சங்கரராமன் கொலை குறித்து நான் 2004 ஆம் ஆண்டில் காலச்சுவடு மாதப் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரை:
தொல்பதி நரகர்*
ரவிக்குமார்
ஒரு கொலை வழக்கில் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் கைதுசெய்யப்படுவார் என்பதை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. பிரதமரை விட, குடியரசுத் தலைவரைவிட அதிக அதிகாரம் உள்ளவராகத் தன்னைக் காட்டிக்கொண்டவர் அவர்; சங்கராச்சாரி அரசியலமைப்புச் சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகார மையமாகத் திகழ்ந்தவர்; தமிழகம் மட்டுமின்றி இந்திய அரசியல் முழுவதன்மீதும் செல்வாக்குச் செலுத்தியவர்; நீதிமன்றத்தில் தீராமலிருக்கும் அயோத்திப் பிரச்சினையைத் தீர்க்கப்போகிறார் என விளம்பரப்படுத்தப்பட்டவர். இவை எல்லாவற்றுக்கும் மேலாகத், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவரென அறியப்பட்டவர் சங்கராச்சாரியார். இவை யாவும் சேர்ந்து அவரது கைது நடவடிக்கையை அசாதாரணமான ஒன்றாக ஆக்கியுள்ளன.
சங்கராச்சாரியார் கைதுசெய்யப்பட்டதற்குக் கிடைத்திருக்கும் எல்லை கடந்த வரவேற்பு அவர் நடத்திவந்த அரசியல்மீது எல்லோரும் எப்படியான 'மதிப்பு' வைத்திருந்தனர் என்பதற்குச் சான்றாக உள்ளது. வழக்கு நடந்து தீர்ப்பு வரவில்லையென்றபோதிலும் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் இந்த வழக்கு விசாரணையின்போது கூறியதுபோலச் சங்கராச்சாரி இந்தக் கொலையைச் செய்திருப்பார் என்பதையும் பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பார் என்பதையும் நம்புவதற்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கவே செய்கின்றன. சங்கரராமன் எழுதிய கடிதங்கள் மட்டுமின்றிச் சங்கராச்சாரியின் பேச்சுகளும் நடவடிக்கைகளும் அவர் இப்படியான காரியங்களைச் செய்யக்கூடியவர்தான் என்பதைக் காட்டியுள்ளன. கருணாநிதி உடம்புக்கு ஏதாவது வர வேண்டும் எனக் கடவுளிடம் தான் வேண்டிக்கொண்டதாக ஒருமுறை அவர் கூறியிருந்தார். அவரது ‘உயர்ந்த’ குணத்துக்கு இந்த ஒரு சான்றே போதும். பெண்களைப் பற்றியும் தலித்துகளைப் பற்றியும் அவர் கூறிவந்த கருத்துகள் சுரணையுள்ள எவருக்கும் கோபத்தை ஏற்படுத்தக்கூடியவை.
கடந்த நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் தொடங்கிய ‘பிராமணரல்லாதாரின்’ அரசியலை எதிர்கொள்ளத் தமிழகப் பிராமணர்கள் சங்கர மடத்தை ஓர் அதிகார மையமாகக் கட்டியெழுப்பினார்கள். இப்படித் ‘தற்காப்புக்கென’ உருவாக்கப்பட்ட அந்த மையமோ உண்மையில் ‘தாக்குதல் தொடுக்கிற’ இடமாகவே இருந்துவந்தது. இந்தச் சமூகத்தில் தாங்கள் சிறுபான்மையினர் என்னும் பாதுகாப்பற்ற உணர்வு உண்டாக்கிய எதிர்மறையான மனோபாவமாக இதைக் கூறலாம். இதன் காரணமாக இது பிராமணரல்லாதார் பலரின் வெறுப்புக்கு ஆளாகி வந்தது. இப்போது சங்கராச்சாரி கைதை ஒட்டிப் பிராமணரல்லாதார் கொள்ளும் குதூகலத்துக்கு இந்த வெறுப்பே அடிப்படை. அது நீதியின்பாற்பட்ட அக்கறையால் ஏற்பட்டதல்ல. ஏனென்றால் இப்படிக் குதூகலிக்கிறவர்களில் பலர் சங்கராச்சாரிக்கு எந்தவிதத்திலும் குறையாத ‘நேர்மை யாளர்’களாவார்கள்.
