இன்று தொண்ணூறாவது பிறந்தநாள் காணும் தலைவர் கலைஞருக்கு வாழ்த்துகள். அவரது பிறந்தநாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் கட்சியின் ஒற்றுமை குறித்தே அவர் அதிகம் பேசியிருக்கிறார். அதற்கான தேவை இருக்கிறது எனினும் இத்தகைய சந்தர்ப்பங்களில் கட்சி நலன் தாண்டி நாட்டை எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனைகள் குறித்து அவர் பேசுவாரென்றே என்னைப் போல பலரும் எதிர்பார்த்திருப்பார்கள்.
இன்று வந்திருக்கும் இரண்டு செய்திகள் மாநில உரிமைகளைப் பறித்து மத்தியில் அதிகாரங்களைக் குவிக்க விரும்பும் காங்கிரஸின் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன. மாநிலங்களின் அனுமதியில்லாமலேயே சிபிஐ விசாரணை நடத்த வழிசெய்யும் சட்டத் திருத்தம்; உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியனமனத்தில் மாநில அரசின் பரிந்துரை தேவையில்லை என ஆக்கி மத்திய அரசின் பிரதிநிதிக்கு அந்த அதிகாரத்தை வழங்கும் திட்டம். கூட்டணி ஆட்சி என்பது தவிர்க்க முடியாத யதார்த்தமாகிவிட்ட சூழலில் மாநில அரசுகளை பலவீனப்படுத்தும் இந்தத் திட்டங்களை காங்கிரஸ் நடைமுறைப்படுத்த நினைப்பது அதன் பாரம்பரிய குணம் மாறவில்லை என்பதையே காட்டுகிறது.
மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதில் முன்னணி பாத்திரம் வகித்தவர் கலைஞர். அதற்காக அவர் முனைப்போடு செயலாற்றிய 1970களைவிட அதற்கான முக்கியத்துவம் அதிகரித்திருக்கும் இன்று மீண்டும் அந்த வரலாற்றுப் பாத்திரத்தை ஆற்றுவதற்கு அவர் முன்வருவாரா? தன் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவாரா?
அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈழப் பிரச்சனையில் அவர் அக்கறை செலுத்திவந்தாலும் 2009 ஆம் ஆண்டு நடந்த முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின்போது தமிழக முதல்வராகவும் மத்திய அரசின் முக்கியமான கூட்டாளியாகவும் இருந்த அவர் ஈழத் தமிழரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவில்லையென்ற பழி இருக்கிறது. அந்தப் பழியைத் துடைக்கும்படி ஈழத் தமிழருக்கு ஆதரவான செயல் திட்டம் ஒன்றை அவர் இன்று அறிவிக்கவேண்டும் என்பது பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இன்று நடக்கவிருக்கும் அவரது பிறந்தநாள் பொதுக்கூட்டம் அவரது புகழ்பாடுவதாக மட்டும் இருந்துவிடாமல் தமிழ்ச் சமூகத்துக்குப் பயனுள்ளவிதத்தில் அமையுமானால் இந்நாள் என்றும் பேசப்படும் நாளாக அமையும்
No comments:
Post a Comment