நான் கிட்டத்தட்ட வாரம் ஒருமுறையாவது அசோகமித்திரனைப் பார்க்காமல் இருக்க மாட்டேன். அவருக்கு தேவையான உதவிகளைச் செய்வேன். "உங்களை தொந்தரவு செய்கிறேன்," என்பார். "பரவாயில்லை. நான் ஓய்வுப் பெற்று சும்மாதான் இருக்கிறேன்..உங்களுக்கு நான் உதவுகிறேன்," என்பேன். ஒவ்வொரு முறையும் மேற்கு மாம்பலத்திலிருந்து தி நகருக்கு டூ வீலரில் போய் அவரைப் பார்த்துவிட்டு வந்துவிடுவேன். விருட்சம் ஆரம்பித்தபோது என் பத்திரிகையில் அவர் தொடர்ந்து கட்டுரை எழுதித் தருவார். அவருடைய நகைச்சுவை உணர்வை சாதாரணமாக நினைத்து விட முடியாது.
நான் ஒவ்வொரு முறை அவர் வீட்டிற்குச் செல்லும்போது, ஆர்யகவுடர் ரோடில் உள்ள வெங்கடேஷ்வரா போளி ஸ்டாலில் ஒரே ஒரு மிளகாய் பஜ்ஜி வாங்கிக்கொண்டு போவேன். அசோகமித்திரன் ஒன்றே ஒன்று போதும் என்பார். எனக்கு இந்த மிளகாய் பஜ்ஜி மட்டும் பிடிக்காது. ஆனால் அசோகமித்திரன் ரசித்து சாப்பிடுவார். அவர் சாப்பிட்டுக்கொண்டே, இந்த பஜ்ஜி விலை என்ன என்று கேட்பார். ஐந்து ரூபாய் என்பேன். அவரால் நம்ப முடியாது. ஐந்து ரூபாய்க்கு இவ்வளவு சுவையான பஜ்ஜியா என்று வியப்பார்.
"இந்த மிளகாய் பஜ்ஜி செய்யறவனுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்," என்பார். அதைக் கேட்டு தாங்க முடியாத சிரிப்பு வரும் எனக்கு.
ஒரு முறை அவருக்குப் போன் செய்து, 'உங்களுக்கு ஞானப்பீட பரிசு கிடைக்கப் போகிறது,' என்பேன்.
'அதெல்லாம் எனக்குக் கிடைக்காது,' என்று சாதாரணமாக சொல்வார். ஹிந்து பத்திரிகையில் அவர் கட்டுரை வந்தால், நான்தான் ஹிந்து பத்திரிகையைக் கொண்டு போய் கொடுப்பேன்.
"கதைகளை எழுதினால் மற்ற பத்திரிகைகளுக்கு அனுப்புங்கள்," என்றார் ஒருநாள். "யாரும் போட மாட்டார்கள்," என்பேன். "பத்திரிகைகளில் பிரசுரமாகிற மாதிரிதான் நீங்கள் எழுதுகிறீர்கள், நிச்சயம் வரும்," என்பார்.
அந்த சமயத்தில் பத்திரிகைகளில் அவர் கதைகளை அனுப்பி பட்ட அனுபவத்தை சொல்வார். சுதேசமித்திரன் என்ற பத்திரிகையில் அவர் அனுப்பிய கதைகள் எதுவும் பிரசுரம் ஆகவில்லையாம். அவர் அனுப்பிய காலத்தில் ஒரே பிரதி மட்டும் எழுதி அப்படியே அனுப்பி விடுவார். திரும்பவும் அக் கதைகளைப் பெற சுதேசமித்திரன் பத்திரிகை அலுவலகத்திற்குப் போய் அக் கதைகளை தேடியிருக்கிறார். தியாகராஜன் என்ற பெயரில். அவருடைய பெயரைப் போல வேற ஒரு தியாகராஜன் கதைகள் கிடைக்குமாம்.இப்படி அவர் தொலைத்த கதைகள் பலவாம்.
அசோகமித்திரன் ஆசிரியராக இருந்த சமயத்தில் கணையாழியில் என் குறுநாவல்கள் தொடர்ந்து வந்திருக்கின்றன. என் கதைகள் மட்டுமல்ல. ஜெயமோகன்., பாவண்ணன், கோபிகிருஷ்ணன், சுப்ரபாரதி மணியன், இரா முருகன் போன்ற பலருடைய குறுநாவல்கள் வந்திருக்கின்றன. கணையாழியல் தி ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட விபத்து என்ற என் கதையில் சில மாற்றம் செய்ய அசோகமித்திரன் வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். அப்போது அவருக்கு சுரம். அவர் அக் கதையை அப்படியே சொல்வார். ஒன்றும் மாற்ற வேண்டாம். அப்படியே இருக்கட்டும் என்று அறிவுரை கூறி அனுப்பி விட்டார்.
பல எழுத்தாள நண்பர்களை அசோகமித்திரன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போயிருக்கிறேன். பல இடங்களுக்கு துணையாக அவருடன் சென்றிருக்கிறேன். அவர் நடக்கும்போது கீழே மட்டும் விழக்கூடாது என்று ஜாக்கிரதையாக இருப்பேன். ஆனால் அவரைப் பிடித்துக்கொண்டு அழைத்து வருவது அவருக்குப் பிடிக்காது.
நேற்றுதான் நானும் நண்பரும் வெங்கடேஷ்வரா போளி ஸ்டாலில் மிளகாய் பஜ்ஜி வாங்கிச் சாப்பிட்டோம். எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது என்றாலும், அசோகமித்திரனை நினைத்துக்கொண்டுதான் சாப்பிட்டேன். அந்த நேரத்தில்தான் அசோகமித்திரன் இறந்து விட்டார் என்ற செய்தி டிவி மூலம் பின்னால் தெரிய வந்தபோது ரொம்பவும் சோகமாகிவிட்டேன். என் அப்பா ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி இறந்து விட்டார். அசோகமித்திரன் நேற்று 23ஆம் தேதி இறந்து விட்டார். இனிமேல் மிளகாய் பஜ்ஜி வாங்கிக்கொண்டு தி நகர் பக்கம் போக முடியாது.
PHOTOS TAKEN BY CLIK RAVI
No comments:
Post a Comment