Tuesday, November 26, 2013

தொல்பதி நரகர்* - ரவிக்குமார்

சங்கரராமன் கொலை குறித்து நான் 2004 ஆம் ஆண்டில் காலச்சுவடு மாதப் பத்திரிக்கையில்  எழுதிய கட்டுரை: 


தொல்பதி நரகர்*


ரவிக்குமார்


ஒரு கொலை வழக்கில் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் கைதுசெய்யப்படுவார் என்பதை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. பிரதமரை விட, குடியரசுத் தலைவரைவிட அதிக அதிகாரம் உள்ளவராகத் தன்னைக் காட்டிக்கொண்டவர் அவர்; சங்கராச்சாரி அரசியலமைப்புச் சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகார மையமாகத் திகழ்ந்தவர்; தமிழகம் மட்டுமின்றி இந்திய அரசியல் முழுவதன்மீதும் செல்வாக்குச் செலுத்தியவர்; நீதிமன்றத்தில் தீராமலிருக்கும் அயோத்திப் பிரச்சினையைத் தீர்க்கப்போகிறார் என விளம்பரப்படுத்தப்பட்டவர். இவை எல்லாவற்றுக்கும் மேலாகத், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவரென அறியப்பட்டவர் சங்கராச்சாரியார். இவை யாவும் சேர்ந்து அவரது கைது நடவடிக்கையை அசாதாரணமான ஒன்றாக ஆக்கியுள்ளன.


சங்கராச்சாரியார் கைதுசெய்யப்பட்டதற்குக் கிடைத்திருக்கும் எல்லை கடந்த வரவேற்பு அவர் நடத்திவந்த அரசியல்மீது எல்லோரும் எப்படியான 'மதிப்பு' வைத்திருந்தனர் என்பதற்குச் சான்றாக உள்ளது. வழக்கு நடந்து தீர்ப்பு வரவில்லையென்றபோதிலும் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் இந்த வழக்கு விசாரணையின்போது கூறியதுபோலச் சங்கராச்சாரி இந்தக் கொலையைச் செய்திருப்பார் என்பதையும் பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பார் என்பதையும் நம்புவதற்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கவே செய்கின்றன. சங்கரராமன் எழுதிய கடிதங்கள் மட்டுமின்றிச் சங்கராச்சாரியின் பேச்சுகளும் நடவடிக்கைகளும் அவர் இப்படியான காரியங்களைச் செய்யக்கூடியவர்தான் என்பதைக் காட்டியுள்ளன. கருணாநிதி உடம்புக்கு ஏதாவது வர வேண்டும் எனக் கடவுளிடம் தான் வேண்டிக்கொண்டதாக ஒருமுறை அவர் கூறியிருந்தார். அவரது ‘உயர்ந்த’ குணத்துக்கு இந்த ஒரு சான்றே போதும். பெண்களைப் பற்றியும் தலித்துகளைப் பற்றியும் அவர் கூறிவந்த கருத்துகள் சுரணையுள்ள எவருக்கும் கோபத்தை ஏற்படுத்தக்கூடியவை.


கடந்த நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் தொடங்கிய ‘பிராமணரல்லாதாரின்’ அரசியலை எதிர்கொள்ளத் தமிழகப் பிராமணர்கள் சங்கர மடத்தை ஓர் அதிகார மையமாகக் கட்டியெழுப்பினார்கள். இப்படித் ‘தற்காப்புக்கென’ உருவாக்கப்பட்ட அந்த மையமோ உண்மையில் ‘தாக்குதல் தொடுக்கிற’ இடமாகவே இருந்துவந்தது. இந்தச் சமூகத்தில் தாங்கள் சிறுபான்மையினர் என்னும் பாதுகாப்பற்ற உணர்வு உண்டாக்கிய எதிர்மறையான மனோபாவமாக இதைக் கூறலாம். இதன் காரணமாக இது பிராமணரல்லாதார் பலரின் வெறுப்புக்கு ஆளாகி வந்தது. இப்போது சங்கராச்சாரி கைதை ஒட்டிப் பிராமணரல்லாதார் கொள்ளும் குதூகலத்துக்கு இந்த வெறுப்பே அடிப்படை. அது நீதியின்பாற்பட்ட அக்கறையால் ஏற்பட்டதல்ல. ஏனென்றால் இப்படிக் குதூகலிக்கிறவர்களில் பலர் சங்கராச்சாரிக்கு எந்தவிதத்திலும் குறையாத ‘நேர்மை யாளர்’களாவார்கள்.


