Tuesday, July 19, 2011

எண்வயத் தொழில்நுட்பமும் தமிழ்ப் பதிப்புத் துறையும் -" க்ரியா" எஸ். ராமகிருஷ்ணன்



      பதிப்புலகின் ஒரு பகுதியாக இருக்கும் செய்தித்தாள்களும் ஜனரஞ்சகப் பத்திரிகைகளும் புதிய தொழில்நுட்பங்களைக் கைக்கொள்வதில் எப்போதும் முதலில் நிற்கின்றன. எனவே, தற்போதைய இந்த விவாதத்தின் நோக்கம் அவற்றை உள்ளடக்காது.
      தமிழ்ப் பதிப்புத் துறை செயல்படும் தளத்துக்கும் அதற்கு இருக்கும் அளவற்ற சாத்தியத்துக்கும் இடையிலுள்ள இடைவெளி மிகப் பெரியது; தமிழில் சராசரியாக ஒவ்வொரு புத்தகத்திலும் 1100 பிரதிகள் மட்டுமே அச்சிடப்படுகின்றன. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 1 கோடியே அறுபது லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன என்று கணக்கிடப்பட்டிருக்கிறது; அதுமட்டுமல்லாமல் செய்தித்தாள், சஞ்சிகைகளைப் படிப்பவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுதற்காக 1970இலிருந்து மேற்கொள்ளப்பட்டுவரும் வாசகர் ஆய்வுகளின் முடிவுகள் இந்தியாவிலேயே அதிகமாகச் செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் போன்ற அச்சிடப்பட்ட பிரதிகளைப் படிப்பவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்று சொல்கின்றன. இவை இரண்டையும் வைத்துப் பார்க்கும்போது ஒவ்வொரு புத்தகத்திலும் 1100 பிரதிகள் மட்டுமே அச்சிடப்படுகின்றன என்பது மிகமிகச் சொற்பமாகும். இந்த முரண்பாடு நமது தற்போதைய விவாதத்துக்கு அப்பாற்பட்டது.
      வெவ்வெறு வகைத் தொழில்நுட்பங்களைத் தாண்டித் தமிழ்ப் பதிப்புத் துறை, தான் வந்த பாதையைப் பற்றி உணராமலேயே, 1990களின் மத்தியில் எண்வயத் தொழில்நுட்பம் என்ற தளத்தில் வந்து இறங்கியது. யாரும் எதிர்பார்த்திராத அதிவேக மாற்றங்களை இந்தத் தொழில்நுட்பம் கொண்டுவந்தது. பல பத்தாண்டுகளாகப் பதிப்புத் துறைக்கு முதுகெலும்பாக விளங்கிய தொழில்நுட்பத்தை எண்வயத் தொழில்நுட்பம் தான் அறிமுகமான சில வருடங்களுக்குள்ளேயே தூக்கி எறிந்தது. ஒரு பிரதியின் அச்சாக்கத்திற்கு மேற்கொள்ளப்படும் சிரமமான, சிக்கலான வழிமுறைகளிலிருந்தும் செயல்பாடுகளிலிருந்தும் அது பதிப்பாளர்களை விடுவித்தது. புத்தகங்களை விரும்பியபடி வடிவமைப்பது எளிதாயிற்று.

ஆனால் அது தமிழ்ப் பதிப்புத் துறையின் தரத்தை மேம்படுத்தியிருக்கிறதா?
      எண்வயத் தொழில்நுட்பம் புதுச் சுதந்திரத்தை அளித்தது; மிகவும் உதவிகரமான சாதனங்களை உருவாக்கும் பரவசமூட்டும் சாத்தியக்கூறுகள் கருத்தளவில் சாத்தியமாயின. மொழியையும் தகவல்களையும் பதிப்பாளர்களும், ஆய்வாளர்களும், எழுத்தாளர்களும், வடிவமைப்பாளர்களும் அணுகும்  முறையில் புதிய வழிகளைக் கண்டறிய இந்தச் சாதனங்கள் உதவின. குறிப்பாக, அகராதிகள், சொற்களஞ்சியங்கள், புதிய இலக்கண நூல்கள் (தற்காலத் தமிழ்ப் பயன்பாட்டுக்கான இலக்கண நூலுக்கு ஒரு அவசரத் தேவை இருக்கிறது), சொற்களை நிலைப்படுத்தும் கையேடுகள், கல்விக்கு உதவும் வகையில் வெவ்வேறு துறை சார்ந்த வெவ்வேறு நிலைகளில் அமைந்த சொல்லகராதிகள், படங்கள் நிறைந்த கலைக்களஞ்சியங்கள் போன்ற மொழிக் கருவிகளை உருவாக்குவதிலும், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் போன்றோருடைய தேவைகளுக்கேற்ற விதத்தில் புத்தகங்களை வெளியிடுவதிலும் தமிழ்ச் சமூகத்திற்கு எண்வயத் தொழில்நுட்பம் பெரிய அளவில் நம்பிக்கை அளித்தது. எடுத்துக்காட்டாக, பார்வையற்றோருக்கான பிரெய்ல் புத்தகங்களை உருவாக்குதில் ஏற்கனவே எண்வயத் தொழில்நுட்பம் உதவிவருகிறது; முதியோர்கள் எளிதில் படிப்பதற்கேற்ற விதத்திலான தடித்த, பெரிய எழுத்துகளையும் பல்மொழிப் பதிப்புகளையும் வண்ணப் படங்களையும் எளிதில் இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு வடிவமைக்க முடியும்.   
      க்ரியா பதிப்பகம் எண்வயத் தொழில்நுட்பம் வழங்கிய புதிய சாத்தியங்களுள் சிலவற்றைத் தனது அகராதிப் பணிகளுக்கென்று வெற்றிகரமாகப் பயன்படுத்தியிருக்கிறது. புனைகதை, இதழியல், அறிவியல் கட்டுரைகள், குழந்தை இலக்கியம் முதலிய பலவகையான பிரிவுகளிலிருந்து எடுக்கப்பட்ட 85 லட்சம் சொற்களைக் கொண்ட தரவுத் தொகுப்பை, தற்காலத் தமிழுக்கான ஒரு பெரிய சொல்வங்கியை, இந்த அகராதிப் பணிகள் வெற்றிகரமாக உருவாக்கியிருக்கின்றன. இந்தச் சொல்வங்கி தற்காலத் தமிழ் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள உதவும். மொழிக் கருவிகளை உருவாக்குவோருக்கும் இந்தச் சொல்வங்கி பெருமளவில் உதவும். தேடல் முறையின் மூலம் தகுந்த தரவுகளைப் பெறுதல், சொற்களின் விளக்கங்களுக்கு மெருகூட்டுதல், துல்லியம் மற்றும் மொழி பற்றிய கேள்விகளுக்குப் பயன்பாடு சார்ந்த தரவுகள் ஆகியவற்றைப் பெற எண்வயத் தொழில்நுட்பம் முக்கியமான முறையில் உதவ முடியும் என்பதை இந்த அகராதிப் பணிகள் துலக்கமாகக் காட்டியிருக்கின்றன.
      ஆனால், இங்கொன்றும் அங்கொன்றுமாக மேற்கொள்ளப்பட்டுவரும் ஒருசில முயற்சிகளில் ஒன்று மட்டுமே அது. பொதுவாகப் பார்க்கும்போது தமிழ்ப் பதிப்புத் துறை இன்னும் எண்வயத் தொழில்நுட்பத்துக்குத் தயாராகவில்லை என்றே தோன்றுகிறது.

