ஃப்ரான்ஸ் நாட்டு அரசாங்கத்தால் 1900 ல் உருவாக்கப்பட்ட கீழ்த்திசை ஆய்வுப்பள்ளி (EFEO )யின் கிளை 1964 முதல் புதுச்சேரியில் செயல்பட்டுவருகிறது. அத்துடன் 1955 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட்டும் (IFP) அங்கே இயங்கிவருகிறது. அவற்றின் சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் ஆவணக் காப்பகத்தில் சுமார் 135000 புகைப்படங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. பழமையான கோயில் சிற்பங்கள், செப்புப் படிமங்கள், பௌத்த சமண சின்னங்கள் என பண்பாடு தொடர்பான அரிய கருவூலங்கள் அனைத்தும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிலிருந்து களவாடிச் செல்லப்பட்டு அயல்நாடுகளில் விற்கப்பட்ட அரிய சிலைகள் பலவற்றை இந்த புகைப்பட ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்படும் செப்புப் படிமங்களின் புகைப்படங்களை வைத்துத்தான் இப்போது மீட்டுள்ளனர். ஃப்ரான்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஶ்ரீபுரந்தன் நடராஜர் சிலை அண்மையில் அந்நாட்டுக்குச் சென்ற இந்தியப் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சிலைகளை அடையாளம் காண்பதில் தமிழகத் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் நாகசாமி முக்கிய பங்காற்றி வருகிறார்.
விருத்தாசலம், சுத்தமல்லி, ஶ்ரீபுரந்தன் எனப் பல்வேறு ஊர்களிலிருந்தும் கடத்தப்பட்ட அரிய சிலைகள், செப்புத் திருமேனிகள் பல இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்த ஆவணக் காப்பகத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் குறித்தும், களவாடப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டது குறித்தும், நமது கலை பொக்கிஷங்கள் எப்படி கவனிப்பாரின்றி சிதிலமடைந்துகொண்டிருக்கின்றன என்பதைப் பற்றியும் விவரிக்கிறது இந்த நூல். ஒரு அத்தியாயத்தில் புதுமைப்பித்தனின் 'சிற்பியின் நரகம்' சிறுகதையை முன்வைத்து கோயில் சிற்பங்களின் பெருமையைப் பேசியிருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர் கோபிநாத் ஶ்ரீகண்டன். இந்த நிறுவனங்கள் சீரியமுறையில் செயல்படப் பாதை வகுத்துத் தந்த ஃபிலியோஸா முதலானவர்களைப் பற்றியும், இங்கே தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் ஆய்வுப் பணிகளைப்பற்றியும்கூட இந்நூல் விவரிக்கிறது.
தமிழகத் தொல்லியல் துறை வெளியிடும் நூல்களைப் பார்த்தவர்கள் இந்த நூலின் நேர்த்தியையும் முக்கியத்துவத்தையும் வியக்காமல் இருக்கமுடியாது. இதை வெளியிட்டிருக்கும் IFP/ EFEO நிறுவனங்களுக்கும், நூலின் ஆசிரியர் கோபிநாத் ஶ்ரீகண்டன் அவர்களுக்கும் என் பாராட்டுகள்.
கோயில்களை மூடநம்பிக்கைகளின் உறைவிடமாக மட்டுமே பார்க்கும் வறட்டுப் பார்வை காரணமாகவே தொன்மையான கலைச் சின்னங்களை நாம்
புறக்கணித்துக்கொண்டிருக்கிறோம். இந்த நூலைப் படித்தால் நாம் இழந்துகொண்டிருப்பதன் மதிப்பு புரியும்.
துல்லியமான புகைப்படங்களோடு நேர்த்தியான வடிவமைப்பில் பதிப்பிக்கப்பட்டிருக்கும் இந்த நூலைத் தமிழில் வெளியிடுவதும் பள்ளிகளில் பயிற்றுவிப்பதும் அவசியம்.
Shadow of Gods - An archive and its images , Gopinath Sricandane
வெளியீடு: IFP, EFEO, Pondicherry
விலை: 1000/- ரூபாய்
No comments:
Post a Comment