சங்கராச்சாரியாரின் கைது சங்கப் பரிவாரங்கள் கூறுவதுபோல இந்து மதத்தின்மீதான தாக்குதல் அல்ல. பிராமண அதிகாரத்தின்மீதான தாக்குதலையே அவர்கள் இந்துமதத்தின் மீதான தாக்குதலாகச் சொல்கின்றனர். தென்னிந்திய, அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டு, பிராமணர்களின் அதிகாரமென்பது மத அதிகாரம் மட்டுமல்ல. நிலவுடமையோடு கூடிய தல அதிகாரமும் அவர்களுக்கு இருந்ததென்பதைப் பர்ட்டன் ஸ்டெய்ன் எடுத்துக்காட்டியுள்ளார் (Peasant State and Society in Medieval South India (1980; பக்கம் 53-56). பிரம்மதேயங்களை அடிப்படையாகக்கொண்ட இத்தகைய பொருளியல் அதிகாரம் இந்தியாவின் வேறெந்தப் பகுதியிலும் அவர்களுக்கு இருந்ததில்லை என்கிறார் ஸ்டெய்ன். சோழர் காலத்திலிருந்து பிரிட்டிஷ் ஆட்சிக்காலம்வரை இது தொடர்ந்தது. பதினான்காம் நூற்றாண்டுக்குப் பிறகு சிலகாலம் இந்த நிலையில் ஒரு சரிவு ஏற்பட்டபோதிலும், நிலங்களைப் பற்றிய ஆரம்பகாலப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கொள்கை சென்னை மாகாணத்தில் இருந்த வளமான நிலங்களைப் பிராமணர்களின் கையில் ஒப்படைத்தது. அதே நேரத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் நம்பகமான ஊழியர்களாகவும் அவர்கள் மாறினார்கள். மதரீதியான அதிகாரம், பொருளாதார அதிகாரம், நிர்வாகத்தில் பங்கெடுத்ததால் கிடைத்த அதிகாரம் என ஆதிக்கத்தின் உச்சத்துக்கு அவர்கள் சென்றார்கள்.


ஆனால் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த நிலை மாறத் தொடங்கியது.


கிராமங்களைவிட்டு நகரங்களை நோக்கி நகர்ந்ததன் காரணமாக நிலங்களை அவர்கள் கைவிட்டனர். மதச்சார்பற்ற அரசியலமைப்புச் சட்டம் அவர்களின் மத அதிகாரத்தைக் கட்டுப்படுத்தியது. ஆனாலும் காங்கிரசுக்குள் நுழைந்து அவர்கள் போட்டுவைத்திருந்த அடித்தளம், ஆட்சி அதிகாரத்தை அவர்களிடம் கொண்டுவந்து சேர்த்தது. இது வெகு காலம் நீடிக்கவில்லை. எண்ணிக்கையில் பெரும்பான்மையாகவும் பொருளாதார பலம் கொண்டவர்களாகவும் இருந்த பிராமணரல்லாதார் நிர்வாக அதிகாரத்தைப் பிடித்தது மட்டுமின்றிக் கட்சி அரசியலையும் கைப்பற்றிக்கொண்டனர். பிராமணரல்லாதாரின் சாதி அரசியல் பிராமணர்களைச் சிறுபான்மையினராக உணரவைத்தது மட்டுமின்றி அவர்களைத் தமக்குக் கீழே இருக்கும்படி நிர்ப்பந்தித்தது. இதைக் கடந்து செல்வதற்காகவே மத அடையாளம் மீண்டும் முன்னெடுக்கப்பட்டது. மத இந்துக்களான பிராமணர்களும் சாதி இந்துக்களான பிராமணரல்லாதாரும் சமரசம்செய்துகொண்டு அமைத்த கூட்டணியே இந்துத்துவம் ஆகும். இதனால் தூக்கிப் பிடிக்கப்பட்டவரே இந்தச் சங்கராச்சாரியார்.


