Sunday, May 19, 2019

எல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள் - செல்வ புவியரசன்

எல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள்…

ஆய்வுக் கட்டுரைகள் ஸ்வரம் பிசகக் கூடாத கீர்த்தனைகள் என்றால் பத்தி எழுத்து அனைவரையும் உள்ளிழுக்க எதைச் செய்யவும் தயங்காத திரையிசைப் பாடல்கள். இலக்கிய வடிவங்களில் கதை, கவிதை போல கட்டுரைக்கும் பிரதான இடமுண்டு. கட்டுரையின் வகைமைகளில் ஒன்றான பத்தி எழுத்தின் சாத்தியங்களோ நாளும் பொழுதும் வளர்ந்துகொண்டே இருப்பது. ஆய்வு, பத்தி என்று இருவகை எழுத்துமே ரவிக்குமாருக்கு இயல்பாக கைவருகிறது. 

கடைசியாய் நான் படித்த ரவிக்குமாரின் புத்தகம், ‘ஆயிரம் பூக்கள் கருகட்டும்’. கல்விப் புல ஆய்வு முறைமைகளின் அடியொற்றி அத்துறையையே விமர்சனத்துக்கு உள்ளாக்கும் கட்டுரைகளின் தொகுப்பு அது. ‘ரஜினிகாந்தும் புதுமைப்பித்தனும்’ அதிலிருந்து வித்தியாசப்பட்டு நிற்கிறது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் பத்தி எழுத்துக்குரிய சுதந்திரத்தையும், அது அளிக்கும் வாசிப்பு சுவாரஸ்யத்தையும் அனுபவித்து மகிழ முடிகிறது. கோட்பாட்டு விவாதங்களில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொள்ளும் ஒருவர் இறுக்கமான மொழிநடைக்குள் உறைந்துபோய்விடாமல், நாம் பார்க்கும் சினிமாவை, நாம் ரசிக்கும் நடிகர்களை, நாம் தினந்தோறும் கடந்துபோகும் நிகழ்வுகளை முற்றிலும் வேறு கோணங்களிலிருந்து அணுகுகிறார், அதற்கான காரணங்களை நமக்குப் புரியும் மொழியில் எழுதுகிறார் என்பதுதான் இந்தக் கட்டுரைகளின் சிறப்பு. 

ரஜினியின் நடிப்புத் திறமையை வியந்து, அவர் சொன்ன அபத்தக் கதைகளைப் பரிகசித்து, அங்கிருந்து புதுமைப்பித்தனின் உபதேசம் கதைக்குப் போய், நவீன மருத்துவ வரலாற்றில் சஞ்சரித்து, மாந்தரீக எதார்த்தவாத அழகியல் பேசி மீண்டும் ரஜினிக்கே திரும்பிவந்து முடிகிறது கட்டுரை. ஒரு நான்கு பக்கக் கட்டுரைக்குள் நடப்புச் செய்திகள், இலக்கியம், வரலாறு, தத்துவம் என்று வெவ்வேறு துறைகளுக்கிடையில் பயணம். இளையராஜாவின் திரையிசைப் பாடல்களைப் போல சரணங்களுக்கு இடையில் எங்கெங்கோ பயணித்துவிட்டு, தொடங்கிய இடத்துக்குத் திரும்பிவருகிறார் ரவிக்குமார். வாசிப்பு ஒரு குதூகலமாகவே மாறுகிறது.

ஆடி மாத தள்ளுபடியிலிருந்து கிராமத்து அப்பாவியின் கதைக்குப் போய் அங்கிருந்து ஜார் மன்னராட்சியின் கொடுங்கோன்மையை நினைவுபடுத்தி இன்றைய அமெரிக்கப் பொருளாதாரத்தின் சரிவை, அதை விமர்சிப்பதில் உள்ள அப்பாவித்தனமான மனோநிலையை விளக்குகிறது மற்றொரு கட்டுரை. ஆமி வைன் ஹவுஸின் மரணத்தில் பாப் மார்லியை நினைவுகூர்ந்து அவன் பாடிய காதலுக்குப் பின்னாலிருந்த சமூக நிலையைப் பேசுகிறது இன்னொரு கட்டுரை. 

சொற்பிறப்பியல், பண்பாட்டு அரசியல், பொருளாதாரம், உளவியல், தொல்லியல், கல்வெட்டியல், மருத்துவம், கலை இலக்கியம் என்று துறைவிட்டு துறை தாவும் வினோதங்கள் வெகு இயல்பாய் நடந்திருக்கின்றன இக்கட்டுரைகளில். நினைவுகள், நகைச்சுவைகள், உவமைகள், ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், புத்தக அறிமுகங்கள், வாசகர்களுடனான நேரடி உரையாடல்கள் என்று வாய்ப்புள்ள அனைத்தையும் தன்வயப்படுத்திக்கொண்டிருக்கின்றன. ஜோர்ஜ் லூயி போர்ஹே, காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ், ழாக் தெரிதா, ஸ்லாவோஸ் சிசேக், சிக்மண்ட் ஃபிராய்டு, ழான் போத்ரியா, அஸ்கோ பர்போலோ, டேவிட் ஷுல்மேன், பியர் பூர்தியூ என்று ஏகப்பட்ட அறிவாளுமைகள் பொருத்தமான இடங்களில் தேவைப்பட்ட அளவுக்கு மட்டுமே வாய்திறக்கிறார்கள். மேற்கோள் என்பது படித்ததைக் காட்டிக்கொள்வதற்காக அல்ல, பேசுகிற விஷயத்தின் மீது ஒரு அழுத்தமான பார்வையை உருவாக்குவதற்காகத்தான். ரவிக்குமார் அதற்கு ஒரு உதாரணமாகவே இருக்கிறார். 

