மீனவர்களைக் காப்பாற்றுவதற்காகத் தமிழக அரசியல் கட்சிகள் யாவும் இப்போது களமிறங்கியுள்ளன. சிங்கள கடற்படையின் தாக்குதலைக் கண்டிப்பதில் போட்டிபோடும் அரசியல் தலைவர்கள் கச்சத்தீவு பிரச்சனையைப் பற்றிப் பேசவும் தவறவில்லை.கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழக மீனவர்களின் தலையாயப் பிரச்சனையாக விளங்குகின்ற கச்சத்தீவுப் பிரச்சனை எப்படி உருவானது?அந்த ஒப்பந்தம் போடப்பட்டபோது தமிழகத்தை ஆண்ட தி.மு.க அப்போது அதை எதிர்க்கவில்லை என சொல்லப்படுவது உண்மைதானா? என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.
’எந்த முக்கியத்துவமும் இல்லாத வெறும் பாறைகளால் ஆனது’ என அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் வர்ணிக்கப்பட்ட கச்சத்தீவு 285 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.அந்த கச்சத்தீவுப் பிரச்சனை இன்று நேற்று ஏற்பட்டதல்ல.1921ஆம் ஆண்டிலேயே அது ஆரம்பித்துவிட்டது.அப்போது இந்தியா இலங்கை ஆகிய இரண்டு நாடுகளும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்தன. இரண்டு நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட மாநாடு ஒன்றில் அப்போது இந்தப் பிரச்சனை விவாதிக்கப்பட்டது. கச்சத்தீவு பாரம்பரியமாக ராமநாதபுரத்து ராஜாவுக்கு சொந்தமாக இருந்தது என்பதை ஏற்றுக்கொண்டபோதிலும், ராமநாதபுரத்து ராஜாவின் ஜமீன்தாரி உரிமை தொடரும் அதே வேளையில் அந்தத் தீவு இலங்கைக்கு சொந்தமாக அளிக்கப்படவேண்டும் என்று இலங்கை அப்போதுதான் முதன்முதலாகக் கோரியது. ஆனால் அன்றிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி அன்று இந்திய பிரதமராக இருந்த இந்திராகாந்தியும் இலங்கைப் பிரதமராக இருந்த சிறீமாவோ பண்டார நாயகேவும் செய்து கொண்ட ஒப்பந்தம்தான் இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு முதன்முதலாக வங்கக்கடலில் இந்திய-இலங்கைக் கடல் எல்லையை வரையறுத்த நடவடிக்கையாகும். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவும் இலங்கையும் தமது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளின் மீது முழுமையான உரிமையைப் பெற்றன. அந்த ஒப்பந்தத்தின் பிரிவு ஐந்தில், ‘‘இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும், கச்சத்தீவுக்கு வழக்கம்போல சென்று வரலாம். அதற்கு இலங்கையிடமோ, இந்தியாவிடமோ விசா முதலான அனுமதிகளைப் பெறத்தேவையில்லை’’ எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பிரிவு ஆறில் ’இந்திய&இலங்கை கப்பல்கள் ஒன்று மற்றதன் கடல் எல்லைக்குள் சுதந்திரமாகச் சென்று வரலாம். பாரம்பரியமாக இருந்து வரும் அத்தகைய உரிமைகள் தொடர்ந்து காப்பாற்றப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
1976 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இருபத்து மூன்றாம் நாள் இலங்கையும் இந்தியாவும் அடுத்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மன்னார் வளைகுடாப் பகுதியில் கடல் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தம்தான் அது. இந்தியா சார்பில் கேவல் சிங்கும், இலங்கைக்காக டபிள்யூ.டி. ஜெயசிங்கேவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இந்த இரண்டு ஒப்பந்தங்களிலோ இவற்றுக்குப் பிறகு அதே ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி கையெழுத்தான இலங்கை, இந்திய, மாலத்தீவு ஆகியவற்றுக்கிடையேயான முச்சந்தியை வரையறுக்கும் ஒப்பந்தத்திலோ கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கக்கூடாது என்று சொல்லப்படவில்லை.