சங்கராச்சாரியாரின் எழுச்சி பிராமணர்களின் எழுச்சி என்பதாகவே பார்க்கப்பட்டது. அப்படியானால் அவரது வீழ்ச்சி பிராமணர்களின் வீழ்ச்சியென்றே பொருள்படும். அவரது கைதையொட்டிச் சாதாரண பிராமணர்கள் அடைந்துள்ள வருத்தமும் பிராமணரல்லாதார் காட்டும் உற்சாகமும் இதைத்தான் சுட்டுகின்றன. இங்குதான் அவரது கைது முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாட்டில் சகல தளங்களிலும் பிராமணர்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டனர். அவர்களுக்கு இருந்த குறியீட்டு அதிகாரம் இப்போது கேள்விக்குள்ளாகிவிட்டது. இந்தக் கைது நடவடிக்கை தமிழகத்தில் பிராமணரல்லாதார் அதிகாரத்தை வரம்பற்றதாக ஆக்கிவிட்டது. இந்திய அளவில் சமூகத்தின் சகல தளங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டுவிட்ட சாதி இந்து அரசியலின் வெற்றியாக இதைக் கூறலாம்.


இந்தியச் சமூகத்தில் பிராமணரல்லாதார் எனப்படும் சாதி இந்துக்களின் அதிகாரம் வினோதமானது. பிராமணரைக் காட்டித் தம்மை அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் (victims) என்று சொல்லிக்கொள்ளலாம்; தமக்குக் கீழே இருப்பவர்கள்மீது ஆதிக்கமும் செலுத்தலாம். இது ஆயுதம் ஏந்திய போராளிக் குழுவின் அதிகாரத்தை ஒத்ததாகும். அரசை எதிர்க்கும் கலகக் காரர்களாகவும் தமது கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளில் வாழ்வோருக்கு ஆட்சியாளர்களாகவும் இருக்கும் அவர்கள் ஒரே நேரத்தில் எதிர்ப்பு, ஆதிக்கம் என்னும் இருவகை அதிகாரங்களையும் அனுபவிப்பது போலவே, இந்தியச் சமூகத்தில் பிராமணரல்லாதார் இப்போது ‘உயர்ந்தவர்’ எனச் சொல்லி அதிகாரத்தையும் ‘பிற்படுத்தப்பட்டோர்’ என்று கூறிச் சலுகைகளையும் ஒருசேர அனுபவிக்கின்றனர். இந்த ‘வசதி’ பிராமணர்களுக்கோ தலித்துகளுக்கோ கிடையாது.


‘கொலையுண்டவர் ஒரு பிராமணர்; கைதுசெய்யப்பட்டிருப்பவரும் பிராமணர்; கைதுசெய்தவரும் பிராமணர். இதில் பிராமணரல்லாதார் எங்கே வந்தனர்’ என்று கேட்கப்படலாம். சங்கராச்சாரியாரின் அதிகார அழிப்பால் பலன் பெறப்போவது அவர்கள்தான். தீண்டாமையை வலியுறுத்திய, சாதியைக் கட்டிக்காத்த சங்கராச்சாரியாரின் வீழ்ச்சி தலித்துகளுக்கு மகிழ்ச்சியளிப்பதுதான். ஆனால் சங்கராச்சாரியாரின் மீதுகூடச் சட்டம் பாயும், சாதி வெறியர்களை அது ஒன்றும் செய்யாது என்னும் கசப்பான உண்மையையும் சாதிப் பெரும்பான்மை மதப் பெரும்பான்மையைவிட ஆபத்தானது என்னும் தத்துவத்தையும் உணர்ந்ததால் பிராமணரல்லாதாரோடு சேர்ந்து தலித்துகள் கூத்தாட முடியாது என்பதை மட்டும் இப்போதைக்குக் கூறி வைக்கலாம்.


