Wednesday, August 30, 2017

ஈழக் கவிஞர் சேரன் கவிதைகள்For Rohingya/ ரோஹிங்கா மக்களுக்கும் எமக்கும்
- சேரன் 
-------------------
1.
என் குழந்தையைக் கை விட்டேன்
கடவுளே, 
என்னை மன்னியும்
என உம்மை நான் கேட்க முடியாது

குழந்தையைக் கொல்வதற்கு மூன்று நிமிடங்களுக்கு 
முன்னர்தான் என் கைகளை வெட்டினீர்கள்
வலியிலும் துயரிலும் ஓலத்திலும் உமக்குக்
கருணை எழாது.
என் குழந்தையின் வயிற்றில்
ஈட்டியை  மென்மையாகச் செலுத்தியபோது
என்னை நோக்கி அவன் எறிந்த 
இளிவரல் புன்னகை
அவர்கள் எல்லோருக்குமான கொடுஞ் சாபமாக
அங்கே இருக்கப் போகிறது
என்ற நினைப்பில்
நானும் போய்விட்டேன்.

2.
மெல்லிய ஊதா வண்ணத்தில்
போர்வை அணிந்திருந்த பிக்குணி
சூரியனுக்கு மன்னிக்கத் தெரியாது
என்று சொல்கிறாள்
அவளது பிச்சை ஓட்டுக்குள்
துண்டிக்கப்பட்ட குழந்தையின் கை

3.
றக்கைனில் இறங்கும் போது
நான் மியன்மாச் சாரம் கட்டியிருந்தேன்
நெற்றியில் குங்குமம். சந்தனம் கூட.
"இந்து"வாய் இருந்தால் சிக்கல் இல்லை என்றான் 
அன்பன்
நண்பன்.
பௌத்தன்
வழிகாட்டி

உனது நிறம் இங்கு உவப்பானதல்ல
சிவப்புத் தோலும் இந்துச் சாயமும் இங்கே உய்ய வழி தரும் 
என்றாலும் வா , பார்ப்போம்
என்று சொல்ல நடக்கிறோம்

கனடாவிலும் மண்ணிறத் தோலர்
இருக்கிறார்களா என்றார் தோழர்.

அடுத்த அடி எடுக்க முன்பு
வந்த பௌத்தக் கும்பலிடம் 
நான் பங்களாதேசம் அல்ல என நிறுவ முடியாததால்
உயிர் தப்பி
நிறம் காத்து அடுத்த பறப்பில் திரும்பிச் சென்று
ஆங் சான் சூகிக்கு 
ஒரு தாமரை மலரைப் பரிசளிக்கிறேன்.

4.
பசியில் அழுகிற குழந்தைக்கு
ஒரு பிடி சோற்றை( அல்லது ஒரு விசுக்கோத்தை)
 உண்ணக் கொடுத்துவிட்டு 
அதன் கழுத்தைத் துண்டித்தவனைக் கண்டதுண்டா
மியம்மாவில், ஈழத்தில், வியட்னாமில், கொங்கோவில், காஷ்மீரில்,யேமெனில்,பலஸ்தீனில், எல்சல்சவடோரில்.........

நிகரி விருது 2017: பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றனவகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் நிகரி என்னும் விருதளித்து கௌரவித்து வருகிறோம். 

2017 ஆம் ஆண்டுக்கான விருதுகள் செப்டம்பர் 5 ஆம் நாளன்று அறிவிக்கப்படவுள்ளன. 

இதற்குத் தகுதியான ஆசிரியர்களை எவர் வேண்டுமானாலும்  பரிந்துரைக்கலாம். விருது பெறுபவர் தற்போது பணியில் இருக்கவேண்டும். அவர் வகுப்பறையில் பாலின, சாதிய பாகுபாடுகளைக் களைபவராகவும், சமத்துவத்தை ஊக்குவிப்பவராகவும் இருக்கவேண்டும். 

பரிந்துரைகளை manarkeni@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். 

2016 ஆம் ஆண்டு தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகப் பேராசிரியர் சா. உதயசூரியன் அவர்களும் , பாலவேடு அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை ந.சாந்தி  அவர்களும் நிகரி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். 

2015 ஆம் ஆண்டுக்கான நிகரி விருதுகளுக்காக பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை அவர்களும், சமயபுரம் எஸ்.ஆர்.வி மேனிலைப்பள்ளியின் முதல்வர் துளசிதாசன் அவர்களும் தேர்வுசெய்யப்பட்டனர். 

2014 ஆம் ஆண்டு திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களும் கடலூர் கிருஷ்ணசாமி மேனிலைப்பள்ளி முதல்வர்  'ஆயிஷா' இரா நடராசன் அவர்களும் விருதளித்துப் பாராட்டப்பட்டனர். 

