பேயைப்போல காய்ச்சும் சூரியன்
எனது மனைவி
அவள் பெயர் ஜோ
வயலில் பருத்தி எடுத்தபடி
அவள் கேட்டாள்:
" நம் சாமான்களையெல்லாம் எடுத்துக்கொண்டு
போகச்சொல்கிறார்களே என்ன ஆவோம்?"
பழையகாரில் மூட்டைமுடிச்சுகளோடு
கிளம்பிவிட்டோம்
எந்த திசை
எங்கே போவது
எதுவும் தெரியாது
ஒன்று மட்டும் தெரியும்
சூரியன் பேயைப்போல காய்ச்சும்
மேற்கு டெக்சஸில்
என்னைப்போல ஒரு
கறுப்பன் இருக்க முடியாது
- இது லாங்க்ஸ்டன் ஹியூஸின் கவிதை. அந்த டெக்சஸிலிருந்து ஒரு வெள்ளையர் - அவர் பெயர் மைக்கேல் காலின்ஸ். இப்போது என்னோடு தங்கி என் தேர்தல் பணிகளை ஆராய்ச்சி செய்துவருகிறார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பிஎச்டி மாணவர். ' விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் வரலாறு' குறித்து ஆய்வு செய்கிறார். அதன் ஒரு பகுதியாகவே இப்போது என்னுடன் தங்கி தேர்தல் நடைமுறைகளைக் கவனிக்கிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் தேர்தல் பிரச்சாரம் முடிந்து தங்கியிருக்கும் இடத்துக்குவரும்போது நள்ளிரவு கடந்துவிட்டது. சாப்பிட எதுவுமில்லை. இருந்த ஒன்றிரண்டு பழங்களைப்பகிர்ந்துகொண்டோம்.
திருவள்ளூரில் அடிக்கும் வெயில் லாங்க்ஸ்டன் ஹியூஸ் வர்ணிக்கும் டெக்சஸின் பேய் வெயிலைவிடப் பயங்கரமானது. அந்த வெயிலில்காய்ந்து, பட்டினி கிடந்து, கிடைத்த இடத்தில் உறங்கி - என் உற்ற நண்பர்களில் ஒருவராகிவிட்டார் மைக்கேல். அவர் ஒவ்வொரு நாளும் தரும் feedback எனக்கு மிகப்பெரும் தெம்பைத் தருகிறது. ஒவ்வொருநாளும் தனது blog இல் அதைப்பற்றி எழுதியும் வருகிறார். கறுப்பர்களை விரட்டியடித்த அவரது முன்னோரின் கொடுங்குணத்தை எண்ணிப் பார்க்கிறேன். அண்மையில் ஆஸ்கர் விருதைப் பெற்ற 12 years a slave திரைப்படத்தில் கதையின் நாயகன் எப்படி அடிமையாக ஆக்கப்படுகிறான் என்பதை சித்திரிக்கும் காட்சி மனதில் ஓடுகிறது.
மனிதர்கள் நல்லவர்களாகத்தான் பிறக்கிறார்கள். டெக்சஸிலிருந்து ஒரு மைக்கேல் காலின்ஸ் வந்திருப்பதைப்போல வெண்மணியிலிருந்தும் மேலவளவிலிருந்தும் யாரேனும் ஒரு தலித் அல்லாத மனிதன் வரக்கூடும். அவனுக்காக நம்பிக்கையுடன் நான் காத்திருக்கிறேன்.
அன்றிரவு மைக்கேல் எனக்கு ஒரு பேனாவைப் பரிசளித்தார். gift pack செய்து அழகாக வைக்கப்பட்டிருந்த பேனா. தேர்தல் பணிகள் முடிந்தவுடன் அந்தப் பேனாவால் அவரைப்பற்றி ஒரு கவிதை எழுதவேண்டும். லாங்ஸ்டன் ஹியூஸின் கவிதை எழுப்பிய கேள்விக்கு அது பதிலாக இருக்கும்.
No comments:
Post a Comment