* * தலைப்பு மணிமேகலையிலிருந்து எடுக்கப்பட்டது. தவ வேடத்தில் மறைந்து நின்று இழிசெயல்களைச் செய்யும் பொய் வேடத்தார் உள்ளிட்ட ஆறுவகையான குற்றங்களைச் செய்பவர்களை நரகர் எனக் குறிப்பிடுகிறது மணிமேகலை.

Tuesday, November 19, 2013

திரு கே.ஆர்.நாராயணனுக்கும், திரு கன்ஷிராமுக்கும் பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்சச்சின் தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாஜ்பாய், என்.டி.ராமாராவ் ஆகியோருக்கும் பாரத ரத்னா வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. இதுவரை அவ்விருதைப் பெற்றுள்ள 43 பேர்களின் பட்டியலை ஆராய்ந்தால் பலதரப்பட்டவர்களுக்கும் அது வழங்கப்பட்டிருப்பதையும் அதன்பின்னே அரசியல் இருப்பதையும் உணரலாம். நேரு, இந்திரா, ராஜிவ் என அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே பாரத ரத்னாக்களாக மிளிர்கிறார்கள். திருமதி சோனியா காந்திக்கும் திரு ராகுல் காந்திக்கும்கூட பாரத ரத்னா கொடுக்கப்படலாம். அப்படிக் கொடுத்தாலும் எனக்கு ஆட்சேபணை ஏதுமில்லை. 

பாரத ரத்னா விருதைப் பெற்ற 43 பேர்களில் அம்பேத்கரைத் தவிர ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெறவில்லை. அந்தப் பட்டியலில் இருக்கும் பலரைக்காட்டிலும் திரு கே.ஆர்.நாராயணன் அந்த விருதைப் பெற தகுதியானவர். ஆனால் அவரது பெயரைச் சொல்லக்கூட எவருமில்லை என்பதுதான் வேதனை. 

ஒடுக்கப்பட்டவர்களும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பதை  நிரூபித்துக் காட்டியவர் கன்ஷிராம். அதன்மூலம் இந்திய சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதில் மிகப்பெரும் பங்களிப்புச் செய்தவர். அவரது பணி எந்தவகையிலும் வாஜ்பாயைவிட, என்.டி.ராமாராவைவிடக் குறைந்ததல்ல. அவருக்கும் பாரத ரத்னா வழங்கப்படவேண்டும். 

Thursday, November 7, 2013

காமன்வெல்த்தில் இலங்கையைக் காப்பாற்றும் முயற்சி 2011 இல் ஆரம்பித்தது.2011 ஆம் ஆண்டு காமன்வெல்த் மாநாடு முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த காமன்வெல்த் அமைப்பின் செயலாளர் திரு கமலேஷ் சர்மாவும் ஆஸ்திரேலியப் பிரதமர் திருமதி ஜூலியா கில்லார்ட் அவர்களும் காமன்வெல்த் மாநாட்டின் தீர்மானங்களை எடுத்துக்கூறிய பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர். அப்போது அவர்களிடம் ஆறு கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுள் இரண்டு கேள்விகள் இலங்கையைப் பற்றியதாக இருந்தன. 

காமன்வெல்த் மாநாட்டில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமது பாதவி அவர்கள் தலைமையில் பத்து பேரை உறுப்பினராகக் கொண்ட சான்றோர் குழு 206 பக்கங்கள் கொண்ட A Commonwealth of the People – Time for Urgent Reform என்ற அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் 106 பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன. காமன்வெல்த் நாடுகளுக்கென ஒரு மனித உரிமைகள் ஆணையர் நியமிக்கப்படவேண்டும் என்ற முக்கியமானதொரு பரிந்துரையை அந்த அறிக்கை முன்வைத்திருந்தது. ஆனால் அந்த மாநாட்டில் அந்தப் பரிந்துரையை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. அதுபற்றி கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்கள் இலங்கையைக் காப்பாற்றும் நோக்கில்தான் அந்தப் பரிந்துரையைப் பரிசீலிக்கவில்லையா என்று கேட்டனர். அதற்கு ஆஸ்திரேலியப் பிரதமர் மழுப்பலான பதிலைத்தான் முன்வைத்தார். காமன்வெல்த் செயலாலர் கமலேஷ் சர்மாவோ அதைப்பற்றி வாயே திறக்கவில்லை. 