இந்த ஒப்பந்தங்களுக்குப்பிறகு பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதங்களில்தான் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்துத் தந்தார்கள். அவ்வாறு பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதத்தில் ‘‘இந்திய மீனவர்களோ, மீன்பிடி கப்பல்களோ இலங்கையின் கடற்பரப்புக்குள் செல்வதோ, அதன் பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்குள் சென்று மீன் பிடிப்பதோ கூடாது. அதுபோலவே இலங்கை மீனவர்களோ, மீன்பிடிக் கப்பல்களோ இந்திய கடற்பரப்புக்குள் செல்வதோ, அதன் பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்குள் சென்று மீன் பிடிப்பதோ கூடாது’’ எனக் கறாராக வரையறுக்கப்பட்டது.
கச்சத்தீவு ஒப்பந்தம் போடப்பட்ட காலத்தில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடந்து வந்தது. அந்த ஒப்பந்தத்தை தி.மு.க. சரியான முறையில் எதிர்க்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் இப்போது குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் அது உண்மையல்ல. 1974ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இதுபற்றிப் பிரச்சனை எழுப்பி தி.மு.க. உறுப்பினர்களாக இருந்த இரா.செழியன், நாஞ்சில் மனோகரன் ஆகியோர் வெளிநடப்பு செய்துள்ளனர். ‘‘இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியை தாரைவார்த்துக் கொடுக்கும் இந்த மோசமான ஒப்பந்தத்தைப் போடுவதற்கு முன் மத்திய அரசு எங்களோடு ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் அல்லது நாடாளுமன்றத்தில் விவாதித்து இந்த அவையின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். இலங்கையோடு நல்லுறவு தொடர வேண்டும் என்பதை நாங்களும் விரும்புகிறோம். ஆனால் இந்த ஒப்பந்தம் நமது நாட்டின் ஒரு பகுதியை எந்த வரைமுறையுமின்றித் தாரைவார்த்துக் கொடுப்பதாக இருக்கிறது. இது எந்தவொரு அரசாங்கமும் செய்யக்கூடிய காரியம் அல்ல. எனவே நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.’’ என்று இரா.செழியன் பேசினார். ‘‘இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் தேச விரோதமானது. தேசப்பற்று இல்லாதது. உலகில் உள்ள நாகரீகமடைந்த நாடு எதுவும் இத்தகைய மோசமான ஒப்பந்தத்தை செய்துக்கொண்டது இல்லை.’’ என்று பேசினார் நாஞ்சில் மனோகரன். ‘‘இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை பிரதமர் வெற்றி பெற்றவராகியிருக்கிறார். இந்தியப் பிரதமரோ பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இது நமது ஒருமைப்பாட்டின் மீது விழுந்த பலமான அடியாகும்’’ என்று ஆவேசமாகப் பேசி விட்டு நாஞ்சில் மனோகரன் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
தி.மு.க. உறுப்பினர்களைத் தொடர்ந்து ஃபார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த பி.கே.என்.தேவர் ‘‘கச்சத்தீவு எனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகும். ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்க்கை இப்போது ஆபத்தில் தள்ளப்பட்டு உள்ளது. இலங்கை அரசாங்கம் தனது ராணுவத்தை கச்சத்தீவுக்கு அருகில் கொண்டு வந்து இப்போது குவித்துள்ளது. நீங்கள் துரோகம் செய்து விட்டீர்கள். மக்கள் மீது உங்களுக்கு இரக்கம் கிடையாது... நாட்டுப்பிரிவினை தான் மகாத்மா காந்தியடிகளின் உயிரைக் காவு வாங்கியது. கச்சத்தீவு என்பதோ தமிழகத்தின் பகுதி மட்டுமல்ல, இந்திய நாட்டின் ஓர் அங்கம். நீங்கள் துரோகம் செய்கிறீர்கள்’’ என்று கூறி விட்டு வெளிநடப்பு செய்தார்.