2013 ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பேராசிரியர் அ.ராமசாமி அவர்களும் , கடலூர் அரசு மேனிலைப்பள்ளி ஆசிரியர் த.பாலு அவர்களும் நிகரி விருதுகளைப் பெற்றனர். 

நிகரி விருது - நினைவுக் கேடயம், பாராட்டுப் பத்திரம், பத்தாயிரம் ரூபாய் பண முடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

இவண்
ரவிக்குமார் 
ஆசிரியர், மணற்கேணி ஆய்விதழ்

Saturday, August 26, 2017

தந்தை தாய்ப் பேண்’’ - ரவிக்குமார்


‘‘மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்’’ என்பது ஒளவையின் வாக்கு. ‘தந்தை தாய் பேண்என்று ஆத்திச்சூடியில் சொல்லி வைத்தவரும் அவர்தான். ஒளவையின் காலத்திலேயே பெற்றோரைப் புறக்கணிப்பதும், மூத்தோர் சொல்லை மதிக்காத தன்மையும் இருந்திருக்கிறது. அதனால்தான் இப்படியான அறநெறிகளை அவர் வலியுறுத்தி இருக்கிறார். பல நூறாண்டுகளுக்கு முன்பு ஒளவை சென்னதை இப்போது அரசாங்கம் சொல்கிறது. பெற்றோர் மற்றும் முதியோரின் பாதுகாப்புக்காக சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. அதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் இப்போது சமூக நீதித்துறை அமைச்சர் மீராகுமார் தாக்கல் செய்திருக்கிறார்.


குடிமக்கள் அனைவருக்கும் சமமான உரிமையை நமது அரசியலமைப்பு சட்டம் உறுதியளித்திருப்பதை நாம் அறிவோம். அந்த சட்டத்தின் பிரிவு 41ல் முதியோர், இயலாதோர் முதலானவர்களுக்கு அரசாங்கம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. சமூக நலம் என்பது பொதுப்பட்டியலில் உள்ளதால் மத்திய அரசு மாநில அரசு இரண்டுக்கும் இந்தப் பொறுப்பு உண்டு.


2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சுமார் ஏழு கோடி பேர் அறுபது வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது நமது மக்கள் தொகையில் ஏழு சதவீதமாகும். மருத்துவ வசதிகள் சற்றே கூடியிருக்கும் காரணத்தால் நம்முடைய ஆயுட்காலம் அதிகரித்திருப்பது முதியோரின் எண்ணிக்கை கூடுவதற்குக் காரணமாய் அமைந்துள்ளது.


இன்றைய நாகரீக சமூகம் முதியோர்களை சுமையாகவே கருதுகிறது. அவர்களுக்குரிய மரியாதையை மட்டுமல்ல சமுகப்பாதுகாப்பையும் தருவதற்கு இளைய சமூகத்தினர் முன்வருவதில்லை. ‘‘இளமை நில்லாது, யாக்கை நிலையாது’’ என்று எத்தனை பேர் பாடினாலும் நமது மண்டையில் அது உறைப்பதில்லை. நமது திரைப்படங்களில் குழந்தைகளை விடவும் முதியோர்களே அதிகம் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக தமிழ் சினிமாக்களின் நகைச்சுவைக் காட்கிளகளைக் கூறவேண்டும். வயதானவர்களைக் கேவலப்படுத்தும்போது நம்மிடமிருந்து வெளிப்படும் சிரிப்பு நமது அழுகல் புத்தியின் அடையாம்தான் என்பதை நாம் எண்ணிப்பார்ப்பதில்லை.


நகர மயமாதலின் உபவிளைவுகள் பல. வாடகைக்கு வீடு கிடைப்பது நகரங்களில் மிகவும் அரிதாகி விட்ட நிலையில் கிராமத்திலிருந்து நகரத்துக்கு வேலை தேடி வருபவர்கள் தமது பெற்றோர்களை கிராமத்திலேயே விட்டுவிட்டு வந்து விடுகின்றனர். அப்படி கைவிடப்படுபவர்களுக்கு உழைத்துப் பிழைக்கத்தெம்பில்லாமல் போகும்போது அவர்களது நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாகி விடுகிறது. வயதானவர்களுக்கு உணவு, உடை போன்றவற்றைவிட மருத்துவ தேவைகளே முக்கியம். அத்தகைய சூழலில் அவர்கள் அனாதையாக்கப்படுவது போல குரூரம் வேறு எதுவும் இருக்க முடியாது. வயதான பெற்றோர்களை அவர்களது பிள்ளைகள் பராமரிக்க வகை செய்யும் சட்ட ஏற்பாடு நமது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் ஏற்கனவே இருக்கிறது. ஆனால் அதன்மூலம் ஒருவர் தீர்வு காண்பது சுலபமான காரியமல்ல. இதை உணர்ந்துதான் இப்போது இந்த மசோதா கொண்டு வரப்பட்டிருக்கிறது.

