Sunday, May 19, 2019

உலகு தழுவி விரியும் பார்வை - அரவிந்தன்தமிழின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரான ரவிக்குமாரின் அறிவுத் தளச் செயல்பாடுகளை இரண்டு விதமாகப் பிரித்துப் பார்க்கலாம். ஒன்று புதிய சிந்தனைகளை, கோட்பாடுகளை, அரிய நிகழ்வுகளை, ஆளுமைகளைத் தமிழ் வாசகருக்கு முறையாக அறிமுகம் செய்துவைத்தல். இன்னொன்று அனைவரும் அறிந்த (அல்லது அவ்வாறு நினைத்துக்கொள்கிற) விஷயங்கள் குறித்துப் புதிய வெளிச்சம் பாய்ச்சுதல். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அறிவுத் தளத்தில் தீவிரமாகச் செயல்பட்டுவரும் ரவிக்குமாரின் எழுத்துக்களில் இந்த இரட்டை அம்சத்தைத் தவறாமல் பார்க்க முடியும். ரஜினிகாந்த்தும் புதுமைப் பித்தனும் என்னும் இந்த நூல் அதற்கான சிறந்த உதாரணம்

இலக்கியம், திரைப்படம், உள்ளூர் அரசியல், சர்வதேச அரசியல், பயங்கரவாதம், உடல் நலம், பெண்களின் வாழ்நிலைசூழியல், காட்சி ஊடகங்கள், தொல்லியல், பொருளாதாரம், தகவல் பெருக்கம்சாதிப் பெரும்பான்மைவாதம், ஈழப் பிரச்சனை, ரஜினியின் அரசியல் எனப் பல விஷயங்களைப் பற்றியும் ரவிக்குமார் தெளிவாகவும் தீர்க்கமாகவும் தன் சிந்தனைகளை முன்வைக்கிறார். எந்த விஷயத்தையும் பிறர் கண்ணுக்குப் படாத அலாதியான ஒரு கோணத்தில் பார்ப்பதும், விரிவான பின்புலத்தில் வைத்து அதை அலசுவதும் ரவிக்குமாரின் அணுகுமுறை. அறிவியல், உளவியல், இலக்கியம் முதலான துறைகள் சார்ந்த பார்வைகளின் துணையுடன் எதையும் நுணுகி ஆராய்வது அவருடைய தனித்தன்மை. 
ரஜினிகாந்த் சொன்ன பாபா கதையையும் புதுமைப்பித்தன் எழுதிய உபதேசம் கதையையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட கட்டுரை இத்தகைய நுட்பமான அணுகுமுறைக்கான சிறந்த உதாரணம், குஷ்புவின் ‘கவர்ச்சி’  குறித்த அலசல் இன்னொரு உதாரணம். இவற்றை அலசும் அவர், தேர்ந்துகொண்ட பொருளின் வரையெல்லைகளுக்குள் நிற்காமல் அவற்றை வாழ்வின் விரிந்த பரப்புக்கு எடுத்துச்சென்று அலசுகிறார். இதன் மூலம் மேற்பரப்பில் தெரியாத பல விஷயங்களை உணர்த்துகிறார். ஒசாமா பின் லேடன் கொலையை முன்னிட்டு எழுதும்போது அமெரிக்காபிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கையும்பயங்கரவாதத்தின்கருத்தியலும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தாம் என்பதை அவர் நிறுவும் விதமும் இத்தகையதுதான். அசல் சிந்தனையாளரின் பண்பு இது. 
அணு உலை, மாவோயிஸ்டுகளின் வன்முறை, பேட்ட திரைப்படம், கூகுளைசேஷன், ஈழத்து நிலவரம், தொல்லியல், மொழி, குரு வணக்கம், காட்சி ஊடகங்கள், தொழில்நுட்பத்தின் ஆபத்து, கனவுகள் என எதை எடுத்துக்கொண்டாலும் இத்தகைய பயணம் நிகழ்வதைக் கானலாம். 
கட்டுரைக்கான பொருள் என்பது சிலருக்குக் கட்டுரையின் கருவாகவும் மையமாகவும் இருக்கும். ரவிக்குமாருக்கோ அது வெறும் தொடக்கப் புள்ளி மட்டுமே. அதை முன்னிட்டு அரசியல், தத்துவம் வாழ்வியல் எனப் பல்வேறு அம்சங்களையும் தழுவி விரிவது அவருடைய அறிவுசார் பயணத்தின்  இயல்பு. 
அத்தகைய பயணத்தின் தடங்களை அழுத்தமாகக் கொண்ட இந்தத் தொகுப்பு நம்மையும் அத்தகைய பயணத்தை மேற்கொள்ளச் உதவக்கூடியது. இந்தக் கட்டுரைகளைக் கவனமாகப் படிக்கும் யாரும் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை மேலோட்டமாகப் பார்த்துவிட்டுக் கடந்துவிட முடியாது. இந்த நூலின் ஆகப் பெரிய பலன் இதுதான்.

( ‘ ரஜினிகாந்தும் புதுமைப்பித்தனும்’ நூலுக்கு எழுதப்பட்ட அணிந்துரை ) 

1 comment:

  1. Dear Sir,
    I am in Pune. Is the book available in online purchase? How to get this book. Let me know

    ReplyDelete