Showing posts with label தலித். Show all posts
Showing posts with label தலித். Show all posts

Sunday, May 19, 2019

மீளும் வரலாறு

நந்தன் கதையை நான் எப்போது தெரிந்துகொண்டேன் என்பது எனக்கு சரியாக நினைவில்லை.  நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம் எங்கள் கிராமத்தைச் சுற்றி பல்வேறு கிராமங்களிலும் கோடை காலத்தில் நாடகங்கள் நடைபெறும்.  தஞ்சாவூர், மதுரை என்று பல்வேறு ஊர்களிலும் இருந்து பிரபலமான நாடக குழுக்களை அழைத்து வந்து நாடகங்களை போடுவார்கள்.  டி.ஆர். மகாலிங்கம், உடையப்பா, கண்ணப்பா என்று புகழ்பெற்ற நடிகர்கள் வருவார்கள்.  அப்படி நாடகம் நடந்துகொண்டிருந்த நாளில்தான் நான் நந்தன் கதையைப் பற்றி முதலில் கேள்விப்பட்டேன்.  உடையப்பாவின் நாடகங்களில் அரிச்சந்திராவுக்கு ஒரு தனி இடம் உண்டு.  அந்த நாடகத்தில் சுடலையில் நின்று பாடுவதுபோல் வரும் காட்சியில் 'பறையன்' என்ற சொல் இடம்பெற்ற பாடல் ஒன்று வரும்.  அவருடைய கம்பீரமான குரல் உருகி குழைந்து கேட்பவரை கண்ணீர்விட வைக்கும்.  அந்த பாடல் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என சொல்லி பல்வேறு ஊர்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் அதனால் இனிமேல் அந்த பாடல் அரிச்சந்திராவில் இடம்பெறாது என்றும் அப்பா யாரோடோ பேசிக்கொண்டிருந்ததை நான் அப்போது கேட்டேன்.  "இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது சரிதான், ஆனால் நந்தனார் நாடகத்தில் வரிக்குவரி இப்படி கேவலம் வருகிறதே அதை எவனும் கேட்கவில்லையே" என்று அப்பா அப்போது சொல்லிக்கொண்டிருந்தார்.  பிற்காலத்தில் நந்தன் கதை மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதற்கு அந்த உரையாடல்தான் காரணமாக இருந்திருக்குமோ தெரியவில்லை.

ஐந்தாம் வகுப்புவரை என் சொந்த கிராமத்தில் படித்த நான் ஆறாம் வகுப்புக்காக சிதம்பரம் சென்றேன்.  தினமும் ரயிலில் சென்று படித்து வரவேண்டும்.  அப்படி போகும்போது என் வயதையத்தவர்களோடு நான் போவதில்லை.  எப்போதும் பெரிய ஆட்களோடுதான் சினேகம்.  என்னுடைய உறவினர் கலியபெருமாள் என்பவர் அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்த ஓவியக் கல்லூரியில் பயின்று வந்தார்.  வகுப்பை கட் அடித்துவிட்டு அவரோடும், அவரது நண்பர்களோடும் சுற்றிக்கொண்டிருப்பேன்.  அவர்கள் சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு சென்று ஸ்கெட்ச் பண்ணுவார்கள்.  அப்போது அவர்களோடு பல சமயம் நானும் சென்றிருக்கிறேன்.  சனி ஞாயிறுகளில் சிதம்பரம் நடராஜா தியேட்டரில் காலை காட்சியில் ஆங்கிலப் படம் பார்த்துவிட்டு மதிய சாப்பாட்டுக்கு நடராசர் கோயில் புளியோதரையை வாங்கி சாப்பிடுவோம்.  அந்த கோயில் எனக்கு மிகவும் நெருக்கமானது அப்படித்தான்.  அந்த கோயிலுக்குள் நுழையும் ஒவ்வொரு தருணத்திலும் எனக்கு வினோதமான ஒரு உணர்வு ஏற்படுவதுண்டு.  சிதம்பர ரகசியம் என்று சொல்லப்படுகிற கதையையும் தாண்டி அந்த கோயிலுக்குள் மேலும் பல ரகசியங்கள் இருக்கின்றன.  அவை இன்னும் யாராலும் அறியப்படாமல் கிடக்கின்றன என்று எனக்கு தோன்றும்.  சிதம்பரம் குறித்து வெளிவந்துள்ள நூல்களையெல்லாம் அப்படித்தான் நான் சேகரித்து படிக்க ஆரம்பித்தேன்.  தமிழ் பௌத்தம் குறித்த அயோத்திதாசரின் எ-ழுத்துகளை படித்ததற்கு பிறகு சிதம்பரத்தின் மீதான எனது இச்சை தீவிரம் அடைந்துவிட்டது. 