அடிப்படைச் சாதனங்களுக்கான தேவை.
      ஒரு பிரதியை உருவாக்கி அதைப் புத்தகமாக ஆக்குவதற்குத் தேவைப்படும் அடிப்படையான, எளிமையான எண்வயச் சாதனங்களைப் பற்றிச் சற்றுப் பார்க்கலாம். கணிப்பொறி சார்ந்த எழுத்துக்கோப்பு முறை வந்ததிலிருந்து ஒரு பிரதியைத் தயார்செய்வது என்பது பல மடங்கு எளிதாகியிருக்கிறது. பிரதிகளை உருவாக்குவதற்கு இப்போது நாம் எடுத்துக்கொள்ளும் நேரம் முன்பெல்லாம் நினைத்தே பார்த்திருந்திருக்க முடியாதது. ஆனால் தமிழ் மொழியின் இயல்புக்குப் பொருந்தும் விதத்தில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை; சொல்திருத்தி (spellchecker) ஒன்று இல்லாததும் சொற்பிரிப்பு முறை ஒன்று இல்லாததும் இதை நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன. இந்த இரண்டு வசதிகளும் பண்பாட்டு அடிப்படையிலும் பொருளாதார அடிப்படையிலும் மிகவும் முக்கியமானவை. தமிழ் ஒரு ஒட்டுநிலை மொழி. அதாவது, ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு அதனுடன் நீங்கள் பல பின்னொட்டுகளைச் சேர்க்கலாம். ஒவ்வொரு பின்னொட்டைச் சேர்க்கும்போதும் சொல்லின் வடிவம் மாறுகிறது. ஒரு பெயர்ச்சொல் பன்மை விகுதியையும் வேற்றுமை உருபையும் மேலும் சில பின்னொட்டுகளையும் ஒரே சமயத்தில் சேர்த்துக்கொள்ளக் கூடும். ஒவ்வொரு நிலையிலும் சொல்லின் வடிவம் மாறுகிறது. ஒரு வினைச்சொல் இருநூறுக்கும் மேற்பட்ட விதங்களில் திரிபடைகிறது. அது மட்டுமல்லாமல் கூடுதலாக ஓரிரு துணைவினைகளும் அவற்றின் பின்னொட்டுகளுடன் வந்து சேர்ந்துகொள்கின்றன. சொல்திருத்தியை உருவாக்குவதில் தமிழின் இந்த இயல்பு பெரும் சவால்களை முன்வைக்கிறது. ஒரு சொல்திருத்தியை உருவாக்குவதற்கு நம்மை நாம் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால் இன்றையத் தமிழின் அமைப்பை அதில் பெறப்படும் சொல்லிணைவுகளின் அடிப்படையில் முழுமையாக விளங்கிக்கொள்ள வேண்டும். இது ஒன்றும் முடியவே முடியாத காரியம் அல்ல. ஆனால் இது தேர்ந்த மொழியியலாளர்களுக்கும் மென்பொருள் வல்லுநர்களுக்கும் இடையிலான ஒருங்கிணைந்த, திட்டமிட்ட செயல்பாட்டைக் கோருகிறது. தமிழ் உரைநடையின் (பிரதிகளின்) இயல்பு கடந்த அறுபது ஆண்டுகளில் குறிப்பிடத் தகுந்த அளவு மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது; தற்காலத் தமிழின் உரைநடை முன்பு இல்லாத அளவுக்குப் பல புதிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது. தமிழின் உரைநடை ஏறத்தாழ இருநூறாண்டுகளில் தொடர்ந்து பரிணாம வளர்ச்சியடைந்துவருகிறது. எனவே, தமிழ் உரைநடைக்கான தரஅளவுகோல்களும் மிகமிக மெதுவாகவே உருவாகிவருகின்றன. இந்த நிலையை எதிர்கொள்வதற்கான வழிமுறையை எண்வயத் தொழில்நுட்பம் நமக்குத் தருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சொல்திருத்திகள் சில வந்தாலும் பயன்படுத்தக்கூடிய வகையிலும் வெவ்வேறு சூழ்நிலைகளில் திறமையாகச் செயல்படும் விதத்திலும் அவை ஒன்றுகூட இல்லை. இந்தச் சாதனம் இல்லாததால் எழுத்தாளரும் சரி, பிரதிமேம்படுத்துநரும் சரி, எண்வயத் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள்.  
      சொற்பிரிப்பு வசதி இல்லாதது இன்னும் அதிக அளவிலான நடைமுறைச் சிக்கல்களை உண்டாக்குகிறது, புத்தகத் தயாரிப்புக்கு ஆகும் செலவையும் அதிகரிக்கிறது. தமிழ் ஒரு ஒட்டுநிலை மொழி என்பதால் சொற்கள் அடிக்கடி நீளமானவையாக அமைந்துவிடுகின்றன. ஒரு வரியின் முடிவில் கிடைக்கும் இடத்தைவிட ஒரு சொல் நீளமானதாக இருந்தால் அந்தச் சொல் முழுவதும் அடுத்த வரிக்குச் சென்றுவிடுகிறது. நிரப்பப்படாமல் இருக்கும் அந்த இடத்தை முதல் வரியில் உள்ள சொற்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொள்கின்றன. இதனால் தேவையற்ற, இயல்பற்ற இடைவெளிகள் ஒரு வரியில் தோன்றிவிடுகின்றன. ஒரு சொல்லில் பிரிக்கப்படக்கூடிய இடங்கள் எவைஎவை என்பதைக் குறிக்கும் வசதிகள் ஏதும் கணிப்பொறியை அடிப்படையாகக் கொண்ட தற்போதைய எழுத்துக்கோப்பு முறையில் இல்லை. எண்வயத் தொழில்நுட்பத்துக்கு முன்பு இந்தச் சொல்பிரிப்பு முறை அச்சுக்கோப்பவருடைய தொழிலறிவின் ஒரு அம்சமாக இருந்தது. ஆனால் இன்று கணினியைப் பயன்படுத்தி அச்சுக்கோப்பவர்கள் எண்ணிக்கையில் பெருகிவிட்டாலும் அவர்களுடைய தமிழறிவு மிக மோசமாக இருப்பது கண்கூடு. ஒரு பக்கத்தில் நிறைய இடைவெளிகள் ஏற்படும்போது, பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. அதைவிட முக்கியமானது, கொள்ளக்கூடிய அளவைவிடக் குறைந்த எண்ணிக்கையிலான சொற்களையே அந்தப் பக்கம் கொண்டிருக்கும். ஆராய்ந்து பார்த்தால், இதனால் 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதம்வரை பக்கங்கள் தேவையில்லாமல் அதிகரிப்பது நமக்குத் தெரியும். அதாவது 100 பக்கங்களே வரும் ஒரு பிரதி 120 பக்கங்களாக நீளும். இது புத்தகத் தயாரிப்புக்கு ஆகும் செலவை அதிகரித்துவிடுகிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஒரு ஆண்டுக்கு அச்சிடப்படும் மொத்தப் புத்தகங்களின் எண்ணிக்கையைக் கொண்டு மதிப்பிட்டுப் பார்த்தால் அனாவசியமாக எந்த அளவுக்குக் காகிதம், அச்சுக்கூலி போன்றவற்றுக்கான செலவுகள் அதிகரிக்கின்றன என்பது மிகத் தெளிவாகப் புலனாகும்.   

