அவர் எனக்குச் சில நூல்களைப் பரிசாக அளித்தார். கவிதை மொழி( மணிவாசகர் பதிப்பகம், 2000) என்ற நூல் அவற்றுள் ஒன்று . அதில் வெள்ளிவீதியாரின் கவிதை மொழி என்று ஒரு கட்டுரை உள்ளது. குறுந்தொகை 130 ஆம் பாடலை அதில் அவர் விவாதித்துள்ளார்.
''
நிலந்தொட்டு புகாஅர் வானம் ஏறார்
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்
கெடுநரு முளரோநம் காத லோரே " ( குறுந். 130)
என்பது அந்தப் பாடல் . அதில் ' காலிற் செல்லார் ' என்பதற்கு உரையாசிரியர்கள் கொடுத்திருக்கும் விளக்கம் தவறு என இவர் வாதிட்டுள்ளார்:
'' காலின் என்ற சொல்லுக்குச் சாமிநாதையர்( 1955) ' சித்தி பெற்ற சாரணரைப்போல .. காலினால் நடந்து செல்வார் ' என்று பொழிப்புரை எழுதியதோடு ' நிலந்தொட்டுப் புகுதல் முதலிய மூன்று அற்புத சத்திகளும் சித்தி வகைகள் . சைனர்கள் இத்தகைய சித்திகளைப் பெற்ற சாரணர் எண்மர் என்பர். பௌத்தர்களும் இத்தகைய சித்திகளைப் பற்றிப் பாராட்டுவர் ' என்று விளக்கமும் தந்து ' நிலத்திற் குளித்து நெடு விசும்பேறி , சலத்திற் திரியுமோர் சாரணன் ' என்ற மணிமேகலை அடிகளையும் சான்று காட்டியுள்ளார். இராகவையங்கார்( 1993:206) ' நீரர மகளிரை வேட்டு அக்கரைக்கும் இக்கரைக்கும் குறுக்கே கிடக்கின்ற பெருங்கடலில் காலால் நடந்து செல்வார் ... புகுதலும் , ஏறுதலும், செல்லுதலும் காலினாதல் தெளிக்க .. காலின் என்பதை மூன்றிடத்தும் கூட்டுக ' என்று எழுதியுள்ளார். சோமசுந்தரனாரும்( 1955:189) ' காலாலே கடந்து ' என்று பொழிப்புரை எழுதிச் சாமினாதையரைத் தழுவிச் சான்றும் காட்டியுள்ளார் . சண்முகம் பிள்ளையும்( 1985) உடல் உறுப்பாகவே கொண்டுள்ளார். நான்கு உரையாசிரியர்களும் ' கால் ' என்று உடல் உறுப்பு என்று கொண்டு சமயச் சாயம் பூசியது சிறப்பானதாகக் கொள்ளமுடியாது. ' கால் ' என்பதற்குக் ' காற்று ' என்று பொருள் கொண்டால் கடலில் காற்றின் துணையால் பாய்மரக் கப்பலில் செல்லுவதை குறிப்பதாகக் கொள்ளலாம். ' கால் ' காற்று என்ற பொருளில் குறுந்தொகையிலேயே வந்துள்ளது ( 7, 189) "
என்று திரு. செ .வை. சண்முகம் குறிப்பிடுகின்றார். ஒப்புநோக்கிப் பார்க்கும்போது இதுவே சரியெனப் படுகிறது. சங்க கால சமூகத்தில் பெண்கள் ஓரளவு அதிக சுதந்திரம் உடையவர்களாக இருந்தனர் என்பதைப் பெண்பால் புலவர்கள் பாடிய பாடல்களின் மொழியமைப்பைக்கொண்டு இவர் விளக்கியிருப்பது புதுமையாகவும் இருக்கிறது.
அருமையான பகிர்வு ரவிக்குமார்! நன்றி!
ReplyDeleteகால் என்பது காற்று என்று
நூற்றுக்கணக்கான இடங்களில் புழங்கியுள்ளது. ஆனால்
இந்த இடத்தில், நன்கு அறிந்த இப்பொருளை ஏன்
உவேசா அவர்கள் கொள்ளவில்லை என்பது வியப்பாக
உள்ளது.
முந்நீர் காலிற் செல்லார் என்பது தெளிவாகவே
காற்றைச் (கால்--> காற்று; ல்-->ற் இயல்பு.) சுட்டுவதாகவே
படுகின்றது.