தமிழக தலித்துகளின் வரலாற்றை தொகுப்பதிலும் மறுவாசிப்பு செய்வதிலும் ஈடுபட்டபோது சிதம்பரம் புதிய பரிமாணம்பெற்று என்முன் நின்றது.  தமிழகத்தில் தீண்டாமை நிலைநிறுத்தப்பட்டதற்கு சிதம்பரம்தான் முக்கிய காரணமாக இருந்துள்ளது.  அதிலும் குறிப்பாக நந்தன் கதை அதில் பிரதானபங்காற்றியிருக்கிறது என்ற உணர்வு என்னுள் வலுப்பெற்றது.  அதைத் தொடர்ந்து பெரியபுராண நந்தன் கதையை மறுத்து நந்தன் என்ற மன்னனின் வரலாற்றை முன்வைக்கவேண்டும் என்ற வேட்கை அதிகரித்தது.  அப்போது ஒருநாள் இதுபற்றி திரு. தொல். திருமாவளவன் அவர்களோடு நான் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மிகவும் வியப்போடு இதை ஏன் நீங்கள் எழுதக்கூடாது என்று கேட்டார்.  விடுதலைச் சிறுத்தைகளின் மாத இதழான தாய் மண்ணில் அதை தொடராக எழுதுமாறு வலியுறுத்தினார்.  2003 மார்ச்&ஏப்ரல் இதழில் இந்த தொடரை நான் ஆரம்பித்தேன்.  பன்னிரெண்டு அத்தியாயங்கள் எழுதினேன்.  அக்டோபர் 2004 வரை அது வெளிவந்தது.  அதன்பிறகு நான் அதை தொடர்ந்து எழுத முடியவில்லை.

இந்திரா பார்த்தசாரதியின் நந்தன் கதை நாடகம் புதுவையில் நிகழ்த்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.  நானும் நண்பர்களுமாக சேர்ந்து நடத்தி வந்த தலித் கலைவிழாவில் கூட அதை போட்டிருக்கிறோம்.  ஆனால் நந்தன் என்ற மன்னனின் வரலாற்றை பரவலாக அறியச் செய்யவேண்டும் என்ற எனது ஆசைக்கு அது உகந்ததாயில்லை.  அப்போது பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் நாடகத்துறை தலைவராக இருந்த கே.ஏ. குணசேகரன் அவர்களிடத்தில் அயோத்திதாசப் பண்டிதரின் நந்தன் கதையைப் பற்றி பேசி அதை நாடகமாக போடலாம் என்று கேட்டேன்.  அவரும் அப்போது ஆர்வமாக சம்மதித்தார்.  ஆனால் அந்த நாடகத்தை நான் எழுதமுடியாமல் போய்விட்டது.  நாங்கள் சந்திக்கும்போதெல்லாம் அவ்வப்போது அதைப்பற்றி பேசுவதுண்டு.  அதன் தொடர்ச்சிதானோ என்னவோ இன்று

அதே நந்தன் கதையைப் பற்றி சொற்பொழிவு ஆற்றும்படி அவர் என்னை அழைத்திருக்கிறார்.   உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக பொறுப்பேற்று இப்படி ஒரு வாய்ப்பை எனக்கு அளிப்பார் என நான் கற்பனையும் செய்ததில்லை.  உலகத் தமிழ் மாநாட்டுக்கான தயாரிப்புகள் நடந்துகொண்டிருக்கும் சூழலில் இந்த சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  நிச்சயமாக அந்த மாநாட்டில் இந்த புதிய நந்தன் கதை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  இந்த சொற்பொழிவுக்கான வாய்ப்பை அளித்த உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இந்த பொழிவுக்கு தலைமை ஏற்கவிருக்கும் டாக்டர் அ. ராமசாமி அவர்களுக்கும் எனது நன்றி.
( மீளும் வரலாறு நூலுக்கு நான் எழுதிய குறிப்பு )