தமிழ் குறித்த பார்வை
      மேற்குறிப்பிட்ட வசதிகள் ஏன் இன்னும் உருவாக்கப்படவில்லை என்பதற்குச் சிக்கலான காரணங்கள் நிறைய உள்ளன. இவற்றில் மிக முக்கியமானதும் ஆனால் பிரித்துப்பார்க்க முடியாததுமான ஒரு காரணம், தமிழைக் குறித்துத் தமிழ்ச் சமூகம் கொண்டிருக்கும் பிரக்ஞைதான். அன்றாட வாழ்க்கைக்கும் பொழுதுபோக்குக்கும் தமிழைப் பயன்படுத்துவதிலும் தமிழைத் தங்கள் பாரம்பரியத்தின் அடையாளமாகக் கொள்வதிலும் மட்டுமே தமிழின் மதிப்பு தமிழர்களிடையே உணரப்படுகிறது. தமிழ் தமிழர்களுக்குத் தொடர்ந்து நிகழும் கற்றலுக்கான சாதனம் அல்ல; தங்களின் சுயமேம்பாட்டுக்கு அவசியமான ஒன்றல்ல. பட்டவர்த்தனமாகச் சொல்ல வேண்டுமென்றால் பொருளாதார ரீதியில் தமிழ் அவர்களுக்கு மதிப்பற்றது. நம் கல்வி ஆங்கிலத்தையே சார்ந்து இருக்கிறது. தற்கால வாழ்க்கைக்குத் தேவையான பல்துறை அறிவுக்குத் தமிழ் பயன்படாது என்று சராசரித் தமிழர்கள் கருதுகிறார்கள். உணர்ச்சிவசப்பட்டு இதை மறுக்கலாம். ஆனால் இதுதான் உண்மை நிலை.
      தமிழர்களின் அரசியல், கல்வி, சமூகம் போன்ற தளங்களில் சமீபத்திய ஒரு சில தசாப்தங்களில் நிகழ்ந்த செயல்பாடுகளின் கூட்டுவிளைவுதான் இந்த நிலை. தமிழின் தற்காலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கடந்தகாலத்துக்குக் கொடுக்கப்பட்ட அதிக அளவிலான முக்கியத்துவமும் தமிழ்த் தேசியவாத சக்திகளின் செயல்பாடுகளும் தற்கால வாழ்க்கையில் தமிழ் ஒரு வெளிப்பாட்டுக் கருவியாக இருப்பதன் சாத்தியங்களைப் பாதிக்கின்றன. தங்களுடைய அறிவையும் அனுபவத்தையும் வெளிப்படுத்தவும் பகிர்ந்துகொள்ளவும் தமிழ் தங்களுக்குப் போதுமானதாக இல்லை என்று படிப்பறிவு பெற்ற தமிழர்கள் கருதுகிறார்கள். தகவல் தொடர்புக்கும் நவீன வாழ்க்கைக்கும் தமிழ் ஏற்ற சாதனம் அல்ல என்று எல்லாருடைய உள்மனதிலும் ஒரு நிராகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழர்களின் வாழ்க்கையில் தமிழ் ஒரு பிரிக்க முடியாத அங்கமாக இருந்த நிலையைப் பலவீனப்படுத்தவே ஆங்கிலத்தின் ஊடுருவல் உதவியிருக்கிறது.    
      நவீன வாழ்க்கையில் தமிழுக்கு உரிய பாத்திரத்தைக் கொடுப்பதற்குத் தயங்கும் ஒரு சமூகம் தங்கள் மொழி சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி உணராமலே இருக்கும். இதற்கு நல்ல எடுத்துக்காட்டு தமிழ்ப் பாடப் புத்தகங்களின் தரம். அவற்றின் மோசமான தரத்தை எதிர்த்துப் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியிருக்க வேண்டும், ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. பிரதிமேம்படுத்துதல், சொற்களை ஒருபடித்தாக்குதல், இன்னும் சற்று நுட்பமான அளவில், எழுத்துருக்களின் வகைகளைக் கூட்டுதல் போன்றவற்றைப் பொறுத்தவரை பாடப்புத்தகங்களின் உருவாக்கத்தில் எண்வயத் தொழில்நுட்பத்தைச் சிறப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தியிருந்திருக்க முடியும்.
      மொழி சார்ந்த பிரச்சினைகளை உணராதவர்களாகவே தமிழ்ப் பதிப்பாளர்கள் இருக்கிறார்கள். புத்தகத்தைப் பதிப்பிப்பது என்பது புத்தகத்தை அச்சடிப்பதே என்று பரவலாக இருக்கும் (தவறான) கருத்தை உறுதிப்படுத்துவதுபோலவே பதிப்பாளர்களும் செயல்படுகிறார்கள். ஒரு பிரதியைப் புத்தகமாக மாற்றிவிடுவதிலேயே பதிப்பாளர்கள் திருப்தியடைந்துவிடுகிறார்கள். நம் தலையீடு தேவையில்லாமல் குறைந்தபட்சமாகச் செயல்படும் அச்சுத் தொழில்நுட்பம் வேகத்தையும் பளபளப்பையும் உறுதி செய்வதால் ஒப்பீட்டளவில் கடந்தகாலத்தைவிட நாம் முன்னேற்றம் அடைந்துவிட்டோம் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. எழுத்துரு போன்ற மிகவும் அடிப்படையான விஷயங்களைப் பற்றிக்கூட யாரும் கவலைப்படுவதில்லை. தமிழ் எழுத்துரு வடிவமைப்பு மிகவும் மோசமாக இருக்கிறது என்பதும் இன்னும் செய்ய வேண்டியது ஏராளம் என்பதும்தான் உண்மை. ஒரு பிரதியை உருவாக்குவதற்கான அழகான எழுத்துருக்கள் தமிழில் மிகவும் குறைவு (பிரபலப் பத்திரிகைகள் தங்களுக்கென்றெ பிரத்தியேகமாக வடிவமைத்துக்கொண்ட எழுத்துருக்களின் மூலம் இந்தப் பிரச்சினையை ஓரளவு சமாளித்துவிட்டிருக்கின்றன). நாவல் அல்லது சிறுகதைகளைப் பதிப்பிக்கும்போது எழுத்துரு பெரிய பிரச்சினையாகப் படுவதில்லை. ஆனால் பல பிரிவுகளையும், வெவ்வேறு  விதங்களில் அமைக்கப்பட்ட தகவல்களையும் ஒரே புத்தகத்தில், சில சந்தர்ப்பங்களில் ஒரே பக்கத்தில், அமைக்க நேரிடும்போது (எ-டு. அகராதி) தமிழ் எழுத்துருக்களின் வறுமை நன்கு புலப்படும். அதிர்ச்சியூட்டும் ஒரு விஷயம் என்னவென்றால், பரவலாகப் பயன்படுத்தப்படுவதும், எண்வய முறையில் வடிவமைக்கப்பட்டதுமான எழுத்துருக்களில் சில, தமிழ் எழுத்து முறையின் இயல்புக்கே எதிராக இருக்கின்றன என்பதுதான். மிகப் பிரபலமான தமிழ் நாளேடு பயன்படுத்தும் எண்வய எழுத்துருவில் லூ, நூ, னூ, ணூ ஆகிய எழுத்துகள் முறையே லுா, நுா, னுா, ணுா என்று வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதைப்பற்றித் தமிழ் ஆர்வலர்கள் எவரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அதேபோல் வேறு சில எண்வய எழுத்துருக்களில் ஒ என்ற எழுத்தும் ஓ என்ற எழுத்தும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. பரவலாகப் பயன்படுத்தப்படும் இன்னொரு வகை எழுத்துருவில் சூ என்ற எழுத்தில், அது முடியும் இடத்தில் தேவையில்லாத சுழி சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் போன்றோரிடையே பொதுவாக இந்தப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வு இல்லை. Display fonts என்று அழைக்கப்படும் எழுத்துரு வகையில் எவ்வளவு தமிழில் இருக்கின்றன என்று பார்க்கும்போது மிக ஏமாற்றமாக இருக்கிறது. எழுத்துருக்களைப் பரிசீலித்து, மதிப்பிட்டு, விமர்சனம் செய்வதற்கான அமைப்பு ஏதும் இந்தத் துறைக்குள்ளேயே இல்லாததால்தான் இப்படியெல்லாம் நிகழ்கிறது. தமிழ் வளர்ச்சி என்பது தமிழுக்குத் தேவையான எழுத்துருக்களை உருவாக்குவதையும் உள்ளடக்கியது என்பது தமிழ் வல்லுநர்களின்  பிரக்ஞையில் அறவே இல்லை.

