Saturday, May 25, 2013

தமிழ்த்தாய் சிலை - ஒரு உரையாடல்




1. தமிழ்த்தாய் சிலை குறித்து தமிழறிஞர் ராஜம் அவர்களின் திறந்த மடல் 

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.

எனக்கு அரசியல் தெரியாது. அதில் தலையிட விருப்பமோ, திறமையோ இல்லை. ஆனாலும், ஒரு தமிழச்சி அதிலும் ... தமிழ் வளர்க்கும் பாப்பாத்தி என்ற முறையிலும் வாழ்நாள் முழுவதையும் தமிழ்ப்படிப்புக்காகவும் தமிழ் ஆய்வுக்காகவும் பயனில்லாமல் செலவிட்டவள் என்ற முறையிலும் இந்த மடலை வடிக்கிறேன்.

இந்தச் சிலையமைப்புத் திட்டத்துக்கான செலவுத்தொகை தமிழக மக்களின் வரிப்பணத்திலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். என் போன்ற ஏழையர் கண்ணோட்டத்தில் 100 கோடி உரூபாய் என்பது மிக மிகப் பெரிய தொகையம்மா. அந்தத் தொகையை மிகவும் இன்றியமையாத வேறு பல திட்டங்களுக்காகச் செலவிடக்கூடாதா?

தனக்குச் சிலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்த்தாய் கவலைப்படுவாளா? எனக்குத் தெரிந்த தமிழ்த்தாய் மாட்டாள்.

சிலையமைக்க ஒதுக்கப்பட்டிருக்கும் தொகையைக் குமுக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கலாமே? தங்களுக்குத் தெரியாத தேவையா?

சரி, தமிழ்த் தொடர்பான திட்டங்களுக்காக மட்டுமே இந்தத் தொகை என்றால் ... என் திட்டங்களுக்கு உதவுங்கள். உங்களுக்குக் கோடிப் புண்ணியம் உண்டு. அந்தத் திருவரங்கனின் அருள் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் கிட்டும்.

கணினித்தமிழ், தமிழ் இலக்கணம் ... இவை தொடர்பாகச் சில நல்ல ஆய்வுத் திட்டங்கள் எனக்கு இருக்கு. அதெல்லாம் செய்யக் காசு வேணும். உதவுங்கோ, தாயே.

தமிழ்த்தாய் சிலை வைத்தால் அதன் தலையில் காக்கை, குருவி எச்சம் விழும். தாயின் மார்பகங்கள் மாற்றுக் கருத்தாளரால் சிதைக்கப்படும். அவளுடைய தொடைப் பக்கங்களைக் கீறிவிடுவார்கள். அதெல்லாம் நினைத்துப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

கண்ணகிக்குச் சிலை வைத்ததால் தமிழுக்கு என்ன முன்னேற்றம் கிடைத்தது என்று இன்னும் எனக்குத் தெரியவில்லை.

உங்கள் விருப்பம்.

பணிவன்புடன்,
ராஜம் (புலம் பெயர்ந்தும் தமிழாய்வைத் தொடரும் ஒரு தமிழச்சி)


2. திருமதி ராஜம் அவர்களுக்கு ரவிக்குமாரின் மடல்  

அன்பு ராஜம் அம்மா
தங்களது கருத்துகள் கவனிக்கத் தக்கவை. ஆனால் தாங்கள் கூறும் காரணங்கள் ஏற்கத் தக்கனவாக இல்லை. தமிழ்த் தாய் சிலையை சிதைத்துவிடுவார்கள் என்பதற்காக அதை வைக்ககூடாது எனச் சொல்வது   பொருத்தமாக இல்லை. உங்களை ஒரு தமிழ் அறிஞர் என்றே என்னைப் போன்றவர்கள் போற்றுகிறோம். அவ்வப்போது தாங்கள் உங்களைப் ' பாப்பாத்தி ' எனக் குறி ப்பிட்டுக்கொள்வது உறுத்தலாக இருக்கிறது.
அன்புடன்
ரவிக்குமார்

3. தமிழறிஞர் ராஜம் அவர்களின் பதிலுரை

அன்புள்ள ரவிக்குமார்,

உங்கள் கருத்து எனக்குப் புலனாகிறது. வெளிப்படச் சொன்னமைக்கு மிக்க நன்றி!
சிலை வைக்காதே என்று நான் சொல்லவில்லை; சிலை வைக்குமுன் இதெல்லாம் பற்றி நினைத்திருப்பீர்கள் என்றுதானே சொன்னேன்?!
சிலை வைப்பது போன்ற நடப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. என் நம்பிக்கைக்காக நினைப்புகள் நிகழாமல் போகாது! அது பற்றி எனக்குக் கவலை இல்லை!

என்னைச் சிரிக்கச் செய்கிறீர்கள், ரவிக்குமார்! என்னைத் "தமிழறிஞர்" என்று போற்றித் தமிழரும் தமிழக அரசும் என் தமிழ்ப்பணிக்காக என்ன உதவி செய்ததோ, சொல்லுங்கள் பார்ப்போம்!

என் சங்க இலக்கியங்களுக்கான இலக்கண நூல் எத்தனைப்பேருக்கு உதவிவருகிறது என்பது தெரியுமா? அந்தப் புத்தகத்துக்காக எந்தவகை ஒப்புதல் (recognition) தமிழக அரசிடமிருந்து கிடைத்திருக்கிறதோ? பரிசுத் தொகையெல்லாம் வேறெங்கோ போகிறதே? அது பற்றி உங்கள் கருத்து என்னவோ?

அனைத்துலகத் தொல்காப்பிய வளர்ச்சிக்குழு ஒன்று அமைத்தார்களே … அதில் தொல்காப்பியத்தில் ஆய்வு செய்த என் பெயர் இடம் பெறவில்லை, ஆனால், தொல்காப்பியத்தில் ஆய்வு செய்யாத, தொல்காப்பியத்தைப் படிக்காதவரும் இடம் பெற்றிருக்கிறார்களே? ஏன்? அந்தக் குழு இன்று வரை என்ன திட்டங்களை மேற்கொண்டு என்னென்ன செய்து முடித்திருக்கிறார்களோ, தெரியவில்லையே! ஏன்?

என்னைப் "பாப்பாத்தி" என்று வெளிப்படுத்திக்கொள்வது யாருக்காவது உறுத்தலாக இருந்தால் அது என் பிழையில்லை! அந்தணர்/பார்ப்பார் என்பவர் தமிழை வளர்க்க மாட்டார் என்று நினைத்து அவர்களை ஓரங்கட்டிய/ஓரங்கட்டும் குமுகத்தில் … 'நான் இவ்வளவு தமிழ்ப்பணி செய்துவருகிறேன், ஆனால் நான் ஒரு பாப்பாத்தி என்று சொல்வதில்' எனக்கு ஒரு பெருமை. தொடர்ந்து செய்வேன். நீங்கள் "தலித்" மக்களுக்காகப் பேசுவதுபோல என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

No comments:

Post a Comment