வயதானவர்கள் என்று அழைப்பது இப்போது நாகரீகமாகக் கருதப்படுவதில்லை. அவர்களைசீனியர் சிட்டிஸன்’ ‘மூத்த குடிமக்கள்என்று அழைப்பதே கௌரவம் என்று இப்போது கருதப்படுவதால் இந்த மசோதாவும் அந்தப் பெயரிலேயே கொண்டு வரப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களது பிரச்சனை என்பது சாதி, மதம், இனம் அனைத்தையும் கடந்தது என்பதால் இந்த மசோதா எல்லா மதங்களையும் சேர்ந்த அனைவருக்கும் பொருந்தும். அறுபது வயது மற்றும் அதற்கு அதிகமான வயதுடைய எல்லோரையும் மூத்த குடிமக்கள் என்று இந்த மசோதாவில் வரையறுத்திருக்கிறார்கள். அனாதையான விதவைகள், மற்றும் வருவாய் எதுவுமற்ற பெற்றோர்கள் ஆகியோர் அறுபது வயதுக்குக்கீழ் இருந்தாலும் இந்த சட்டத்தின் பலன்களைப் பெறத் தகுதியுடையவர்கள்.


முதியயோர்களை வாரிசுகள் உள்ள மூத்த குடிமக்கள், வாரிசே இல்லாத மூத்த குடிமக்கள் என இரண்டு வகையாக இந்த சட்டம் பிரித்துள்ளது. வாரிசு உள்ளவர்களுக்கான ஜீவனாம்சத் தொகையையும், பிற பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தீர்மானிக்க நடுவர் மன்றம் (டிரிப்யூனல்) ஒன்றை அமைப்பதற்கு இந்த சட்டம் வகை செய்கிறது. அது வருமான வரிக்கான மேல்முறையீட்டு நடுவர் மன்றத்தை ஒத்ததாக இருக்க வேண்டும் என்றும் வரையறுத்திருக்கிறார்கள்.


நாட்டில் உள்ள மூத்த குடிமக்கள் அனைவரும் ஒரு விண்ணப்பத்தின் மூலமாகத் தம்மைப் பதிவு செய்து கொள்ளவேண்டும். இதற்கென மேலாண்மை அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். பதிவு செய்து கொள்வதற்கு அவர் உதவுவார். இதுதவிர மூத்த குடிமக்களுக்கு எழும் பிரச்சனைகளில் உதவவும், சிக்கல்களில் சமரசம் காணவும் தனியே ஒரு அதிகாரி (Conciliation Officer)நியமிக்கப்படுவார்.


முதியவர் ஒருவருக்கான ஜீவனாம்சத் தொகையை நிர்ணயிக்கும் போது அவரது அந்தஸ்து, அவரது தேவைகள், அவரது சொத்துக்களின் மதிப்பு, அதிலிருந்து வரும் வருமானம், அவரது வாரிசுகளின் வருமானம் முதலியவற்றை நடுவர் மன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள் இருந்தால் ஜீவனாம்சத் தொகையை அவர்கள் பகிர்ந்து வழங்கவேண்டும். மூத்த குடிமக்களுக்கு நடுவர்மன்றம் அடையாள அட்டை ஒன்றை வழங்கும். ஜீவனாம்சம் குறித்து நடுவர் மன்றம் வழங்குகிற தீர்ப்பு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் அத்தியாயம் ஒன்பதின் கீழ் வழங்கப்படும் தீர்ப்புக்கு இணையானதாகும். நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாமல் பிரச்சனை ஏற்பட்டால் அதை விரைவு நீதிமன்றங்களுக்கு அனுப்பி விசாரித்து அதை ஒரு மாதத்துக்குள் தீர்க்க வேண்டுமென இந்த சட்டம் கூறுகிறது.


வாரிசு இல்லாதவர்களுக்கு ஜீவனாம்சம், மற்றும் பிற பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். இதற்கென்று ஒரு நிதியை ஏற்படுத்த வேண்டுமென அரசாங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்வதோடு, தாராள மனம் கொண்ட தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்தும் இந்த நிதிக்காக பணம் திட்டலாம் என ஆலோசனை கூறப்பட்டுள்ளது. அப்படி வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வருமானவரி விலக்கு அளிக்கப்படும்.


ஜீவனாம்சம் மட்டுமல்லாத முதியோருக்கான பாதுகாப்பு இல்லங்களை மாவட்டம் தோறும் உருவாக்க வேண்டும். அங்கே தங்க வைக்கப்படுகிற மூத்த குடிமக்களின் உணவு, மருத்துவம், பொழுதுபோக்கு மற்றும் ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வசதி அந்த இல்லங்களில் செய்யப்படவேண்டும். தனியே வசிக்கும் முதியோர்களைப் பாதுகாக்க காவல் நிலையங்களில் தனிப்பிரிவுகளை உருவாக்குவதற்கும் இந்த சட்டம் வகை செய்கிறது.


