வேண்டுதல்
- ஃப்ரான்சிஸ்கோ எக்ஸ் அலர்கோன் ( Francisco X. Alarcón )
தமிழில்: ரவிக்குமார்
எனக்குக் கூட்டாளியாக ஒரு கடவுள்வேண்டும்
பழிக்கப்படும் வீடுகளில்
இரவுகளைக் கழித்து
சனிக்கிழமைகளில்
தாமதமாய் விழித்தெழும் கடவுள்
வீதிகளில் விசிலடித்தபடி
நடந்துசெல்லும் கடவுள்
காதலியின் அதரங்களின் முன்னால்
நடுங்கும் கடவுள்
தியேட்டர்களின் முன்னால் கியூவில் நிற்கிற
தேனீர்க் கடைகளில்
டீ குடிக்கிற கடவுள்
காசநோய்ப் பிடித்து
ரத்தமாய்த் துப்புகிற
பஸ் டிக்கெட்டுக்கும் காசு இல்லாத
கடவுள்
ஆர்ப்பாட்டம் ஒன்றில்
போலீஸ்காரனின் தடியடியில்
மயங்கிவிழுகிற
கடவுள்
சித்திரவதைக்குப் பயந்து
சிறுநீர் கழிக்கிற
கடவுள்
எலும்பின் கடைசிவரை
காயம்பட்டு
வலிதாங்காமல்
காற்றைக் கடிக்கிற
கடவுள்
வேலையில்லாத கடவுள்
வேலைநிறுத்தம் செய்கிற கடவுள்
பசித்த கடவுள்
தலைமறைவாக இருக்கும் கடவுள்
நாடுகடத்தப்பட்ட கடவுள்
கோபங்கொண்ட கடவுள்
சிறையில் வாடும் கடவுள்
மாற்றத்தை விரும்பும் கடவுள்
எனக்கு வேண்டும்
கடவுள்மாதிரியே இருக்கும்
ஒரு கடவுள்
ஃப்ரான்சிஸ்கோ எக்ஸ் அலர்கோன் ( Francisco X. Alarcón ) (1954-2016) : ஸ்பானிஷ் மொழியில் எழுதிய மெக்ஸிக-அமெரிக்க கவிஞர்
No comments:
Post a Comment