Saturday, September 20, 2014

பத்மினி கோபாலனை சந்தித்தேன்


பத்மினி கோபாலனை சந்தித்தேன்


மான்டிசோரி கல்விமுறையை சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பிரபலப்படுத்தி வருபவர் பத்மினி கோபாலன் ' சில்வர் டங்' ஶ்ரீனிவாச சாஸ்திரியின் மகள் வழிப் பேத்தி. எண்பது வயதில் இந்த அறப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். 


இன்று ( 20.09.2014) மாலை ஐந்து மணியளவில் பேராசிரியர் கல்யாணியோடு சென்று அவரை சந்தித்தேன். சுமார் இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். வீட்டின் வரவேற்பறையில் கம்பீரமாக ஒரு பெண்மணியின் ஓவியம் மாட்டப்பட்டிருந்தது. அது அவரது அம்மாவா என்று கேட்டேன். பாட்டி- ஶ்ரீனிவாச சாஸ்திரியின் மனைவி என்றார். பெயர் லக்ஷ்மி. தஞ்சை மன்னார்குடியைச் சேர்ந்தவர். ஶ்ரீனிவாச சாஸ்திரி வலங்கைமான்காரர். உலகப் புகழ்பெற்றது அவரது ஆங்கிலப் புலமை. ஆனால் சாஸ்திரியின் மனைவி லக்ஷ்மியோ எழுதப் படிக்கத் தெரியாதவர். 


ஆசாரங்களைப் பின்பற்ற விருப்பமில்லாத சாஸ்திரியின் நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்த அவரது உறவினர்கள் அவரது மனைவியை ஒருமுறை காசி யாத்திரைக்கு அழைத்தார்களாம். முதலில் வருவதற்கு ஒப்புக்கொண்ட லக்ஷ்மி அம்மையார் எதற்காக அந்த யாத்திரை என்று கேட்டாராம். உன் கணவர் ஆசாரங்களைக் கடைபிடிக்கவில்லை அந்தப் பாவத்தைப் போக்குவதற்குத்தான் உன்னை காசிக்கு அழைத்துச் செல்கிறோம் என்று அவர்கள் பதில் சொன்னார்களாம். அதைக் கேட்ட அந்த அம்மையார் ' நானோ என் கணவரோ எந்தப் பாவமும் செய்யவில்லை. நான் காசிக்கு வரவேண்டிய அவசியமும் இல்லை' என மறுத்துவிட்டாராம். 


தனது பாட்டியைப் பற்றிப் பேசும்போது பத்மினி கோபாலன் அவர்களின் குரலில் கம்பீரம் கூடி முகம் பிரகாசித்தது. கல்வியோடு நல்ல பண்பாட்டையும் புகட்டுகிற 

மான்டிசோரி முறையைப் பரவலாக்குவதில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறார். " நான் ஒரு கல்வியாளர் அல்ல. எனது முயற்சியிலேயே பத்துக்கும் மேற்பட்ட மாநகராட்சிப் பள்ளிகளில் அந்தக் கல்விமுறையை அறிமுகப்படுத்த முடிந்திருக்கிறது. கல்வியாளர்கள் இதில் கவனம் செலுத்தினால் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கமுடியும்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் அவர். 





No comments:

Post a Comment