முதியோர் பென்ஷன் திட்டம் என்பது தமிழ்நாட்டில் 1962 முதல் அமுலில் இருக்கிறது. அப்போது மாதம் இருபது ரூபாய் என வைத்திருந்தனர். அது கொஞ்சம் கொஞ்சம் அதிகரிக்கப்பட்டு இப்போது மாதம் நானூறு ரூபாய் வழங்கப்படுகிறது.


அதிமுக ஆட்சியில் இருநூறு ரூபாயாக இருந்ததை இப்போது நானூறு ருபாயாக உயர்த்தியிருக்கிறார்கள். இப்போது மத்திய அரசு கொண்டுவரும் சட்டம் இந்த உதவித்தொகையை குறைந்தது ஆயிரம் ரூபாயாக உயர்த்தவேண்டும் என்று கூறுகிறது. மூத்த குடிமக்களுக்கு வீடுகட்டவும், சுயதொழில் தொடங்கவும் வட்டியில்லாமல் கடன் வழங்க வேண்டும் என்று இந்த சட்டம் கூறுகிறது. தற்போதுள்ள விதிகளின்படி மூத்த குடிமக்கள் வீடுகட்ட வங்கிகளில் வட்டியோடுகூட கடன் பெற முடியாது. இது மிகப்பெரும் அநீதியாகும்.


மூத்த குடிமக்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கிறார்கள்.


இந்த சட்டமும் இதற்கான விதிகளும் நடைமுறைக்கு வந்தால் நம் நாட்டின் மூத்த குடிமக்களின் வாழ்வில் அது பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழக அரசு மனம் வைத்தால் இதற்காக மாநில அளவில் சட்டமொன்றை உருவாக்க முடியும். மத்தியில் கொண்டு வரப்படும் சட்டத்தைவிட மேலும் கூடுதலான வசதிகளைக் கூட அதில் வழங்க முடியும்.


மாநில அரசின் சட்டமியற்றும் அதிகாரத்தை இப்படியான விஷயங்களில் நாம் பயன்படுத்த முன்வரவேண்டும். அதன் மூலம் இந்தியாவில் ஒரு முன்னுதாரணத்தை நமது மாநிலம் ஏற்படுத்த முடியும். வெகுவேகமாக நகரமயமாகி வரும் தமிழ்நாட்டில் பிற மாநிலங்களை விடவும் கூடுதலாக முதியோர் பிரச்சனை உள்ளது. முதியோர் இல்லங்கள் நகரப்பகுதிகளில் மட்டும்தான் உள்ளன. ஆனால் ஆதரவற்ற முதியோர் கிராமப்பகுதிகளில் தான் அதிகம் இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்படியான புகலிடங்கள் எதுவும் இல்லை. ஆங்காங்கே உள்ள கோயில்களே அவர்களுக்கு அடைக்கலம் தேடும் இடங்களாக உள்ளன. பிச்சையெடுக்கும் முதியோர் இல்லாத ஒரு கோயிலையும் தமிழ்நாட்டில் பார்க்க முடியாத நிலை இதனால் ஏற்பட்டதுதான்.


மூத்தோரின் இன்றியமையாமை பற்றி நமது இலக்கியங்கள் ஏராளமாகப் பேசியுள்ளன. ‘‘பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்’’ எனவும், ‘‘அறமுணர்ந்த மூத்தவர்களின் நட்பைப் பெறும் வகையறிந்து அதனைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றும் வள்ளுவர் கூறிச் சென்றிருக்கிறார்.


குறள் என்றால் என்னவென்று அறியாத நமது ‘‘குத்துப்பாட்டு’’ தலைமுறை தமக்கான சமூக மதிப்பீடுகளை சினிமாவிலிருந்துதான் பெற்றுக்கொள்கிறது. எனவே, சினிமாக்களில் மூத்த குடிமக்களை இழிவுபடுத்துகிற காட்சிகளை அனுமதிப்பது பற்றி நமது அரசுகள் பரிசீலித்து இந்த சட்டத்தில் அதற்கும் ஒரு ஏற்பாட்டை செய்வது அவசியம்.


( 21.03.2007 ல் ஜூனியர் விகடனில் வெளியான எனது பத்தி )


Friday, August 25, 2017

ஹரியானா வன்முறையும் சீக்கிய மதத்தின் சாதிய பாகுபாடும் - ரவிக்குமார்ஹரியானா, பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் மிகப்பெரிய வன்முறை வெடித்து முப்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமாகியுள்ளன. கடவுளின் தூதுவர் எனத் தன்னை கூறிக்கொள்ளும் குர்மீத் ராம் ரஹீம் என்ற சாமியாரை கற்பழிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என உறுதி செய்ததே இதற்குக் காரணம். 

