன வருமானம் வருகிறது? ஆண்டுக்கு 500 கோடிதான் அதன்மூலம் கிடைக்கிறது. இலவசங்கள், கவர்ச்சித் திட்டங்கள் போன்றவற்றை ஒழித்துவிட்டாலே போதும் 500 கோடியை மிச்சப்படுத்திவிடலாம். மத்திய அரசாங்கத்திடம் கையேந்துவதற்கும் மக்களை குடிகாரர்களாக்கி வருமானம் பார்ப்பதற்கும் அரசாங்கம் எதற்கு?  இதை  இப்போதிருக்கும் முதலமைச்சர் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.      

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறும் மாநிலமாக புதுச்சேரி மாறிக்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் பெருகிக்கொண்டிருக்கின்றன. அதில் காவல்துறையைச் சார்ந்தவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்ற செய்திகளைப் பார்க்கிறோம். இதுவும் மது வியாபாரத்தால் வருகிற கேடுதான். சாராய வியாபாரிகளாக இருப்பவர்கள் அரசியலிலும் செல்வாக்கு செலுத்தும்போது எப்படி ஒழுக்கமான அரசியலை அவர்களால் நடத்தமுடியும்? 

மது அருந்துவதால் உண்டாகும் சுகாதாரக் கேடு அதற்காக அரசாங்கம் செலவிடும் தொகை இவை எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால் மது விற்பனையால் அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வருவாயைவிட செலவுதான் அதிகம் என்பது தெரியவரும். இதனால்தான் இங்கே மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என நாங்கள் கூறுகிறோம். 

ஒரு காலத்தில் கட்சித் தாவலுக்கு பெயர்போன மாநிலம் என்ற பெயரெடுத்த மாநிலம் இது. கட்சித்தாவல் தடைசட்டம் வந்தபிறகு இங்கிருக்கும் அரசியல்வாதிகள் புதுப்புது வழிமுறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இப்போதிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம். பண மூட்டையோடு வந்த ஒருவர் இங்கே இருக்கும் எம்எல்ஏக்கள் பெரும்பாலானவர்களுக்கு விலைபேசி அட்வான்ஸும் கொடுத்து தனது பெயரை ஆதரித்து நாமினேஷன் பேப்பரில் எப்படி கையெழுத்து வாங்கினார். ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற அச்சத்தில் இங்கிருக்கும் முதலமைச்சர் எப்படி அதிமுகவிடம் சரணடைந்தார் என்ற செய்திகளையெல்லாம் இந்த ஊர் மக்கள் அறிவார்கள். ஒரே நாளில் ஒரு கட்சியில் சேர்ந்து அதே நாளில் எம்பி ஆன வரலாறு இங்குதான் அரங்கேறியிருக்கிறது. 

முதலமைச்சர் ரங்கசாமியின் அரசியல் பலவீனத்தைப் புரிந்துகொண்ட அதிமுக தலைமை இந்தமுறை இங்கே ஆட்சியைக் கைப்பற்றிவிடவேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறது என்று செய்திகள் வருகின்றன. ஆளுங் கட்சியிலே இருக்கும் சில எம்எல்ஏக்கள் இப்போதே அதிமுகவில் துண்டுபோட்டு இடத்தை ரிசர்வ் செய்துவிட்டார்கள் என்றும் கேள்விப்படுகிறோம். இத்தனை காலமாக காங்கிரஸ், என்ஆர் காங்கிரஸ் என அல்லல்பட்ட புதுச்சேரி மக்கள் இப்போது அதிமுக என்ற ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள். ஒருவேளை அதிமுக இங்கே ஆட்சியைப் பிடித்துவிட்டால் அது புதுச்சேரி மக்களுக்கு வாணலியிலிருந்து தப்பித்து அடுப்பில் விழுந்த கதையாகிவிடும். எனவே புதுச்சேரி மக்களைக் காப்பாற்றவேண்டிய மிகப்பெரிய கடமை மக்கள் நல கூட்டணிக்கு இருக்கிறது. அந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற விடுதலைச் சிறுத்தைகளும் மக்கள் நல கூட்டணி தோழர்களும் இப்போதே தேர்தல் பணியைத் துவக்கவேண்டும் எனக் கேட்டு வாய்ப்புக்கு நன்றி சொல்லி அமைகிறேன் நன்றி, வணக்கம்!

