ராஜ் கௌதமன் எழுதி விடியல் பதிப்பக வெளியீடாக( 2008) வந்திருக்கும் ‘ தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்’ என்ற நூலை அண்மையில் வாசித்தேன். ‘ அறம் அதிகாரம் ‘ என்ற தலைப்பில் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட நூலைத் திருத்தி விரிவாக்கி எழுதியிருக்கிறார் ராஜ் கௌதமன். அவரது எழுத்துக்களில் விரவிக்கிடக்கும் எள்ளலும் பகடியும் இந்த நூலைப் படிக்கும்போதும் நம்மை முறுவலிக்க வைக்கின்றன. ”முந்தைய பதிப்பில் ‘ பார்ப்பனர்’ என்ற தொன்மை வாய்ந்த தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியதை வசைச் சொல்லாக ஒரு பகுதியினர் தவறாகப் புரிந்துகொண்டதால் , ‘பிராமணர்’ என்ற வடசொல்லே இந்நூலில் கையாளப்படுகிறது.படிக்க வைப்பதுதான் நோக்கம் “ என்று ‘என்னுரை’ பகுதியில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.இத்தகைய அனுபவம் எனக்கும் உண்டு.’பார்ப்பனர்’ என்று குறிப்பிட்டு எழுதுகிறவர்களின் எழுத்துக்களைத் தான் படிப்பதே இல்லையென்று ஒரு பத்திரிகையாளர் என்னிடம் குறிப்பிட்டார். ஏன் என்று கேட்டபோது அதுவொரு வசைச் சொல்லாகவே தமிழில் பயன்படுத்தப்படுகிறது என்றார். எப்படி என்பதை அவரால் விளக்க முடியவில்லை. அப்படி யாரோ ராஜ் கௌதமன் அவர்களிடத்திலும் புகார் செய்திருக்கிறார்கள் போலும்.
’பிராமணர் என்ற வட சொல்’ என ராஜ் கௌதமன் குறிப்பிட்டிருக்கிறார். இதைப்பற்றி அயோத்திதாசப் பண்டிதர் கூறியிருப்பதை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாயிருக்கும். “ தன்னைப்போல் சருவ உயிர்களையும் பாதுகார்த்தலும் சாந்தகுணம் பெருக்கமுற்று சகல பற்றுக்களும் அற்று சமண நிலை கடந்து பிரமமணத்தால் சருவ சீவர்களுக்கும் உபகாரியாக விளங்குவார்கள்.இவர்களையே எதார்த்த பிராமணரென்று கூறப்படும்..... அங்ஙனமின்றி பெண்டுபிள்ளைக் கூட்டத்தினின்று பொருளாசை மிகுதி கொண்டு தன்னவர்களை ஏற்றியும் அன்னியர்களைத் தூற்றியும் சீவகாருண்ணியமற்று தன்னையொற்ற மக்களைக் கொல்லாமல் கொன்று பத்துக் குடிகள் நாசமடைந்த போதிலும் தன் குடி சுகமடைந்தால் போதும் என்னும் பொறாமெயெ ஓருருவாகக் கொண்டுள்ளார்கள் தங்களை பிராமணரென்று சொல்லித் திரிவது வேஷ பிராமணமேயாகும் “ என்று அவர் கூறுகிறார். (அயோத்திதாசர் சிந்தனைகள்- தொகுதி 1, பக்கம் 535- 536).
ராஜ் கௌதமன் கூறியுள்ள ஒரு கருத்தை இத்துடன் இணைத்துப் பார்க்கவேண்டும், “ சங்க காலத்தில் பிராமணர்கள் தனிக் குடியிருப்புகளில் வாழ்ந்தார்கள்.’பார்ப்பனச் சேரி’ என இவர்கள் மட்டும் வாழ்ந்த இடம் சுட்டப்பட்டது.வீட்டில் சமஸ்கிருதமும் வெளியே தமிழும் பேசினார்கள்.சமண -பௌத்த துறவியர் வடநாட்டாராயினும் தமிழகத்தில் அவர்களது போதனையால் சமண- பௌத்த மதங்களில் சேர்ந்து துறவிகளாகத் தமிழினத்தார் ஆகியதுபோல பிராமணியத்தின் போதனைகளால் தமிழர் பிராமணராக ஆகியிருக்க முடியாது. தமிழ் பிராமணர் எனப்படுவோ பிராமணராக மாறிய தமிழர் அல்லர் “ என்கிறார் கௌதமன். பிராமணர் என்பது பிறப்பின் அடிப்படையால் தீர்மானிக்கப்படுவதால் அவர் அப்படிக் கூறுகிறார். பிராமணர் ஆவதற்குத்தான் பிறப்பு அடிப்படை. தமிழராக ஆவதற்கு அப்படியல்லவே. எனவே தமிழ்ப் பிராமணர் என்போர் தமிழராய் மாறிய பிராமணர் எனக் கொள்ளலாமா ? அல்லது பிராமணரையும் ,பறையரையும் விலக்கித்தான் இப்போதும் தமிழர் என்பதை வரையறுக்கிறோமா ?
தமிழ்ப் பேரகராதியில் தமிழர் என்பதற்குத் தரப்பட்டிருக்கும் விளக்கம் இதோ:
தமிழர் tamiḻar
, n. < E. Tumbler, drinking cup; விளிம்பில்லாத தீர்த்தபாத்திரம். Loc.
"பிராமணரையும் ,பறையரையும் விலக்கித்தான் இப்போதும் தமிழர் என்பதை வரையறுக்கிறோமா?""
ReplyDeleteநல்ல மேற்கோல்தான் சிந்திக்கவைக்கிறது. ஏனெனில் சாதி இந்துக்கள் தங்களின் சாதிப்பெயர் சொல்லி அழைப்பதையும் கடந்து "தமிழர்" எனச்சொல்லிக்கொள்ள ஆர்வப்படலாம்...தமிழ்த்தேசிய வாதிகள் சண்டைக்கு வராதீங்கப்பா என்னால முடியாது.