அந்த கேள்விகளும் பதில்களும் இவைதான்:  

Reporter: Miss Prime Minister, correct me if I'm wrong, but Sri Lanka faced a lot of static as the next host about the Sri Lanka's human rights record, etc. On the subject of the Human Rights Commission, correct me if I'm wrong, but was this [all] because of the majority of the membership which backs Sri Lanka felt that this was an unfair witch hunt coming at this time, coinciding with this moment in time where Sri Lanka has got so much static, that this Human Rights Commission is being mooted now? It has been rejected in a sense, because it wasn't approved at this CHOGM. Is this because a majority of the membership felt that this was unfair to Sri Lanka?

Julia Gillard: I think you are drawing a connection between two questions when, in the deliberations of leaders, that connection was not there. To go back in time, the Eminent Persons Group was created by the last Commonwealth Heads of Government meeting to provide a report and recommendations on strengthening the Commonwealth. That is what is because leaders and we are dealing with it, and we've dealt with the charter today and we've dealt with the proposition about a commissioner too, so those things have been dealt with.

In terms of leaders' motivations for making decisions in this area, I think you would be wrong to suggest you can guess what leaders' motivations were. I think you're trying to draw a link there in your mind, which I don't think you can assume was there in the minds of leaders. Leaders have been talking about the appropriate way of strengthening the Commonwealth and that is what has driven the conclusions that we've announced here this evening.
-------------------
Reporter: Just in terms of the suggestion of appointing a human rights commissioner to improve the Commonwealth's record on addressing human rights abuses within the Commonwealth, are you concerned that key amongst the very few countries which actively opposed and therefore blocked the creation of a human rights commissioner was Sri Lanka? This is a country which itself would very much expect to be one of the first topics to be discussed by such a human rights commissioner, because of course the government there is itself accused of severe human rights abuses, crimes against humanity and war crimes, the fact that the country which perhaps focuses the need for a human rights commissioner is the country which was itself able to block that?

Julia Gillard: Well, can I say the following. First, in accordance with the conventions of the Commonwealth, there is not reporting out from the leaders' retreat session about the position of individual leaders, so I'm not going to breach that convention by reporting out of the discussions held by leaders today.
What I can say is the report we received from foreign ministers when were in executive session yesterday did indicate to us that there had been a broad range of concerns raised about the commissioner position and that range of concerns was reported to us by foreign ministers after they had had their discussions. Consequently, when leaders met today, they were aware that concerns had been raised from across a broad range of countries and had to work their way through as to what to do in those circumstances. And what I've announced to you is what leaders have determined.

On the question of Sri Lanka, I've been asked this question over the last few days and let me state Australia's position again here. We are concerned about reports of human rights abuses during the end stages of the conflict in Sri Lanka. We are aware that Sri Lanka has underway its Lessons Learnt and Reconciliation Commission process. We've been very clear that that process has to address the material that was comprehended in the UN Secretary-General's Advisory Panel report, so there is an expectation there about what should be done through the lessons learnt and reconciliation process.
I think I said yesterday and I'm very happy to say again, it seems to me to stem from the very title that if you are going to learn lessons, if you are going to achieve reconciliation, then that starts with truth telling.

Thank you very much.

Saturday, November 2, 2013

நமது பல்கலைக்கழகங்களில் பயின்ற மாணவர்கள் நன்கொடை கொடுத்ததுண்டா?லண்டன் பல்கலைக்கழகத்தில் பயின்ற பழைய மாணவர் ஒருவர் அந்தப் பல்கலைக்கழகத்தின் கீழைத்தேய மற்றும் ஆப்பிரிக்கவியல் பள்ளிக்கு ( SOAS ) 20 மில்லியன் பவுண்டுகளை நன்கொடையாக வழங்கியிருக்கிறார். இந்திய ரூபாயில் அதன் மதிப்பு சுமார் 200 கோடியாகும். 