பதிப்புத்துறையும் மொழியறிவும்
      பதிப்புத் துறை என்பது ஏதோ ஒரு வெற்றிடத்தில் இயங்கிக்கொண்டிருக்கவில்லை. பிரதி-சார்ந்த செயல்பாடுகளுக்கான வழிமுறைகள் மொழி வல்லுநர்களிடமிருந்துதான் வருகின்றன. தற்போது கணிப்பொறி அறிவு என்பது மொழி ஆசிரியர்களுக்கும், மொழி வல்லுநர்களுக்கும் தேவையானது அல்ல என்றே தமிழ்ச் சமூகத்தில் கருதப்படுகிறது. ஓரிரு பல்கலைக்கழகங்களில் மொழியையும் கணிப்பொறித் தொழில்நுட்பத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சில திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதை நாம் விதிவிலக்காகத்தான் கருத வேண்டும். அவையும் பெயரளவில்தான் செயல்படுகின்றன. ஆனால் பதிப்புத் துறைக்குப் பயன்படும் விதத்திலான பலன்களை அவை ஏதும் இதுவரை உருவாக்கவில்லை. பதிப்புத் துறைக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இடையே தொழில்நுட்பம் குறித்த பரிவர்த்தனை கிட்டத்தட்ட இல்லை எனலாம். அப்படி இருந்திருக்குமானால், தமிழ்ப் பதிப்புலகம் தனக்குத் தேவையான சாதனங்களான துறைச் சொல் அகராதிகள், தரவுத் தொகுப்பு (சொல்வங்கி), நடைக் கையேடுகள், நவீன இலக்கண நூல்கள், வகைவகையான எழுத்துருக்கள் archives என்று அழைக்கப்படும் காப்பக வசதிகள் போன்றவற்றைப் பெற்றிருந்திருக்கும். அப்படிப் பரிவர்த்தனை இருக்கும் பட்சத்திலும் மொழி வல்லுநர்கள் கணிப்பொறி வல்லுநர்களின் மீது தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவதோடு திருப்தி அடைந்துவிடுகிறார்கள்.
      பதிப்புத் துறையின் அடிமட்ட அளவில் பார்க்கும்போது எண்வயத் தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பது சந்தேகமே. மிகச் சில எழுத்தாளர்களே கணிப்பொறியைப் பயன்படுத்துகிறார்கள். எழுத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்த்தால் கணிப்பொறிச் சாதனங்களுக்கும் மென்பொருள்களுக்கும் செலவுசெய்யக்கூடிய வசதி பெற்ற எழுத்தாளர்கள் மிகச் சிலரே. பிரதிகளைச் செம்மைப்படுத்துதல் என்ற தங்களுடைய பாத்திரத்தைப் பதிப்பாளர்கள் இன்னும் உணரவே இல்லை. ஓரிரு பதிப்பாளர்கள் சிறிய அளவில் முயற்சிகளைச் செய்துவருகிறார்கள். ஆனால் பிரதியைச் செம்மைப்படுத்துதல் என்னும் ஒரு செயல்பாடு தமிழ்ப் பதிப்புலகின் அடிப்படைக் கூறாக இன்னும் உருவாகவில்லை. பிரதிகளை இறுதிசெய்வதற்குக் கணிப்பொறியைப் பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்காகக் குறிப்பிடத் தகுந்த அளவு செலவுசெய்தாக வேண்டும். ஒருபுறம் பார்த்தால் பிரதிமேம்படுத்துநருக்கு உதவும்படியான வசதிகள் ஏதும் இல்லை; இன்னொரு புறமோ சாதனங்களுக்காகவும் நேரத்துக்காகவும் ஆகும் செலவு பதிப்பாளர்களுக்குக் கவலையளிப்பதாக இருக்கிறது. தமிழ் எழுத்துருக்களைக் கணினிக் குறியீட்டாக்கத்துக்கு மாற்றுவதற்கான இயங்குமுறைகள் சீரற்றும், ஏராளமாகவும் இருப்பதுடன் (எழுத்துரு மாற்ற மென்பொருள் வசதிகள் இருப்பினும் அவை எல்லாச் சூழல்களிலும் திறம்படச் செயல்படுவதில்லை) உள்ளீடு செய்யப்பட்ட பிரதிகளை ஒரு வகையான அமைப்பிலிருந்து வேறு வகையான அமைப்புக்குக் கொண்டு செல்வதில்  பிரச்சினைகள் இருப்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதன் இறுதி விளைவு என்னவென்றால், பதிப்பிக்கப்பட்ட புத்தகம் ஒரு எழுத்தாளரின் திறமையை முழுமையாக வெளிக்கொண்டுவருவதாக இல்லை; தரமானதாகவும் அழகுணர்ச்சி பொருந்தியதாகவும் இல்லை; இழப்பு எழுத்தாளர்களுக்கும் மக்களுக்கும்தான், பதிப்பாளர்களுக்கல்ல.