சங்கராச்சாரியாரின் கைது சங்கப் பரிவாரங்கள் கூறுவதுபோல இந்து மதத்தின்மீதான தாக்குதல் அல்ல. பிராமண அதிகாரத்தின்மீதான தாக்குதலையே அவர்கள் இந்துமதத்தின் மீதான தாக்குதலாகச் சொல்கின்றனர். தென்னிந்திய, அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டு, பிராமணர்களின் அதிகாரமென்பது மத அதிகாரம் மட்டுமல்ல. நிலவுடமையோடு கூடிய தல அதிகாரமும் அவர்களுக்கு இருந்ததென்பதைப் பர்ட்டன் ஸ்டெய்ன் எடுத்துக்காட்டியுள்ளார் (Peasant State and Society in Medieval South India (1980; பக்கம் 53-56). பிரம்மதேயங்களை அடிப்படையாகக்கொண்ட இத்தகைய பொருளியல் அதிகாரம் இந்தியாவின் வேறெந்தப் பகுதியிலும் அவர்களுக்கு இருந்ததில்லை என்கிறார் ஸ்டெய்ன். சோழர் காலத்திலிருந்து பிரிட்டிஷ் ஆட்சிக்காலம்வரை இது தொடர்ந்தது. பதினான்காம் நூற்றாண்டுக்குப் பிறகு சிலகாலம் இந்த நிலையில் ஒரு சரிவு ஏற்பட்டபோதிலும், நிலங்களைப் பற்றிய ஆரம்பகாலப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கொள்கை சென்னை மாகாணத்தில் இருந்த வளமான நிலங்களைப் பிராமணர்களின் கையில் ஒப்படைத்தது. அதே நேரத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் நம்பகமான ஊழியர்களாகவும் அவர்கள் மாறினார்கள். மதரீதியான அதிகாரம், பொருளாதார அதிகாரம், நிர்வாகத்தில் பங்கெடுத்ததால் கிடைத்த அதிகாரம் என ஆதிக்கத்தின் உச்சத்துக்கு அவர்கள் சென்றார்கள்.
ஆனால் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த நிலை மாறத் தொடங்கியது.
கிராமங்களைவிட்டு நகரங்களை நோக்கி நகர்ந்ததன் காரணமாக நிலங்களை அவர்கள் கைவிட்டனர். மதச்சார்பற்ற அரசியலமைப்புச் சட்டம் அவர்களின் மத அதிகாரத்தைக் கட்டுப்படுத்தியது. ஆனாலும் காங்கிரசுக்குள் நுழைந்து அவர்கள் போட்டுவைத்திருந்த அடித்தளம், ஆட்சி அதிகாரத்தை அவர்களிடம் கொண்டுவந்து சேர்த்தது. இது வெகு காலம் நீடிக்கவில்லை. எண்ணிக்கையில் பெரும்பான்மையாகவும் பொருளாதார பலம் கொண்டவர்களாகவும் இருந்த பிராமணரல்லாதார் நிர்வாக அதிகாரத்தைப் பிடித்தது மட்டுமின்றிக் கட்சி அரசியலையும் கைப்பற்றிக்கொண்டனர். பிராமணரல்லாதாரின் சாதி அரசியல் பிராமணர்களைச் சிறுபான்மையினராக உணரவைத்தது மட்டுமின்றி அவர்களைத் தமக்குக் கீழே இருக்கும்படி நிர்ப்பந்தித்தது. இதைக் கடந்து செல்வதற்காகவே மத அடையாளம் மீண்டும் முன்னெடுக்கப்பட்டது. மத இந்துக்களான பிராமணர்களும் சாதி இந்துக்களான பிராமணரல்லாதாரும் சமரசம்செய்துகொண்டு அமைத்த கூட்டணியே இந்துத்துவம் ஆகும். இதனால் தூக்கிப் பிடிக்கப்பட்டவரே இந்தச் சங்கராச்சாரியார்.