அந்தப் பல்கலைக் கழகத்தில் ஆசிய கலைகள் குறித்து முதுநிலைப் பட்டயவியல் பயின்ற ஃப்ரெட் ஈஷ்னெர் என்ற அந்த மாணவர் இப்போது சில வானொலி நிலையங்களை நடத்திவருகிறார். அவரது தொலைக்காட்சி நிலையம் ஒன்றை ரூபர்ட் முர்டோச் விலைக்கு வாங்கிவிட்டார். 


தான் நடத்திவரும் ஆல்ஃபாவுட் ஃபவுண்டேஷன் சார்பில் ஃப்ரெட் ஈஷ்னெர் அந்தத் தொகையைப் பல்கலைக்கழகத்துக்கு வழங்கியிருக்கிறார். தென்கிழக்காசிய கலைகள் குறித்த படிப்புகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதற்காக இந்த நன்கொடை வழங்கப்பட்டிருக்கிறது. பௌத்த, இந்து கலைகளுக்காக ஒரு பேராசிரியர் பதவியை உருவாக்கவேண்டும் எனவும் ஈஷ்னெர் கேட்டுக்கொண்டிருக்கிறார். 


தொழிற்கல்வியில் இடம் 'வாங்குவதற்கு' இப்போது கட்டாய நன்கொடை செலுத்தவேண்டும் என்பது நமக்குத் தெரியும். தமிழ்நாட்டிலுள்ள சென்னைப் பல்கலைக் கழகமும் மதுரைப் பல்கலைக்கழகமும் நீண்ட பாரம்பரியம் கொண்டவை. அவற்றில் பயின்ற மாணவர்கள் பலர் குறிப்பிடத்தக்க செல்வந்தர்களாக இருக்கக்கூடும். அவர்களுள் யாரேனும் தாம் படித்த பல்கலைக் கழகங்களுக்கு நன்கொடை அளித்ததுண்டா? ஈஷ்னெர் போல 200 கோடி வேண்டாம் 20 லட்சமாவது கொடுத்திருக்கிறார்களா? தெரிந்தால் சொல்லுங்கள்.

எதிர்காலப் பிரதமர்கள் என்ன சொல்கிறார்கள்?

அமெரிக்காவின் உளவு நடவடிக்கை பற்றி நமது எதிர்காலப் பிரதமர்கள் என்ன சொல்கிறார்கள்? 


அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் உலகளாவிய உளவு நடவடிக்கையை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடன் அமெரிக்க அரசு தன்மீது இரக்கம் காட்டி தன்னை மன்னிக்கவேண்டும். என வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவரைச் சந்தித்த ஜெர்மன் நாட்டின் பசுமை கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்ஸ் கிறிஸ்டியன் ஸ்ட்ரோபெல் என்பவரிடம் அவர் கையளித்துள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

ஸ்னோடென் ஏன் மன்னிப்புக் கோருகிறார்?


ஜெர்மன் பிரதமரின் தொலைபேசி உரையாடல்களை 2002 ஆம் ஆண்டிலிருந்தே அமெரிக்கா ஒட்டுக் கேட்டுவருகிறது என அண்மையில் வெளியான செய்தியையொட்டி இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. அதுகுறித்து ஜெர்மன் நாட்டில் நடைபெறும் விசாரணையில் சாட்சியமளிப்பதற்காக எட்வர்ட் ஸ்னோடெனிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஒராண்டுக்கு ரஷ்யாவில் தஞ்சம் அளிக்கப்பட்டிருக்கும் ஸ்னோடென் அங்கிருந்து வேறு நாடுகளுக்குச் செல்வதில் சிக்கல் உள்ளது. அப்படிச் சென்றால் அவர் அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கப்படக்கூடும். எனவே சட்டரீதியான பாதுகாப்பு வழங்கப்பட்டால் மட்டுமே அவர் ஜெர்மனிக்குச் செல்ல முடியும். அதற்காகத்தான் இந்தக் கடிதம் அவரிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது. 