      ஒரு பிரதியை மேம்படுத்துவதில் ஒரு எழுத்தாளருக்கும் பிரதிமேம்படுத்துநருக்கும் எண்வயத் தொழில்நுட்பம் மிகப் பெரிய உதவிகளைச் செய்ய முடியும். தற்காலத் தமிழை எழுதுவது குறித்த பிரக்ஞை யாரிடமும் இல்லை. எடுத்துக்காட்டாக, கூட்டுப்பெயர்ச்சொற்களையும் கூட்டுவினைச்சொற்களையும் எப்படி எழுதுவது? துணைவினைகளை எப்படி எழுத வேண்டும்? பின்னொட்டுகளை எப்படி எழுதுவது? செயல்முறைகளில் ஒழுங்கையும் எழுத்து நடையில் சீரான தன்மையையும் அடைவதில் எண்வயத் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளது. இந்தப் பலன்களெல்லாம் எழுத்தாளர்களுக்கு மறுக்கப்பட்டுக் கடைசியில் ஒட்டுமொத்தச் சமூகம்தான் இழப்பைச் சந்திக்கிறது.  என்பது தெளிவாகும். மொழியைக் கற்றுக்கொள்ளுதல் என்பது முறைசார் கல்வியோடு மட்டும் நின்று விடுவதில்லை. ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது நாம் பெறுவது பிரதியின் அர்த்தத்தை மட்டுமல்ல, அந்த அர்த்தம் எந்த மொழி வழியாக நமக்குக் கிடைக்கிறதோ அந்த மொழியின் அமைப்பு, இயல்புகள் ஆகியவற்றையும்தான். இன்னும் ஒருமுறை சொல்வதென்றால், எண்வயத் தொழில்நுட்பத்தால் பயன்பெறப் பதிப்பாளர்கள் அதற்காகச் செலவுசெய்ய வேண்டும்; அதற்காக அவர்கள் செலவுசெய்ய வேண்டுமென்றால் அதிக அளவில் புத்தகங்களை அதிக அளவில் மக்கள் வாங்க வேண்டும். மோசமான இந்த வளையத்தை எப்படி உடைப்பது? இங்கே முன்முயற்சி எடுக்க வேண்டிய பொறுப்பு பதிப்பாளர்களுடையதே. அவர்கள் செயலூக்கம் நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்; விசாலமான பார்வை, துணிவு போன்றவற்றுடன் தங்கள் துறைமீதும் தரத்தின் மீதும் ஈடுபாடு கொண்டவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும்.
      அடிப்படையில் எண்வயத் தொழில்நுட்பம் என்பது ஒரு வரப்பிரசாதம் என்பதைப் பதிப்பாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள். பிரதியைப் பக்கமாக ஆக்குவது என்பது எளிதானதும் வேகமாகவும் செய்யக்கூடியது; முந்தையத் தொழில்நுட்பத்தின் குளறுபடிகள் குறைந்துவிட்டன. குறைந்தபட்ச முயற்சியைக் கொண்டே புத்தகத்தின் அட்டைகளை வண்ணமயமாகவும் பளபளப்பாகவும் தயாரிக்க முடியும். இந்தச் சாதகமான அம்சங்கள் பதிப்புத் தொழிலில் இறங்கும்படி அநேகரைத் தூண்டுகின்றன. ஒருவிதத்தில், எண்வயத் தொழில்நுட்பம் நிறைய புதுப் பதிப்பாளர்களை உற்பத்திசெய்திருக்கிறது. புத்தகங்களை விற்பதும் முன்பைவிட இப்போது சற்று எளிது; பொது நூலகங்கள் புத்தகங்களைக் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எடுத்துக்கொள்கின்றன (ஆனால் அரசு நிர்ணயித்த விலையில்! இந்தக் கொள்கையின் பாதிப்பைப் பற்றித் தனியாக ஒரு ஆய்வே செய்ய வேண்டும்.); கூடவே, ஏராளமான புதிய பள்ளிகளும் வெளிநாடுவாழ் தமிழர்களைக் கொண்ட புதிய சந்தைகளும் அதிகரித்துவிட்டன. இன்னொரு விதத்தில் சொல்வதென்றால் 1100 பிரதிகளை விற்பது அப்படியொன்றும் கடினமில்லை; தனிமனிதர்கள் புத்தகம் வாங்கும் பழக்கத்தை அதிகரிப்பதன் அவசியத்தில் பதிப்பாளர்கள் பெரிய அளவில் அக்கறைகாட்டுவது போலத் தெரியவில்லை. பொது நூலகங்களாலும் நிறுவனங்களாலும் எவைஎவை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும் என்பது பதிப்பாளர்களுக்குத் தெரியும். எடுத்துக்காட்டாக, ஆங்கில அகராதி என்ற பெயரிலோ, குழந்தைகளுக்கான அறிவியல் நூல்கள் என்ற பெயரிலோ, சுயமுன்னேற்ற நூல்கள் என்ற பெயரிலோ எந்த நூலை வெளியிட்டாலும் அவற்றை விற்பதற்கு மிகவும் சிரமப்படத் தேவையில்லை. ஏனென்றால் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் ஒரு அகராதியையோ அறிவியல் நூலையோ மதிப்பிடுவதற்கான திறன்களை வளர்த்துக்கொள்ளவில்லை. அதேபோல்தான் பழம்பெரும் நூல்களின் மறுபதிப்பும், சங்கத் தமிழ் தொடர்பான அச்சில் இல்லாத நூல்களின் மறுபதிப்பும். சமீப காலமாக மறுபதிப்பு செய்யப்பட்டுவரும் அச்சில் இல்லாத நூல்களின் அளவைப் பார்த்தால் நமக்கு வியப்பு ஏற்படும். இந்த நிலையானது, முதன்முதலில் அச்சுத் தொழில்நுட்பம் வந்தபோது ஏற்பட்ட நிலையைப் போன்றதே; மரபு சார்ந்த, பழமையான நூல்களே அப்போது அதிக அளவில் அச்சிடப்பட்டன. பதிப்பாளர்களுக்கு இந்தத் துணிவையும் தன்னம்பிக்கையையும் அளித்தது எண்வயத் தொழில்நுட்பம்தான். அதன் விளைவாக இப்போது மடை திறந்திருக்கிறது. இது போன்ற பதிப்பு முறைகளையும் அதற்கான பொருளாதாரத்தையும் சமூகத்தின் மீது அது ஏற்படுத்தும் பாதிப்பையும் ஆராய்ந்துபார்த்தால் அது வியப்பைத் தரும் முடிவுகளைத் தரும்.