Monday, December 9, 2013

அன்று சொன்னதும் இன்று நடப்பதும் - ரவிக்குமார்


ஒரு தலைவரை நினைவுகூர இரண்டு வழிகள் இருக்கின்றன. அவரை வணக்கத்துக்குரிய குறியீடாக மாற்றி அவரது பிறந்த நாளிலும் நினைவுநாளிலும் மாலை மரியாதை செலுத்துவது ஒன்று. அந்தத் தலைவரின் கொள்கைகளை உயிர்ப்புடன் சமூகத்தில் பரவச் செய்வது இன்னொன்று. அம்பேத்கரை நினைவுகூர்கிறவர்களில் பெரும்பாலோர் இதில் முதல் பிரிவைச் சேர்ந்தவர்கள். அதனால்தானோ என்னவோ திரும்பிய பக்கமெல்லாம் அவருக்குச் சிலைகள் இருக்கின்றன.ஆனால் அவரது சிந்தனைகளோ புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கின்றன.

இந்தியாவில் தனது சமகாலத்தில் வாழ்ந்திருந்த மேதைகளையெல்லாம் விஞ்சக்கூடிய மேதமையோடு திகழ்ந்தவர் அம்பேத்கர். இந்தியா சுதந்திரமடைந்ததற்குப் பிறகு எத்தனையோ நிபுணர்கள் இந்தியாவில் உருவாகிவிட்டார்கள். ஆனால் அவரைப்போல சமூகத்தின் சகல அம்சங்களையும் கணக்கில் கொண்டு மாற்றத்துக்கான வழிகளை முன்மொழியும் ஆற்றல்கொண்ட சிந்தனையாளர் எவரும் உருவானதாகத் தெரியவில்லை.அவர் பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த புலமைகொண்டிருந்தார் என்றபோதிலும், சட்டத் துறையில் அவருக்கிருந்த ஞானம் அபாரமானது என்பதை நாடு அறியும்.

சட்டத்தின் முதன்மையான பணி என்னவென்று கேட்டால் சமூக ஒழுங்கைக் காப்பதுதான் என நாம் தயங்காமல் பதில் சொல்வோம். ஆனால் சமூகத்தின் குறைபாடுகளைக் களைவதுதான் சட்டத்தின் பணி என்றார் அம்பேத்கர். ஒரு நாட்டின் நாகரிகத்துக்கும் அதன் சட்டங்களுக்கும் இருக்கும் தொடர்பை சுட்டிக்காட்டிய அவர், பண்டைய சமூகங்களுக்கும் நவீன சமூகங்களுக்கும் இருக்கும் முக்கியமான வேறுபாடு பண்டைய சமூகங்களில் சட்டம் என்பது தெய்வீகத் தன்மை கொண்டதாகவும் மாற்றப்பட முடியாததாகவும் கருதப்பட்டது. ஆனால் நவீன சமூகங்களிலோ காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ப அது மாற்றங்கண்டு வருகிறது எனக் குறிப்பிட்டார். சட்டத்தைத் தெய்வீகத் தன்மை கொண்டதாகக் கருதிய சமூகங்கள் வளர்ச்சி காணாமல் தேங்கிப் போய்விட்டன. அப்படிப்பட்ட நாட்டுக்கு இந்தியா நல்லதொரு உதாரணம் என்று அவர் விமர்சித்தார்.

இந்திய சமூகம் எல்லா காலங்களிலும் அப்படி இருக்கவில்லை. உலகில் இந்தியாவைப்போல புரட்சிகள் பலவற்றைக் கண்ட நாடு வேறு எதுவும் இருக்கமுடியாது. ஐரோப்பியர்கள் போப்பாண்டவரின் அதிகாரத்தைக் கேள்வி கேட்பதற்கு முன்பே தெய்வீகத் தன்மை பொருந்தியதெனக் கூறப்பட்ட சட்டத்துக்கும் மதச்சார்பற்ற சட்டத்துக்கும் இடையிலான மோதலை இந்தியா பார்த்துவிட்டது. மதச்சார்பற்ற சட்டத்துக்கான அடித்தளத்தை நாம் கெüடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் பார்க்கலாம். ஆனால் துரதிருஷ்டவசமாக இங்கே தெய்வத்தின் சட்டம் வெற்றி பெற்றுவிட்டது. அதுதான் இந்தியா சந்தித்த பேரழிவுகளிலேயே முக்கியமானது என்றார் அம்பேத்கர்.

