எம்.சி.ராஜா (1883-1947
சுதந்திரத்துக்கு முந்தைய இந்திய வரலாற்றில் தீண்டாத மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த தலைவர்கள் பலர் தமிழ் நாட்டில் தான் தோன்றியிருக்கிறார்கள். அயோத்திதாசப் பண்டிதர், இரட்டை மலை சீனிவாசன், எம்.சி.ராஜா என அவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அம்பேத்கருக்கு முன்பே தீண்டாதார் அரசியல் எழுச்சியோடு விளங்கிய பகுதியாகத் தமிழகம் இருந்திருக்கிறது. 17ஆம் நூற்றாண்டிலேயே இங்கிருந்த தீண்டாத மக்கள் கூட்டாகச் சேர்ந்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். அதே வேளையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தம்மை ஒடுக்க முற்பட்டபோது அவர்களின் போலீஸ் படையைத் தாக்கி விரட்டியும் அடித்திருக்கிறார்கள். அத்தகையதொரு பின்புலத்தில் இருந்து தலைவராக உருவானவர்தான் எம்.சி.ராஜா.
எம்.சி.ராஜாவின் தந்தை சின்னத்தம்பி அவர்களும், சென்னையில் பிரபலமான தலைவராக விளங்கியவர்தான். எம்.சி.ராஜா, வெஸ்லி மிஷன் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். அதன்பிறகு சென்னை கிறித்தவ கல்லூரியில் சேர்ந்து பயின்றார். அங்கே கிரிக்கெட் அணியின் தலைவராகவும் எம்.சி.ராஜா விளங்கினார். கல்லூரிப் படிப்பை முடித்தபிறகு ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அப்போது சென்னையில் இரவு பள்ளிகளை ஆரம்பித்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மேல் படிப்பு படித்திட ஆதிதிராவிட மாணவர்களுக்கு அந்த நிர்வாகம் அனுமதி மறுத்து வந்தது. அதை எதிர்த்து போராடி அந்தத் தடையை உடைத்தெறிந்தார். மிண்டோ மார்லி சீர்திருத்தத்தின் காரணமாக தீண்டாத வகுப்பினரிடையே இருந்து ஒருவரை சென்னை மாகாண மேலவைக்கு நியமிப்பதென அரசாங்கம் முடிவு செய்தது. அதற்கு சாதி இந்துக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி 1919 ஆம் ஆண்டு எம்.சி.ராஜாவை அன்றைய கவர்னர் வில்லிங்டன் பிரபு சென்னை மாகாண மேலவை உறுப்பினராக நியமித்தார். இந்திய அளவில் சட்ட மன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதல் உறுப்பினர் எம்.சி. ராஜாதான்.கல்விப் பணி செய்வதில் அவருக்கு மிகுந்த ஈடுபாடிருந்தது.1921 ஆம் ஆண்டில் எம்.பழனிச்சாமி என்பவரோடு இணைந்து சென்னையில் மாணவர் விடுதி ஒன்றை நிறுவினார். அதன் பெயர் பின்னர் பாடிசன் ஹாஸ்டல் என மாற்றப்பட்டது. தற்போது அது எம்.சி ராஜா விடுதி என்ற பெயரில் அரசாங்கத்தால் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது.1936ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் திராவிடப் பள்ளி என்கிற கல்வி நிலையம் அவரால் ஆரம்பிக்கப்பட்டது எனவும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தனது தலைமையில் சாரணர் படை ஒன்றை அவர் உருவாக்கினார் எனவும் தெரிய வருகிறது.
ஆதிதிராவிட மகாசன சபையின் தலைவராக பொறுப்பேற்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைகளின் காரணமாக 1920களில் அவர் இந்தியா முழுவதும் பிரபலமான தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவராக விளங்கினார். 1928 ஆம் ஆண்டில் இந்தியாவில் பயணம் செய்த சைமன் குழு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கருத்து கேட்டது. அப்போது உத்தரப்பிரதேசத்தில் வலுவான இயக்கமாகத் திகழ்ந்த ஆதி இந்து மகா சபாவின் சார்பில் சைமன் குழுவிடம் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில் எம்.சி.ராஜாதான் எங்கள் தலைவர் என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.எம்.சி.ராஜாவின் புகழ் இந்திய அளவில் பரவியிருந்ததற்கு இது ஒரு உதாரணமாகும்.