தமிழ்ப் பதிப்புலகமும் இணையமும்
      அச்சுக்கான பிரதிகளைத் தயார்செய்வதைவிட மேலும் சில வகையில் எண்வயத் தொழில்நுட்பம் உதவும் என்பதைத் தமிழில் ஒரு சில இளம் பதிப்பாளர்கள் கண்டுகொண்டிருக்கின்றனர்; ஒன்று, எண்வயக் களஞ்சியமான இணையம்; அது பயன்படுத்தப்பயன்படுத்தத் தீர்ந்தேபோகாததும் அச்சிடுவதற்கான கச்சாப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு உடனடி ஆதார மையமும் ஆகும்; இரண்டு, இணையமே பதிப்பிப்பதற்கான ஒரு ஊடகமும்கூட. தொழில்நுட்பத்தின் பளபளப்பு நம்பகத்தன்மையைத் திணிக்கிறது. இணையத்தில் இடம்பெறுவதும், காணப்படுவதும், ஒருவரின் வெற்றிக்கும் செல்வாக்குக்கும் அடையாளமாக ஆகிவிட்டன.  
      விளைவாக, கலை, இலக்கியம், தத்துவம் போன்றவற்றில் தீவிர அக்கறை கொண்டவையாகத் தங்களைப் பற்றிச் சொல்லிக்கொள்ளும் ஒரு சில அச்சிட்ட பத்திரிகைகள் பெருமளவில் இணையத்திலிருந்து இறக்குமதி செய்கின்றன. நிறைய தமிழ் எழுத்தாளர்களும் இதழியலாளர்களும்  இணையச் சுரங்கதிலிருந்து தோண்டி எடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். ஐரோப்பிய, லத்தின் அமெரிக்க எழுத்தாளர்கள், அரபிய எழுத்தாளர்கள், அவர்களின் படைப்புகள், பல்வேறு மேற்கத்திய நாடுகளின் சினிமா, அறிவியல் போன்றவற்றைப் பற்றிய பெருமளவிலான தகவல்கள் போன்றவற்றை ஒருவர் இந்தப் பத்திரிகைகளில் காண முடியும். இந்தத் தகவல்கள் எல்லாம் வேண்டாதவை என்று நான் இங்கு குறிப்பிடவில்லை, அவையெல்லாம் வெறுமனே மறுசுழற்சி செய்யப்பட்ட, உறுதிப்படுத்தப்படாத கூற்றுகளைக் கொண்ட, பாரபட்சமான, செரிக்கப்படாத தகவல்களே.  இப்படிப்பட்ட இணையதள எழுத்தாளர்கள் தமிழ் வாசகர்களின் தேவைகளோடு அவற்றைத் தொடர்புபடுத்தும் முயற்சியை மேற்கொள்வதில்லை.  தாங்கள் தகவல்களை எங்கிருந்து பெற்றார்கள் என்பதை அவர்கள் குறிப்பிடுவதில்லை என்பதைச் சொல்லத் தேவையில்லை. அதனால்தான், பிரபல எழுத்தாளர் ஒருவர் காஃப்கா தற்கொலைசெய்துகொண்டு இறந்ததாகச் சொல்கிறார்; இன்னொருவர் உலகத் தரத்தில் எழுதும் ஐம்பது அரபிய எழுத்தாளர்களின் பெயர்களைத் தன்னால் (அநாயாசமாக) குறிப்பிட முடியும் என்கிறார். இந்தப் போக்கானது தமிழ் எழுத்தாளர்களெல்லாம் பன்முகத் தன்மை வாய்ந்தவர்கள், ஆழக் கற்றவர்கள் என்ற மாயையை ஏற்படுத்தியிருக்கிறது. (இது போன்ற எழுத்தாளர்கள் அதே அளவு உற்சாகத்துடன் இந்தியாவில் உள்ள பிராந்திய மொழி எழுத்தாளர்களைப் பற்றியோ பிற ஆசிய மொழி எழுத்தாளர்களைப் பற்றியோ பேசுவதில்லை. ஏனென்றால் இந்திய மொழிகள், ஆசிய மொழிகள் போன்றவற்றைப் பொறுத்தவரை இணையம் சற்று பலகீனமான தகவல் மையம்). புதிதாக வரும் பெரும்பாலான வாசகர்களெல்லாம் பெரும்பாலும் கிராமப்புறங்களிலிருந்தும் சிறு நகரங்களிலிருந்தும், வருபவர்கள் என்ற உண்மையை நாம் உணர்வோமானால் தற்போதைய சூழல் இவர்களை எவ்வளவு துச்சமாக மதிக்கிறது என்பதை உணர முடியும்.
      தமிழின் இணையப் பத்திரிகைகள் எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் அச்சிடப்படும் பத்திரிகைகளின் இணைய வடிவம் மட்டுமே. இணையப் பத்திரிகைகளுக்கென்று இருக்கும் வடிவங்களில்கூட எண்வயத் தொழில்நுட்பம் அளிக்கும் அதற்கே உரித்தான சாதகமான அம்சங்களை அவை பயன்படுத்திக்கொள்வதுபோலத் தெரியவில்லை. ஆவணப்படுத்துதல் என்பது ஒரு சாதகமான அம்சம் என்று ஒருவர் சுட்டிக்காட்டலாம், ஆனால் அதிலும்கூட முறையான, திட்டமிடப்பட்ட அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கு எந்த அறிகுறியையும் காணோம். இந்த இதழ்களுக்கு அப்பாற்பட்டு, தமிழில் காத்திரமாக உருவாக்கப்பட்ட இணையதளங்கள் மிகச் சிலவே என்பதும் உண்மையே. இணையத்தில் அதிக அளவில்  தமிழை இடம்பெறச் செய்ய வேண்டியது இணையத் தமிழின் மீது அக்கறை கொண்டோர் கவனம் செலுத்த வேண்டிய உடனடிப் பிரச்சினையாகும். தமிழ் இணையதளங்களில் கொடுக்கப்படும் படங்கள் தரத்திலும் உள்ளடக்கத்திலும் மிக பலவீனமானவை, அனிமேஷன் மிகவும் அரிது. இந்த இணைய இதழ்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம், பொறிகள் (hardware), மென்பொருள்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் சரியாக இயங்குவதில்லை என்பது நடைமுறை உண்மை. சில இணைய இதழ்களில் ஒவ்வொரு இதழைப் படிக்கும்போதும் ஒவ்வொரு விதமான பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.  
      தற்போது இணைய இதழ்கள் என்பவை சுயதம்பட்டத்துக்கான வெளியீட்டு முறைக்கான தளமாக மட்டுமே இருக்கின்றன. பதிப்பு முறைக்கென்று இருக்க வேண்டிய தீவிரமான அக்கறையின் செல்வாக்கை   --அதாவது குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி நிறைய விஷயஞானம் கொண்டிருத்தல், பெற்றுக்கொண்ட படைப்புகளைச் சீர்தூக்கிப் பார்த்தல், பிரதியை மேம்படுத்துதல் போன்றவற்றை-- இணைய இதழ்களில் பார்க்க முடியாது. இணையத்தின் உடனடித் தன்மையின் சாதகமான அம்சத்தையும் அச்சிட்ட பக்கங்களில் இருக்கக் கூடிய வரன்முறைகளிலிருந்து கிடைக்கும் சுதந்திரத்தையும் இணைய இதழ்கள் எந்த விஷயத்தையும் தொட்டு வருவதற்கான, ஒவ்வொரு விஷயத்தினூடாகவும் புகுந்து வருவதற்கான அனுமதி என்று கணக்குப்போட்டிருக்கின்றன. இந்த வகையில், ஒருவர் தனது சுயகுறிப்புகளை எழுதும் வலைப்பூவின் குணாதிசயங்களோடு இவை பெரிதும் பொருந்துகின்றன. எண்ணங்களின் முறைப்படியான ஒருங்கிணைந்த வெளிப்பாடு தமிழ் இணையதளங்களில் காணக்கிடைப்பதில்லை.  
      தற்போதைய சூழலில் இணைய இதழ்களுக்கான வாசகர் வட்டம் தமிழ்நாட்டுக்குள் பரந்த அளவில் இல்லை. தமிழ்நாட்டில் கணிப்பொறியின் ஊடுருவல் பெரிய அளவில் இல்லை என்பது ஒரு காரணம். தகவல்களைப் பெறுவதற்காகத் தினமும் இணையத்தைப் பயன்படுத்தும் பழக்கம் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு உள்ளதுபோல் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு அவர்களுடைய அன்றாட வாழ்க்கையின்  ஒரு பகுதியாக இன்னும் ஆகவில்லை. வெளிநாடுவாழ் தமிழர்களின் வாழ்க்கையில் எண்வயத் தொழில்நுட்பம் இரண்டறக் கலந்ததற்குப் பண்பாட்டு ரீதியான காரணங்கள் உள்ளன.
      இணையம் உள்ளிட்ட எண்வயத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அச்சு ஊடகங்கள், இணைய இதழ்கள் போன்றவை தங்களுக்கிடையே கிட்டத்தட்ட எந்த விதத் தொடர்பும் பரிமாற்றமும் இல்லாமல் செயல்படுவது வியப்பூட்டும் விஷயம். அவற்றுக்கிடையே விவாதங்கள் இல்லை. மொழி, கலாச்சாரம, இன்னும் சொல்லப்போனால் தொழில்நுட்பம் போன்ற விஷயங்களில் இணைய உலகில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் தமிழ் அச்சு ஊடகங்கள் விவாதிப்பதே இல்லை எனலாம். இணைய இதழ்களும் அச்சு ஊடகங்களைப் பற்றி விவாதிப்பதில்லை.