சட்டம் குறித்த அவரது இந்தப் புரிதலை அவர் தலைமையேற்று உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தில் நாம் காணலாம். சட்டத்தை மாற்றவேண்டும் என அவர் கூறினாரே தவிர எவ்வளவு கொடுமைகள் இழைக்கப்பட்டபோதிலும் வன்முறைப் பாதையில் ஈடுபடுங்கள் என ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஒருபோதும் அவர் கூறவில்லை. அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. ஆனால் எந்த சட்டங்கள் அந்த மக்களைப் பாதுகாக்கும் என நினைத்தாரோ அந்த சட்டங்களே அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என அவர் எதிர்பார்க்கவில்லை.

இந்தியாவைப் பாதுகாக்க அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்த அம்பேத்கரை இந்த நாடு அங்கீகரிக்கத் தவறிவிட்டது மட்டுமின்றி அவர் எந்த மக்களின் விடிவுக்காக அதிகம் பாடுப்பட்டாரோ அவர்களை குற்றப் பரம்பரையினராக்கிக்கொண்டிருக்கிறது. ஒருபுறம் சாதியவாதிகளின் வன்கொடுமைகள், இன்னொருபுறம் அரசு எந்திரத்தின் பாரபட்சம் என இரண்டுவிதமான ஒடுக்குமுறைகளுக்கு இடையே சிக்கி அவர்கள் சீரழிந்துகொண்டிருக்கிறார்கள். இந்திய சிறைகளில் அடைப்பட்டுக் கிடப்போரின் சமூகப் பின்னணியைப் பார்த்தால் இதை நாம் புரிந்துகொள்ளலாம்.

இந்திய சிறைவாசிகளை, தண்டனை சிறைவாசிகள், விசாரணை சிறைவாசிகள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதில் விசாரணை சிறைவாசிகளின் எண்ணிக்கையே அதிகம். இந்திய சிறைவாசிகளின் எண்ணிக்கையில் சுமார் 70 விழுக்காட்டினர் விசாரணை சிறைவாசிகள்தான் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. 2007 ஆம் ஆண்டின் புள்ளிவிவரத்தை அடிப்படையாகக்கொண்ட அந்த ஆய்வு, அப்போது சிறையிலிருந்த 2,41,413 விசாரணை சிறைவாசிகளில் 54,324 பேர் (22.50%) தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்றும், 29,941 பேர் (12.40%) பழங்குடியினர் என்றும் தெரிவிக்கிறது. அதாவது ஒட்டுமொத்த விசாரணை சிறைவாசிகளில் 35 விழுக்காடு எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

தேசிய குற்ற ஆவண மையம் (என்.சி.ஆர்.பி) வெளியிட்டுள்ள 2011 ஆம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி இந்தியாவிலிருக்கும் மொத்த சிறைவாசிகளின் எண்ணிக்கை 3,66,903. அதில் விசாரணை சிறைவாசிகளின் எண்ணிக்கை 2,41,200. அதாவது 65.74 விழுக்காடு. அதிக காலத்துக்கு விசாரணை சிறைவாசிகளை சிறையில் வைத்திருக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் கூறிய பின்னரும்கூட விசாரணை சிறைவாசிகளின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை என்பதையே இந்தப் புள்ளிவிவரம் காட்டுகிறது.

2011 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்த 1,28,592 தண்டனைக் கைதிகளில். 28,033 பேர் தாழ்த்தப்பட்டவர்கள், 18,292 பேர் பழங்குடியினத்தவர். இதில் எஸ்சி, எஸ்டி, முஸ்லிம் ஆகிய மூன்று சமூகங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை மட்டும் கூட்டிப் பார்த்தால் 69,268 வருகிறது. அதாவது ஒட்டுமொத்த தண்டனைக் கைதிகளில் அவர்கள் மட்டும் 53.87 விழுக்காட்டினராக உள்ளனர்.

அப்போதிருந்த 2,41,200 விசாரணைக் கைதிகளில் முஸ்லிம்கள் 51,206 பேர், கிறித்தவர்கள் 7,699 பேர், தாழ்த்தப்பட்டோர் 53,794 பேர், பழங்குடியினர் 31,652 பேர். இந்த நான்கு சமூகத்தவரையும் சேர்த்துப் பார்த்தால் 1,44,351 வருகிறது. அதாவது மொத்த விசாரணைக் கைதிகளில் இந்த நான்கு சமூகத்தவரின் பங்கு 59.85 விழுக்காடு ஆகும்.