பெரியகுளம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த முகமது ஷெரீப் ‘‘1968 ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியே நான் இந்த அவையில் கச்சத்தீவு ராமநாதபுரத்து ராஜாவுக்குத்தான் சொந்தமானது என்பதை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களை சமர்ப்பித்தேன். அந்த ஆவணங்களை படித்துப்பார்க்க அரசாங்கம் தவறிவிட்டது. முன்னர் நான் அந்த தொகுதியின் உறுப்பினராக இருந்தேன். அந்தப் பகுதி மக்களின் கருத்தையோ, தமிழக முதல்வரின் கருத்தையோ கேட்காததற்காக மத்திய அரசு வெட்கப்படவேண்டும். அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து நானும் வெளிநடப்பு செய்கிறேன்’’ என்று பேசினார்.
ஒரிசா மாநிலத்தின் கலஹாந்தி தொகுதியைச் சேர்ந்த சம்யுக்தா சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.கே.தேவ்: ‘‘நம்மிடம் உள்ள வருவாய்த்துறை ஆவணங்கள் யாவும் கச்சத்தீவு என்பது ராமநாதபுரம் ஜமீனுக்கு உட்பட்டது. தமிழக அரசுக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்கின்றன. ஆகவே அரசியலமைப்பு சட்டப்படி கச்சத்தீவை வழங்குவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது. இந்த நாடு காங்கிரஸ் கட்சியினுடைய ஜமீன் சொத்தல்ல. சில நாட்களுக்கு முன்னாள் அந்தமான் தீவுகளின் ஒரு பகுதியாக இருந்த கொக்கோ தீவு பர்மாவிடம் கொடுக்கப்பட்டது. இப்போது கச்சத்தீவு கொடுக்கப்படுகிறது. இப்படி நமது நாட்டின் பகுதிகளை கொடுத்துக்கொண்டே இருந்தால் அதற்கு பிறகு என்ன மிச்சம் இருக்கும்.’’ என்று கேள்வி எழுப்பினார்.
ஜனசங்க உறுப்பினராய் இருந்த வாஜ்பாயி கச்சத்தீவின் பழைய பெயர் வாலிதீப் என்றும் அங்குதான் ராமனும் வாலியும் போரிட்டுக்கொண்டனரென்றும் பேசினார்.அந்த சமயத்தில் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜய்ன் தொகுதியைச் சேர்ந்த ஜனசங்க உறுப்பினர் உக்கம்சந்த் கச்வாய் என்பவர் சில காகிதங்களைக் கிழித்து அவையில் வீசினார். இப்படியான சம்பவங்களுக்குப் பிறகுதான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரண்சிங் அவையில் அறிக்கையை வாசித்தார். ‘‘இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் உள்ள பாக் நீரிணையில் சர்வதேச கடல் எல்லையை வரையறுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகி இருக்கிறது. அதனால் தான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது இரண்டு நாடுகளுக்கும் நியாயம் செய்யக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இருநாட்டு மீனவர்கள் அனுபவித்து வருகின்ற மீன்பிடிக்கும் உரிமையும், கோயில்களுக்கு புனிதப்பயணம் மேற்கொள்ளும் உரிமையும், கடலுக்குள் சென்று வரும் உரிமையும் எதிர்காலத்திலும் முழுமையாக காப்பாற்றப்படும் என நான் மாண்புமிகு உறுப்பினர்களுக்கு உறுதி அளிக்கிறேன்.’’ என்றார் அவர்.