ஒருங்கிணைந்த செயல்பாடும் மொழிபெயர்ப்பும்
      தமிழ்ப் பதிப்பாளர்கள் பிற இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் உள்ள பதிப்பாளர்களுடன் தொடர்பு இல்லாமலேயே தனித்து இயங்குகின்றனர். அச்சு இதழ்கள், புத்தகங்கள் போன்றவற்றில் வெளியாகும் ஒரு சில மொழிபெயர்ப்புகள் ஒரு பழக்க தோஷம்தான். இந்திய மொழிப் பதிப்பாளர்களுக்கும் இந்திய மொழிகள்மீது அக்கறை கொண்ட ஆங்கிலப் பதிப்பாளர்களுக்கும் இடையே ஆக்கபூர்வமான பரிவர்த்தனை நடைபெற எண்வயத் தகவல்தொடர்பு முறைகள் வசதிசெய்துதர முடியும். பெரிய தளத்தில் ஒருவருக்கொருவர் தங்களுடைய அக்கறைகளைப் பகிர்ந்துகொள்ள வழிவகுக்க முடியும். இந்திய மொழிகளுக்கிடையேயான மொழிபெயர்ப்புகளுக்கும் இந்திய மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்குச் செய்யப்படும் மொழிபெயர்ப்புகளுக்கும் எண்வயத் தொழில்நுட்பம் ஒரு தூண்டுகோலாக இருக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அப்படிப்பட்ட மொழிபெயர்ப்புகள் இந்திய மொழிகளுக்கு இந்தியாவுக்கு உள்ளும் வெளியிலும் ஒரு விரிவான அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். எல்லாவிதமான அனுகூலங்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால் தமிழ்ப் பதிப்பாளர்கள் தங்கள் பணியில் தொழில்முறைத் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.  

