நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்துகிறோம் என்ற பெயரில் விவசாயப் பயன்பாட்டுக்கு பம்ப் செட்டுகள் மூலம் எடுக்கப்படும் நிலத்தடி நீருக்குக் கட்டணம் வசூலிக்கும் முயற்சியில் சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான சட்ட மசோதா இப்போது மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக இன்று இந்து ஆங்கில நாளேட்டில் செய்திக் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது.
மத்திய அரசு கொண்டுவரும் இந்த சட்டம் 14 ஆவது நிதிக்குழு பரிந்துரைகளின் ஒரு அம்சம் ஆகும். 2015 ல் 14 ஆவது நிதிக்குழு அறிக்கை வெளியானபோதே அதில் இடம்பெற்றிருந்த விவசாயிகளுக்கு எதிரான அம்சங்களை நான் சுட்டிக்காட்டி கட்டுரைகளை எழுதினேன். 2015 பிப்ரவரியில் நான் 26.02.2015 அன்று எழுதிய கட்டுரை ஒன்றின் ஒரு பகுதியை இங்கே தருகிறேன்:
=====
விவசாயிகளுக்கு வேட்டுவைக்கும் 14 ஆவது நிதிக்குழு பரிந்துரைகள்
14 ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அந்தப் பரிந்துரைகளில் முக்கியமானவை பொதுமக்கள் பயன்படுத்தும் வசதிகள் தொடர்பான பரிந்துரைகளாகும். பாசனத்துக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரையும் அளக்கவேண்டும்; மின் மோட்டார்கள் அனைத்துக்கும் மீட்டர் பொருத்தவேண்டும் என அந்தப் பரிந்துரைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.
பரிந்துரை எண் 84 முதல் 92 வரை அதுகுறித்துப் பேசப்பட்டிருக்கிறது. மின்சார நுகர்வு அனைத்துக்கும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மீட்டர் பொருத்தப்படவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு உலை வைப்பதுதவிர வேறல்ல.
குடிதண்ணீர் மட்டுமின்றி பாசனத்துக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரையும் அளப்பதற்கு 2017 ஆம் ஆண்டுக்குள் மீட்டர் பொருத்தவேண்டும். குடிப்பதற்கும், பாசனத்துக்கும் பிற தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் தண்ணீர் அனைத்துக்கும் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கு சுயேச்சையான அமைப்பு ஒன்றை மாநில அரசுகள் உருவாக்கவேண்டும் என அது பரிந்துரை செய்திருக்கிறது.
இந்தப் பரிந்துரைகளை மத்திய அரசு அப்படியே ஏற்றுக்கொண்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான திருத்த மசோதாவின் அச்சுறுத்தலிலிருந்து விவசாயிகள் விடுபடாத நிலையில் மேலும் அவர்கள்மீது தாக்குதலைத் தொடுத்திருக்கிறது மத்திய அரசு. இந்தப் பரிந்துரைகளைத் தமிழக அரசு ஏற்று நடைமுறைப்படுத்தப் போகிறதா? அல்லது தனது எதிர்ப்பை மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்போகிறதா?
No comments:
Post a Comment