Friday, February 5, 2016

திருவிடந்தை: அழகிய சிற்பங்களின் உறைவிடம் - ரவிக்குமார்சென்னை- மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் கோவளத்துக்கு அருகில் உள்ளது திருவிடந்தை. இன்று அங்கு போயிருந்தேன். கோயில் திருப்பணி நடந்துகொண்டிருப்பதால் வலது புறம் இருக்கும் சிறிய கோயிலில் தான் பூசை நடக்கிறது. இந்த கோயிலில் உள்ள நித்திய கல்யாண பெருமாளை வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. 

சோழர் கால கோயிலான இதில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. இடதுபுற சுவர் நெடுக கல்வெட்டுகள் காணப்படுகின்றன. வலது புற சுவரிலும் கல்வெட்டுகளைப் பார்த்தேன். பின்ப்றமாக சென்று பார்க்க முடியாதபடி அடைக்கப்பட்டு வேலை நடந்துகொண்டிருக்கிறது. அங்கும் கல்வெட்டுகள் இருக்கக்கூடும். தொல்லியல் துறையால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் இந்தக் கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டிருக்கக்கூடும். ஆனால் அவை பதிப்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.  

திருவிடந்தை கோயிலில் எழிலார்ந்த சிற்பங்கள் காணப்படுகின்றன. கண்ணனின் லீலைகளைக் காட்சிப்படுத்தும் சிற்பங்கள் மண்டபத் தூண்களை அலங்கரிக்கின்றன. கோபியரோடு விளையாடும் கண்ணன், காளிங்க நர்த்தனம், பாற்கடலில் துயிலும் கண்ணன் என விதவிதமான காட்சிகள். கோயில் திருச்சுவருக்கு வெளியே அமைந்திருக்கும் மண்டபத்தின் தூண்களிலும் அழகிய சிற்பங்கள் உள்ளன. நித்திய கல்யாணபெருமாள் கோயில் என்பதாலோ என்னவோ ரதி மன்மதன் சிற்பங்கள் இந்தத் தூண்களில் இடம்பெற்றிருக்கின்றன. 

இந்தக் கோயில் குறித்த தலபுராணம் இருக்கிறதா என விசாரித்தேன். இல்லை என கைவிரித்தனர். திருப்பணியின்போது இந்த கலை பொக்கிஷங்களுக்கோ கல்வெட்டுகளுக்கோ கேடு நேர்ந்துவிடக்கூடாதே எனக் கவலையாக இருந்தது. 

திருப்பணி முடிந்தபின் மீண்டும் சென்று முழுமையாக இந்தக் கோயிலை சுற்றிப்பார்க்கவேண்டும். சிற்பங்களை நிதானமாகப் பார்த்து மகிழவேண்டும். 


Thursday, February 4, 2016

ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்


டஇன்று (04.02.2016) ஆசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் வளாகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே வானொலி பிரிவில் பயிலும் மாணவர்கள் தமது நிகழ்ச்சிக்காக என்னைப் பேட்டி கண்டார்கள். பிபிசி தமிழோசைக்குப் பெருமை சேர்த்த சம்பத்குமார் இப்போது அங்கே ஆசிரியராக இருக்கிறார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் வந்து பயிலும் அந்தக் கல்லூரியில் தமிழ்நாட்டவர்கள் குறைவு. ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையில் அச்சு, காட்சி ஊடகங்கள் இருந்தும் ஏன் இந்தக் கல்லூரிக்கு தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகம் வருவதில்லை? என்று அந்த மாணவர்களிடம் கேட்டேன். ' தமிழ்நாட்டு மாணவர்கள் பொறியியல் படிப்பதைத்தான் பெருமையாகக் கருதுகிறார்கள்' என்று ஒரு மாணவி சொன்னார். பொறியியல் பட்டதாரிகள் பலர் டோல் பிளாசாக்களில்  வேலை பார்க்கும் கொடுமை அவருக்குத் தெரிந்திருக்காது!