Saturday, October 1, 2011

மணிமேகலைக் காப்பியத்தில் காணும் பெண்கள் - வீ.எஸ்.ராஜம்



1. மணிமேகலையில் கண்ணகி
------------------------------------ 

மணிமேகலையில் கண்ணகியா? ஆம்! கண்ணகி பற்றி மாதவி சொன்ன ஒரு செய்திதான் மணிமேகலைக் கதையைத் தொடங்கிவைக்கிறது. 

மணிமேகலைக் காப்பியத்தில் மணிமேகலைதான் படிமை வடிவத்தில் உள்ள கண்ணகியைப் பார்க்கிறாள்; அவளோடு உரையாடுகிறாள். 

அது சரி, கண்ணகி பற்றி மணிமேகலைக்கு எப்படித் தெரிகிறது? தெரிந்தபின் அவள் என்ன செய்கிறாள்? இங்கே பார்ப்போம். 

முன்னுரையாகத் தெரிந்துகொள்ளவேண்டியது: கோவலன் மதுரையில் நேர்மையில்லாத வகையில் கொலைப்பட்ட பிறகு காவிரிப்பூம்பட்டினத்தில் மாதவி மணிமேகலையோடு ஒரு மாதவர் உறைவிடத்தில் தங்கியிருக்கிறாள். 

++++++++++++++++++++++  

கண்ணகி-மணிமேகலை அறிமுகம்:
-------------------------------------------

காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிழா. அந்த விழாவிற்கு மணிமேகலையொடு மாதவி வரவில்லை. அது மாதவியின் தாய் சித்திராபதிக்குத் தணியாத துன்பம் கொடுக்கிறது. அதனால் சித்திராபதி மாதவியின் தோழி வயந்தமாலையைக் கூப்பிட்டு, "இந்த ஊரார் பரப்பும் அலரை [மாதவிக்கு] எடுத்துச் சொல்லு" என்று அவளை மாதவி இருக்கும் மாதவர் உறைவிடத்துக்கு அனுப்புகிறாள். 

வயந்தமாலை மாதவியின் வாடிய மேனியைக் கண்டு வருந்துகிறாள். தான் கற்ற கலைகளையெல்லாம் பயன்படுத்தாமல் புறக்கணித்துவிட்டு, மாதவி தவ வாழ்க்கை மேற்கொண்டதை அந்த ஊர் மக்கள் பழிக்கிறார்கள் என்று தெரிவித்து, ஊரார் அப்படிச் சொல்லுவது நல்லதில்லை, நாணத்தக்கது என்று சுட்டிக்காட்டுகிறாள். 

மாதவி வயந்தமாலைக்கு என்ன மறுமொழி சொல்கிறாள்? 

தன் காதலன் கோவலனுக்கு உண்டான கொடுமையான துயரத்தைக் கேட்டபோது மாதவி உயிர்விடவில்லை, இல்லையா. தான் அப்படி உயிர்விடாத அதனாலேயே ஊராரின் புகழைத் தான் இழந்ததாகவும் அது வெட்கப்படத்தக்கது என்றும் தொடங்கி, பத்தினிப் பெண்டிர் எப்படி நடந்துகொள்வார்கள் என்று விளக்கிச் சொல்கிறாள். 

அப்போதுதான் கண்ணகி பற்றிய குறிப்பு வருகிறது. 

"பத்தினிப்பெண்கள் தங்கள் காதலர் இறந்தால் அவருக்கு மூட்டிய தீயை அணுகி இருந்து ஊதுலைபோல் மூச்சு விட்டுத் தங்கள் உயிரைக் கொடுப்பார்கள். அப்படிக் காதலரோடு சேர்ந்து உயிர் கொடுக்காதவர்கள் (தமக்கு எனத் தனியாகத்) தீ வளர்த்து அதில் புகுந்து உயிர் விடுவார்கள். அப்படி உயிரைப் போக்கிக்கொள்ளாவிட்டால் தம் காதலரோடு (அடுத்த பிறவியில்) சேர்ந்து வாழவேண்டிய வாழ்க்கைக்கு நேர்ந்துகொண்டு நோன்பு இருப்பார்கள். ஆனால், எங்கள் ஆயிழை [கண்ணகி] அப்படியெல்லாம் எதுவும் செய்யவில்லை. அவள் தன் கணவனுக்கு ஏற்பட்ட கொடிய துயரைப் பொறுக்கமுடியாமல் மணம்பொருந்திய கூந்தல் தன் முதுகில் பரந்துகிடக்க, கண்ணீரில் நனைந்த தன் அழகிய மார்பகத்தைத் திருகி, காவலனின் பெரிய ஊருக்குத் தீ மூட்டிய மாபெரும் பத்தினி."

"காதலர் இறப்பின் கனை எரி பொத்தி
ஊதுலைக் குருகின் உயிர்த்து அகத்து அடங்காது
இன் உயிர் ஈவர்; ஈயார் ஆயின்
நல் நீர்ப் பொய்கையின் நளி எரி புகுவர்;
நளி எரி புகாஅராயின் அன்பரோடு
உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்படுவர்
பத்தினிப் பெண்டிர் பரப்பு நீர் ஞாலத்து;
அத்திறத்தாளும் அல்லள் எம் ஆயிழை;
கணவற்கு உற்ற கடும் துயர் பொறாஅள்
மணமலி கூந்தல் சிறு புறம் புதைப்பக்
கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை
திண்ணிதின் திருகித் தீ அழல் பொத்திக்
காவலன் பேரூர் கனை எரி மூட்டிய
மாபெரும் பத்தினி" 

மாதவி, ஆம், மாதவிதான் கண்ணகியை இப்படி உரிமையோடு "எம் ஆயிழை" என்று குறித்துச் சொல்லி அவளை "மாபெரும் பத்தினி" என்று பாராட்டுகிறாள். பிற பத்தினிப் பெண்கள்போல நடந்துகொள்ளாமல், கணவன்மேல் உண்டான நேர்மையற்ற பழிச்சொல்லைத் துடைப்பதற்காகக் கண்ணகி எடுத்துக்கொண்ட முயற்சியும் [அதாவது, பாண்டிய அரசனிடம் வழக்குரைத்து வென்றது] செய்த செயலுமே [அதாவது, மதுரையை எரித்தது] அவளை ஒரு "மாபெரும் பத்தினி"யாக மாதவிக்குக் காட்டியது. எந்த வகையிலும் கணவனைக் "காப்பாற்றிய" பெண் அல்லவா அவள்! அதனால்தான் அவள் "மாபெரும் பத்தினி." 

இப்படிக் கண்ணகியை "மாபெரும் பத்தினி" என்று வியந்து பாராட்டிய மாதவி, கோவலன் கொலைப்பட்ட கொடுமையான செய்தி கேட்டு ... தான் செய்தது என்ன என்றும் சொல்கிறாள். பெருமைக்குரிய தவத்தில் ஈடுபட்டவர் வாழும் இடத்துக்கு வந்து, அறவண அடிகள் காலில் விழுந்து, துன்பம் மேலிட்ட நிலையில் தன் காதலனுக்கு ஏற்பட்ட கடுமையான துயரத்தைச் சொன்னாள். அறவண அடிகள் அவளுக்கு அறவுரை சொல்லி, ஐந்துவகை ஒழுக்கத்தின் அடக்கம் பற்றிச் சொல்லி, துயரத்திலிருந்து மீளும் வகையைக் காட்டினார்.

"பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்;
பிறவார் உறுவது பெரும் பேரின்பம்;
பற்றின் வருவது முன்னது; பின்னது
அற்றோர் உறுவது, அறிக! ... "

[சுருக்கமான பொருள்: இவ்வுலகில் பிறந்தவர்கள் அடைவது மேல்மேலும் பெருகிவரும் துன்பமே. பிறவாதவர்களுக்குக் கிடைப்பது பேரின்பம். துன்பம் என்பது ஒன்றன்மேல் வைத்த பற்றினால் வருவது. அந்தப் பற்றைத் துறந்தவர்கள் அடைவது பேரின்பம். இதைத் தெரிந்துகொள்.]

இப்படிச் சொல்லி ... காமம், கொலை, கள், பொய், களவு என்ற ஐந்தும் முழுவதுமாக அடங்கும் இயல்பையும் ["ஐவகைச் சீலத்து அமைதி"] காட்டி, பிறப்பிலிருந்து விடுபடும் வழி இது என்று விளக்கினார் அறவண அடிகள்.

அப்படி வழிகாட்டிய மாதவர் உறைவிடத்தில்தான் மாதவி இப்போது மணிமேகலையோடு தங்கியிருக்கிறாள்.

வயந்தமாலைக்கு மாதவி சொன்ன இந்தச் செய்தியெல்லாம் அங்கே பூத்தொடுத்துக்கொண்டிருந்த மணிமேகலையின் காதில் விழுகிறது. தன் தந்தையும் தாயும் பட்ட கொடுந்துன்பத்தைக் கேள்விப்பட்டதனால் அவள் நெஞ்சு கலங்கி, அழகிய சிவந்த கண்களின் அழகை அழிக்கும் வகையில் கண்களில் நீர் உருண்டு வெளிப்பட்டு அவள் தொடுத்துக்கொண்டிருந்த மணம் பொருந்திய மலர் மாலையை நனைக்கிறது. 

மணிமேகலையின் கண்ணீரால் மலர் மாலை தூய்மை இழந்தது என்று மாதவி சுட்டிக்காட்டுகிறாள். மகளின் கண்ணீரைத் தன் அழகிய சிவந்த கையினால் துடைத்து, புதிய தூய மலர்களை மணிமேகலையே மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று சொல்கிறாள். 

இப்போதுதான் உண்மையான "மணிமேகலை"க் கதை தொடங்குகிறது. 

இங்கே இன்னொன்றும் பார்க்கவேண்டும் ... இப்போதுதான் மாதவி-மணிமேகலை உறவு [பெற்றவள்-மகள் உறவு] விடுபடத் தொடங்குகிறது. அதை இன்னொரு பதிவில் விளக்கமாகப் பார்ப்போம். 

மணிமேகலையும் சுதமதியும் புதுமலர் கொண்டுவருவதற்காக மலர்வனம் செல்கிறார்கள்.


தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகள்
----------------------------------------

புதிய தூய மலர்கள் கொண்டுவருவதற்காக மலர்வனத்துக்கு மணிமேகலை போனதை எட்டிகுமரன் என்னும் தன் நண்பன் மூலம் கேட்டு, சோழ இளவரசன் உதயகுமரன் அவளைத் தேடிப் போகிறான். சுதமதி அவனுக்கு மணிமேகலை தவ வழியில் போகிற நிலையைச் சொல்லி அவனைத் திருப்பி அனுப்புகிறாள். மணிமேகலாதெய்வம் மணிமேகலையை மணிபல்லவத்தீவுக்குக் கொண்டுவருகிறாள். மணிபல்லவத்தீவில் இருந்த புத்தபீடிகையை வணங்கிய மணிமேகலை தன் பழம்பிறப்பு உண்மையை அறிகிறாள். ஆபுத்திரன் கோமுகிப் பொய்கையில் இட்டுப் போன அமுதசுரபி மணிமேகலை கைக்கு வருகிறது. மணிமேகலை காவிரிப்பூம்பட்டினத்துக்கு அமுதசுரபியோடு வருகிறாள். அறவண அடிகளைக் கண்டு வணங்கி மணிபல்லவத்தீவுச் செய்திகளைச் சொல்கிறாள். அறவண அடிகள் சொன்னபடி, அமுதசுரபியைக் கொண்டு பசித்த உயிர்களின் பசிப்பிணி தீர்க்க முனைகிறாள். ஒரு சாபத்தினால் யானைத்தீ என்ற அடங்காப் பசி ஏற்பட்டு அங்கே திரிந்துகொண்டிருந்த காயசண்டிகை என்பவளுடைய நெடுங்காலப் பசி மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபி மூலம் தீர்கிறது. பசி நோய் தீர்ந்த காயசண்டிகை அந்த ஊரைவிட்டுக் கிளம்பி, தன் ஊரை நோக்கிப் போகிறாள். மணிமேகலை இப்படி அறம் செய்வதைக் கேள்விப்பட்ட உதயகுமரன் மீண்டும் அவளைத் தேடி வருகிறான். அவனிடமிருந்து தப்பிக்கவேண்டி மணிமேகலை காயசண்டிகை உருவம் எடுக்கிறாள். அதே நேரத்தில் உண்மைக் காயசண்டிகையைத் தேடி வந்த அவள் கணவன் காஞ்சனன் உதயகுமரனிடம் காயசண்டிகை வடிவில் இருந்த மணிமேகலை உரையாடுவது கண்டு தவறாக நினைத்து, காத்திருந்து, நள்ளிரவில் அங்கே மீண்டும் வந்த உதயகுமரனை வாளால் வெட்டிக் கொன்றுவிடுகிறான். இது தெரிந்த சோழ அரசனும் அரசியும் (== உதயகுமரனின் பெற்றோர்) மணிமேகலையைச் சிறைப்படுத்துகிறார்கள். மணிமேகலையைச் சிறையிலிருந்து விடுவிக்க ... சித்திராபதி, அறவண அடிகள், மாதவி, சுதமதி எல்லாரும் சோழ அரசியிடம் வருகிறார்கள். அப்போது அறவண அடிகளிடம் அறம் கேட்ட மணிமேகலை, "நான் இனி அந்த ஊரில் இருந்தால் 'உதயகுமரனுக்குக் கூற்றாக இவள் இருந்தாள்' என்று மக்கள் பேசுவார்கள், அதனால் இங்கே இருக்கமாட்டேன். ஆபுத்திரன் இப்போது பிறந்திருக்கும் நாட்டில் அவனப் பார்த்துவிட்டு, பிறகு வஞ்சி நகரம் போய்ப் பத்தினிக்கடவுளைப் பார்த்தபின் எல்லா இடங்களுக்கும் போய் நல்லறம் செய்வேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்புகிறாள். சாவக நாட்டில் போய் ... ஆபுத்திரனை ... அதாவது இந்தப் பிறவியில் புண்ணியராசனாகப் பிறந்திருக்கும் அரசனைப் பார்த்து அவனை மணிபல்லவத் தீவுக்கு வரவைத்து அவனுடைய பழம்பிறப்பை அவன் உணரச்செய்தபின் மணிபல்லவத்திலிருந்து வஞ்சி மாநகரத்துக்குத் திரும்புகிறாள்.

 

மணிமேகலை-கண்ணகி உரையாடல்:
-------------------------------------------

கண்ணகி, கோவலன் இருவரையும் கடவுளாக வடித்துவைத்திருக்கும் கோட்டத்தைக் காணும் வேட்கையுடன் மணிபல்லவத்திலிருந்து வான வழியில் வருகிறாள் மணிமேகலை. 

"தணியாக் காதல் தாய் கண்ணகியையும்
கொடை கெழு தாதை கோவலன் தன்னையும்
கடவுள் எழுதிய படிமம் காணிய 
வேட்கை துரப்பக் கோட்டம் புகுந்து ..."

[சுருக்கமான பொருள்: குறையாத காதல் கொண்டிருந்த தாய் கண்ணகியையும், பிறர்க்குக் கொடுத்தலில் சிறந்த தந்தை கோவலனையும் கடவுள் வடிவத்தில் அமைத்திருப்பதைக் காணும் ஆவல் உந்த, அந்தக் கோட்டத்தின் உள்ளே நுழைந்து ...]


(இங்கே ஒரு கேள்வி எழுகிறது. கண்ணகி கோட்டம் என்றால் மட்டுமே இன்று பலருக்கும் புரியும். ஆனால் ... கோவலனுக்கும் அங்கே ஒரு சிலை இருந்திருக்கவேண்டுமே ... சாத்தனார் கூற்றுப்படி? அந்தக் கோவலன் படிமம் எங்கே போயிற்று?)


கோட்டத்தின் உள்ளே போன மணிமேகலை கண்ணகியின் பண்புகளைப் போற்றிச் சொல்லி, அழுது கேட்கிறாள்:

"அற்புக்கடன் நில்லாது நல் தவம் படராது
கற்புக்கடன் பூண்டு நும் கடன் முடித்தது
அருளல் வேண்டும்"

[சுருக்கமான பொருள்: (தாங்கள்) "தான்" என்பது அறுந்த நிலையில் படும் கடமையை மேற்கொள்ளவில்லை; நல்ல தவம் செய்யும் முயற்சியில் ஈடுபடவில்லை; கற்பு என்ற கடமையை மேற்கொண்டு உங்கள் கடமையைச் செய்து முடித்தது பற்றித் தெரிவிக்கவேண்டும்.]

குறிப்பு: உரையாசிரியர் கருத்துப்படி, "அற்புக்கடன்" என்பது காதலன் இறப்ப உடன் இறத்தலும், தீப்பாய்தலும். "நல் தவம் புரிதல்" என்பது நல்ல தவ வழியில் சேருதல். அதாவது ... கைம்மை நோன்பை நோற்று உடம்பை வருத்துதல். "கற்புக்கடன்" என்பது கற்பைக் கடனாகக் கொள்ளுதல்.

மணிமேகலையின் வியப்பு இப்படி இருந்திருக்கலாம்: கோவலன் இறந்தபோது கண்ணகி இந்த உலகில் தன் இருப்பை நீக்கி அவனைப் பின்தொடர்ந்து தானும் இறக்கவில்லை ["அற்புக் கடன்" ஆற்றவில்லை]; அதன் பிறகு உயிரோடு இருந்தும் அவள் தவ வாழ்க்கையையும் மேற்கொள்ளவில்லை. அப்படி இருந்தும் தன் தாயான மாதவியே "மாபெரும் பத்தினி" என்று போற்றக்கூடிய அளவில், கண்ணகி கற்புக் கடமையை எப்படிச் செய்து முடித்தாள்? 

அது பற்றிய விளக்கத்தை இப்போது கண்ணகிப் படிமத்திடம் கேட்கிறாள்.


அப்போது அந்தப் பத்தினிக் கடவுள் (கண்ணகி) சொல்கிறாள்: 

"எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது
வெம்மையின் மதுரை வெவ் அழல் படு நாள்
மதுராபதி எனும் மாபெரும் தெய்வம் 
இது நீர் முன் செய் வினையின் பயனால் ...
... சாபம் கட்டியது ஆகும்
உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது எனும்
மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும் 
சீற்றம் கொண்டு செழுநகர் சிதைத்தேன்"

[சுருக்கமான பொருள்: எம் தலைவருக்கு (== கோவலனுக்கு) உண்டான துன்பத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் மதுரை நகரம் வெம்மையான தீயில் எரிந்தபோது ... மதுராபதி என்ற பெயருடைய ஒரு மிகப் பெரிய தெய்வம் வந்து எனக்குச் சொன்னது: "இது நீங்கள் உங்கள் முற்பிறவியில் செய்த ஒரு செயலின் பயன் தான். அந்த முற்பிறவியில் ஒருத்தி இட்ட சாபம்தான் இப்போது கூடிவந்திருக்கிறது ... . (நீங்கள்) செய்த எந்தச் செயலும் ஏதாவது ஒரு வடிவில் வந்து தன் பயனைக் கொடுக்காமல் விடாது." இப்படி அந்தப் பெரும் தெய்வம் உண்மையை விளக்கிச் சொன்ன பிறகும் ... அடக்க முடியாமல் பொங்கிவந்து வெளிப்பட்ட என் கோபத்தால் ... செழிப்பாக இருந்த ஊரைச் சிதைத்தேன்.]

முற்பிறவியில் அப்படிக் கோவலனும் கண்ணகியும் என்ன செய்தார்கள்? அதற்காக யார் என்ன சாபம் இட்டார்கள்?


கோவலன் முற்பிறவியில் பரதன் என்றவனாக இருந்து செய்தது
----------------------------------------------------------------------------- 

கலிங்க நாட்டில் தாய உரிமையோடு (== மரபு வழிச் சொத்துரிமையோடு) வசு, குமரன் என்று இரண்டு மன்னர் இருந்தார்கள். அவர்கள் முறையே, சிங்கபுரம் கபிலை என்று இரண்டு இடங்களை ஆண்டுவந்தார்கள். ஒரு முறை, இரண்டு பேருக்கும் இடையே பெரிய போர். அதனால், ஆறு காவதப் பரப்பளவில் யாரும் போக வர முடியவில்லை.

ஆனால், பாவம், பொருள் ஈட்டுவதற்காக, சங்கமன் என்பவன் பல அணி, ஆபரணங்களை எடுத்துக்கொண்டு, யாருக்கும் தெரியாமல், தன் மனைவியுடன் அந்த வழியே போகிறான். போய், அரிபுரத்தைச் ( == சிங்கபுரத்தைச்) சேர்கிறான் அங்கே தான் கொண்டுவந்த பொருள்களை விற்கப் பார்க்கிறான். சங்கமனைப் பார்த்தவர்கள் அந்தச் செய்தியைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். 

சிங்கபுர மன்னனுக்கு வேலை செய்து வந்த பரதன் என்பவன் சங்கமனைப் பிடித்துக்கொண்டுபோய் "இவன் ஓர் ஒற்றன்" என்று மன்னனிடம் சொல்லி, குற்றம் செய்யாத சங்கமனைக் கொலைப்படுத்துகிறான்.

சங்கமன் மனைவி பெயர் நீலி. அவள் தன் கணவன் சங்கமன் நேர்மையில்லாத முறையில் தவறாகக் கொலைப்பட்டது தாங்காமல் அழுது அரற்றி ஒரு மலைமேலிருந்து விழுந்து தன் உயிரைப் போக்கிக்கொள்கிறாள். அப்போது அவள் இட்ட சாபமே இப்போது வந்து கட்டியிருக்கிறது.

முற்பிறப்பில் பரதனாக இருந்தவனே இப்பிறப்பில் கோவலன். அவன் அந்தப் பிறப்பில் செய்த குற்றம் ... குற்றம் செய்யாத சங்கமனை ஒற்றன் என்று சொல்லிக் கொலைப்படுத்தியது. அந்தச் சங்கமன் மனைவி நீலி இட்ட சாபமே இந்தப் பிறவியில் கோவலனை அவன் செய்யாத தவறுக்காகக் கொலைப்படுத்தியது.

[குறிப்பு: போன பிறவியில் கண்ணகியின் பெயர் என்ன என்று தெளிவாகத் தெரியவில்லை. போன பிறவியில் பரதனின் மனைவியாக இருந்த நீலிதான் இந்தப் பிறவியில் கோவலன் மனைவி கண்ணகியா? மணிமேகலையில் அப்படித் தெளிவான குறிப்பு இல்லை.]


கண்ணகி சொல்வது
------------------------- 

"உம்மை வினைவந்து உருத்தல் ஒழியாது எனும்
மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும்
சீற்றம் கொண்டு செழு நகர் சிதைத்தேன்"

[சுருக்கமான பொருள்: முன்பு செய்த செயலின் பயன் உருவெடுத்து வந்து தன் பயனைக் கொடுக்காமல் விடாது என்று அந்த மதுராபதித் தெய்வம் உண்மையை விளக்கிச் சொன்ன பிறகும் ... என் சீற்றத்தினால் வளம் பொருந்திய (மதுரை) நகரத்தைச் சிதைத்தேன்.]


இங்கே ஒரு கேள்வி எழுகிறது. கண்ணகி மதுரையை எரித்தபோதுதான் மதுராபதித் தெய்வம் கண்ணகிக்குத் தோன்றிக் கோவலனின் பழவினை பற்றிச் சொல்கிறாள். அதைக் கேட்டபின்னரும் சீற்றம்கொண்டு வளமான மதுரையைச் சிதைத்ததாக கண்ணகி சொல்கிறாள். அதை இங்கே மணிமேகலையில் படிக்கிறோம். மதுரை எரிந்ததற்குப் பின்னும் வேறு என்ன சிதைவு நடந்திருக்கும்? தெரியவில்லை.

இங்கே இன்னொரு கேள்வி எழலாம். அப்படி மதுரையைத் தீயுண்ணச் செய்த கண்ணகியும் பழவினையால் கொலைப்பட்ட கோவலனும் தேவர்கள் புடைசூழ விண்ணுலகம் சென்றார்கள் என்று படிக்கிறோம். அந்த நல்ல நிகழ்ச்சி எப்படி இயன்றது? 

கண்ணகி விளக்குகிறாள் ... அது அவர்கள் அதற்குமுன் செய்த நல் வினைப் பயனால் இயன்றது.

அந்த நல்வினைப் பயன் தீர்ந்த பிறகு, தன் சினத்தால் அவள் மதுரையை அழித்த பாவம் எந்த வகையிலாவது தன் பயனைக் கொடுக்குமாம்.

"மேற்செய்த நல் வினையின் விண்ணவர்ச் சென்றேம்
அவ்வினை இறுதியின் அடு சினப் பாவம்
எவ்வகையானும் எய்துதல் ஒழியாது"

[சுருக்கமான பொருள்: முன்பு செய்த நல் வினையின் பயனால் விண்ணவராய்ப் போனோம். விண்ணவர் உலகத்தில் நல்வினை நுகர்ச்சிக் காலம் முடிந்த பிறகு மதுரையைச் சினத்தினால் அழித்த பாவம் எந்த வகையிலாவது வந்து (என்னை) அடையாமல் போகாது.]


"உம்பர் இல்வழி இம்பரில் பல்பிறப்பு
யாங்கணும் இருவினை உய்த்து உமைப் போல
நீங்கரும் பிறவிக் கடலிடை நீந்திப்
பிறந்தும் இறந்தும் உழல்வோம்"

[சுருக்கமான பொருள்: மேல் உலக வாழ்க்கை இல்லாமல் போன பிறகு, இந்த உலகத்தில் பல பிறவிகளும் எடுத்து இரு வினைகளாலும் எங்கேயும் செலுத்தப்படுவோம்; உங்களைப் போலவே நீங்குவதற்கு அரிதான பிறவிக் கடலில் நீந்தி, பிறந்தும் இறந்தும் உழலுவோம்.]


அதற்குப் பின் என்ன நடக்குமாம்? 

மழை பொய்க்காத மகத நாட்டில் புத்த ஞாயிறு தோன்றுமாம். 

"மறந்தும் மழை மாறா மகத நன்னாட்டுக்
கரவு அரும் பெருமைக் கபிலையம்பதியில்
அளப்பரும் பாரமிதை அளவின்று நிறைத்துத்
துளக்கம்-இல் புத்த ஞாயிறு தோன்றிப் "

[சுருக்கமான பொருள்: மறந்துகூட மழை பொய்க்காத நல்ல மகத நாட்டில் மறைத்தல் இல்லாத அருமையான பெருமையை உடைய கபிலை நகரில் புத்த ஞாயிறு தோன்றும் -- (உயிர்கள்) அளவிலாத நோவைச் சுமந்துகொண்டிருக்கும் நிலையை ஊடுருவி நிறைத்துக்கொண்டு.]


அப்படித் தோன்றும் புத்த ஞாயிறு எங்கே இருப்பிடம் கொள்ளும்? ஒரு போதி (மரத்தின்) மூலத்தில் வந்து பொருந்தும். அதன் பின் அறம் தெரிவிக்கும்.

"போதி மூலம் பொருந்திவந்து அருளித் 
தீதறு நால்வகை வாய்மையும் தெரிந்து 
பன்னிரு சார்பின் பகுதித் தோற்றமும்
அந்நிலை எல்லாம் அழிவுறு வகையும்
இற்று என இயம்பிக் குற்ற வீடு எய்தி
எண்ணறும் சக்கரவாளம் எங்கணும் 
அண்ணல் அறக்கதிர் விரிக்கும் காலை"

[சுருக்கமான பொருள்: (அந்தப் புத்த ஞாயிறு) போதி மரத்தடியில் சேர்ந்து இருந்து, தீது இல்லாத நான்கு வகை உண்மைகள், பன்னிரண்டு வகை நிதானங்கள், அவை எல்லாம் அழியும் வகை, எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லி, குற்றங்களிலிருந்து நீங்கி, சக்கரவாளம் எங்கும் அறக்கதிரைப் பரப்பும்; அப்போது ...]

"பைந்தொடி தந்தையுடனே பகவன் 
இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின்
துன்பக் கதியில் தோற்றரவு இன்றி
அன்புறு மனத்தோடு அவன் அறம் கேட்டுத்
துறவி உள்ளம் தோன்றித் தொடரும்
பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம்"

[சுருக்கமான பொருள்: பைந்தொடி! உன் தந்தையுடன் நானும் பகவனுடைய ஏழு இந்திர விகாரமும் தொழுததின் பயனால், துன்பம் சேர்க்கும் வழியில் போகாமல் அன்புடைய மனத்துடன் அவன் (== புத்தன்) சொல்லும் அறமொழிகளைக் கேட்டு, துறக்கும் மனப்பக்குவம் அடைந்து, தொடர்ந்துவரும் பிறவிகளை நீக்கும் பெருமையை அடைவோம்.]

"அத்திறம் ஆயினும் அநேக காலம்
எத்திறத்தார்க்கும் இருத்தியும் செய்குவம்"

[சுருக்கமான பொருள்: எங்கள் போக்கு அப்படி அமைந்தாலும், பல காலம் எவ்வகைப் பட்டவருக்கும் வேண்டுவன செய்வோம்.]

"... நீயும்
முறைமையின் இந்த மூதூர் அகத்தே
அவ்வவர் சமயத்தறிபொருள் கேட்டு
மெய்வகை இன்மை நினக்கே விளங்கிய
பின்னர்ப் பெரியோன் பிடக நெறி கடவாய்
இன்னது இவ்வியல்பு"

[சுருக்கமான பொருள்: நீயும் இந்த (வஞ்சி) மூதூரில் பல சமயத்தவரும் அறிந்த பொருளை அவரவர் சொல்லக் கேட்டு, அவற்றில் உண்மைப் பொருள் இல்லை என்பதை விளங்கிக்கொண்டபின் பெரியோனுடைய பிடக நெறியைக் கடந்து போகமாட்டாய். இதுவே இயல்பு.]

இப்படிக் கண்ணகி மணிமேகலைக்கு எடுத்துச் சொல்கிறாள்.


உடனே, மணிமேகலை என்ன செய்கிறாள்? முன்பு ஒரு முறை மணிபல்லவத்தீவில் மணிமேகலா தெய்வம் தனக்குத் தந்த மந்திரம் ஒன்றை, அதாவது மாற்று உருவம் கொள்ளும் மந்திரத்தை, ஓதி ஒரு மாதவன் வடிவம் எடுக்கிறாள்.

"இன்னது இவ்வியல்பு எனத் தாய் எடுத்து உரைத்தலும்
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
விளைபொருள் உரையார் வேற்றுருக் கொள்க என
மையறு சிறப்பின் தெய்வதம் தந்த 
மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவாய் ...
... ... ... ..."

[சுருக்கமான பொருள்: இது இன்னதின் இயல்பு என்று (கண்ணகியாகிய) தாய் எடுத்துச் சொன்னதும், (முன்பு ஒரு முறை, மணிபல்லவத்தீவில் வைத்து) இவள் இளைய பெண் என்று ஒருவரும் உனக்குத் தத்தம் சமயத்தின் தத்துவங்களை எடுத்துச் சொல்லமாட்டார்கள் என்று சொல்லி வேற்று உருவம் கொள்வதற்கு என்று (மணிமேகலா) தெய்வம் தந்த மந்திரத்தை மணிமேகலை ஓதி ஒரு மாதவன் வடிவம் எடுத்து ...]

மாதவன் வடிவில் மணிமேகலை வஞ்சி நகரத்தில் புகுந்து அங்கே பல சமயவாதிகளைக் கண்டு அவர்களுடைய கொள்கைகளைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறாள். அப்படி அவள் கண்டு கேட்ட சமயத்தவர்: வைதிக மார்க்கத்து அளவை வாதி, சைவ வாதி, பிரம வாதி, வைணவ வாதி, வேத வாதி, ஆசீவக நூல் அறிந்தவன், நிகண்ட வாதி, சாங்கிய மதத்தோன், வைசேடிகன், பூதவாதி

( தொடரும்)

--
நன்றி : தமிழ் மன்றம் 

3 comments:

  1. நன்றி - மிகப் பெரிய வரலாறு...

    ReplyDelete
  2. சிங்கபுரம் என்ற பெயர் மணிமேகலை காப்பியத்தில் எந்தக் காதையில் இடம்பெறுகிறது. சிங்கபுரம் எங்கே உள்ளது? கலிங்க நாட்டிலா? இலங்கையின் வடபகுதியிலா? சிங்கப்பூர் என்பதன் பூர்வீகம் சிங்கபுரம் என்ற பெயராகத்தான் இருக்கும். பூர்வீக சிங்கப்பூர் 13ஆம் நூற்றாண்டில் ஒரு வணிகத்தலமாக இருந்திருக்கிறது. சிங்கபுரத்துக்கு விளக்கம் தேவை. நன்றி.

    ReplyDelete
  3. சிங்கபுரம் என்ற பெயர் மணிமேகலை காப்பியத்தில் எந்தக் காதையில் இடம்பெறுகிறது. சிங்கபுரம் எங்கே உள்ளது? கலிங்க நாட்டிலா? இலங்கையின் வடபகுதியிலா? சிங்கப்பூர் என்பதன் பூர்வீகம் சிங்கபுரம் என்ற பெயராகத்தான் இருக்கும். பூர்வீக சிங்கப்பூர் 13ஆம் நூற்றாண்டில் ஒரு வணிகத்தலமாக இருந்திருக்கிறது. சிங்கபுரத்துக்கு விளக்கம் தேவை. நன்றி.

    ReplyDelete