ஸ்னோடென் செய்ததில் சட்டரீதியாகத் தவறொன்றுமில்லை. தனது அரசாங்கம் சட்டத்துக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்ட அவர், ஒரு குடிமகன் என்ன கடமையைச் செய்யவேண்டுமோ அதைத்தான் செய்திருக்கிறார். அரசாங்கம் செய்யும் தவறுகளை உரிய ஆதாரங்களோடு வெளிப்படுத்துவதும் பேச்சுரிமை என்பதில்தான் அடங்கும். சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் மட்டுமின்றி அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது திருத்தத்தின்படியும் தற்போது அமெரிக்க அரசு மேற்கொண்டிருக்கும் உளவு நடவடிக்கை சட்டவிரோதமானதாகும். எனவே அந்த சட்டவிரோத நடவடிக்கையை அம்பலப்படுத்தி உலக அளவில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் ஸ்னோடென் எந்தவிதத்திலும் குற்றவாளியல்ல. எனவே அவர் இப்படிக் கருணை காட்டும்படி அமெரிக்காவிடம் கெஞ்ச வேண்டியதுமில்லை. ஆனல் அவர் இப்படிக் கேட்கவேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. அதற்கு உலக நாடுகளும் ஐநா போன்ற சர்வதேச அமைப்புகளும்தாம் பொறுப்பேற்கவேண்டும். 


ரஷ்யாவின் கண்டிக்கத்தக்க செயல்: 


தற்போது ரஷ்யா அவருக்கு வழங்கியிருக்கும் தஞ்சம் தற்காலிகமானது, நிபந்தனைக்குட்பட்டது. எந்தவொரு நாட்டிடமும் எவரொருவரும் தஞ்சம் கோர உரிமை உள்ளது. தஞ்சம் அளிக்கும் நாடு அவரது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தக்கூடாது. அமெரிக்க அரசுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு தகவலையும் வெளியிடமாட்டேன் என உறுதிமொழி வாங்கிக்கொண்டுதான் ரஷ்யா எட்வர்ட் ஸ்னோடென்னுக்குத் தஞ்சம் அளித்திருக்கிறது. இதுவேகூட முறையற்ற கண்டிக்கப்படவேண்டிய செயல்தான். 


உலக நாடுகளின் மௌனம் : 


ஸ்னோடென் அம்பலப்படுத்தியதற்குப் பிறகும்கூட அமெரிக்கா தனது உளவு நடவடிக்கையை நிறுத்தவில்லை. அதற்குக் காரணம் அதுகுறித்து சர்வதேச அழுத்தம் உருவாகாததுதான். தமது அந்தரங்கமும் இறையாண்மையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவைதான் என்பதை உலக நாடுகள் அறியாதவை அல்ல. ஆனாலும் பயங்கரவாதத் தடுப்பு என்ற ஒரேயொரு காரணத்தைச் சொல்லி அவையெல்லாம் தமது அடிமைத்தனத்தை மறைத்துக்கொண்டுவிட்டன. ஃப்ரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி முதலான நாடுகளின் சிறு முணுமுணுப்புகள் தவிர அமெரிக்காவை எதிர்த்து வலுவான கண்டனக் குரல் எதுவும் எழாத நிலையில் தனது குற்றச் செயலைக் கைவிடவேண்டிய தேவை அமெரிக்காவுக்கும் இல்லாமல்போய்விட்டது. 


இந்து நாளேட்டின் பங்களிப்பு: 


ஸ்னோடென் வெளிப்படுத்திய அமெரிக்காவின் உளவு நடவடிக்கை குறித்த செய்திகளை இந்திய ஊடகங்களிலேயே இந்து நாளேடுதான் உரிய முக்கியத்துவம் தந்து வெளியிட்டது. அந்தப் பெருமை அதன் ஆசிரியராக இருந்த சித்தார்த் வரதராஜன் அவர்களையே சாரும். அந்த மரபு அறுந்துவிடவில்லை என்பதுபோல் இன்றும் ஸ்னோடென் கடிதம் குறித்து இந்து நாளேட்டில் இரண்டு விரிவான செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தச் செய்திகளையும் அது வெளியிட்டிருக்கும் நடுப்பக்கக் கட்டுரையையும் சேர்த்துவைத்து வாசிக்க வேண்டும். 