இந்திய அளவில்தான் இந்த நிலையென்றால் தமிழகத்தின் நிலையோ இன்னும் மோசமாக இருக்கிறது. 2011 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்த தண்டனை சிறைவாசிகள் 5,200 பேரில் தாழ்த்தப்பட்டோர் 1,609 ( 30.95%), பழங்குடியினர் 176 (3.38%), முஸ்லிம்கள் 671 (12.90%), கிறித்தவர்கள் 999 (19.21%) . இந்த நான்கு பிரிவினரையும் சேர்த்தால் மொத்த தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கையில் அது 66.44 விழுக்காடு ஆகும்.

அதே ஆண்டில் தமிழக சிறைகளில் இருந்த விசாரணைக் கைதிகளின் மொத்த எண்ணிக்கை 7,682. அதில் முஸ்லிம்கள் 943 (12.27%) தாழ்த்தப்பட்டோர் 2,783 (36.22%) பழங்குடியினர் 757 (9.85%). கிறித்தவர்களும் இங்கு அதிக எண்ணிக்கையில் விசாரணைக் கைதிகளாக இருந்துள்ளனர். அவர்களது எண்ணிக்கை 1,213 பேர் ( 15.79%) இந்த நான்கு பிரிவினரையும் சேர்த்தால் 2011 ஆம் ஆண்டில் மொத்தமாக இருந்த 7,682 விசாரணைக் கைதிகளில் அவர்களது எண்ணிக்கை 74.14 விழுக்காடு ஆகும். இந்திய அளவிலான விழுக்காட்டைவிட, தமிழகத்தில் அதிக அளவில் இந்த சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சிறைப்படுத்தப்பட்டிருப்பது வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டைவிடவும் 2012 இல் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. முந்தைய ஆண்டில் 1,609 ஆக இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கை 1,748 ஆகவும், 2,783 ஆக இருந்த விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை 3,442 ஆகவும் உயர்ந்துவிட்டது. அது போதாதென்று தடுப்புக் காவல் சட்டங்களிலும்கூட அதிக என்ணிக்கையில் தாழ்த்தப்பட்டவர்களே சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே மிக அதிகபட்சமாக தமிழ்நாட்டில்தான் 523 பேர் தடுப்புக் காவல் சட்டங்களின்கீழ் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 202 பேர் தாழ்த்தப்பட்டவர்கள். தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் ஒரே ஒரு சதவீதம் மட்டுமே இருக்கும் பழங்குடியினர் 36 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

குற்றமிழைப்பவர்களை தண்டிப்பது இயல்புதானே இதில் சாதி பார்க்கலாமா என கேட்கப்படலாம். குற்றமிழைப்பவர்கள் தப்பிவிடுவதும் அப்பாவிகள் குற்றவாளிகளாக்கப்படுவதும் அதிகரித்து வருவதால்தான் இதை நமது தண்டனை அமைப்பின் ஓரவஞ்சனை என நாம் குற்றம்சாட்ட வேண்டியிருக்கிறது.

அமெரிக்காவில் எப்படி கறுப்பின மக்கள் பொய்வழக்குகளில் சிக்கவைக்கப்படுகிறார்களோ அப்படித்தான் இங்கே தலித் மக்கள் பழிவாங்கப்படுகிறார்கள். அவர்களை சாதிய வன்கொடுமைகளிலிருந்து பாதுகாப்பதற்கென இயற்றப்பட்ட சட்டத்தை செயல்படுத்தாமலிருப்பதும் அவர்கள்மீது பொய்வழக்குகளைத் தொடுப்பதும் அன்றாட நடைமுறையாகிவிட்டது. இப்போது அதிகம் விவாதிக்கப்படும் குஜராத்தை விடவும் தமிழ்நாட்டில் தலித்துகளின் நிலையும் சிறுபான்மையினரின் நிலையும் மோசமாக இருக்கிறது. இந்த இழிநிலையை மாற்றுவதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதுதான் அம்பேத்கரை நினைவுகூரும் சிறப்பான வழிமுறையாக இருக்கும். தமிழ்நாட்டின் தலித் அமைப்புகளும் ஜனநாயக சக்திகளும் அதற்காக இன்று உறுதியேற்றுக் கொள்வார்களா?

( நன்றி : தினமணி 06.12.2013 )

Wednesday, October 16, 2013

தமிழக சட்டப்பேரவையில் விவாதிக்க .......

 
 
 
வணக்கம்!
        அக்டோபர் 23 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிகக் குறுகிய காலமே நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத் தொடரில் விரிவான விவாதங்களுக்கு நேரமிருக்காது என்றபோதிலும் சட்டப் பேரவையில் இடம்பெற்றிருக்கும் கட்சிகள் வெளிநடப்பிலும், கூச்சல் குழப்பங்களிலும் காலத்தை வீணாக்காமல் மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.அரசும் அதற்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.