- செல்வா
உண்மை தான் அதனால் தான் ஜன்னலை காலதர் என்று அழைக்கிறோம்.... காற்று வரும் வழி என்பதால்... அதே போன்று இன்று ஆங்கிலத்தில் அக்ரிகல்ச்சர் எனப்படும் சொல்லின் வேர்ச்சொல்லும் தமிழேயாகும். அகர் என்றால் நிலம் என்னும் பொருளாகும்.. நிலத்தை பண்படுத்தி விவசாயம் செய்வதால் இப்பெயரில் வழங்கப்படுகிறது...உலகின் பல மொழிகளில் தமிழின் வேர்ச்சொல் பயன்படுத்தப்படுகின்றது...
ReplyDelete-ஞானமணி மணி
திரு ரவிக்குமார்,
ReplyDeleteதிரு செ.வை.ச.வின் அனைத்து நூல்களையும் விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். 75 வயதுக்காரராக அவர் இல்லாமல் இன்றும் இளைஞராகவே உள்ளார். ஆய்வாளர்கள் அவரது கடின உழைப்பையும், ஆய்வுத் தோய்வையும் புதுமை காணும் நாட்டத்தையும் பின்பற்ற வேண்டும். அவரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
அன்புடன்
ஆராதி
செ. வை. ச. கவிதை மொழி என் நூலகத்தில் உள்ளது.
ReplyDeleteகுறுந்தொகை 130-ல் முதல் அடியுடன் சேர்த்து, 2-ஆம்
அடியைப் பார்க்கிறபோது கால் என்பதைப் பாய்மரக் கப்பலில்
கடலாடல் என்ற பொருள் பொருத்தமில்லை என்று நினைக்கிறேன்.
தலைவன் பொருள்வயின் பிரியக் கடலில் செல்லமாட்டார்
என்று தலைவியே சொல்வாரா?
’பருந்தும்நிழலும் பாவும்உரையும்’ என்பது இலக்கணம் அன்றோ?
பாரத இலக்கியங்களில் பரவலாகப் பேசப்படும் ருத்தி (Rddhi)
3-ம் இங்கே சொல்லப்படுகிறது என்று கொள்கிறேன்.
வானில் பறப்பதும், நிலத்தைக் குடைந்து பாதாளம் புகலும்,
நீர்மேல் நடப்பதும் ருத்திகள். பரவலாக இந்த அதிசயங்கள்
- மோசஸ் நீர்மேல் நடத்த்தல் பைபிளிலும் உண்டே.
அன்புடன்,
நா. கணேசன்
தமிழ் எழுத்தின் பரிணாம மாறுதல்களை காலப்போக்கில் அறிய
ReplyDeleteசெ. வை. ச. அவர்களின் எழுத்திலக்கணக் கோட்பாடு, மொழியும் எழுத்தும்
(1985),
மொழி இலக்கண உருவாக்கம், ... சுமர் 30+ புத்தகங்களை அண்ணாமலையில்
பதிப்பித்தோ, எழுதியோ உள்ளார்கள்.
தென்னாப்பிரிக்கா போல் தமிழை மறந்துவிட்ட மக்கள் தமிழைப் படிக்க
வரும்போது, கற்பிக்க உயிர்மெய் வடிவில் முதலில் எளிமையாக்கிச்
சொல்லித் தரலாம் - ஃபாண்ட்களில்.
நா. கணேசன்
அருமயான பகிர்வு, திரு செல்வா சொல்வது போல்.
ReplyDeleteமிகவும் நன்றி, ரவிக்குமார். திரு. சண்முகம் அவர்களின் மொழியியல் நூல்களைப் பயன்படுத்தியுள்ளேன்.
நான் பென்சில்வேனியாப் பல்கலையில் கற்பித்தபோது நேரில் காணும் பேறு.
குறுந்தொகை 130 பாடலில் "கால்" என்ற சொல்லுக்கு உரையாசிரியர்கள் தரும் விளக்கம் ஏற்புடைத்தாகவே தெரிகிறது. இப்போது கைக்கெட்டும் அளவில் உரைகள் இல்லை. பிறகு எடுத்துப்பார்த்து மீண்டும் என் கருத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
இடையில்... ஒரு சிறு குறிப்பு. இந்தப் பாடலிலும் சரி, "நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரளவு இன்றே..." என்ற பாடலிலும் சரி -- ஒரு மூவகைப்பட்ட "பரிணாமம்" (three dimensional) தெரிகிறது. இது சங்கப் புலவர்க்குக் கைவந்த உத்தியா? அல்லது அவர்கள் கருத்தைக் கவர்ந்த உண்மை நிலையா? தெரியவில்லை.