குர்மீத் ராம் ரஹீமுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய மதத்தைச் சேர்ந்த தலித்துகள் பெருமளவில் இவரது ஆதரவாளர்களாக இருக்கின்றனர். அதற்குக் காரணம் சீக்கிய மதம் அவர்களை சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டி புறக்கணிப்பதும் ராம் ரஹீமின் அமைப்பான தேரா சச்சா சவுதா அவர்களுக்கு ஒரு சமூக மதிப்பைத் தருவதும்தான் என ஆய்வாளர் கார்த்திக் வெங்கடேஷ் என்பவர் கூறுகிறார் ( The Various Strands of Dalit Assertion in Punjab- Karthik Venkatesh, 25.1.2017, The Hindu Centre for Politics and Public Policy ) 

2007 ஆம் ஆண்டு குரு கோவிந்த் சிங் போல உடையணிந்து காட்சி தந்தார் என்பதற்காக குர்மீத் ராம் ரஹீமுக்கு எதிராக சீக்கியர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது ராம் ரஹீமின் ஆதரவாளர்களான தலித்துகளின் பிரார்த்தனைக் கூடங்கள் தாக்கப்பட்டன.  அவர்கள் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளானார்கள். இதன் பின்னணியில் இருந்த அரசியல்  காரணம் அவர் 2007 பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை ஆதரித்ததுதான். அவரது ஆதரவால் அதுவரையில் அகாலிகளின் பிடியிலிருந்த மால்வா பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இது பாஜக - அகாலி கூட்டணிக்கு ஆத்திரத்தை தந்தது. அதனால் இந்த சந்தர்ப்பத்தை அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர். அவர்மீதும் அவரது ஆதரவாளர்கள்மீதும் ஏராளமான வழக்குகள் போடப்பட்டன என்கிறார் கார்த்திக் வெங்கடேஷ். 

பஞ்சாப்பில் ராம் ரஹீமை எதிர்த்த பாஜக ஹரியானாவில் 2014 சட்டமன்றத் தேர்தல் வந்தபோது அவரது ஆதரவை நாடியது. அந்தத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்க ராம் ரஹீம் சாமியாரின் ஆதரவே காரணம். பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து ராம் ரஹீம் சாமியாருக்கு ஹரியானா அரசு பலவிதமான சலுகைகளைக் காட்டிவந்தது. இப்போது ஏற்பட்டுள்ள வன்முறையைத் தடுப்பதற்கு அந்த மாநில பாஜக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததற்கும்கூட அந்த ஆதரவு நிலையே காரணம் என கூறப்படுகிறது. 

இப்போது வெடித்துள்ள கலவரத்தையும் வன்முறையையும் கண்டிப்பது மட்டும் போதாது. இதன் பின்னிருக்கும் காரணிகளையும் நாம் இனங்காண வேண்டும். 

* சீர்திருத்தங்களை முன்வைத்து உருவான சீக்கிய மதம் சாதிய அமைப்பை உள்வாங்கித் தோல்வி அடைந்திருப்பது. 

* சமூக நல அரசு என்ற நிலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி. அதுதான் இத்தகைய சாமியார்களை நோக்கி மக்களைத் தள்ளுகிறது. 

* வாக்குவங்கி அரசியலுக்காக இதுபோன்ற சாமியார்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக்கொள்வது. அது சாமியார்களுக்கு ஒரு அங்கீகாரத்தைத் தருகிறது.

Wednesday, August 16, 2017

தொல்.திருமாவளவன்: தலித் மக்களின் ஒரு நூற்றாண்டுக் கனவு - ரவிக்குமார்

படிப்பறிவில்லாத மக்களுக்குக் கல்வியைத் தருவதைவிடவும் துணிவற்ற மக்களுக்குத் துணிவைத் தருவதே முக்கியமானது. ’எழுச்சித் தமிழர்எனப் போற்றப்படும் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த நேரத்தில் அவரது சாதனைகளில்முதன்மையானது எது? என்று கேட்டால் தாழ்த்தப்பட்டுசேரிக்காரர்கள்என்று இளக்காரமாகப் பேசப்பட்டிருந்த மக்களை கிளர்ந்தெழச் செய்து அவர்களைசிறுத்தைகள்என்று மற்றவர்கள் இன்று அழைக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறாரே அதுதான் மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை என்பேன்.


தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அறிவுரை சொல்ல முற்படுகிற எல்லோருமே கல்வியின் மேன்மையை அவர்களுக்கு எடுத்துக்கூறத் தவறுவதில்லை. கல்வி இன்றியமையாததுதான். அதிலும் பொருளாதார வலிமை அற்ற தலித் மக்களுக்கு அதன் முக்கியத்துவம் இன்னும் அதிகம். ஆனால் கல்வி அவர்களது சமூக இழிவைப் போக்கிவிடுமா என்று கேட்டால் அதற்கு எதிர்மறையாகவே நாம் பதிலளிக்கவேண்டியிருக்கிறது. கல்வியால் உயர்ந்த ஒருவருக்கான உதாரணமாக இருக்கும் அம்பேத்கர், அந்தக் கல்வி ஒருவர்மீது படிந்த சாதி என்னும் கறையைத் துடைக்கப் பயன்படாது என்பதற்கும் சான்றாக இருக்கிறார்.


இன்று தாழ்த்தப்பட்ட மக்களிடையே கல்வி கற்றவர்களின் விழுக்காடு எவ்வளவோ கூடியிருக்கிறது. அவர்கள் தமது முன்னோர்களைக்காட்டிலும் கூடுதலாக இந்த சமூகத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அந்தப் புரிதல் அவர்களின் போராட்ட குணத்தை அதிகரித்திருக்கவேண்டும். ஆனால் யதார்த்தமோ நேர்மாறாக இருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து படித்து வந்தவர்கள் தம் மீது சுமத்தப்பட்டிருக்கும் சாதிய இழிநிலையை அறிந்தும் அதை எதிர்த்துப் போராட முன்வராமல் தமது வாழ்க்கைப் பாதுகாப்புக்கே முன்னுரிமை கொடுப்பதைப் பார்க்கிறோம்.


அறிவு இந்த நாட்டில் சமூகநீதியைக்கொண்டுவருமா என்று ஆராய்ந்த அம்பேத்கர் அறிவும் சுயநலமும் முரண்படும்போது சுயநலம்தான் வெற்றிபெறுகிறது என்றார். ” அறிவின் ஆற்றலை நம்புகிற பகுத்தறிவாளர் அறிவின் மேம்பட்ட சக்தியால் அநீதி ஒழிக்கப்படும் என நம்புகிறார். மத்திய காலத்தில் சமூகத்தில் அநீதியும் மூடநம்பிக்கையும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டதாயிருந்தன.எனவே மூட நம்பிக்கைகளை ஒழித்துவிட்டால் அநீதியும் அழிந்துவிடும் என பகுத்தறிவாளர்கள் நம்பினார்கள்எனக் குறிப்பிட்ட அம்பேத்கர்இந்திய வரலாறும் சரி ஐரோப்பிய வரலாறும் சரி இந்தக் கரடுதட்டிப்போன கருத்தை ஆதரிப்பதாக இல்லைஎன்றார். ஐரோப்பிய நாடுகளில் அநீதிக்கு அடிப்படையாக இருந்த மரபுகளும் மூடநம்பிக்கைகளும் ஒழிக்கப்பட்டுவிட்டபோதிலும் சமூகத்தில் அநீதி இருந்துகொண்டுதான் இருக்கிறது என எடுத்துக்காட்டிய அம்பேதகர்இந்தியாவை எடுத்துக்கொண்டால் இங்கே பார்ப்பனர்கள் எல்லோரும் கல்வி அறிவு பெற்றுள்ளனர்.ஆன்,பெண் குழந்தைகள் என அந்த சாதி முழுவதுமே கல்வியறிவு பெற்றுள்ளது.ஆனால் எததனை பார்ப்பனர்கள் தீண்டாமையை மறந்திருக்கிறார்கள்? எத்தனைபேர் தீண்டாமைக்கு எதிராகப் போராடுவதற்கு முன்வந்திருக்கிறார்கள்? எத்தனை பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமைக்கு எதிராகப் போராடும்போது அவர்களுக்கு ஆதரவாக நின்றிருக்கிறார்கள்? சுருக்கமாகச் சொன்னால் எததனை பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் அவலங்களைத் தங்களுடையதாக நினைத்திருக்கிறார்கள்?” என்று கேட்டார். கல்வியும் அறிவு வளர்ச்சியும் ஏன் சமூக நீதியைக் கொண்டுவரவில்லை? ”அதற்கான விடை இதுதான்: ஒருவருடைய சுயநலத்தோடு முரண்படாதவரை அறிவு வேலை செய்யும். எப்போது சுயநலத்தோடு அது முரண்படுகிறதோ அப்போதே அறிவு தோற்றுவிடுகிறதுஎன்று விளக்கினார் அம்பேத்கர்.


