Saturday, November 2, 2013

நமது பல்கலைக்கழகங்களில் பயின்ற மாணவர்கள் நன்கொடை கொடுத்ததுண்டா?



லண்டன் பல்கலைக்கழகத்தில் பயின்ற பழைய மாணவர் ஒருவர் அந்தப் பல்கலைக்கழகத்தின் கீழைத்தேய மற்றும் ஆப்பிரிக்கவியல் பள்ளிக்கு ( SOAS ) 20 மில்லியன் பவுண்டுகளை நன்கொடையாக வழங்கியிருக்கிறார். இந்திய ரூபாயில் அதன் மதிப்பு சுமார் 200 கோடியாகும். 


அந்தப் பல்கலைக் கழகத்தில் ஆசிய கலைகள் குறித்து முதுநிலைப் பட்டயவியல் பயின்ற ஃப்ரெட் ஈஷ்னெர் என்ற அந்த மாணவர் இப்போது சில வானொலி நிலையங்களை நடத்திவருகிறார். அவரது தொலைக்காட்சி நிலையம் ஒன்றை ரூபர்ட் முர்டோச் விலைக்கு வாங்கிவிட்டார். 


தான் நடத்திவரும் ஆல்ஃபாவுட் ஃபவுண்டேஷன் சார்பில் ஃப்ரெட் ஈஷ்னெர் அந்தத் தொகையைப் பல்கலைக்கழகத்துக்கு வழங்கியிருக்கிறார். தென்கிழக்காசிய கலைகள் குறித்த படிப்புகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதற்காக இந்த நன்கொடை வழங்கப்பட்டிருக்கிறது. பௌத்த, இந்து கலைகளுக்காக ஒரு பேராசிரியர் பதவியை உருவாக்கவேண்டும் எனவும் ஈஷ்னெர் கேட்டுக்கொண்டிருக்கிறார். 


தொழிற்கல்வியில் இடம் 'வாங்குவதற்கு' இப்போது கட்டாய நன்கொடை செலுத்தவேண்டும் என்பது நமக்குத் தெரியும். தமிழ்நாட்டிலுள்ள சென்னைப் பல்கலைக் கழகமும் மதுரைப் பல்கலைக்கழகமும் நீண்ட பாரம்பரியம் கொண்டவை. அவற்றில் பயின்ற மாணவர்கள் பலர் குறிப்பிடத்தக்க செல்வந்தர்களாக இருக்கக்கூடும். அவர்களுள் யாரேனும் தாம் படித்த பல்கலைக் கழகங்களுக்கு நன்கொடை அளித்ததுண்டா? ஈஷ்னெர் போல 200 கோடி வேண்டாம் 20 லட்சமாவது கொடுத்திருக்கிறார்களா? தெரிந்தால் சொல்லுங்கள்.

No comments:

Post a Comment