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நமது சமகாலத்தின் முதன்மையான அறிவாளுமைகளில் ஒருவரான ஸ்லாவோஸ் சிசேக்கையும்கூட ரவிக்குமார் போன்று ஒரு சிலரே பேசுகிறார்கள் என்பதுதான் தமிழின் நிலை. ஸ்லாவோஸ் சிசேக் தனது கட்டுரைகளில் ஆல்பர்ட் ஹிட்சாக்கின் திரைப்படக் காட்சிகளிலிருந்து லக்கானின் உளப் பகுப்பாய்வைப் பற்றி பேசுவதுபோல ரவிக்குமாரும் தமிழ்த் திரைப்படங்களின் காட்சிகளிலிருந்து சமூகப் பகுப்பாய்வை நோக்கி நகர்கிறார். பதினாறு வயதினிலே படத்திலிருந்து தொடங்கி முன்கூட்டியே பூப்படையும் பிரச்சினையையும் கருவாய்ப் புற்றுநோய்ப் பரவலையும் கவனப்படுத்துகிறார். குண்டுவெடிக்கும் நகைச்சுவைக் காட்சிகளிலிருந்து தொடங்கி இரட்டைக் கோபுரங்களின் தகர்ப்பின் பின்னாலிருக்கும் நோக்கத்தைச் சுட்டுகிறார். குஷ்புவிலிருந்து தொடங்கி உடற்கூறு சார்ந்த உளவியலையும் உடைசார்ந்த பண்பாட்டு நிலைகளையும் பேசுகிறார். கவுண்டமணியிலிருந்து தொடங்கி இந்தியாவின் சுகாதாரச் சவால்களை விவரிக்கிறார். 
அரசியலை மட்டுமல்ல, அறிவியலையும்கூட பத்தி எழுத்தால் சுவை கூட்டலாம் என்பதற்கு இத்தொகுப்பின் ‘கனவு எந்திரம்’ ஒரு உதாரணம். காட்சி ஊடகங்கள், இணையம் ஆகியவற்றின் பின்னாலிருக்கும் அபாயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. கவிஞர் கே.சச்சிதானந்தம், வரலாற்றறிஞர் கா.ராஜன், அணு விஞ்ஞானி மேக்நாத் சாஹா ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கூடங்குளம், பயங்கரவாதத்துக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதத்துக்கும் இடையிலான வேறுபாடு, குரு உத்சவ், இந்தித் திணிப்பு, சிறைவாசிகளின் உரிமைகள் போன்ற சில கட்டுரைகள் மட்டுமே தங்களது பேசுபொருளால் முழுவதும் தீவிரத் தன்மையைக் கொண்டிருக்கின்றன. 

ஈழப் பிரச்சினைகளையும் போர் அவலங்களையும் குறித்த சர்வதேச சமூகத்தின் பார்வைகளைப் பேசுகின்றன சில கட்டுரைகள். எல்லோரும் ஈழத் தமிழர்களைக் கைவிட்டுவிட்ட நிலை. “சொற்களில் சிந்திய ரத்தம் மட்டும்தான் பிசுபிசுப்போடு இருக்கிறது. அதைத் தொட்டுணர விழையின் பிம்பங்களை விடுத்து ஈழத்துப் படைப்பிலக்கியங்களை நோக்கிச் செல்லுங்கள்” என்கிறார் ரவிக்குமார். சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், ஷோபாசக்தி ஆகியோரின் படைப்புகளைப் பற்றிய விரிவான கட்டுரைகளை உள்ளடக்கியது அவரது முந்தைய தொகுப்பான ‘ஆயிரம் பூக்கள் கருகட்டும்’.

அகராதியைப் போல ரஜினியில் தொடங்கி ரஜினியில் வந்து முடிகிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பு. புத்தகத்தின் தலைப்பு, கவன ஈர்ப்புக்காக மட்டுமில்லை. ரஜினியின் அரசியல் பிரவேசம் அடிப்படையிலேயே ஜனநாயக விரோதம் என்பது தொடங்கி போராட்டங்கள், காவல் துறை தொடர்பாக அவர் யாருடைய குரலை எதிரொலிக்கிறார் என்பதையும் பேசுகின்றன இறுதிக் கட்டுரைகள்.  ‘எந்திரன்’ போலவே ‘பேட்ட’யும் எங்கெங்கு சொதப்பிவிட்டது என்பதையும் ஒரு ரசிகராக பகிர்ந்துகொள்கிறார். நல்ல நடிகர், திரைப்படத்தில் அவருக்குக் கிடைப்பதோ மோசமான வாய்ப்புகள், அரசியலில் கிடைத்திருப்பதோ அபாயகரமான வாய்ப்பு. 

மொத்தத்தில், தமிழின் பத்தி எழுத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னகர்வு இது. பத்தி எழுத்தைப் பொறுத்தவரை பத்திரிகையாளர்களின் பங்களிப்பு செய்தி விமர்சனங்களிலேயே முடிந்துபோகிறது என்றால், மொழிநடை கைவரப்பெற்ற எழுத்தாளப் பெருந்தகைகளுக்கோ சொல்வதற்கும் பெரிதாய் ஒன்றுமில்லை. வறண்டுகிடக்கும் பாலைவனத்தின் ஊற்று இத்தொகுப்பு. நீர்நிலைகள் பெருகட்டும். 

No comments:

Post a Comment