தர்மபுரியில் தொடங்கி தமிழகமெங்கும் பரப்பப்பட்ட சாதிவெறியாட்டத்துக்கு மூல வித்தாக அமைந்த இளவரசன் திவ்யா காதல் திருமணத் தம்பதியினர் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
04.05.2013 அன்று மாலை திவ்யாவைக் காணவில்லையென அவரது கணவர் இளவரசன் காவல்துறையில் புகார் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாயின. தனது தாயைப் பார்ப்பதற்காகச் செல்வதாகக் கூறிவிட்டுப்போன திவ்யாவின் நிலை என்ன ஆனது எனத் தெரியவில்லை என அவர் கூறியிருந்தார். இதனிடையில் திவ்யாவின் அம்மாவால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவின் காரணமாக திவ்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் 06.05.2013 அன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரது அம்மாவும் அவரது சாதியைச் சேர்ந்தவர்களும்தான் அவரை ஆஜர்படுத்தியுள்ளனர். அவரை நீதிபதி விசாரித்தபோது தான் குழப்பமான மனநிலையில் இருப்பதாகவும் சிலநாட்கள் அம்மாவுடன் இருக்க விரும்புவதாகவும் திவ்யா கூறியிருக்கிறார். நீதிமன்றத்தில் இருந்த திவ்யாவின் கணவர் இளவரசன் அவருடன் பேச முயன்றபோது சுற்றிலுமிருந்த சூழலின் நெருக்குதல் காரணமாக திவ்யா மறுத்துள்ளார். அதனால் அவரை அவரது அம்மாவுடன் செல்வதற்கு நீதிபதி அனுமதிவழங்கியுள்ளார்.
இன்று (07.05.2013) டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேட்டில் வெளியாகியுள்ள செய்தியில் திவ்யா கூறியதாக சில தகவல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. " சாதியால் பீடிக்கப்பட்ட சமூகத்துக்காக எனது காதலையும் எனது திருமணத்தையும் நான் தியாகம் செய்கிறேன்" என்று அந்த செய்தியில் கூறியுள்ள திவ்யா, " கணவரை விட்டுவிட்டு வந்துவிடுமாறு எனக்கு நெருக்கடிகள் தரப்பட்டன" எனவும் கூறியிருக்கிறார். தனது கணவரும் அவரது வீட்டாரும் தன்னை மிகவும் அன்போடு நடத்தியதாகவும் தனது கணவரைத் தன்னால் வெறுக்கமுடியாது என்றும் திவ்யா தெரிவித்திருக்கிறார்.
2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட இளவரசனும் திவ்யாவும் கடந்த 8 மாதங்களாகச் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். ஒரு அரசியல் கட்சியின் சுயநலத்துக்காக அவர்களது வாழ்க்கை இப்போது சிதைக்கப்பட்டிருக்கிறது. திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொள்ளக் காரணமான அந்த சுயநலவெறியே இப்போது திவ்யாவின் வாழ்க்கையைப் பலிவாங்கியிருக்கிறது.
இப்போதைய சம்பவம் நமக்குள் சில கேள்விகளை எழுப்புகின்றன:
1. தான் மிகுந்த மனக்குழப்பத்தில் இருப்பதாக திவ்யா சொன்ன நிலையில், அவரது திருமணம் குறித்தும் அதன் பிறகான கலவரங்களைப் பற்றியும் நன்றாக அறிந்த நீதிமன்றம் அவரை ஒருசில நாட்கள் காப்பகத்தில் இருக்குமாறு உத்தரவிட்டு அதன்பிறகு நிதானமான மனநிலையில் அவரது முடிவைக் கேட்டறியாமல் உடனடியாக அவரை அவரது அம்மாவுடன் அனுப்பியது இயற்கைநீதிக்கு உகந்ததுதானா?
திவ்யாவின் மனக்குழப்பத்துக்கான காரணிகளில் ஒன்றாக அவரது அம்மா இருக்கிறார். அத்துடன் அதன் பின்னணியில் இருக்கும் அரசியல், சமூகக் காரணங்கள் நீதிமன்றத்துக்குத் தெரியாததல்ல. அவ்வாறிருந்தும் இப்படித் தீர்ப்பளித்தது சரிதானா?
2. திருமணமான ஒரு பெண் தனது கணவர்மீதோ அவரது வீட்டார்மீதோ எந்தவிதப் புகாரும் சொல்லாத நிலையில் அவரை அவரது அம்மாவுடன் அனுப்ப சட்டத்தில் இடமுண்டா? அங்கு கணவரின் சட்டபூர்வ உரிமை என்ன?
3. இளவரசன் திவ்யா திருமணம் இரண்டுபேருக்கிடையிலான தனிப்பட்ட விஷயம் என்றாலும் அந்தத் திருமணத்தைத் தொடர்ந்து ஏவப்பட்ட திட்டமிட்ட வன்முறை அதை அரசாங்கத்தின் வரம்புக்குள் கொண்டுசென்றுள்ளது. எனவே இதை அரசு வேடிக்கை பார்க்கப்போகிறதா? அல்லது திவ்யாவையும் அவரது அம்மாவையும் சாதிவெறியர்களிடமிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப் போகிறதா?
4. சட்டத்தை சாட்சியாக வைத்துக்கொண்டு ஒரு கடத்தல் நாடகம் அரங்கேறியுள்ளது. இதை தமிழகத்திலிருக்கும் ஜனநாயக சக்திகள் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள்?
No comments:
Post a Comment