(*ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைபல திருத்தங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இதைத் தமிழ்ப்படுத்த உதவியவர் தே. ஆசைத்தம்பி. அவருக்கு என் நன்றி). 
( இந்தக் கட்டுரை மணற்கேணி இதழ் 3 ல் ( டிசம்பர் - ஜனவரி 2011) வெளியிடப்பட்டது. )

2 comments:

  1. ஐந்து வருடங்களுக்கு முன்னர் எழுதிய ஒரு கட்டுரையின் இந்தப் பதிவு இன்றும் பொருந்துவதாக இருக்கிறது. எண்வயத் தொழில்நுட்பத்தில் தமிழ் குறிப்பிடத் தகுந்த அளவு முன்னேறவில்லை. ஆங்காங்கே நம்பிக்கையளிக்கும் முயற்சிகளும் தன்னார்வலர்களின் உழைப்பே.
    அப்படிப்பட்ட ஒரு முயற்சியை திண்டுக்கலை சேர்ந்த மென்பொருள் நிறுவனம் செய்துள்ளது.

    இலக்கியத்தில் ஒரு சொல்லைத் தேட கீழ்க்காணும் சுட்டியைப் பயன்படுத்திப் பாருங்கள்.

    எடுத்துக்காட்டிற்கு
    புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்
    என்ற புறநானூற்று வரியைத் தேட

    http://www.tamilpulavar.org/getdata.php?wrd=புகழ்&dict=செம்மொழி

    என்பதை உலாவியில் (browser) சுட்டுங்கள்.
    நீங்கள் தேட விரும்பும் சொல்லை wrd=தேட_விரும்பும்_சொல் என இடவும்.

    http://www.tamilpulavar.org/getdata.php?wrd=தேட_விரும்பும்_சொல்&dict=செம்மொழி

    புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின் - புறம் 182/5 என இலக்கியத்தில் உள்ள வரி கிடைக்கும்.

    http://m.tamil.thehindu.com/tamilnadu/இணைய-தமிழ்-அகராதி-தொகுப்பில்-ஒரு-முன்முயற்சி/article9255822.ece

    ReplyDelete
  2. ஐயாவின் மரணத்துக்குப் பின்னரே இந்தக் கட்டுரையைக் காண நேர்ந்தது. மிகவும் வருந்துகின்றேன்.

    ReplyDelete