Sunday, August 13, 2017

திரு ஆர்.எம்.டி.சம்பந்தம்: அவியாச் சுடர் -ரவிக்குமார்



இன்று (14.08.2016) தினமணி நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் திரு ஆர்.எம்.டி.சம்பந்தம் அவர்களது நினைவுநாள். தமிழ் இதழியலில் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்கவர் அவர். தற்போது பிபிசி தமிழோசையின் ஆசிரியராக இருக்கும் நண்பர் மணிவண்ணன் அவர்களின் மூலமாகத்தான் எனக்கு அவர் அறிமுகமானார். தினமணியில் நடுப்பக்கக் கட்டுரை எழுதும் வாய்ப்பை அவர் அளித்தார். 'ரஜினியின் காட்சி அரசியல்' என்ற எனது கட்டுரை அப்போதுதான் வெளியானது. கை தெபோர் என்ற ஃப்ரெஞ்ச் சிந்தனையாளரின் politics of spectacle என்ற கருத்தாக்கத்தைப் பயன்படுத்தி அந்தக் கட்டுரையை நான் எழுதியிருந்தேன். 

அதிமுக ஆட்சியை விமர்சித்துப் பேசி ரஜினி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நேரம் அது. அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என பேசப்பட்டுக்கொண்டிருந்த சூழலில் அந்தக் கட்டுரை வெளியானது. அப்போது ரஜினியுடன் நெருக்கமாக இருந்த திரு ஆர்.எம்.வீ அதைப் படித்துவிட்டு தன்னிடம் மிகவும் கோபத்துடன் கடிந்துகொண்டதாக திரு சம்பந்தம் அவர்கள் என்னிடம் சொன்னார். 

திரு ஆர்.எம்.வீ அத்துடன் விடவில்லை அடுத்த சில நாட்களில் பாண்டிச்சேரியில் ரஜினி ரசிகர்மன்ற நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமணத்துக்கு வந்தவர் அந்த நிர்வாகியிடம் தினமணியில் கட்டுரை எழுதும் ரவிக்குமார் யார்? எனக் கேட்டிருக்கிறார். அப்போது தினமணியில் நிருபராக இருந்தவரும் இப்போது குணவதிமைந்தன் என்ற பெயரில் குறும்படங்களை இயக்கிக்கொண்டிருப்பவருமான  ரவி என்ற நண்பரை அந்த நிர்வாகி அழைத்துப்போய் ஆர்.எம்.வீயிடம் நிறுத்தியிருக்கிறார். 'ரஜினியின் காட்சி அரசியல்' என்ற கட்டுரையை எழுதியது அவர்தான் என நினைத்து ஆர்.எம்.வீ அவரிடம் கோபமாகப் பேசியுள்ளார். " அவரை கட்சி ஆரம்பிக்கச்சொல்லி நான் எவ்வளவோ சமாதானப்படுத்தி வைத்திருந்தேன். இப்படி கட்டுரை எழுதி கெடுத்துட்டியே" என்று திட்டியிருக்கிறார். 'கட்டுரை எழுதிய நபர் நான் இல்லை' என அவர் விளக்கமளித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார். 

திரு சம்பந்தம் அவர்களுக்கு ஆர்.எம்.வீயுடன் நெருங்கிய நட்பிருந்ததாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியிருந்தும் அவர் எனது கட்டுரையை வெளியிட்டதற்காக வருத்தப்படவில்லை. மாறாக, தினமணியில் வேலையில் சேருமாறு எனக்கு அழைப்பு விடுத்தார். 

என்னை ஒரு பத்திரிகையாளர் ஆக்கவேண்டும் என்று திரு ஆர்.எம்.டி.சம்பந்தம் ஆசைப்பட்டார். அவர் ஏற்றிய அந்தச் சுடர் இப்போதும் எனக்குள் அணையாமல் இருக்கிறது.

No comments:

Post a Comment