Thursday, May 15, 2014

குறி சொல்லி நிஸார் கப்பானி தமிழில்: ரவிக்குமார்



பயம் நிறைந்த விழிகளோடு அமர்ந்திருந்தாள்
சோழிகளைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடி
சொன்னாள்: " துயரப்படாதே மகனே! நீ காதலில் விழ சபிக்கப்பட்டிருக்கிறாய்"
மகனே! மனம் கவர்ந்த ஒருத்திக்காகத் 
தன்னை அர்ப்பணிப்பவனும் ஒரு 
தியாகிதான்

********
எத்தனையோ காலமாக குறி சொல்கிறேன்
ஆனால் உனக்கு விழுந்த சோழிபோல எவருக்கும் விழுந்ததில்லை
எத்தனையோ காலமாகக் குறி சொல்கிறேன்
உனது துயரத்தைப்போல ஒருபோதும் நான் பார்த்ததில்லை
என்றென்றும் படகு ஓட்டுவதே உன் தலைவிதி
துடுப்பே இல்லாமல், காதல் என்னும் கடலில்
உனது வாழ்க்கை 
கண்ணீர்ப் புத்தகம்
நீருக்கும் நெருப்புக்கும் இடையில் 
அது சிறைபட்டுக் கிடக்கிறது

*********
அத்தனை வலியிலும்
அத்தனை துயரத்திலும் 
இரவு பகல் 
காற்றடிக்கும்போதும் மழைக்காலத்திலும் 
புயல் அடிக்கும் பொழுதானாலும்
காதல்- அதுதான் மகனே! 
தலைவிதிகளிலெல்லாம் சிறந்தது

************
உன் வாழ்க்கையில் ஒரு பெண் வருவாள் மகனே! அவளது விழிகள் அத்தனை அழகாயிருக்கும்
கடவுளுக்கு நன்றி
அவளது வாயோ ரோஜாப்பூ சிரிப்பெல்லாம் 
சங்கீதம்
வாழ்க்கைமீது அவளுக்கிருக்கும் நாடோடித்தனமான பித்து 
உன் காதலி அவளே உன் உலகம்
ஆனால் மழை நிரம்பியது உன் வானம்
உன் பாதைகள் தடுக்கப்பட்டு அடைக்கப்பட்டிருக்கின்றன மகனே! 
அரணுக்குள் உறங்குகிறாள் உன் தேவதை
அவளது தோட்டத்தின் சுவரை நெருங்குபவர் யாரோ அறைக்குள் நுழைந்து தனது ஆசையைச் சொல்பவர் யாரோ அவளது கேசத்தைக் கோதி சரிசெய்பவர் யாரோ அவர் அவளை இழந்துவிடுவார் மகனே! இழந்துவிடுவார். 

***********
அவளை எல்லா இடங்களிலும் தேடி அலைவாய், மகனே கடல் அலைகளிடம் கேட்பாய் கடற்கரைகளிடம் விசாரிப்பாய்
சமுத்திரமெங்கும் பயணிப்பாய்
ஆறெனப் பெருகும் உன் கண்ணீர் 
உன் வாழ்க்கை முடியும் தருணத்தில் 
நீ கண்டடைவாய் 
உன் காதலிக்கு நாடில்லையென்று 
வீடில்லையென்று
முகவரியில்லையென்று
புகையின் தடயத்தைத்தான் நீ
பின் தொடர்ந்துகொண்டிருந்தாயென்று

மகனே நீ கண்டுகொள்வாய்
நாடும் இல்லாத வீடும் இல்லாத 
ஒரு பெண்ணைக் காதலிப்பது
எத்தனை கடினமானதென்று

No comments:

Post a Comment