இந்து நாளேட்டில் வெளியாகியிருக்கும் ஸ்னோடென் குறித்த செய்திகள் அமெரிக்க உளவு நடவடிக்கையின் ஆபத்தைச் சொல்கின்றன. அமெரிக்க வெளியுறவுச் செயலாளர்  ஜான் கெர்ரி “ தேசிய பாதுகாப்பு அமைப்பின் (என்.எஸ்.ஏ) நடவடிக்கைகள் பலவற்றுக்கு அமெரிக்க அரசின் ஒப்புதல் பெறப்படவில்லை” எனக் கூறியிருக்கிறார். இந்து நாளேட்டின் செய்தியாளரிடம் பேசிய ’எபிக்’ என்ற நிறுவனத்தைச் சேர்ந்த அமீ ஸ்டெபனோவிச் “ பொதுமக்கள் இததகைய வரம்பற்ற கண்காணிப்பை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை அமெரிக்க அதிகாரிகள் பலரும் இப்போது உணர்ந்திருக்கிறார்கள்” என்றுகூறியுள்ளார். 


தனிமனித சுதந்திரத்தைப் பறிப்பதற்கும், அதில் தலையிடுவதற்கும் அரசாங்கங்கள் இப்போது பயன்படுத்தும் வசதியான காரணம் ‘ பயங்கரவாதம்’.அதற்கு ஒத்திசைவான மனநிலையை உருவாக்கும் பணியில் அரசுக்குத் துணையாக பல நிபுணர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அப்படியானவர்கள் ஒன்றிணைந்து எழுதியிருப்பதுதான் இன்று இந்து நாளேட்டில் வெளியாகியிருக்கும் நடுப்பக்கக் கட்டுரை ( Penetrating the web of terror networks) . பாட்னா குண்டுவெடிப்பு பற்றியும் , இந்தியன் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பு குறித்தும் எழுதப்பட்டிருக்கும் அந்தக் கட்டுரை மின்னணுக் கண்காணிப்பின் அவசியத்தை வலியுறுத்துவது மட்டுமின்றி , இந்தியாவில் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் எஃப்.பி.ஐ முதலான அமைப்புகளோடு இந்திய உளவு அமைப்புகள் ஒருங்கிணைந்து பணியாற்றவேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறது.


பயங்கரவாதம் என்பது முக்கியமான பிரச்சனைதான் என்பதில் நமக்கு மறுப்பெதுவுமில்லை. ஆனால் அதைக் காரணம் காட்டி தனிமனித சுதந்திரத்தைப் பறிப்பதும், உலகளாவிய ஒருங்கிணைப்பு என்ற பெயரால் அமெரிக்க மேலாதிக்கத்துக்கு இந்தியாவை மண்டியிட வைப்பதும் ஒப்புக்கொள்ளத் தக்கவையல்ல.   

  

எதிர்காலப் பிரதமர்கள் என்ன சொல்கிறார்கள்? 


நாள்தோறும் ராகுல் காதிக்கும் நரேந்திர மோடிக்கும் இடையிலான வார்த்தை யுத்தத்தை ஒளிபரப்பி / அச்சிட்டு மக்களை மூளைச்சலவை செய்துகொண்டிருக்கும் ஊடகங்கள், அமெரிக்க உளவுப் பிரச்சனையில் அந்த இரண்டு ‘மாமனிதர்கள்’ சொல்வது என்ன, நாங்கள்தான் பிரதமர் எனக் கனவுகண்டுகொண்டிருக்கும் மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் சொல்வது என்ன என்று கேட்டு அவற்றை வெளியிடக்கூடாதா?