சங்கராச்சாரியாரின் எழுச்சி பிராமணர்களின் எழுச்சி என்பதாகவே பார்க்கப்பட்டது. அப்படியானால் அவரது வீழ்ச்சி பிராமணர்களின் வீழ்ச்சியென்றே பொருள்படும். அவரது கைதையொட்டிச் சாதாரண பிராமணர்கள் அடைந்துள்ள வருத்தமும் பிராமணரல்லாதார் காட்டும் உற்சாகமும் இதைத்தான் சுட்டுகின்றன. இங்குதான் அவரது கைது முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாட்டில் சகல தளங்களிலும் பிராமணர்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டனர். அவர்களுக்கு இருந்த குறியீட்டு அதிகாரம் இப்போது கேள்விக்குள்ளாகிவிட்டது. இந்தக் கைது நடவடிக்கை தமிழகத்தில் பிராமணரல்லாதார் அதிகாரத்தை வரம்பற்றதாக ஆக்கிவிட்டது. இந்திய அளவில் சமூகத்தின் சகல தளங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டுவிட்ட சாதி இந்து அரசியலின் வெற்றியாக இதைக் கூறலாம்.
இந்தியச் சமூகத்தில் பிராமணரல்லாதார் எனப்படும் சாதி இந்துக்களின் அதிகாரம் வினோதமானது. பிராமணரைக் காட்டித் தம்மை அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் (victims) என்று சொல்லிக்கொள்ளலாம்; தமக்குக் கீழே இருப்பவர்கள்மீது ஆதிக்கமும் செலுத்தலாம். இது ஆயுதம் ஏந்திய போராளிக் குழுவின் அதிகாரத்தை ஒத்ததாகும். அரசை எதிர்க்கும் கலகக் காரர்களாகவும் தமது கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளில் வாழ்வோருக்கு ஆட்சியாளர்களாகவும் இருக்கும் அவர்கள் ஒரே நேரத்தில் எதிர்ப்பு, ஆதிக்கம் என்னும் இருவகை அதிகாரங்களையும் அனுபவிப்பது போலவே, இந்தியச் சமூகத்தில் பிராமணரல்லாதார் இப்போது ‘உயர்ந்தவர்’ எனச் சொல்லி அதிகாரத்தையும் ‘பிற்படுத்தப்பட்டோர்’ என்று கூறிச் சலுகைகளையும் ஒருசேர அனுபவிக்கின்றனர். இந்த ‘வசதி’ பிராமணர்களுக்கோ தலித்துகளுக்கோ கிடையாது.
‘கொலையுண்டவர் ஒரு பிராமணர்; கைதுசெய்யப்பட்டிருப்பவரும் பிராமணர்; கைதுசெய்தவரும் பிராமணர். இதில் பிராமணரல்லாதார் எங்கே வந்தனர்’ என்று கேட்கப்படலாம். சங்கராச்சாரியாரின் அதிகார அழிப்பால் பலன் பெறப்போவது அவர்கள்தான். தீண்டாமையை வலியுறுத்திய, சாதியைக் கட்டிக்காத்த சங்கராச்சாரியாரின் வீழ்ச்சி தலித்துகளுக்கு மகிழ்ச்சியளிப்பதுதான். ஆனால் சங்கராச்சாரியாரின் மீதுகூடச் சட்டம் பாயும், சாதி வெறியர்களை அது ஒன்றும் செய்யாது என்னும் கசப்பான உண்மையையும் சாதிப் பெரும்பான்மை மதப் பெரும்பான்மையைவிட ஆபத்தானது என்னும் தத்துவத்தையும் உணர்ந்ததால் பிராமணரல்லாதாரோடு சேர்ந்து தலித்துகள் கூத்தாட முடியாது என்பதை மட்டும் இப்போதைக்குக் கூறி வைக்கலாம்.
* * தலைப்பு மணிமேகலையிலிருந்து எடுக்கப்பட்டது. தவ வேடத்தில் மறைந்து நின்று இழிசெயல்களைச் செய்யும் பொய் வேடத்தார் உள்ளிட்ட ஆறுவகையான குற்றங்களைச் செய்பவர்களை நரகர் எனக் குறிப்பிடுகிறது மணிமேகலை.
பார்பனர்களை விட ஜாதி இந்துக்கள் இரட்டை வேடத்தை பற்றி கூறிவுள்ளது சரியானது.பார்பன-சத்திரிய-வைசிய கும்பல் பார்பனியத்தின் பயனாளிகள்
ReplyDelete