இந்தியாவில் அதிகாரமாற்றத்தை ஏற்படுத்தவும், சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களையும் சந்தித்து தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளை எம்.சி.ராஜா எடுத்துரைத்தார். 1921ஆம் ஆண்டு சென்னை பி அண்டு சி ஆலையில் ஏற்பட்ட வேலை நிறுத்தம் தமிழகத் தொழிலாளர்களின் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.முதலில் சுமார் அறுநூறு தொழிலாளர்கள் அதில் பங்கேற்றனர்.பிறகு அது மிகப்பெரும் வேலைநிறுத்தமாக மாறியது.அந்த வேலை நிறுத்தத்தில் ஆதி திராவிடர்கள் கலந்துகொள்ளாமல் வேலைக்குச் சென்றனர். அதனால் ஆத்திரமடைந்த மற்றவர்கள் அவர்கள்மீது வன்முறையை ஏவினார்கள்.ஆதி திராவிட மக்களின் நூற்றுக்கணக்கான வீடுகள் தீவைத்து கொளுத்தப்பட்டன.அப்போது அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அகதி முகாம்களில் சுமார் இரண்டாயிரம்பேர் இருந்தனர் என்பதிலிருந்தே அந்தத் தாக்குதலின் கொடுமையை நாம் புரிந்துகொள்ளலாம். அப்போது ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி அரசாங்கமோ ஆதிதிராவிட மக்களை வன்முறையாளர்களாக சித்திரித்தது மட்டுமின்றி அவர்களையெல்லாம் சென்னை நகரின் எல்லைக்கு அப்பால் வெளியேற்றிட வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசுக்கு பரிந்துரை செய்தது. இதைக் கடுமையாக விமர்சித்து பாதிக்கப்பட்ட ஆதிதிராவிட மக்களின் உரிமைகளுக்காக எம்.சி.ராஜா போராடினார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி வாக்காளர் தொகுதியுடன் கூடிய இரட்டை வாக்குரிமை வேண்டுமென்ற கோரிக்கையை முதலில் ஏற்றுக்கொண்டவர் எம்.சி.ராஜா. ஆனால் பின்னர் அதே கோரிக்கை அம்பேத்கர் மற்றும் இரட்டை மலை சீனிவாசன் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டபோது அதை எம்.சி.ராஜா எதிர்த்து கூட்டு வாக்காளர் தொகுதி முறையை ஆதரித்தார் என்பது ஒரு முரண்நகையாகும்.1929 ஆம் ஆண்டு செபடம்பர் 30ஆம் தேதி இந்திய அரசின் மையக் கமிட்டிக்கு சமர்ப்பித்த மனுவில் அவர் தனி வாக்காளர் தொகுதி கோரிக்கை பற்றி வலியுறுத்தியிருந்தார்: ’ தனி வாக்காளர் தொகுதிகளை உருவாக்குவதன் மூலமே நேரடித் தேர்தலையும் உத்தரவாதப்படுத்தலாம்,போதுமான பாதுகாப்பையும் பெறலாம்.’ என அவர் கூறினார். ‘அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படலாம்.பிரிவினை உணர்வைத் தூண்டி தேசியத்தின் வளர்ச்சிக்குத் தடையாக அமைந்துவிடும் என அதற்கு சிலர் ஆட்சேபம் தெரிவிக்கலாம். ஆனால் அதனால் வரும் நன்மைகள் எதிர்ப்பின் அளவைவிட அதிகமானவை.தனிவாக்காளர் தொகுதிமுறை என்பது இந்தியாவுக்குப் புதியதல்ல.ஏற்கனவே முஸ்லீம்கள், சீக்கியர்கள்,இந்திய கிறித்தவர்கள்,ஆங்கிலோ இந்தியர்கள் ஆகியோருக்கு அந்த உரிமை உள்ளது.அது அவர்களுக்கு ஒருவித பாதுகாப்பு உணர்வைத் தந்துள்ளது’ என எம்.சி.ராஜா அந்த மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.
