மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது எதிர்பார்த்த ஒன்றுதான். 2013 ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆதரவானது என விமர்சிக்கப்பட்டது. தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பே அது வெளியில் சுற்றுக்கு விடப்பட்டதாகவும் பல நூறுகோடி ரூபாய் முறைகேடு நடந்ததென்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போது தலைமை நீதிபதியாகப் புதிதாகப் பதவியேற்ற திரு சதாசிவம் அவர்கள் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
அந்தத் தீர்ப்பை திரும்பப்பெறுவதாக உச்சநீதிமன்றம் இப்போது அறிவித்தபோதே அது மாறப்போகிறது என்ற சமிக்ஞை வெளிப்பட்டுவிட்டது.
திரு அல்டமாஸ் கபீர் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பு தனியார் கல்லூரிகளுக்கு உதவியாக அமைந்ததென்றால் இப்போது திரு தவே தலைமையிலான அமர்வு வழங்கியிருக்கும் தீர்ப்பு மேட்டிமை வர்க்கத்துக்கு பணக்காரர்களுக்கு நகரவாசிகளுக்கு சாதகமாக இருக்கிறது. இரண்டிலுமே பாதிப்பு கிராமப்புற ஏழை மாணவர்களுக்குத்தான்.
முந்தைய தீர்ப்பு லட்சம் லட்சமாக நன்கொடை வசூலிக்க தனியார் நிர்வாகத்தினருக்கு வழிதிறந்துவிட்டது. இப்போதைய தீர்ப்பு நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்கிறோம் என தனிப்பயிற்சி கும்பலின் கொள்ளைக்கு வழி அமைத்திருக்கிறது. நகர்ப்புற மேட்டிமை வர்க்கத்தினர் மட்டுமே இனி மருத்துவம் பயில முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது.
இந்த ஆண்டே அவசரம் அவசரமாக நுழைவுத்தேர்வை நடத்தவேண்டிய தேவை என்ன? இப்படித் தேர்வு நடத்தினால் 'நுழைவுத் தேர்வு நடக்காது ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில்தான் சேர்க்கை நடக்கப்போகிறது' என்ற நினைப்பில் எவ்விதத் தயாரிப்பும் இல்லாமல் இருந்த தமிழ்நாட்டு மாணவர்கள் எப்படி அதை எழுத முடியும்?
இதை ஒரு நிர்வாகப் பிரச்சனையாக மட்டுமே நீதிமன்றம் கருதியிருக்கிறது, இதை மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான பிரச்சனையாக நீதிமன்றம் பார்க்காதது பெரும் தவறாகும்.
மருத்துவக் கல்வியில் நடைபெறும் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அதே நேரத்தில் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் வழி காணவேண்டும்.
பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவது; கல்வியில் தனியார்மயத்தைத் தடுத்து நிறுத்துவது; தற்போது பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவது; கிராமப்புற மாணவர்களுக்கு சலுகை வழங்குவது - ஆகியவற்றின் மூலம்தான் இந்த சிக்கலுக்குத் தீர்வு காணமுடியும்.
இன்று கல்விக்காக நடத்தவேண்டிய போராட்டமே முதன்மையான போராட்டமாக மாறியிருக்கிறது. உச்சநீதிமன்றம் அதை உணரச்செய்வோம்!
No comments:
Post a Comment