Saturday, April 21, 2012

சுஷ்மா சுவராஜ் - இராஜபக்சே தனிமை சந்திப்பு உலகத் தமிழர்களிடையே அய்யத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது - தொல். திருமா அறிக்கை







சுஷ்மா சுவராஜ் - இராஜபக்சே தனிமை சந்திப்பு உலகத் தமிழர்களிடையே அய்யத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது
                                                      தொல். திருமாவளவன் அறிக்கை

இலங்கை சென்றுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று இந்தியா திரும்புகிறது.  பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த மக்களவையின் எதிர்க்கட்சித்தலைவர் திருமதி சுஷ்மா சுவராஜ் தலைமையில் செல்கின்ற இந்தக் குழுவில் இடம்பெற்றவை தமிழினத்தின் மீது அக்கறையோ, தமிழீழ விடுதலையில் உடன்பாடோ இல்லாத கட்சிகள் என்றும் இப்பயணத்தால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்றும் சிங்களவர்களை சமாதானப்படுத்துவதற்காகத்தான் இக்குழு செல்கிறது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கூறினோம். அதனை உறுதிப்படுத்தும் வகையில்தான் இக்குழுவின் பயணம் அமைந்துள்ளது.  குழுவின் தலைவர் திருமதி சுஷ்மா சுவராஜ், இராஜபக்சேவை தனிமையில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.  இது குழுவில் உள்ள பிற உறுப்பினர்களை அவமதிக்கும் செயலாகும்.  இந்தியாவின் பிரதமர் அல்லது வெளிவிவகாரத் துறை அமைச்சர் போன்ற பொறுப்புகளில் உள்ளவர்கள் இவ்வாறு தனிமையில் சந்திப்பதை ஏற்கலாம்.  ஆனால் இவர் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இராஜபக்சேவை தனிமையில் சந்தித்தார் என்ற கேள்வி எழுகிறது. 
அத்துடன், செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஒன்றுபட்ட இலங்கையைத்தான் இந்தியா ஆதரிக்கும் என்று திருமதி சுஷ்மா சுவராஜ் கூறியிருக்கிறார்.  இதுவும் அவரது அதிகார வரம்பை மீறிய செயலாகும்.  எதிர்க்கட்சித் தலைவரான இவர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக எந்த அடிப்படையில் கருத்துச் சொல்கிறார்?  இவ்வாறு கருத்துச் சொல்ல இந்தியாவின் பிரதமர் அல்லது குடியரசுத்தலைவர் இவருக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறார்களா?  இது தமிழினத்திற்கு எதிரான நடவடிக்கை என்பது மட்டுமல்லாமல், உலகத் தமிழர்களிடையே பெரும் அய்யத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.
இத்தகைய கருத்தும் போக்கும் உள்ள பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் தமிழீழத்தை வென்றெடுக்கலாம் என்று தமிழகத்தில் சிலர் நம்பியும் பேசியும் வருவது வேடிக்கைக்குரியதாகும்.

No comments:

Post a Comment