அன்புடன்,
ராஜம்
முனைவர் ராஜம் அவர்களுக்கு வணக்கம்
ReplyDeleteதிரு சண்முகம் அவர்கள் தனது ' சங்க கால மொழி வளர்ச்சியும் மொழி உணர்வும் ' ( மெய்யப்பன் பதிப்பகம் 2009) என்ற நூலில் தொல்காப்பியம் பற்றிப் பேசும்போது உங்களை மேற்கோள் காட்டியிருக்கிறார். " ரிக்வேத பிராதிசாக்கியத்தையும் தொல்காப்பியத்தையும் விரிவாக ஆராய்ந்த ராஜம் தொல்காப்பியப் பிறப்பியல் கருத்துகளும் புணரியல் பற்றிய பொதுக் கோட்பாடும் வடமொழி இலக்கண நூல்களோடு மாறுபட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.
தொல்காப்பியர் கூறும் கருத்துகள் வடமொழி நூல்களில் காணப்பட்டாலும் அவருடைய அணுகுமுறையும் நடைமுறையும் தொல்காப்பியம் எந்தவொரு வடமொழி நூலையும் முழுமையாகப் பின்பற்றிச் செய்யப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார் அவர்." என்று உங்களின் ஆய்வேட்டை மேற்கோள்காட்டி செ.வை. ச எழுதியிருக்கிறார்.
அன்புடன்
ரவிக்குமார்
அன்புடையீர்
ReplyDeleteமுனைவர் செ.வை.ச. அவர்கள் தெரிவித்ததே சிறந்த கருத்து.
பட்டினப்பாலை வரி 185-186 இல்
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
என வரும் இடத்தில் நீர்ப்போக்கு வரத்திற்கு அடுத்துக் கால் எனக்
குறிக்கப்பெற்றதால் அதனை நிலப் போக்குவரத்தாகவே கொண்டு பொருள்
வழங்கியுள்ளனர் அந்த அடிப்படையில் இங்கும் கருதியிருக்கலாம். ஆனால்
முந்நீர் என்றபின் முந்நீர் ஆன கடலில் செல்வது கப்பலாகத்தானே இருக்க
முடியும்.எனவே குறுந்தொகைப் பாடலில் வரும் கால் காற்றே எனலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்பின் அண்ணன் ரவிக்குமார் அவர்களுக்கு வணக்கம். தங்களின் பதிவினைக் கண்டேன். அந்த இனிமையான பொழுதில் நானும் உடனிருந்தேன். பல முறை செ.வை. சண்முகம் அவர்களோடு உரையாடி இருந்தாலும் இத்தனை விளக்கமான உரையாடலை அன்றுதான் கேட்டேன். எனது முனைவர் பட்ட ஆய்வு பத்தாண்டு தமிழ்ப் புதுக்கவிதைகள் என்னும் தலைப்பில் நிறைவடையும் தருணத்தில் உள்ளது. ஆகையினால் செ.வை. ச குறிப்பிட்ட யாப்பியல் நோக்கில் அதனை ஆய்வுசெய்ய முடியவில்லை. கருத்தியல் நோக்கிலேயே பார்த்துள்ளேன். எனது மேல்ஆய்வு புதுக்கவிதைக்கும் யாப்பு உண்டு என்னும் தடத்தில் நிச்சயம் அமையும். இப்போது நிறைய படித்து வருகிறேன். நீங்கள் குறிப்பிட்ட கால் என்பதற்கு காற்று என்று பொருள் என்பது தமிழிலக்கியத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றே.எமனை காலன் எனக் குறிப்பிடுவது கூட காற்று என்னும் பொருள்கொண்டுதான். உ.வே.சா.வை பொருத்தவரை சில முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. எந்த படைப்பாளனும் தன் இனத்தை முழுமையாகப் புறக்கணித்துவிட்டு சிந்திப்பதில்லை. உ.வே.சா.வும் இதற்கு விதிவிலக்கல்ல.
ReplyDeleteநன்றி
ஜானகி.இராசா
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.