       தமிழக சட்டப்பேரவையில் பின்வரும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றவும் பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கவனம் செலுத்தவேண்டும் என வேண்டுகிறேன்: 

1. மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் தமிழகத்தை வஞ்சிக்கும் ரகுராம் ராஜன் கமிட்டி அறிக்கையை நிராகரித்து மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% ஒதுக்கும்படி வலியுறுத்தி சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்.

2. தொடக்கக் கல்விமுதல் ஆராய்ச்சிக் கல்வி வரை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் அதில் உரிய சீர்திருத்தங்களைச் செய்யமுடியும்.இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கல்வி மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. இடைக்காலத்தில்தான் அது பொதுப்பட்டியலுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.இப்போது அது மென்மேலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுசெல்லப்படுகிறது. கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவருவதற்கு அவ்வப்போது தி.மு.க உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் குரல்கொடுத்தாலும்  தமிழக அரசின் நிலையை மத்திய அரசுக்கு வலுவாக உணர்த்திட முனைப்பான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே கல்வியை பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கும் மாற்றிட வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும். 

3. காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு கலந்துகொள்ளக்கூடாது என வலியுறுத்தித் தீர்மானம் ஒன்றை ஒருமனதாக நிறைவேற்றவேண்டும்.

4. காவல்துறை சீர்திருத்தம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் நெருக்குதலை சமாளிக்கும் நோக்கில் தற்போது தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டிருக்கும் அவசர சட்டம் பல தவறுகளைக்கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படவில்லை.  அந்தக் குறைகளோடு அதை சட்டமாக்க தமிழக அரசு முயற்சித்தால் அதில் சரியான திருத்தங்களை முன்மொழியவேண்டிய கடமை சட்டமன்றத்தில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளுக்கு உள்ளது.

5. தாது மணல் உள்ளிட்ட தமிழகத்தின் கனிம வளங்கள் எடுக்கப்படுவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டிவருகின்றன. எனவே கனிமவளங்கள் எடுப்பதில் ஒரு புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது. அதற்கான கொள்கை ஒன்றை வகுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தவேண்டும். 

6. மது விற்பனையால் கிடைக்கும் வருவாயைக் காட்டிலும் மதுப் பழக்கத்தால் ஏற்படும் மனிதவள இழப்பு அதிகம். மது விற்பனையால் கிடைக்கும் வருவாயை ஈடுசெய்ய எத்தனையோ நல்ல வழிமுறைகள் உள்ளன. மதுவிலக்குக் கொண்டுவரப்பட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற வாதம் ஏற்புடையதல்ல. பால்ய விவாகத்தை நியாயப்படுத்தியவர்கள் அதைத் தடுத்தால் விபச்சாரம் பெருகிவிடும் என்று வாதிட்டதைத்தான் இது நினைவுபடுத்துகிறது. எனவே மதுவிலக்கை நடைமுறைப்படுத்துமாறு அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தவேண்டும். தமிழக அரசும் இதுகுறித்துப் பரிசீலிக்கவேண்டும். 

7. ஒப்பீட்டளவில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் தலித்துகள் நிலமற்றவர்களாக உள்ளனர். ஆனால் அவர்கள்தான் பெருந்தொகையாக விவசாயத்தைச் சார்ந்து இருக்கின்றனர். அவர்களுக்குப் புதிதாக நிலம் வழங்குவது ஒருபுறமிருந்தாலும் அவர்களுக்குச் சொந்தமான பத்து லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பஞ்சமி நிலங்களையாவது மிட்டுத் தர அரசு நடவடிக்கைஎடுக்கவேண்டும். அதற்காக அதிமுக ஆட்சிக்காலத்தில் 1996 ஆம் ஆண்டு ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. திமுக ஆட்சியில் 2011 இல் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இரண்டுமே செயல்படவில்லை. எனவே பஞ்சமி நிலங்களை மீட்டுக்கொடுப்பதற்கு தமிழக அரசை அரசியல் கட்சிகள் வலியுறுத்தவேண்டும்.
 
( 14.10.2013 அன்று சட்டப்பேரவை கூடுவது தொடர்பான அறிவிப்பு வந்தவுடன் ஊடகத்தினருக்கும், கட்சித் தலைவர்களுக்கும் நான் அனுப்பிய மின்னஞ்சல்)