கல்வி, அறிவு ஆகியவை குறித்த அம்பேத்கரின் இந்த விளக்கம் பார்ப்பனர்களுக்கு மட்டுமானதல்ல. அது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பொருந்தக்கூடியதே. கல்வியும், அறிவும் படித்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னிலும் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான். ஆனால் அந்த விழிப்புணர்வு அவர்களிடம் சமூக அநீதிகளுக்கு எதிரான போர்க்குணத்தை உருவாக்கவில்லை. மாறாக அவர்களை சுயநலமிகளாக மாற்றியிருக்கிறது. தமது நலன்களுக்காகக்கூடப் போராடமுன்வராத கோழைகளாக்கியிருக்கிறது. அவர்கள் தமது சுயநலத்தை மறைத்துக்கொள்ள தமது சமூகத்தையே கேவலமாகப் பேசவும், தமக்காகப் போராட முன்வரும் அரசியல் இயக்கங்களைக் கொச்சைப்படுத்தவும் அதன் தலைவர்களை இழிவுபடுத்தவும் முனைகின்றனர். இப்படி அந்நியப்பட்டுக் கிடக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்துப் படிப்பாளி வர்க்கத்தைத் தாண்டித்தான் இன்று எந்தவொரு தலித் அரசியல் இயக்கமும் செயல்பட்டாகவேண்டிய நிலை உள்ளது. இந்தச் சூழலில் தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்று திரட்டி அவர்களை ஒரு அரசியல் சக்தியாக உருவாக்குவது எவ்வளவு கடினமானது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அதைப் புரிந்துகொள்ளும்போதுதான் தலைவர் திருமாவளவன் அவர்களின் முக்கியத்துவம் நமக்கு விளங்கும்.


இந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் உணர்வோடு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாகத் தமிழ்நாட்டில் அயோத்திதாசப் பண்டிதரும், ரெட்டைமலை சீனிவாசனும்,பெரியசாமிப் புலவரும் முனைப்போடு பணியாற்றிய காலம் அது. திராவிட மகாஜனசபை (1891) ஆதி திராவிட மகாஜனசபை (1892) என இயக்கங்களை உருவாக்கி மாநாடுகள் பலவற்றை நடத்தி பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் அன்றிருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளரிடம் வைத்து அவற்றில் பலவற்றை வென்றெடுத்திருக்கிறார்கள். பறையன்,தமிழன் என பத்திரிகைகளை நடத்தி தாழ்த்தப்பட்ட மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கியிருக்கிறார்கள். அவர்களது பணிகள் பின்னர் எம்.சி.ராஜா, சிவஷண்முகம் பிள்ளை,சிவராஜ், மீனாம்பாள் சிவராஜ், பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி,சுவாமி சகஜாநந்தா எனப் பல்வேறு தலைவர்களால் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தொய்வின்றி முன்னெடுத்துச் செல்லப்பட்டன. நமது முன்னோடிகளான இந்தத் தலைவர்கள் பன்முக ஆற்றல் பெற்று விளங்கியபோதிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கி அவர்களை ஒரு அரசியல் சக்தியாக உருப்பெறச் செய்யவில்லை.


இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவுக்காக உழைத்த அம்பேத்கர் அரசியல் கட்சி ஒன்றின் தேவையை சரியாகவே உணர்ந்திருந்தார். இந்திய அரசு சட்டம் 1935 என புதிதாக ஒரு சட்டம் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் பிராந்திய சுயாட்சி வழங்கிட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தபோது 1936 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில்இண்டிபெண்டண்ட் லேபர் பார்ட்டிஎன்ற கட்சியை  அம்பேத்கர் துவக்கினார். 1937 ஆம் ஆண்டுநடைபெற்ற தேர்தலில் 17 வேட்பாளர்கள் அந்தக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டனர். அம்பேத்கரும் போட்டியிட்டார். அம்பேத்கரைத் தோற்கடிப்பதற்காக காங்கிரஸ் மிகவும் கடுமையாக வேலை செய்தது. ஆனால் அம்பேத்கர் மாபெரும் வெற்றியைப் பெற்றார். இண்டிபெண்டன்ட் லேபர் பார்ட்டி சார்பில் நிறுத்தப்பட்ட 17 பேரில் 15பேர் வெற்றி பெற்றனர்.


அகில இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒரு அரசியல் கட்சி வேண்டும் என்பதை உணர்ந்து  அம்பேத்கர் 1942 இல் துவக்கியதுதான் ஷெட்யூல்ட் கேஸ்ட் பெடரேஷன். அது 1946 இல் மாகாணங்களுக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்டது. 51 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வென்றது. நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு 1952 இல் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் 34 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களைக் கைப்பற்றியது. அது அகில இந்திய கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அவர் பௌத்தத்தைத் தழுவியதற்குப் பின்னர் உருவானதுதான் இந்தியக் குடியரசுக் கட்சி. அவர் பௌத்தத்தைத் தழுவியதற்குப்பிறகு அதிக காலம் உயிர்வாழவில்லை.


