Thursday, October 21, 2010

முள்ளிவாய்க்கால் : சேரன் கவிதைகள்

கொலைக்காட்சி
பொய்மையும் வன்மம் சூழ் மாயக் காட்சிகளும்
அவர்களுடைய படையெடுப்பில்
புகையுடன் சேர்ந்து மேலெழுந்தபோது
சொல் பிறழ்ந்தது
படிமங்கள் உடைந்தன
வாழ்க்கை குருதி இழந்தது
எறிகணை பட்டுத் தெறிக்கக்
காயம் பட்ட
இரண்டரை வயதுக் குழந்தையின் கைகளை
மயக்க மருந்தின்றி அறுக்கின்ற மருத்துவன்
இக்கணம் கடவுள்
நீரற்ற விழிகளுடன் அலறும் தாய்
ஒரு பிசாசு.

அஞ்சலி
புதையுண்டவர்கள்
எரியுண்டவர்கள்
கடலொடு போனவர்கள்
   -எல்லோரதும் தெளிவான, திருத்தமான தகவல்கள்
     உலகப் பணிமனையின்
     நிலத்தடி ஆவணக் காப்பகங்களுக்குப் போய் விட்டன
எங்கள் எல்லோருடைய  ஒற்றைப் புதைகுழி மீது
படைத்தளபதியின் கோவணத்தை
தேசியக் கொடியாக ஏற்றுகிறார்கள்
எங்கள் கண்ணீர் எழுப்பிய நினைவுச் சின்னத்தில்
ஒருவர் வெற்று வார்த்தைகளை எழுதுகிறார்
பலர் கனவுகளைப் பின்னுகிறார்கள்
மௌனம் கலையாமல்
அவன் கவிதையை எழுதுகிறான்.     

நன்றி : மணற்கேணி , ஜூலை - ஆகஸ்ட்  

No comments:

Post a Comment