கருணையின் அரசியல்
ரவிக்குமார்
( 21.2.2014 ல் எழுதப்பட்டது)
எல்லாமே அரசியல் ஆகிவிட்ட நமது நாட்டில் இப்போது கருணையும் அரசியலாகிவிட்டது. குடியரசுத் தலைவரின் கருணை நிராகரிக்கப்பட்ட சாந்தன் , முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தணடனைக் குறைப்புச் செய்து உச்சநீதிமன்றம் உயிர்க்கொடை அளித்தது. இழந்த வாழ்நாள் போக எஞ்சிய காலத்தை அவர்களுக்கு வழங்கும்விதமாகத் தமிழக அரசு அவர்களை விடுதலை செய்யப்போவதாக அறிவித்தது.ஆனால் அந்த அறிவிப்பு இப்போது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.
ராஜிவ் காந்தியின் பெயரை முன்வைத்து அரசியல் செய்ய அனைத்து உரிமையும் கொண்ட காங்கிரஸ் கட்சியினர் இப்போது தமிழக அரசுக்கு எதிராகக் களம் இறங்கியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கக்கூடாது என்ற மத்திய அரசின் மனுவை ஏற்று உச்சநீதிமன்றமும் தமிழக அரசைத் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தியுள்ளது.
மன்னித்தலும் கருணையும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டவை.கருணை என்பது குற்றத்தை அழித்துவிடுவதில்லை, குற்றத்தால் எழும் வருத்தத்தைத்தான் அது அழிக்கிறது. குற்றம் குறித்த நினைவையல்ல அதனால் எழும் ஆத்திரத்தைத்தான் கருணை மறக்கச்செய்கிறது.குற்றத்துக்கு எதிரானப் போராட்டத்தை அது தடுக்கவில்லை, மாறாக வெறுப்பை மட்டும்தான் போக்குகிறது.அன்பின் இடத்தில் நிற்கிறது கருணை. அன்புகாட்ட முடியாதபோது வெறுப்பைக்காட்டாமல் இருப்பதே பெரிய விஷயம்தான். ‘மறப்போம் மன்னிப்போம்’ என்று கூறப்படுவதுண்டு.மறக்காமலே மன்னிப்பதற்குப் பெயர்தான் கருணை. இதை காங்கிரஸ்காரர்களும் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் புரிந்துகொள்ளவேண்டும்.
பேரறிவாளன் உள்ளிட்ட மூன்றுபேரின் தண்டனையைக் குறைக்கும்போது உச்சநீதிமன்றம் இறுதியாக ஒன்றைக் குறிப்பிட்டது: “ ஆயுள் தண்டனை என்றால் ஒருவரின் ஆயுட்காலம் முழுவதும் என்றுதான் பொருள். ஆனால் அது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 432ன் கீழ் பொருத்தமான அரசாங்கம் வழங்கும் தண்டனைக் குறைப்புக்கும், பிரிவு 433 ஏ இல் சொல்லப்பட்டிருக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டது.” என்று தீர்ப்பில் கூறப்பட்டது. இங்கே பொருத்தமான அரசாங்கம் என்றால் அது மாநில அரசையே குறிக்கும். தண்டனைக் குறைப்பு செய்ய நமது அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161 இன் கீழ் மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. தணடனைக் குறைப்பு செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கும் குடியரசுத்தலைவருக்கும் என்ன அதிகாரம் இருக்கிறதோ அதே அதிகாரம் மாநில ஆரசுக்கும் ஆளுநருக்கும் இருக்கிறது. இந்த அதிகாரம் நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டதுதான் என்றாலும் மாநில அரசு இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாவற்றிலும் நீதிமன்றம் தலையிடமுடியாது. உள்நோக்கத்தோடு தண்டனைக் குறைப்பு செய்யப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்தாலோ, தணடனைக் குறைப்பில் ஒருசிலருக்குப் பாரபட்சம் காட்டப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தாலோதான் நீதிமன்றம் தலையிடும்.
