Monday, May 5, 2014

தேமுதிக வாக உருவெடுக்கப்போகும் காங்கிரஸ்



இன்று ஒரு ஆங்கில நாளேட்டின் செய்தியாளரோடு தேர்தல் நிலவரம் குறித்து உரையாடிக்கொண்டிருந்தேன். தமிழ்நாட்டில் ஐந்து தொகுதிகளில் காங்கிரஸ் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் என்றார். கன்யாகுமரி, சிவகங்கை, தேனி,கோவை, மயிலாடுதுறை எனப் பட்டியலிட்டார். மற்ற தொகுதிகளில் முப்பது முதல் அறுபதாயிரம் வாக்குகளைப் பெறும் என்றார். இந்த வாக்குகள் சிதறியதால் ஆளும் கட்சிதான் பலன் அடையப்போகிறது என்றார். 


தேர்தல் முடிவுகள் வெளிவந்ததற்குப் பிறகான கணக்குகளின்போது திமுக + காங்கிரஸ் வாக்குகளைக் கூட்டினால் பல இடங்களில் அது வெற்றி பெற்றிருக்கலாம் என்ற செய்தியை ஊடகங்கள் வெளியிடக்கூடும். அதை வைத்து திமுக காங்கிரஸ் கூட்டணி அமையாதது பெரிய தவறு எனவும் வாதிடக்கூடும். ஆனால் ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. திமுக காங்கிரஸ் கூட்டணி அமைந்திருந்தால் தமிழ்நாட்டின் தேர்தல் பிரச்சாரமே வேறாக இருந்திருக்கும். ஈழப் பிரச்சனை வலுவாக எழுப்பப்பட்டிருக்கும்; காங்கிரஸ் அரசின் அனைத்து செயல்பாடுகளையும் திமுக நியாயப்படுத்தவேண்டியிருந்திருக்கும். தற்போது இருந்ததைப்போல ' தாக்குதல்' நிலையில் இல்லாமல் ' தற்காப்பு' நிலைக்கு திமுக பிரச்சாரம் தள்ளப்பட்டிருக்கும். தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பது arithmatic அல்ல chemistry தான் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். 


இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வாங்கப்போகும் வாக்குகள் 2009 தேர்தலில் தேமுதிக வாங்கிய வாக்குகளை ஒத்திருக்கக்கூடும். அது 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் பேர சக்தியை அதிகரிக்கச் செய்யலாம். தனது நிலைபாட்டில் அக்கட்சி உறுதியாக இருந்தால் 2016 இல் அதன் தலைமையில் மாற்று அணி ஒன்று அமையக்கூடிய வாய்ப்பை மறுப்பதற்கில்லை.

No comments:

Post a Comment