சச்சின் தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாஜ்பாய், என்.டி.ராமாராவ் ஆகியோருக்கும் பாரத ரத்னா வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. இதுவரை அவ்விருதைப் பெற்றுள்ள 43 பேர்களின் பட்டியலை ஆராய்ந்தால் பலதரப்பட்டவர்களுக்கும் அது வழங்கப்பட்டிருப்பதையும் அதன்பின்னே அரசியல் இருப்பதையும் உணரலாம். நேரு, இந்திரா, ராஜிவ் என அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே பாரத ரத்னாக்களாக மிளிர்கிறார்கள். திருமதி சோனியா காந்திக்கும் திரு ராகுல் காந்திக்கும்கூட பாரத ரத்னா கொடுக்கப்படலாம். அப்படிக் கொடுத்தாலும் எனக்கு ஆட்சேபணை ஏதுமில்லை.
பாரத ரத்னா விருதைப் பெற்ற 43 பேர்களில் அம்பேத்கரைத் தவிர ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெறவில்லை. அந்தப் பட்டியலில் இருக்கும் பலரைக்காட்டிலும் திரு கே.ஆர்.நாராயணன் அந்த விருதைப் பெற தகுதியானவர். ஆனால் அவரது பெயரைச் சொல்லக்கூட எவருமில்லை என்பதுதான் வேதனை.
ஒடுக்கப்பட்டவர்களும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் கன்ஷிராம். அதன்மூலம் இந்திய சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதில் மிகப்பெரும் பங்களிப்புச் செய்தவர். அவரது பணி எந்தவகையிலும் வாஜ்பாயைவிட, என்.டி.ராமாராவைவிடக் குறைந்ததல்ல. அவருக்கும் பாரத ரத்னா வழங்கப்படவேண்டும்.
No comments:
Post a Comment