நரேந்திர மோடி பாஜகவின் தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதும், தான் வகித்துவந்த முக்கியமான கட்சிப் பதவிகளிலிருந்து அத்வானி ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஊடகங்களுக்கும் அனுப்பினார். அதைத் தொடர்ந்து கடந்த இரண்டுமூன்று நாட்களாக ஊடகங்கள் அந்தச் செய்தியையே மென்று துப்பிக்கொண்டிருந்தன. காட்சி ஊடகங்கள் அத்வானியின் வீட்டு வாசலிலேயே தவமிருந்தன.நல்லவேளையாக சீக்கிரமே அந்த ‘நாடகம் ‘ முடிவுக்கு வந்துவிட்டது. நாடகம் என்பதைவிட இதை கேலிக்கூத்து என்பதே பொருந்தும்.
அத்வானி தனது ராஜினாமாவை மட்டும்தான் வாபஸ் பெற்றிருக்கிறார். அவர் பாஜக குறித்தும் அக்கட்சியின் தலைவர்கள் குறித்தும் சொன்ன கருத்துகள் அப்படியேதான் இருக்கின்றன. வாஜ்பேயி போன்றவர்கள் உருவாக்கிய லட்சியங்களிலிருந்து கட்சி விலகிப்போய்விட்டது. இப்போதிருக்கும் தலைவர்கள் தங்களது சொந்த திட்டங்களை நிறைவேற்றுவதில்தான் ஆர்வம்காட்டுகிறார்கள் என்றெல்லாம் தனது ராஜினாமா கடிதத்தில் அத்வானி விமர்சித்திருந்தார். இந்தப் பிரச்சனைகுறித்து போதும் போதும் என்கிற அளவுக்கு செய்திகளை நம் மீது கொட்டிய ஊடகங்கள் அத்வானி சொன்ன விமர்சனம் குறித்து பாஜக தலைவர்கள் ஒருவரிடமும் கருத்து கேட்கவில்லை. ராஜினாமாவை வாபஸ் பெற்றுக்கொண்டுவிட்டார் என ராஜ்நாத்சிங் அறிவித்த நேரத்திகூட அந்தக் கேள்வியை எழுப்பவில்லை. இந்து நாளேட்டின் ரீடர்ஸ் எடிட்டராக இருக்கும் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் பேக் ஜர்னலிசம் ( Pack Journalism ) என்பதைப் பற்றி அணமையில் எழுதியிருந்தார். அது இந்தப் பிரச்சனைக்கும் பொருந்துமெனத் தோன்றுகிறது.
குஜராத்தின் வளர்ச்சி குறித்த மோடியின் கூற்றுகள் எந்த அளவுக்கு உண்மை என்ற கேள்வியையும் இதுவரை வெகுசன ஊடகங்கள் எழுப்பவில்லை. எக்கானாமிக் அண்டு பொலிட்டிகல் வீக்லி பத்திரிகையில்தான் அதுபற்றி சில ஆய்வுக் கட்டுரைகள் வெளியாயின. இந்து குழுமத்திலிருந்து வெளியாகும் ஃப்ரண்ட்லைன் பத்திரிகையும் சில கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. இத்தகைய விஷயங்கள் சீரியஸான ஆய்வுப் பத்திரிகைகள் சம்பந்தப்பட்டவை என்றதொரு எண்ணம் பொதுப்புத்தியில் பதிக்கப்பட்டிருக்கிறது. அதை வெகுசன ஊடகங்கள் தீனிபோட்டு வளர்க்கின்றன.
வாஜ்பேயி இருந்தபோது அவரை மிதவாதியாகவும் அத்வானியை கடும்போக்காளராகவும் பாஜக ஆதரவு ஊடகங்கள் சித்திரித்தன. இப்போதோ அத்வானியை மிதவாதியாக்கி ஓரம்கட்டுகின்றன. மோடிக்கும் கடும்போக்காளர் என்ற முத்திரை விழுந்துவிடாமல் ’முன்னேற்றத்துக்கான தூதுவர்’ என்ற பட்டம்சூட்டி மகிழ்ச்சியடைகின்றன.இந்த நாடகத்தில் நாமெல்லாம் செயலற்ற பார்வையாளர்களாக வைக்கப்பட்டிருக்கிறோம்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியோடு மேட்ச் ஃபிக்ஸிங் செய்திகள் இலவச இணைப்பாக ஊடகங்களால் நமக்குத் தரப்பட்டன. இப்போது மோடியின் முடிசூட்டு விழாவோடு அத்வானியின் ராஜினாமா நாடகம் நமக்கு இலவச இணைப்பாக வழங்கப்பட்டிருக்கிறது.இதுதான் காட்சி அரசியல்.
No comments:
Post a Comment