விடுதலை குறித்து சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் பேசியபோது “மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அறிவித்தார். மாநில அரசே தன்னிச்சையாக முடிவெடுக்காமல் மத்திய அரசிடம் கலந்தாலோசிக்கவேண்டியதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்திருந்தார்: “ இ ந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பினால் புலனாய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தடா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-ன்படி, தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
ஒரு வழக்கை சி.பி.ஐ விசாரித்தது என்பதாலேயே மத்திய அரசிடம் கலந்தாலோசிக்கவேண்டுமென அவசியமில்லை. சி.ஆர்.பி.சி பிரிவு 435 இதைத் தெளிவாகச் சொல்கிறது. ” குறைக்கப்படும் அந்தத் தண்டனையானது சி.பி.ஐ ஆல் புலனாய்வு செய்யப்படும் மத்திய அரசு இயற்றிய சட்டத்தின் அடிப்படையிலான குற்றத்துக்காக இருந்தாலோ; மத்திய அரசுக்குச் சொந்தமான சொத்து ஒன்றுக்கு சேதம் விளவிப்பதாகவோ, அதைக் கைப்பற்றிக்கொள்வது தொடர்பானதாகவோ இருந்தாலோ; மத்திய அரசின் ஊழியர் குற்றம் செய்திருந்தாலோ அதுகுறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கவேண்டும்” என அந்தப் பிரிவில் கூறப்பட்டிருக்கிறது. இங்கு புலனாய்வு குறித்து பேசப்படவில்லை, தண்டனை குறித்துதான் பேசப்படுகிறது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இ.த.ச பிரிவு 120 பி மற்றும் 302 இன் கீழ்தான் மரணதண்டனையை உறுதிப்படுத்தியது. அதை நீதிபதி காத்ரி தலைமையிலான அமர்வின் தீர்ப்பில் தெளிவாகக் காணலாம். நீதிபதி கே.டி.தாமஸ் அவர்கள் தடா சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்ததையும், நளினி உள்ளிட்ட ஏழுபேருக்கு இதச பிரிவு 302 மற்றும் 120 பி ஆகியவற்றின்கீழ் தண்டனையை உறுதிசெய்ததையும் வழிமொழிந்த நீதிபதி காத்ரி அவர்கள், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததையும் ஏற்றுக்கொண்டு ஆமோதித்தார். ஆக இந்த வழக்கு சிபிஐ ஆல் புலனாய்வு செய்யப்பட்டிருந்தாலும், முதலில் தடா நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டிருந்தாலும் இதச பிரிவுகளின்கீழ்தான் தண்டனை வழங்கப்பட்டது என்பதால் இந்த வழக்கின் குற்றவாளிகளுக்குத் தண்டனை குறைப்பு செய்ய மத்திய அரசிடம் கலந்தாலோசிக்க அவசியமே இல்லை. அதைத்தான் பிரிவு 435 உட்பிரிவு 1 சொல்கிறது.
மத்திய அரசிடம் கலந்து ஆலோசிப்பது அவசியம்தான் என மாநில அரசு உண்மையாகவே நம்புமேயானால் சிஆர்பிசி பிரிவு 435 உட்பிரிவு 2 இன் படி மத்திய அரசும் தண்டனைக் குறைப்புச் செய்யும்வரை அது காத்திருக்கத்தான்வேண்டும். அப்புறம்தான் விடுதலை செய்யமுடியும்.அப்படி மத்திய அரசு தண்டனைக் குறைப்புசெய்து உத்தரவிடாமல் மாநில அரசு செய்யும் தண்டனைக் குறைப்பு செல்லாது என அந்தப் பிரிவில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. மத்திய அரசிடம் கலந்து ஆலோசிக்கப் போய்விட்டால் மூன்றுநாள் கெடு விதிப்பதோ நாங்களே தன்னிச்சையாக விடுவிப்போம் எனச் சொல்வதோ முடியாது என்பதுதான் உண்மை.
