Friday, May 2, 2014

2014 பொதுத் தேர்தலும் ஊடகங்களின் பாத்திரமும்




2014 பொதுத் தேர்தலும் ஊடகங்களின் பாத்திரமும் என்பதுகுறித்து ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் கல்லூரியில் இன்று மாலை  ஒரு விவாதம் நடைபெற்றது. திரு என்.ராம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விவாதத்தில் திரு ராபின் ஜாஃப்ரி,திரு சசிகுமார், திரு.ஶ்ரீகுமார் மேனன் ஆகியோர் கலந்துகொண்டனர். 


திரு என். ராம் கருத்துக் கணிப்புகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார். அறிவியல்பூர்வமாக அவை எடுக்கப்படுகின்றனவா? எனக் கேட்ட அவர் சாம்பிள் சைஸ் முதலான விவரங்களைக் காட்சி ஊடகங்கள் மறைப்பது பற்றி கவலை தெரிவித்தார். அச்சு ஊடகங்களிலும் நீண்ட விரிவான ஆய்வுகள் வெளியாவதில்லை. அதனால் சீரியஸான பிரச்சனைகளை விட்டுவிட்டு பரபரப்புக்கு முக்கியத்துவம் தருவதாக செய்திகள் சுருங்கிவிட்டன என்றார். 


திரு ராபின் ஜாஃப்ரி அவர்கள் ஆஸ்திரேலிய தேர்தல் முறையோடு இந்தியத் தேர்தலை ஒப்பிட்டார். கருத்துக் கணிப்புகள் ஜோதிடத்தைப் போல சில சமயங்களில் பலித்துவிடுவதுண்டு என்றார். 


திரு சசிகுமாரும் அந்தக் கருத்துகளை ஆமோதித்ததோடு நரேந்திர மோடி குறித்துப் பெரும்பாலான ஊடகங்கள் சாதகமான சாஃப்டான அணுகுமுறையைக் கையாண்டது எப்படி எனக் கேட்டார். 


திரு ஶ்ரீகுமார் மேனன் இடது சாரிக் கட்சிகள் தேய்ந்து வருவதை சுட்டிக்காட்டி அந்த வெற்றிடத்தைப் பல புதிய குழுக்கள் நிரப்ப முன்வந்திருப்பதை நம்பிக்கையோடு குறிப்பிட்டார். 


மாணவி ரிச்சா பேசும்போது இண்டர்நெட் என்பது எப்படி தாக்கம் மிகுந்ததாக மாறியுள்ளது என்பதை பல உதாரணங்களோடு விளக்கினார். ஆனால் இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துவோர் வெறும் 12.6% தான் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். வேட்பாளர்களின் கிரிமினல் பின்னணி போன்ற விவரங்களை இணையத்தில் செயல்படும் சில தளங்கள் வெளியிட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டியபோது " எஃப் ஐ ஆர் போட்டதாலேயே ஒருவர் கிரிமினல் என அர்த்தமில்லை" என்று திரு என்.ராம் இடைமறித்துச் சொன்னார். 


பார்வையாளர்களாகக் கலந்துகொண்ட  சிலர் கருத்து தெரிவித்தனர். நான் பின்வரும் கருத்துகளைப் பதிவுசெய்தேன்:

" இந்தத் தேர்தலின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் வறட்சி எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் புள்ளிவிவரங்களோடு இரண்டு பக்கங்களில் தினமலர் நாளேடு செய்தி வெளியிட்டது. புதிய தலைமுறை தொலைக்காட்சி வேட்பாளர்களையும் வாக்காளர்களையும் சந்திக்க வைத்து ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இவை இரண்டும் முக்கியமான பாராட்டத்தக்க பங்களிப்புகள்.

பொதுவாக ஊடகங்கள் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. கட்சிகளுக்கும்  கட்சித் தலைவர்களுக்கும்தான் முக்கியத்துவம் தருகின்றன. தனிநபர் வழிபாட்டை ஊக்குவிப்பதாக அது இருக்கிறது. நான் எனது தொகுதிக்கென தனியே தேர்தல் அறிக்கை வெளியிட்டேன். அதில் கல்வி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி முதலியவற்றுக்கு முக்கியத்துவம் தந்திருந்தேன். ஆனால் அதை ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் தருவதன்மூலமே ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்" என நான் குறிப்பிட்டேன். 

நிகழ்ச்சியில் திரு ராஜ்மோகன் காந்தி, நீதியரசர் கே சந்துரு, தோழர் ஜி. ராமகிருஷ்ணன், பிரசன்னா ராமசாமி, சதானந்த் மேனன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment