Monday, October 24, 2011

தொல்காப்பியர் அடிச்சுவட்டில்

தொல்காப்பியர் அடிச்சுவட்டில் 

முனைவர் வீ.எஸ்.ராஜம் 

"வடசொல்" என்ற சொல்லைக் கேட்டாலே/படித்தாலே இக்காலத்தில் பலருக்கு உடலிலும் மனதிலும் ஒருவகை எரிச்சல் ஏற்படுவதைப் பார்க்கிறேன், உணர்கிறேன். 

அவர்களுக்கு ஏன் அந்த எரிச்சல் என்பதற்கான தெளிவான விளக்கம் இன்றுவரை எனக்குக் கிடைக்கவில்லை. 

எனக்குத் தமிழ் எலக்கணம் சொல்லிக்குடுத்த வாத்திமார் எல்லாரும் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவங்க -- பள்ளிக்கூடக் காலத்துலெர்ந்து. இது புரியலெ, இது தெரியலெ, இது வெளங்கலெ--னு எது கேட்டாலும் ... நக்கல், கிண்டல் ஒண்ணு இல்லாம அன்பா அமைதியா வெளக்கம் சொல்வாங்க. "அட, தெரியாம, புரியாமத்தானெ புள்ளெ கேக்குது" அப்டி நெனெச்சிருப்பாங்கபோல.  ஏன் ... ரொம்ப ரொம்பப் பெரியவங்க எலக்குவனார், சுப. அண்ணாமலெ ... அவுங்களெயெ எடுத்துக்குவமே. அவங்க ரெண்டு பேரும் தொல்காப்பியம், நன்னூல் அல்லாத்தெயும் மனப்பாடம் பண்ண வச்சாங்க அந்தக் காலத்துலெ. எவ்வளவு மக்கான கேள்வி கேட்டாலும் அன்போடெ வெளக்கம் சொல்லுவாங்க. ஒரு கிண்டல், நக்கல், கேலி இருக்காது.

இப்ப, சுப. அண்ணாமலை ஐயா மட்டும்தான், வயசாகிப்போய், உடல் மட்டும் தளர்ந்து இருக்கார். மனதோ. அறிவோ, நினைவோ ... தளர்ச்சி என்பதை அவரிடம் காட்டவேயில்லை! வள்ளலாரெப் பத்திப் பேசச் சொல்லுங்க ... மணிக்கணக்காப் பேசத் தயாரா இருக்கார். கேக்கத்தான் ஆளில்லெ.

சமீபத்துலெ நான் பாத்தப்பொ ... அந்தக் காலத்துலெ (1961-1963) எங்க வகுப்புலெ அவர் வெளக்கின "முன்னிலை முன்னர் ஈயுமேயும் ..." என்ற நன்னூல் நூற்பாவை எப்படி அவர் இரட்டுற மொழிந்து எங்களைச் சிரிக்கவைத்தார் என்பதை நினைவுபடுத்தினேன்; அவருக்கும் நினைவு வந்தது. இருவரும் மகிழ்ந்தோம், சிரித்தோம் நெடுநேரம். ஆச்சிக்கும் என் தோழிக்கும் ஒரே வியப்பு, மகிழ்ச்சி!

சரி, இப்பொ "வடசொல்"லுக்கு வருவோம். என் ஆசிரியர்களுடன் வாதாட எனக்கு வாய்ப்பில்லை. அதனால் ... தனித்து விடப்பட்டேன்.

நமக்குத்தான் இருக்கிறாரே தொல்காப்பியர் என்று ஒருத்தர் ... அவரைக் கேட்போம் என்று மனதில் அவரை வணங்கிச் சிந்தனை செய்தேன். அட, இந்தக் காலக் கலப்பு மொழியில் meditation செய்தேன் என்று வைத்துக்கொள்ளுங்களேன். தொல்காப்பியர் சொன்னார் ... "ஏ, பிள்ளாய்! யாம் எம் நூலில் எச்சவியல் என்ற இயலில் முதல் ஆறு நூற்பாக்களில் இயம்பிய கருத்தை மறந்தாயா? அன்றி யாம் சொன்னது நின் அறிவுக்கு எட்டவில்லையா? இதுவரை இல்லையெனில் இனியேனும் அறிய முயல்க!" 

"ஓ, அப்படியா ஐயா, மறந்தேபோனேனே. மீண்டும் போய்ப் பார்க்கிறேன், ஐயா" என்று அவருக்கு உறுதியளித்துவிட்டு ஆழ்சிந்தனையிலிருந்து நல்ல வேளையாகத் தப்பித்தேன்!

உண்மை என்ன?

தொல்காப்பியர் தமிழ் மொழியில் வழங்கும் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கிறார், இரண்டு முறை!

முதலில், அந்தச் சொற்களை அவற்றின் இலக்கண அடிப்படையில், "பெயர், வினை, இடை, உரி" என்று பிரிக்கிறார்.

பிறகு அந்தச் சொற்களின் வழக்காறு பற்றி, "இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்" என்று பிரிக்கிறார்.

இதில் குறிப்பாகப் பார்க்கவேண்டியது என்ன என்றால் ... 

"இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே"

என்று சொல்லிவிட்டார்!

அடடா, அப்படியானால் "வடசொல்"லும் தமிழ்ச்செய்யுளை உருவாக்கும் ஒன்றுதானா?"  

அப்றம் ஏன் சில பல மக்கள் "வடசொல்"லை வெறுக்கிறார்கள்?

தொகாப்பியத்தையே பிடித்துக்கொண்டிருக்கிற மக்கள் ... தொல்காப்பியர் சொன்ன "செய்யுள் ஈட்டச் சொல்" ஆகிய வடசொல்லை வெறுத்தால் ... தொல்காப்பியர் காலத்திலிருந்து கிடைத்ததாக நம்பப்படும் "தமிழ்ச் செய்யுள்"களையும் அல்லவா அவர்கள் வெறுக்கவேண்டும்?


ஒண்ணுமே புரியல ... "இலக்குவன் இன்றுளனாயின் நன்றுமன்."   எங்க எலக்குவனார் மட்டும் இன்னிக்கு இருந்தா ... அவரோடெ பிறர் போடாத சண்டெயெல்லாம் நான் போட்டு, திறந்த மனதோடு கருத்துரையாட முடியும். அவ்ளோ நல்லவர் அவர், தெரியுமா.
நிற்க.

இனி, தேவை என்றால் ... தொல்காப்பியர் சொன்ன அந்த 4-வகைச் சொற்களின் வரையறையை முடிந்தபோது பார்க்கலாம்.2.இயற்சொல்

உண்மையில் இந்தப் பதிவு "இயற்சொல்" பற்றி. பதிவின் தலைப்பு ஏமாற்றுகிறதா? இல்லை.
 
"இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே"

என்று ... யாரேனும் தமிழ்ச்செய்யுள் செய்யவேண்டினால் ... பயன்படுத்தக்கூடிய சொல்வகைப் பட்டியல் ஒன்றைத் தொல்காப்பியர் கொடுத்தாரா. சரி.

இந்தப் பட்டியலில் உள்ளவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கவேண்டும். ஏனென்றால் இந்தப் பட்டியலில் உள்ள ஒவ்வொன்றின் வரையறையும் பிற ஒன்றை நோக்கியதே. 

அதாவதுங்க ... relativity-னு ஆங்கிலத்துலெ சொல்றாங்களே அந்த மாதிரி. எல்லாச் சொல்லும் தொடர்பு உடையனவே. Context இல்லாட்டி, ஒரு சொல்லுக்குச் சரியான பொருளைத் தெரிந்துகொள்ள முடியாது. 

சரி. நம்ம வீட்டுப் பக்கமே பாப்பமே. யாராவது "அக்கா / அண்ணன்"-னு சொன்னா அந்தச் சொல் வேற இன்னோண்ணையும் குறிக்குது-னு புரிஞ்சுக்காட்டி ... அந்த "அக்கா / அண்ணன்"-ன்ற சொல் சரியா வெளங்காது, இல்லையா? "அக்கா / அண்ணன்"-னா அதுக்கு எங்கெயோ ஒரு "தம்பி"யோ "தங்கச்சி"யோ இருக்கோணும், இல்லையா? அதே போல .

அப்படித்தான் இந்த நான்கு வகைச் சொற்களையும் -- இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் -- பார்க்கவேண்டும்.  

அதாவது ... ஒன்றன் வரையறையைப் புரிந்துகொள்ளாமல் அதைப் பற்றியோ மற்றதைப் பற்றியோ சரியாகப் புரிந்துகொள்ள முடியாது.

எனவே, முதலில் தொல்காப்பியர் சொன்ன "இயற்சொல்" என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள முயலுவோம்.


இளம்பூரணர் என்ற உரையாசிரியர் சொல்கிறார்: "இயற்சொல் என்பது தமிழ் வழங்கு நாட்டு விகாரமின்றித் தமிழியற்கை யிலக்கணப்பாடு செவ்வனுடைய சொல்."

அதாவது ... இன்னைக்கு நாம சொல்லப்போனா இப்படிச் சொல்லலாம்: "இயற்சொல் என்றால் ... தமிழ் மொழி வழங்குகின்ற நாட்டில் இருக்கும் ஒரு சொல். அது, அதை உள்ளது உள்ளபடியே எடுத்து, தமிழ் இலக்கணத்துக்கு மாறுபாடு இல்லாமல் செய்யுளில் பயன்படுத்தக் கூடிய சொல்." 

தொல்காப்பியர் வரையறுக்கிறார்:

"இயற்சொல் தாமே
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
தம் பொருள் வழாஅமை இசைக்கும் சொல்லே"

ஆ? அப்டினா என்ன?

இளம்பூரணர் சொல்கிறார்: 

"மேற்சொல்லப்பட்ட நான்கு சொல்லுள்ளும் இயற்சொல் என்று கூறப்படுவன செந்தமிழ் நிலத்தார் வழங்கும் வழக்கத்திற்குப் பொருந்தித் தத்தம் பொருளின் வழாமல் நடக்கும் சொல்."

அதாவது: "தொல்காப்பியர் தமிழ்ச்செய்யுள் செய்ய நாலு வகைச் சொற்களைப் பயன்படுத்தலாம்-னு சொன்னார், இல்லையா? அதுலெ 'இயற்சொல்' அப்பிடி-ங்கிறது ... 'செந்தமிழ் நிலம்' அப்டினு ஒரு எடத்துலெ இருக்றவங்க எந்த ஒரு சொல்லை எந்த ஒரு பொருளில் / அர்த்ததுலெ பயன்படுத்துறாங்களோ, அந்தச் சொல்லை அதே பொருளில் அப்படியே பயன்படுத்துறது."

இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டு: 

"அவை: சோறு, கூழ், பால், பாளிதம் என்னும் தொடக்கத்தன."

ஆ? அப்படியா? நாங்க "செந்தமிழ்" நாட்டுக்காரங்கதான்; எங்க ஊர்லெ யாரும் "பாளிதம்"-னு சொல்ற வழக்கமே இல்லெ. இதென்ன குழப்பம்? 

பொறுங்க. "செந்தமிழ் நிலம்"-னா எது-னு தெரிஞ்சிக்குவோம்.

"செந்தமிழ் நிலம் என்பது வையயாற்றின் வடக்கு, மருதயாற்றின் தெற்கு, கருவூரின் கிழக்கு, மருவூரின் மேற்கு."

இந்தப் பகுதி தொல்காப்பியர் காலத்தில், இளம்பூரணர் காலத்தில் எங்கே இருந்தது, இப்போது எங்கே இருக்கு-னு யாராவது தெளிவா சொன்னால் நல்லது.
3.திரிசொல்


தொல்காப்பியர் சொல்வது:

"ஒரு பொருள் குறித்த வேறுசொல் ஆகியும்
வேறுபொருள் குறித்த ஒருசொல் ஆகியும்
இருபாற்று என்ப திரிசொல் கிளவி"

இளம்பூரணர் உரை:

"ஒரு பொருளைக் கருதிப் பல சொல்லான் வருதலும், பல பொருளைக் கருதி ஒரு சொல்லான் வருதலும் என இரு கூற்றனவாகும் திரிசொற்கள்."

அதாவது:

ஒரு சொல் ரெண்டு வகையாத் திரிஞ்சு வரலாம்.

1. ஒரு குறிப்பிட்ட பொருளைக் குறிக்கப் பல சொற்கள் வழங்கலாம். அதாவது ... பொருள் ஒண்ணுதான்; ஆனா, அதெச் சுட்டிக்காட்ட நெறயவே சொற்கள் வழக்கத்துலெ இருக்கும். 

2. ஒரு சொல்லுக்கு ஒரு வடிவம் மட்டும் இருக்கும்; ஆனா, அது பல வேறு பொருள்களைக் குறிக்கும்.

முதல் வகைக்கு இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டு: அடுக்கல், பிறங்கல், விண்டு, ஓங்கல் என்பன.

அதாவது, இந்தச் சொற்கள் எல்லாமே ஒரே பொருளைச் சுட்டுகின்றன. நம்ம மொழிய்லெ சொல்லப்போனா ... இந்த எல்லாச் சொல்லுக்கும் "மலை"-னு அர்த்தம். இப்டி வரதெ ஆங்கிலத்தில் synonym-னு சொல்லலாம்.

அடுத்த வகைக்கு இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டு: உந்தி

இந்த உந்தி-ங்க்ற சொல் அது எங்கெ வருதோ அந்த எடத்துக்குத் தகுந்த மாதிரிப் பொருள் தரும்.

உந்தி - ஆற்றிடைக்குறை (அதாவது ... ஓர் ஆற்றின் நடுவில் ஒரு தீவு / திட்டு மாதிரி இருக்ற எடம். ஆத்துத்தண்ணி அதெச் சுத்திச் சுழிச்சுப் போகும்.)

உந்தி - கொப்பூழ் (தொப்புள்-னு இப்ப சொல்வாங்க)

உந்தி - தேர்த்தட்டு

உந்தி - யாழ் என்ற இசைக்கருவியின் ஒரு பகுதி

இப்டி ஒரே மாதிரி ஒலிக்கிற ஒரு சொல் அது வர எடத்தெப் பொருத்து அதுக்குத் தக்க பொருள் தரதெ ... ஆங்கிலத்தில் homophones-னு சொல்லலாம். மீண்டும் சொல்லப்போனால்... ஒரு சொல்லுக்கு ஒரே மாதிரி ஒலி; ஆனால், எடத்துக்கு எடம் அதன் பொருள் வேறாக இருக்கும்.

இப்ப என்ன தெரியுது?

திரிசொல் என்றால் ... அது, தான் வழங்கும் இடத்துக்கு ஏற்றபடித் "திரி"ந்த பொருளைத் தரும் ஒரு சொல்.

ஒரு கருத்தை நினைத்துப் பார்க்கவேண்டும். காரணம் இல்லாமெ ஒரு சொல் திரியாது. அது synonym-ஆக இருந்தாலும் சரி, homophone-ஆக இருந்தாலும் சரி. இன்னெக்கி நமக்கு அந்தக் காரணம் இன்னது-னு தெரிய/புரிய வாய்ப்பிலாமலே போகலாம்.

சரி. 

இளம்பூரணர் கொடுத்த எடுத்துக்காட்டையே எடுத்துக்குவமே: அடுக்கல், பிறங்கல், விண்டு, ஓங்கல் ... இந்த எல்லாச்சொல்லும் "மலை"யைக் குறிக்கும் என்றால் ... அதுக்கு அந்தக் காலத்துலெயாவது ஏதாவது ஒரு காரணம் இருந்திருக்கணும் இல்லெ?

Eskimo-ன்ற இனத்தவர் மொழிய்லெ பனியெக் குறிக்க நெறயச் சொற்கள் இருக்காம். ஏன்? அவுங்க வாழற எடத்துக்கும் சூழ்நிலெக்கும் வாழ்க்கெ மொறெக்கும் ஏத்த மாதிரி, பனியின் வெவ்வேற நிலையையும் தன்மையையும் சுட்டிக்காட்டத்தான் அப்படிப் பல சொற்கள் தேவையாயிருக்கும்.

ஆங்கிலத்திலும் ... mountain, hillock, rocky mountain ... இப்படி நெறயவே பயன்பாடு உண்டு. 

அது கிடக்க ... 

தமிழில் மலை-ங்கிற ஒரு பொருளுக்கு எத்தனையோ தன்மைகள் இருக்கும். அதுலெ ஒரு குறிப்பிட்ட தன்மையை மேம்படுத்திச் சொல்ல ஒரு குறிப்பிட்ட சொல்லை உருவாக்கியிருப்பாங்க-னு தோணுது.

"அடுக்கல்"- என்ற சொல் ஒரு மலை அடுக்கு அடுக்காக இருக்கும் தன்மையைச் சுட்டுவதற்காக உருவாகியிருக்கலாம்.

"பிறங்கல்" என்ற சொல் ஒரு மலையின் அடர்த்தியான, தொடர்ச்சியான, கரடு முரடான தன்மையைச் சுட்டலாம்.

"விண்டு" என்ற சொல் ஒரு மலையின் பிளவுபட்ட தன்மையைச் சுட்டலாம்.

"ஓங்கல்" என்ற சொல் ஒரு மலையின் வானளாவிய தன்மையைச் சுட்டலாம்.

காலப் போக்கில் பொருளின் நுண்மை காணாமல் ஓடியே போயிருக்கும்.

சரி. 

இப்ப, "உந்தி"-ங்க்ற சொல்லெ எடுத்துக்குவம். அது ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களைக் குறிப்பது என்றால் ... அது அந்த எல்லாப் பொருளுக்கும் பொதுவான ஒரு தன்மையைச் சுட்டுகிற அடைப்படையில்தானே உண்டாகியிருக்கவேண்டும்? 

ஆற்றிடைக்குறைக்கும் தொப்புளுக்கும் ஒரே சொல் குறியீடா? இது என்ன பைத்தியக்காரத்தனம்? அப்ப ... ஸ்ரீரங்கம்-னா என்ன அர்த்தம்?

பொறுமையுடன் நினைத்துப் பார்ப்போம்.

கொப்பூழ் (தொப்புள்), ஆற்றிடைக்குறை, தேர்த்தட்டு ... இதுக்கெல்லாம் பொதுவான ஒரு தன்மை என்னவாக இருக்கலாம்? வட்டமாகச் சுழித்து, நடுப்பகுதி குழிவாக இருக்கும் தன்மையாக இருக்கலாம், இல்லையா?

இதுமட்டும் இல்லெ. இளம்பூரணர் இன்னொரு வகைத் திரிபையும் சுட்டிக்காட்டுகிறார்.

அது சொல்லின் வடிவத்தில் மாறுவது. எடுத்துக்காட்டாக, கிள்ளை, மஞ்ஞை என்று இரண்டு சொற்கள் தருகிறார்.

கிளி என்ற சொல் கிள்ளை என்று திரிந்திருக்கும். மயில் என்ற சொல் மஞ்ஞை என்று மாறியிருக்கும். ஆனால் இந்த வகை மாற்றம் அந்தச் சொல்லின் பொருளில் மாற்றம் உண்டாக்காது. 

இப்ப, நம்ம கால மொழிய்லெ சொல்லப்போனா ... "வெண்டி" "வெண்டிக்கா" "வெண்டெக்கா(ய்)" எல்லாமே ஒரே ஒரு குறிப்பிட்ட காய்வகையைத்தானே குறிக்கும்? 

அதே போல ... 

பொதுவாகச் சொல்லப்போனால் ... திரிசொல் என்பது ... ஒரு சொல் அதன் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் ... 'தன் வடிவம்,' 'பொருள் மாற்றம்' என்ற இரண்டு வகை மாற்றங்களுக்கும் உட்படும் ஒரு சொல். 

இந்த வகைச் சொல்லும் தமிழ்ச்செய்யுளுக்கு ஏற்ற ஒரு வகைச் சொல்லே. 4.திசைச்சொல் 


தொல்காப்பியர் சொல்வது:

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினும்
தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி

இளம்பூரணர் சொல்கிறார்:

செந்தமிழ் நாட்டை அடையும் புடையும் கிடந்த பன்னிரு நிலத்தார் தம் குறிப்பினையே இலக்கணமாக உடைய ... திசைச் சொற்கள் கிளவிகள்.

அதாவது: "செந்தமிழ் நிலம்"-னு முன்னே ஒரு நூற்பாவுலெ சொல்லியிருக்கே, அந்த நெலத்தைச் சுத்தி இருக்கும் 12 நிலத்துலெ இருக்றவங்க ... அவுங்கவுங்க ஊர்லெ மட்டும் வழங்குற மாதிரிச் சில சொற்களெப் பயன்படுத்துவாங்க. (அந்த மாதிரிச் சொல் மத்த எல்லாருக்கும்  சட்டுனு புரியாமல் போகலாம்) அதெல்லாந்தான் "திசைச்சொல்."

ஆ? அப்படியா? இந்தக் காலத்துலெ "பூடகமா"ப் பேசுறாங்க-னு சொல்றோமே அதுவா இந்தத் தொல்காப்பியர் சொன்ன திசைச்சொல்? அதுதானா? 

இல்லெ, இல்லெ. தொல்காப்பியர் சொன்ன "திசைச் சொல்" முழுக்க முழுக்க நில வரையறையை ஒட்டியது. அதாவது இந்தக் கால ஆங்கிலத்தில் சொல்லப்போனால் ... words based on geographical boundaries. 

அது கிடக்க.

இன்றைக்கு, நமக்கு ... தொல்காப்பியர் சொன்ன "திசைச் சொல்"-னா என்ன-னு புரியணும்-னா அந்தக் காலத்துச் "செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம்"-னா என்ன-னு தெரியணும், இல்லெ? 

இளம்பூரணர் சொல்கிறார் ... செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலமாவன: 

1. பொதுங்கர் நாடு
2. தென் பாண்டி நாடு
3. ஒளி நாடு
4. குட்ட நாடு
5. பன்றி நாடு
6. கற்கா நாடு
7. சீத நாடு
8. பூழி நாடு
9. மலை நாடு
10. அருவா நாடு
11. அருவா வட தலை நாடு
12. குட நாடு

... என இவை.

இளம்பூரணர் மேற்கொண்டு சொல்கிறார்: " 'தம் குறிப்பினவே' என்றது ... அவை ஒருவாய்பாட்டவேயல்ல, தத்தம் மரபினும் பின் வேறு வேறு வாய்பாட்ட என்றற்கும் அவர் எவ்வாறு குறித்து வழங்கினாரோ அஃதே அவற்றிற்கு இலக்கணம் என்றற்கும் என்பது."

தலை சுற்றுகிறதா? இங்கே மிக எளிமையான அடிப்படைக் கருத்தைப் புரிந்துகொண்டால் போதும்.

அதாவது: அந்தக் காலத்தில் ... முதலில் , தொல்காப்பியர் சொன்ன அந்தச் செந்தமிழ் சேர்ந்த 12 நிலங்கள் எவை எவை என்று இன்றைக்கு நமக்குத் திட்டவட்டமாகத் தெரியுமா? எனக்குத் தெரியாது. தொல்காப்பியர் காலத்துக்குப் பின்னால் வந்த இளம்பூரணர் ஒரு பட்டியலைக் கொடுக்கிறார்; அது அவர் (இளம்பூரணர்? தொல்காப்பியர்?) காலத்து மக்கள் "செந்தமிழ் சேர்ந்த 12 நிலம்" என்பதை எப்படிப் புரிந்துகொண்டிருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது.

சரி. இளம்பூரணர் சொன்ன இந்த நாடெல்லாம் ("பொதுங்கர் நாடு" ... போன்றவை) எந்தக் காலத்தில் ... எங்கே எங்கே இருந்தன? இன்றைக்கு அவை எங்கே இருக்கின்றன? என்று யாருக்காவது அறிவியல் முறையில் / நில இயல் முறையில் திட்டமாகச் சொல்ல முடியுமா? முடிந்தால் மிகவும் நல்லது!!

சரி,  அது முடியவில்லை அல்லது முடியும்வரை ... அந்த மாதிரிப் பெயர்கள் இருந்த/இருக்கும் நாடுகளைப் பற்றி இப்போது நாம் ஏன் கவலைப்படவேண்டும்?

நல்ல கேள்வி! 

"திசைச் சொல்" என்பது பற்றித் தெரிந்துகொள்ளப் பார்க்கிறோமே ... அதனால்தான். 

பழைய தமிழ் இலக்கணங்களைப் படிக்கும், ஆராயும், சிலர் திசைச்சொல் பற்றி எழுதியிருக்கிறார்கள். ஆராய்ச்சிக் கட்டுரையொன்று, நான் மிகவும் மதிப்பது, நண்பர் ழான் அவர்கள் எழுதியது ("The concept of ticai-c-col in Tamil grammatical literature and the regional diversity of Tamil classical literature"; published in "Streams of Language: Dialects in Tamil, Kannan, M. (Ed.) (2008) 21-50"). 

சரி. எடுத்துக்காட்டுக்கு வருவோம். எடுத்துக்காட்டு இல்லாமல் தமிழ் இலக்கணம் எப்படிப் புரியும்?

திசைச்சொல்லுக்கு இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டு: 

"தாயைத் தள்ளை என்ப குட நாட்டார்.
நாயை ஞமலி என்ப பூழி நாட்டார். பிறவும் அன்ன."

அட, இவ்வளவுதானா? 

ஒங்க ஊர்லெ தாய்-னு சொல்லுவீங்க, அவங்களெயே நாங்க தள்ளை-னு சொல்வோம். ரெண்டு சொல்லும் ஒரே ஆளெத் தான் குறிக்கும்.

ஒங்க ஊர்லெ நாய்-னு சொல்லுவீங்க, நாங்க அதெயே ஞமலி-னு சொல்வோம். ரெண்டும் ஒரே விலங்கைத்தான் குறிக்கும்.

இதேபோல வேற சொற்களும் அந்தந்த எடத்துக்கு ஏத்த மாதிரிப் புழங்கும். 

இந்தக் காலத்துலெ ... ஒங்க ஊர்லெ "தபா"-னு சொல்லுவீங்க; இன்னோரு ஊர்லெ "தடவை"-னு சொல்லுவாங்க; எங்க ஊர்லெ "வாட்டி"-னு சொல்லுவோம்.

புரிகிறதா?

இலக்கணப்படி, இதெல்லாம் வெவ்வேற எடத்துலெ வழங்கறதுனாலெ ... இதுக்குப் பேரு "திசைச் சொல்." 

இங்கே நாம் கருத்தில் வைத்துக்கொள்ளவேண்டியது ... தொல்காப்பியர் காலத்தில் ... தமிழ்ச் செய்யுள் செய்த புலவர்கள் "திசைச் சொற்களை" விலக்கவில்லை.


5.வடசொல்

தொல்காப்பியர் சொல்வது:

வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே

இளம்பூரணர் சொல்கிறார்:
"வடசொல் கிளவி என்று சொல்லப்படுவது ஆரியத்திற்கே உரிய எழுத்தினை ஒரீஇ இருதிறத்தார்க்கும் பொதுவாய எழுத்தினை உறுப்பாக உடைய ஆகும் சொல்."

அதாவது: 
"வடசொல்"-னா ... (தமிழ்-லெ இல்லாம) ஆரியத்துக்கு-னு தனியா இருக்ற எழுத்தை எடுத்துத் தள்ளி வச்சுட்டு, ஆரியத்துக்கும் தமிழுக்கும் பொதுவான எழுத்தில் அமைக்கப்படும் ஒரு சொல்.

வெளங்கலெயே? 

சரி. வெளக்கப் பாக்றேன். 

இப்ப ஒரு பேச்சு / சொல் ஒண்ணு இருக்கு-னு எடுத்துக்குவோம். அதெப் புழங்கும்போது ... அதுக்கு-னு இருக்ற ஆரிய எழுத்தெ ஒதுக்கிட்டு, ஆரியத்துக்கும் தமிழுக்கும் பொதுவா இருக்ற எழுத்துலெ புழங்கினா ... அதுக்குப் பெயர்தான் "வடசொல்."

ஆங்???

இளம்பூரணர் கொடுக்கும் எடுத்துக்காட்டும் விளக்கமும்: 
"அவை, 'உலகம், குங்குமம், நற்குணம்' என்னும் தொடக்கத்தன. குங்குமம் என்ற இடத்து இருசார்க்கும் பொது எழுத்தினான் வருதலுடைமையும், ஆரியத்தானும் தமிழானும் ஒருபொருட்கே உரியவாகி வழங்கி வருதல் உடைமையும் அறிக." 

இப்ப பாருங்க.

இளம்பூரணர் கொடுத்திருக்கிற பட்டியல்: உலகம், குங்குமம், நற்குணம் 

இப்படிப்பட்ட ஒரு சொல்லில் பல ஒலிகள் வரும். ஆனால் ... தமிழில் அந்த ஒவ்வோர் ஒலியையும் தனித் தனி எழுத்தில் குறிப்பதில்லை; ஆரியத்தில் குறிப்பது உண்டு. 

புரியவில்லையே?

சரி.

இந்த ... "குங்குமம்" என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இதை வாய்விட்டுத் தமிழில் சொல்லிப்பாருங்கள். முதலில் இருக்கும் "கு"-வுக்கும் இரண்டாவதாக இருக்கும் "கு"வுக்கும் இடையே வேறுபாடு இருப்பதை உணருவீர்கள். இன்னும் குறிப்பாகச் சொன்னால், முதலில் வெளிப்படும் "ககர" ஒலிக்கும் "ங்" என்பதை அடுத்து வரும் "ககர" ஒலிக்கும் இடையே வேறுபாடு இருப்பதை உணருவீர்கள்.

தமிழில் இந்த இரண்டு வகைக் ககர ஒலிகளைக் குறிக்கத் தனித் தனி எழுத்துக்களைப் பயன்படுத்துவதில்லை; ஒரே "க"தான். ஆனால், ஆரியத்தில் இந்த இரண்டு வகைப்பட்ட "ககர" ஒலிகளைக் குறிக்க இரண்டு வேறு எழுத்துக்கள் உண்டு.

ஆக, "குங்குமம்" என்ற சொல் ஆரியத்திலும் தமிழிலும் ஒரே பொருளைச் சுட்டுகிறது; ஆனால் ஆரியத்தில் இந்தச் சொல்லில் உள்ள "ககர"த்தின் ஒலிகள் வேறு வேறு வகையில் எழுதப்படும். அப்படி எழுதப்பட்டாலும் இரண்டு மொழியிலும் "குங்குமம்" என்ற சொல் ஒலிக்கும் முறையில் வேறுபாடு இல்லை. இந்த மாதிரிப் புழங்குவது "வடசொல்."

சரி, அப்ப, "குங்குமம்" என்ற ஒரு சொல்லெ எடுத்துக்காட்டி, ரெண்டு வித "க" ஒலிகளை ஒரே தமிழ் எழுத்து "க" குறிச்சிட முடியும்-னு சொல்றீங்க. ஆனா, ஆரியத்துலெ "ககர"த்துக்கு ரெண்டுக்கு மேற்பட்ட ஒலிகள் இருக்ற மாதிரித் தோணுதே. அந்த ஒலிகளெ வச்சு ஒரு சொல் இருந்தா ... தமிழிலே என்ன செய்வீங்க?

ஆ? அதுக்குத்தான் தொல்காப்பியர் இன்னொரு நூற்பாவும் செய்திருக்கிறார்: 

"சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்"

இளம்பூரணர் உரை தருகிறார்: 
"இருசார் வழக்கிற்கும் ஒத்த வழக்கினான் வாராது சிதைந்து வந்தனவாயினும் பொருந்தி வந்தன வரையப்படா, வடசொல்லாதற்கு என்பது."

இளம்பூரணர் உரை:
"அவை, 'நிதியந் துஞ்சும்' எனவும் 'தசநான்கெய்திய பணைமருள் நோன்றாள்' எனவும் வரும்."

இது என்ன புதுச் செய்தி?

அதாவது:
"ஒரு சொல், ஆரியம் தமிழ் ரெண்டு மொழியிலெயும் ஒரே பொருளைச் சுட்டுது-னு வச்சுக்குவோம். ஆனா அதைத் தமிழிலெ எழுதும்போது ஏதோ ஒரு சிதைவு உண்டாகிறதுபோல இருந்தாலும், போகட்டும். பொருத்தமாக வந்தால் அதைத் தள்ள வேண்டாம். அதுவும் வடசொல்தான்."

இன்னும் புரியலெயே.

சரி.

இப்பொ, "நிதி"-னு ஒரு சொல் இருக்கு. அந்தச் சொல் ஆரியத்திலும் தமிழிலும் ஒரே பொருளைக் (meaning) குறிக்கும் -- "அரிய பொருள்" ("treasure") என்று. 

ஆனால், தமிழில் எழுதிய "நிதி" என்ற சொல்லை வாய்விட்டுச் சொல்லும்போது -- ஒலிக்கும்போது, உச்சரிக்கும்போது, பலுக்கும்போது -- அந்த ... "த" ஒலிப்பில் ஏதோ குறைபாடு இருக்கிறதே. 

அதேபோல ... "தச" என்ற சொல்லும் "பத்து" ("ten") என்ற பொருளை இரண்டு மொழியிலும் குறிக்கும்.

ஆனால், தமிழில் எழுதிய "தச" என்ற சொல்லை வாய்விட்டுச் சொல்லும்போது ... அந்த ... "ச" ஒலிப்பில் ஏதோ குறைபாடு இருப்பதாகத் தெரிகிறதே.

இப்படி யாராவது புலம்பினாலும் ... அந்தச் சொற்களை வரிந்து/வரைந்து கட்டித் தள்ளிவிடவேண்டாம். ஏனென்றால் அவை ஆரியத்தும் தமிழுக்கும் ஒத்த எழுத்து வழக்கில் புழங்குவதால். அவையும் "வடசொல்"லே. அவையும் தமிழ்ச்செய்யுள் செய்வதற்கு ஏற்ற சொற்களே.

["த" என்பது ஒலியில் சிதைவுபட்டால் குற்றம் இல்லை, அது "க" போலவோ "ப" போலவோ எழுதப்படாதவரைக்கும்!]

புரிகிறதா?6.


இந்தப் பதிவில் என் தனிப்பட்ட கருத்தைச் சொல்ல விருப்பம். ஆனால், என் கருத்தை யார்மேலும் திணிப்பது இங்கே நோக்கமில்லை!

தமிழருக்கு, ஏன், இந்தியாவில் எல்லாருக்குமே, எந்த ஒன்றையும் "முழுமை"யாகப் பார்க்கத் தோன்றாது. எல்லாவற்றையும் பிரித்துப் பிரித்துக் கூறுபோட்டு அலசி ஆராய்ந்து பார்த்துவிடவேண்டும்!

முப்பத்து முக்கோடி தேவர்கள், மூன்று கடவுளர், நால்வகை வருணங்கள், நான்கு/ஐந்து வகை நிலங்கள், ஆறு வகைச் சமயங்கள், ஏழு கன்னியர், எட்டுத் திசைகள், ஒன்பது கோள்கள், ... 

அப்பப்பா! புரியாதவருக்குத் தலை சுற்றும். 

எந்த ஒன்றையும் இந்த மாதிரிப் பிரித்துப் பிரித்துப் பிரித்துக் காண முயலுவது ஏன்? எதையும் தன்னால் அலசிப் பார்த்துவிட முடியும் என்ற ஒரு பெருமிதம், திமிர்ப்பு, மகிழ்ச்சி, மிதப்பு, துடிப்பு, துள்ளல் ... இருக்குமோ? 

இந்த வகைப் பிரிவுகளால் எந்த ஒரு குறிப்பிட்ட துறையில் அறிவு பெருகினாலும் ... அந்தப் பிரிவுகள் ஏற்படுத்தும் குழப்பங்களும் உண்டு! 

எந்தத் துறையிலும் முன்னோர் செய்த பிரிவுகளை அப்படியே ஏற்றுக்கொள்வதோ, இல்லை தவறு என்று மறுப்பதோ, மீண்டும் அவற்றை மாற்றி இன்னொரு வகைப் பிரிவு முறையை அமைப்பதோ ... எல்லாமே பிற்காலத்தவருக்கு இருக்கும் பிறப்புரிமை!

இலக்கணமும் இந்த வகைப் பகுப்பிலிருந்து தப்பிக்கவில்லை.

"சொல்" என்பதை எப்படி வகைப் படுத்தலாம் என்று பார்த்தார் அந்தத் தொல்காப்பியர்.

அவர் கால வழக்கப்படி, பிற அறிஞர்கள் "சொல்" என்பதை எப்படி வகைப்படுத்தினார்கள் என்று பார்த்தார். அதற்கப்புறம் அந்த அறிஞர்கள் சொன்னபடியே தாமும் சொல்கிறார்; அதை ஒத்துக்கொள்ளவும் செய்கிறார், எவ்வளவு பெருந்தன்மை, பாருங்கள்!

அவ்வழியே ...

முதலில் "சொல் என்பது பெயர்ச்சொல், வினைச்சொல் என்று இரண்டு வகைப்படும் என்று அது பற்றி அறிந்தவர்கள் சொல்லுவார்கள்" என்று தொல்காப்பியர் சொல்கிறார். 

"சொல் எனப்படுப பெயரே வினை என்று
ஆயிரண்டு என்ப அறிந்திசினோரே"

அப்படிச் சொன்னவுடனே "இடைச்சொல்லும் உரிச்சொல்லும் அந்தப் பெயர்ச்சொல், வினைச்சொல் இரண்டையும் சார்ந்து வரும்" என்றும் சொல்லிவிடுகிறார். 

"இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும்
அவற்றுவழி மருங்கின் தோன்றும் என்ப"

ஆங்? அது என்ன?

இங்கே எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால் ...

தொல்காப்பியர், அவருக்கு முன்னோர் அல்லது அவர் காலத்துப் பிற அறிஞர் சொன்னபடி, "சொல்" என்பதைப் பெயர், வினை, இடை, உரி என்று நான்கு வகையாகப் புரிந்துகொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம். 

அதே தொல்காப்பியர் ... இன்னோர் இடத்தில் ... மற்றவர் சொன்னதாகச் சொல்லாமல், தாமே பகுத்துச் சொல்லுவதுபோல ... சொற்களை இன்னும் 4 வகையாகவும் சொல்கிறார் -- இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று. 

"இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே"

இந்தப் பதிவிற்கு முற்பட்ட பதிவுகளில் இந்த இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் இவை பற்றிப் பார்த்தோம். 

இது என்ன கதையாய் இருக்கு? மொதல்லெ சொல்-க்ங்றது 4 வகை-ன்னு சொல்லிட்டு, அப்றம் இன்னொரு 4 வகையெச் சொன்னா? அப்ப ... சொல் 4 வகையா? 8 வகையா? அதெத் தெளிவாச் சொல்லணுமில்லே?

மிக நல்ல கேள்வி!

பாருங்க ... 

இந்தத் தொல்காப்பியர் மொதல்லெ ... அவர் காலத்துலெ "சொல்" என்பதை எப்படி வகைப் படுத்திப் பார்த்தார்கள்-னு சொன்னார் -- பெயர், வினை, இடை, உரி என்று 4 வகையாக. 

அதுக்குப் பிறகு அவராகவே இன்னொரு கோணத்திலிருந்தும் சொற்களை வகைப்படுத்திக் காட்டுகிறார் -- இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று.

பார்த்தவுடனே இந்த இரண்டுவகைப் பகுப்புகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு தெரிகிறது, இல்லையா?

முதல்வகைப் பகுப்பு (பெயர், வினை, இடை, உரி) இலக்கண அடிப்படையில் உண்டானது.

இரண்டாவது வகைப் பகுப்பு (இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்) சொற்கள் வழங்கும் முறை, இடம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

எளிமையான ஆங்கிலத்தில் சொல்லப்போனால் ... 

The former categorization is based on the grammatical aspects of words while the latter is based on the usage/meaning and geographical origin of words.

ஆச்சா?

தொல்காப்பியரின் பகுப்பு மிகவும் துல்லியமானது. இந்த முறைப் பகுப்பில் எந்த வகைச் சொல்லும் தமிழ்ச் செய்யுளிலிருந்து தவிர்க்கப்படவேண்டியதில்லை என்று நான் புரிந்துகொள்கிறேன். குறிப்பாக ... திசைச்சொல்லையும் வடசொல்லையும் தொல்காப்பியர் விலக்கவில்லை; அவையும் தமிழ்ச்செய்யுள் செய்ய ஏற்ற சொற்களே என்று தெளிவுபடுத்திவிட்டார். 

அப்பொ ... 'தொல்காப்பியம் தொல்காப்பியம்'-னு அடிச்சுக்கிறவங்க தொல்காப்பியர் சொன்னதுபோலவே வடசொல்லையும் தமிழ்ச்செய்யுளுக்கு ஏற்ற ஒரு சொல் வகை ... அப்பிடித்தானே பாக்கணும்? அதுதானே நேர்மை? 

எனக்கு அப்பிடித்தான் தோணுது. ஆனா ... காலப்போக்கிலே ... என்ன ஆகுது-ன்னா ...  

தொல்காப்பியருக்குப் பிற்காலத்தில் ... நன்னூல் என்ற இலக்கணத்தில் இந்தச் சொல் பகுப்பு முறை சிறிது வேறுபட்டிருக்கிறது. ஒருவேளை அந்தப் பகுப்பைக்கூடச் சரியாகப் புரிந்துகொள்ளாமல்தான் "வடசொல்" என்றால் தமிழுக்கு ஆகாது என்று சிலர் நினைக்கிறார்களோ, தெரியவில்லை.


1 comment:

  1. நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் ஒருவர் அழகாக என் மனதை பிரதிபலித்திருந்தார், அதை அப்படியே இங்கே பதிவு செய்கிறேன்..

    Sivakumar said...

    தொல்காப்பியத்திலிருந்து கருத்துகளை எடுத்துக்காட்டியமைக்கு நன்றி. சொல்வகைகளில் வடசொலும் ஒருவகையாக தொல்காப்பியத்தில் இருப்பது மிகவருமையானசெய்தி.
    தொல்காப்பியத்தில் 1% வடசொற்கள் இருக்கிறதாம் அதன்பின்வந்த திருக்குறளில் 10% வடசொல் இருக்கிறதாம் அதற்கும்பின்வந்த கம்பராமாயணத்தில் கிட்டதட்ட 50% வடசொற்கள் இருக்கிறதாம். காலப்போக்கில் தமிழில் வடசொல்பயன்பாடு மிகுந்துக்கொண்டேவந்துள்ளது. கற்றறிந்தவர்கள் பேச்சுத்தமிழிலும் வடசொற்களை வெகுவாக பயன்படுத்தியகாலத்தையுங்கடந்து கல்லாதவரும் வெகுவாகப்பயன்படுத்திய காலம் வந்துவிட்டது, இக்காலத்தில் ஆங்கிலம்பயிலாதவர்கூட தன்னுரையாடலில் ஆங்கிலசொற்களை மிகவும்பயன்படுத்துவதைப்போல. காலப்போக்கில் மக்கள் பலயிடங்களில் தமிழ்ச்சொற்களைப்பயன்படுத்தாமல் அவற்கினையான வடசொற்களையே பயன்படுத்தத்தொடங்கிவிட்டனர். எதுவொன்றும் சிறியவளவில் இருக்கையில் மக்களுக்கு விழிப்புணர்ச்சி வராது, மிகப்பெருமளவில் வரும்போதுதான் தனித்தமிழ்போன்ற விழிப்புணர்ச்சி மறைமலையடிகளார்போன்றவரால் கொண்டுவரப்பட்டது. இதுவேறு 50தாண்டுகளுக்குப்பிறகு திராவிடகழத்தினர் அரசியலாக்கிவிட்டனர் எனக்கூறப்படும் போராட்டங்கள்வேறு. இக்காலத்தில் தனித்தமிழில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதென்பது அரியதாகிவிட்டது. மக்கள் வெகுவாகப்புழங்கும் இனையதளத்தில் எழுத்துத்தமிழிலாவது தனித்தமிழில் எழுதிவந்தால் அது தமிழை பின்வரும் வழியினருக்கு நல்லநிலையில் தரவியலும். அதற்காக வடமொழிகலந்தெழுதுவது குற்றமல்ல. தாங்கள்கூறும் பிறமொழியை வெறுக்கவேண்டாம் என்னும் கருத்து எடுத்துக்கொள்ளவேண்டியாவொன்று, வமொழி அதுபோக்கில் இருக்கட்டும். தனித்தமிழில் எழுதுவதென்பது வெட்கப்படவோ அரிதானவொன்றாகவோ இல்லாமலிருந்தால் அது ஒரு மொழிக்கு நன்மையே எனக்கருதுகிறேன்.

    ReplyDelete