அன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் வாக்குரிமை என்பது கிடையாது.படித்தவர்கள், சொத்து உள்ளவர்கள் ஆகியோருக்குத்தான் வாக்குரிமை இருந்தது. சென்னை மாகாணத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் மக்கள்தொகை அப்போது சுமார் அறுபத்தைந்து லட்சமாக இருந்தது. ஆனால் அதில் 56756 பேருக்கு மட்டும்தான் வாக்குரிமை இருந்தது என்பதை எடுத்துக்காட்டிய எம்.சி.ராஜா வாக்காளர்களுக்கான தகுதியைக் குறைக்கவேண்டும் எனவும் அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். தனிவாக்காளர் தொகுதி முறையை வலியுறுத்திவந்த எம்.சி.ராஜா அதை பிரிட்டிஷ் அரசு வழங்கவிருந்த நேரத்தில் தனது நிலையை மாற்றிக்கொண்டு கூட்டுத் தொகுதி முறைக்கு ஆதரவு தெரிவித்தார்.அம்பேத்கர் இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரது நிலைபாட்டுக்கு எதிராக இந்து மகா சபையின் தலைவர் மூஞ்சே என்பவரோடு அதற்காக ஒப்பந்தம் ஒன்றையும் செய்துகொண்டார்.அதுபோலவே கோயில் நுழைவு தொடர்பாக அம்பேத்கர், இரட்டை மலை சீனிவாசன் ஆகியோர் மேற்கொண்ட நிலையையும்கூட அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக காந்தியடிகளின் அணுகுமுறையை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார். ’ஆதி திராவிடர்கள் அடைந்துவரும் அபிவிருத்தியைக்கண்டு இந்துக்கள் தங்கள் வர்ணாசிரம அதர்மத்துக்குள் இவர்களையும் இழுத்துச் சேர்த்து ஐந்தாம் வருணத்தவராக அமைத்து அடக்கியாள ஆதிதிராவிடர்கள் சமூகத்தை அழித்து அவர்களும் ஜாதி இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களென ஜாதி இந்துக்கள் தங்களை பலப்படுத்திக் கொள்ளவேண்டுமென்னும் கருத்தோடு ஆலயப் பிரவேசமென்னும் கபடமான இயக்கத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கலென்றே சொல்லலாம்’ என இரட்டைமலை சீனிவாசன் அதை வர்ணிக்கிறார். சென்னை மாகாண சபையில் அந்த மசோதா வந்தபோது முப்பது ஆதி திராவிடப் பிரதிநிதிகளில் 28பேர் ஆலயப் பிரவேசம் வேண்டாமென வாக்களித்ததாகவும் இரட்டைமலை சீனிவாசன் கூறியுள்ளார்.அந்த மசோதாவை ஆதரித்த பிரபலமான ஆதி திராவிடத் தலைவர்கள் எம்.சி.ராஜாவும் சுவாமி சகஜாநந்தாவும் மட்டும்தான். வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்கான பிரதிநிதிகளாக அம்பேத்கரும்,இரட்டைமலை சீனிவாசனும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்தே எம்.சி.ராஜா இப்படி எதிரான நிலையை மேற்கொண்டதாக அம்பேத்கர் குறிப்பிடுவது இங்கே நினைவுகூரத்தக்கதாகும்.காந்தியின் நிலையை ஆதரித்தபோதிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை அவர் மறந்துவிடவில்லை.தீண்டாமை ஒழிப்புச் சட்ட மசோதாவும், குற்றவியல் நடைமுறைச் சட்ட மசோதாவும் அவரால்தான் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஆதி திராவிட மகா ஜன சபையின் கௌரவச் செயலாளராகவும், தென்னிந்திய இரண்டாவது ஆதி திராவிடர்கள் மாநாட்டின் தலைவராகவும்,கூட்டுறவுச் சங்கங்களின் கௌரவத் துணைப் பதிவாளராகவும்,மாகாண , மத்திய சட்டமன்றங்களின் உறுப்பினராகவும்- இப்படி பல்வேறு பதவிகளை வகித்த எம்.சி.ராஜா ஆதிதிராவிட மக்களின் நன்மைக்காக எழுதியவை யாவும் ஆங்கிலத்திலேயே உள்ளன. 1927 ஆம் ஆண்டில் அவரால் எழுதப்பட்டு தி ஹக்ஸ்லீ பிரஸால் வெளியிடப்பட்ட The oppressed Hindus என்ற நூலை அம்பேத்கர் சிந்தனைக் கூடத்தினர் தமிழாக்கம் செய்து 1968 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளனர்.
(2008 ஆம் ஆண்டில் கரிசல் பதிப்பகத்தின் சார்பில் நான் வெளியிட்ட எம்.சி ராஜாவின் "ஒடுக்கப்பட்ட இந்துக்கள் " என்ற நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை )
அன்பு ரவிகுமார்,
ReplyDeleteகரிசல் பதிப்பகத்தின் முகவரி தாருங்கள். நூலை உடனே படிக்க வேண்டும்.
சீனி மோகன்
அய்யா M.C.ராஜா அவர்கள் தந்தைபெரியாரின் எண்ணமாய் வலியுறுத்திய வகையில் நீதிகட்சியின் ஆட்சியில் அமைச்சராக்கப்பட்டவர் என்பதையும், தான் அமைச்சராவதற்கு காரணமான தந்தைபெரியாருக்கு நன்றி கூற வாய்ப்பு கிடைக்காத நிலையில், MC ராஜா அவர்கள் அமைச்சாரானதற்கு, எங்கள் ஆம்பூரில் அவருக்கு நடத்திய பாராட்டு கூட்டத்தில் தந்தைபெரியாரும் காலத்துக்கொண்ட கூட்டத்தில் சந்தித்துதான் தனது நன்றியை பெரியாரிடம் தெரிவித்தார் என்று படித்தேன்.அவர் நீதிகட்சி ஆட்சியில்
ReplyDeleteஅமைச்சர்தானே.. மற்றப்படி,தங்கள் வரைவு நல்ல தரவு தங்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்,
இவண்,
கெம்மங்குப்பம் சி. கோபி
(அன்பு தம்பி என் உறவின்முறை சிவ.செல்வபாண்டியன் விசிக பிறந்த ஊர்)