தற்போது தமிழக அரசின் முடிவை நிறுத்திவைத்து உத்தரவிட்டிருக்கும் உச்சநீதிமன்றம் என்னவிதமான வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன என்பதைத் தெரிவிக்குமாறு மாநில அரசிடம் கேட்டிருக்கிறது. ”தண்டனைக் குறைப்பு என்பது கைதி ஒருவரின் உரிமை அல்ல, அது மத்திய, மாநில அரசுகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரம். தண்டனைக் குறைப்பின்போது அரசாங்கம் குறிப்பிட்ட சிலரை விலக்கிவைக்கலாம். ஆனால் அப்படி விலக்கிவைப்பதற்கான காரணம் நியாயமானதாகவும், சமூகத்துக்குப் பயன்தரும் விதத்திலும் இருக்கவேண்டும். சமூகத்துக்குக் கேடுவிளைவிப்பவர்கள் அரசாங்கத்தின் நடவடிக்கையால் பயனடைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்” என சனபோய்னா சத்யநாராயணா எதிர் ஆந்திர மாநில அரசு என்ற வழக்கில் (2003) தீர்ப்பளித்தபோது உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161 இன் கீழ் மாநில அரசுக்குள்ள தண்டனைக் குறைப்பு அதிகாரம், சி.ஆர்.பி.சி யின் பிரிவு 435 இன் விளக்கம் ஆகியவற்றையெல்லாம் தென்தமிழன் எதிர் தமிழக அரசு என்ற வழக்கில் தீர்ப்பளிக்கும்போது (2009) விரிவாகவே நீதிபதி சந்துரு அவர்கள் ஆராய்ந்திருக்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 72 மற்றும் 161 ஆகியவை மூலம் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் ஒரேவிதமானவைதான் என்று கூறியிருக்கும் அவர் அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161இன் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அதிகாரம் சிஆர்பிசி யின் பிரிவு 435 ஐ சார்ந்தது அல்ல, அது தனிப்பட்ட அதிகாரம் ( Plenary Power ) என்று தெளிவுபடுத்தியிருக்கிறார். அந்தத் தீர்ப்பை வைத்துப் பார்த்தால் தமிழக அரசு இந்த வழக்கில் மத்திய அரசைக் கலந்தாலோசிக்க முடிவு செய்தது தேவையற்றது என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கிறது.
மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது எனத் தமிழக முதல்வர் சவால்விட்டுப் பேசினாலும் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் அவருக்குத் தயக்கம் இருக்கிறதோ என்ற ஐயம் நமக்கு எழுகிறது. இதே குற்றவாளிகளுக்கு மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மரண தண்டனையை ரத்துசெய்யவேண்டும் என 2011 ஆம் ஆண்டில் கோரிக்கை விடுக்கப்பட்டபோது அவர் மத்திய அரசின் உள்துறை அனுப்பிய ஒரு கடிதத்தை சுட்டிக்காட்டி அப்படியொரு அதிகாரம் தனது அரசுக்கு இல்லை என்றார். “ குடியரசுத் தலைவர் அவர்களால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே பொருள் தொடர்பான கருணை மனுவை மாநில ஆளுநர் பரிசீலிக்க வேண்டும் என மாநில அரசு கோர முடியாது என 1991 ஆம் ஆண்டே மத்திய அரசு தெளிவுரை வழங்கி உள்ளதையும் எடுத்துக் கூறினேன்.” எனத் தற்போது சட்டப்பேரவையில் பேசும்போதும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161 இன் மூலம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை நீதிமன்றங்கள்கூட கட்டுப்படுத்த முடியாது என்கிறபோது உள்துறை அமைச்சகத்தின் விளக்கக் கடிதத்தை ஆதாரமாகக் காட்டி தனது அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அவர் அப்போது சொன்னதை நாம் ஏற்கமுடியவில்லை. இப்போதும்கூட தனது அரசுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மத்திய அரசிடம் ஆலோசனை கலந்திருப்பதும் நமக்கு வியப்பளிக்கிறது.
அரசியலமைப்புச் சட்டம் மாநில அரசுக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த தமிழக முதல்வர் முன்வரவேண்டும். அதற்குத் தேவையான நெறிமுறைகளை வகுக்கவேண்டும். இந்த ஏழுபேரை மட்டுமல்ல, அந்த நெறிமுறைகளின்படி எத்தனைபேருக்கு விடுதலை பெறத் தகுதியிருக்கிறதோ அத்தனைபேரையும் விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய அரசுக்கு கெடு விதிப்பதும், சவால் விடுவதும் அரசியல். மாநில அரசுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறையில் வாடும் கைதிகளை விடுவிப்பதே கருணை. தமிழக முதல்வரிடம் நாடு எதிர்பார்ப்பது கருணையைத்தானே தவிர கருணையின்பேரிலான அரசியலை அல்ல.
( கட்டுரையாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் )
No comments:
Post a Comment