அந்தக் காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யாக இருந்த எம்.கல்யாணசுந்தரம் இந்த ஒப்பந்தத்தைத் தமது கட்சி வரவேற்பதாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் அமைச்சரின் வாக்குறுதி பற்றி விரிவான விவாதம் நடத்தப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதற்குபதிலளித்த அமைச்சர் ஸ்வரண்சிங், ‘‘மீன் பிடிப்பதற்கான எல்லை பிரிட்டிஷ் அரசால் 1921ஆம் ஆண்டிலேயே வரையறுக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவுக்கு மேற்கே மூன்றரை மைல் வரை இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக்கொள்ளலாம். அதற்கு கிழக்கே உள்ள பகுதியில் இலங்கை மீனவர்கள் மீன் பிடித்துக்கொள்ளலாம் என்று அப்போது கூறப்பட்டது. ஆனாலும்கூட இரண்டு நாட்டு மீனவர்களும் கச்சத்தீவை சுற்றிச் சுதந்திரமாக மீன்பிடித்து வருகின்றனர். தங்களது வலைகளைக் காயவைப்பதற்கு கச்சத்தீவை பயன்படுத்திக் கொள்கின்றனர். பாரம்பரிய உரிமை என்றால் என்ன என்பதும் இந்த ஒப்பந்தத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கச்சத்தீவின் மீதான இலங்கையின் உரிமை அங்கீகரிக்கப்பட்ட போதிலும், இந்திய மீனவர்களின் பாரம்பரியமான உரிமைகளும், அங்குள்ள தேவாலயத்துக்குச் செல்வதற்கான உரிமையும் பாதிக்கப்படாது. அதுபோலவே இந்திய&இலங்கை மீனவர்கள் ஒருவர் மற்ற நாட்டு எல்லைக்குள் படகுகளிலோ, கப்பல்களிலோ சென்று வருவதற்கான உரிமையும் தொடர்ந்து காப்பாற்றப்படும்’’ என்று ஸ்வரண்சிங் விளக்கம் அளித்தார்.
மத்திய அரசு அளித்த வாக்குறுதி சுமார் பத்து ஆண்டுகள் வரை இடையூறின்றி தொடர்ந்தது.ஆனால் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிப்பதற்கு இலங்கை அரசு தடை விதித்தது. அதன்பிறகு தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதும், அவர்களது மீன்களும், வலைகளும், படகுகளும் இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாயின. கடந்த 25 ஆண்டுகளில் சுமார் முன்னூறு தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான மீனவர்கள் படுகாயப்படுத்தப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளும், வலைகளும், மீன்களும் சிங்கள கடற்படையால் நாசப்படுத்தப்பட்டன. அப்படித் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் இந்திய அரசு இலங்கையைக் கண்டிக்கக்கூட முன்வருவதில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.
ஒப்பந்தத்தின் மூலம் வழங்கப்பட்ட கச்சத்தீவை எப்படி திரும்பப்பெற முடியும் என்று ஒருசிலர் கேள்வி எழுப்புகின்றனர். 1987ஆம் ஆண்டு இந்திய& இலஙகை அரசுகளுக்கு இடையே போடப்பட்ட ‘ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம்’ இப்போது இலங்கை அரசால் தன்னிச்சையாக மீறப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் தமிழர்களின் பாரம்பரிய தாயகமாக கருதப்படவேண்டும். அதை பிரிக்கக்கூடாது என்று அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்று இலங்கை அரசு வடக்கு, கிழக்கு பகுதிகளை பிரித்தது மட்டுமின்றி கிழக்குப் பகுதியில் அரசாங்கம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இது ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறிய செயலாகும். இப்படி ஒப்பந்தத்தை மீறி இலங்கையே ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா மட்டும் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ஏன் மதித்து’ காப்பாற்ற வேண்டும்? இன்னும் எத்தனை மீனவத் தமிழர்களை நாம் பலியாகக் கொடுப்பது? இதை மத்திய அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
’கச்சத்தீவை மீட்பதற்கான காலம் நெருங்கி விட்டது’ எனத் தமிழக முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார். மத்தியில் ஆள்பவர்களோ தேர்தலுக்கான காலம் நெருங்கி விட்டது என்றுதான் கவலைப்படுகிறார்கள். கச்சத்தீவு பற்றி சிந்திப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை.எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலில் இதை ஒரு முன் நிபந்தனையாக மாற்றவேண்டும். மீனவர்கள் ஒன்றுபட்டால் அதைச் செய்யமுடியும்.
( இக்கட்டுரை 22.07.2008 அன்று நான் ஜூனியர் விகடன் இதழில் எழுதியது. கச்சத்தீவை மீட்க முடியாது என ஒரு கட்டுரையை இந்து நாளேடு இன்று வெளியிட்டுள்ளது( http://www.thehindu.com/opinion/op-ed/chasing-a-boat-we-missed-long-ago/article4753529.ece) அதற்கு எதிர்வினையாக இங்கு இதைப் பதிவிடுகிறேன் )
No comments:
Post a Comment