தமிழகத்தைச் சேர்ந்த தலித் தலைவர்களான ரெட்டைமலை சீனிவாசனும், என்.சிவராஜ் அவர்களும் அம்பேத்கரோடு இணைந்து பணியாற்றினார்களே தவிர அவர்கள் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அரசியல் கட்சி எதையும் துவக்கவில்லை. அம்பேதகரோடு முரண்பட்ட எம்.சி.ராஜாவும்கூட தாழ்த்தப்பட்ட மக்களை அரசியல் சக்தியாக உருவாக்குவதில் வெற்றிபெறவில்லை. இந்தியாவிலேயே அரசியல் விழிப்புணர்வு பெற்றதாகவும், தனக்கென்று தனித்துவமான தலைவர்களைக் கொண்டதாகவும் இருந்த தமிழ்நாட்டு தாழ்த்தப்பட்ட சமூகம் தனக்கான அரசியல் அடையாளத்தை வலுவாக உருவாக்கிகொள்ளத் தவறிவிட்டது என்றே சொல்லவேண்டும். இந்தப் பின்னணியில் தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உருவாக்கத்தை மதிப்பிடவேண்டும்.


இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தேர்தல் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான் தனி சின்னத்தில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்துக்கு முதன்முதலில் 2006 ஆம் ஆண்டு இரண்டு உறுப்பினர்களை அனுப்பிவைத்தது. பாராளுமன்றத்திலும் 2009 இல் இடம்பிடித்தது. இது சுதந்திரத்துக்குப் பிறகான தமிழக அரசியல் வரலாற்றில் அதற்குமுன் நடைபெறாத ஒரு சாதனையாகும். அந்த சாதனையை நிகழ்த்திக்காட்டியவர் தலைவர் திருமாவளவன் ஆவார்.


அரசியல் களத்தில் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் ஒரு அரசியல்வாதியைக் காட்டிலும் சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் ஒரு சமூக சீர்திருத்தவாதியே துணிச்சல்மிக்கவர் என்றார் அம்பேத்கர். தலித் மக்களுக்காக அரசியல் கட்சியைத் தலைமையேற்று நடத்துவதென்பது ஒரு அரசியல்வாதியாக இருப்பவரால்மட்டுமே சாத்தியமானதல்ல. அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தால்மட்டுமே அது சாத்தியம். ஏனென்றால் , தலித் மக்களுக்கான ஒரு அரசியல் கட்சி தேர்தலில் வெற்றி பெறுவதை மட்டுமே தனது நோக்கமாகக் கொண்டிருக்க முடியாது. அது தலித் மக்களை விழிப்புணர்வு அடையச் செய்யவும் அவர்களை அணிதிரட்டவும் அவர்களைப் போராட்ட களத்தில் ஈடுபடுத்தவும் வேண்டும். அதைத் தலைமையேற்று வழி நடத்துவதற்கு தலைமைப் பண்பு மட்டும் இருந்தால் போதாது. அவர் அறிவுத் தேர்ச்சியும் தொலைநோக்குப் பார்வையும் துறவு மனப்பான்மையும் கொண்டதொரு ஆளுமையாக இருக்கவேண்டும்.


வரலாற்றில் தனி மனிதனின் பாத்திரத்தை மார்க்சியம் அவ்வளவாக அங்கீகரிக்கவில்லை. அது வரலாற்றை வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே பார்த்தது. ஆனால் வரலாற்றை முன்னோக்கிச் செலுத்துவதில் தனி மனிதர்களின் பங்கை அங்கீகரித்தவர் அம்பேத்கர். அப்படியான தனி மனிதர்கள் எத்தகைய பண்புகளைப் பெற்றிருக்கவேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டிவிட்டுப் போயிருக்கிறார். ” அறிவாற்றலும் பொறுப்புணர்வும் ஒருவரை மற்றவர்களிலிருந்து உயர்வானவராகக் கருதச் செய்யலாம். ஆனால் அவை மட்டுமே ஒரு மாமனிதருக்குப் போதுமான தகுதிகள் அல்ல. அவற்றுக்கும் மேலே அவருக்கு சில தன்மைகள் இருக்க வேண்டும். அவர் சமூக நோக்கம் ஒன்றினால் உந்தப்படவேண்டும். அவர் சமூகத்தில் சவுக்காகவும் துப்புரவாளனாகவும் இருக்கவேண்டும்என்று அதற்கான இலக்கணத்தை வரையறுத்திருக்கிறார் அம்பேத்கர். அந்த இலக்கணத்துக்குப் பொருத்தமானதொரு தலைவராக எம்மை வழிநடத்திக்கொண்டிருக்கும் எழுச்சித் தமிழர், பொன்விழாவின்போது  மட்டுமல்ல தனது நூற்றாண்டுவிழாவின்போதும் தலைவராயிருந்து இந்த சமூகத்தை வழிநடத்த வாழ்த்துகிறேன்


( 2012 ஆம் ஆண்டு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின்  பிறந்தநாள் பொன்விழாவின்போது எழுதப்பட்ட கட்டுரை)