Showing posts with label brahmin. Show all posts
Showing posts with label brahmin. Show all posts

Sunday, October 21, 2012

'பிராமணாள் காபி கிளப் '





ஸ்ரீரங்கத்தில் கோவை ராமகிருஷ்ணனின் தலைமையிலான திராவிடர் கழகத்தினர் உணவு விடுதி ஒன்றின்  பெயர்ப் பலகையில் 'பிராமணாள் காபி கிளப் ' என எழுதியிருந்ததை அழிக்க முற்பட்டுப் போலீசால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டம் பல்வேறு வினாக்களை எழுப்பியிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் பிராமணர்கள் மட்டுமே நுழைந்து காபி குடிக்கக்கூடிய உணவகங்கள் இருந்தன. அவற்றில் பிற சாதியினரை அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்காத நிலை இருந்தது. அந்த இழி நிலையை எதிர்த்து நடைபெற்றப் போராட்டங்களின்  காரணமாகவே அந்த பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்டன, எல்லோரும் அந்த உணவகங்களில் அனுமதிக்கப்படும் நிலை உருவானது. 

இப்போது பிராமணர்கள் நடத்தும் உணவகங்கள் ஒப்பீட்டளவில் குறைவு. இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளிலும் கிளை பரப்பி நடத்தப்படும் ' சரவண பவன் ' உணவகம் பிராமணர்களுக்குச் சொந்தமானதல்ல. தமிழ்நாட்டின் சிறு நகரங்களில் இருக்கும் உணவகங்களில் கல்லாவுக்குப் பின்னால் பார்க்கமுடிவதைவிடவும் பரிமாறும் இடங்களில்தான் பிராமணர்களை  இப்போது அதிகம் பார்க்க முடிகிறது. ஸ்ரீரங்கத்தில் பிராமணாள் காபி கிளப் என்று பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருத்த உணவகத்தில் பிராமணர்களைத் தவிர பிறரை அனுமதிக்க மறுத்ததாகத் தெரியவில்லை. எனினும் இப்படியான முயற்சிகள் கசப்புணர்வை அதிகரிக்கவே வழிவகுக்கும். சென்ற நூற்றாண்டில் நிலவிய சமூக நிலைகளை வெறுப்பு என்னும் நீர் ஊற்றி மறுபடியும் துளிர்க்கச் செய்வது தேவையற்றது. 

ஸ்ரீரங்கத்தில் இருக்கும்  பெயர்ப்பலகையை அகற்றுவதற்குக் குரல் கொடுத்த திராவிடர் கழகத்தினர் அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் மேலும் இரண்டு போராட்டங்களை நடத்த வேண்டும். தமிழர்கள் தமது பெயருக்குப் பின்னால் சாதி பின்னொட்டைப் போட்டுக்கொள்வதை எதிர்த்து ஒரு போராட்டம் , வணிக நிறுவனங்களை நடத்துகிற தமிழர்கள் அவற்றின் பெயர்ப்பலகைகளில் ( உ-ம்  : ரெட்டியார் மெஸ் , நாடார் மெஸ் ) சாதிப் பெயர்களைப் பயன்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தி ஒரு போராட்டம். ஆக, இப்படி இரண்டு போராட்டங்களை நடத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள். இவற்றை நடத்தாமல் , பிராமணர் அல்லாதாரிடம் இருக்கும் சாதிப் பற்றைக் களையாமல் பிராமணர்களை மட்டும் எதிர்த்துப் போராடுவதென்பது அரசியலுக்கு வேண்டுமானால் உதவலாமே தவிர சாதியை ஒழிக்க உதவாது. 

Friday, July 29, 2011

’வேஷப் பிராமணரும்’ ’தமிழ் பிராமணரும்’


ராஜ் கௌதமன் எழுதி விடியல் பதிப்பக வெளியீடாக( 2008) வந்திருக்கும் ‘ தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்’ என்ற நூலை அண்மையில் வாசித்தேன். ‘ அறம் அதிகாரம் ‘ என்ற தலைப்பில் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட நூலைத் திருத்தி விரிவாக்கி எழுதியிருக்கிறார் ராஜ் கௌதமன். அவரது எழுத்துக்களில் விரவிக்கிடக்கும் எள்ளலும் பகடியும் இந்த நூலைப் படிக்கும்போதும் நம்மை முறுவலிக்க வைக்கின்றன. ”முந்தைய பதிப்பில் ‘ பார்ப்பனர்’ என்ற தொன்மை வாய்ந்த தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியதை வசைச் சொல்லாக ஒரு பகுதியினர் தவறாகப் புரிந்துகொண்டதால் , ‘பிராமணர்’ என்ற வடசொல்லே இந்நூலில் கையாளப்படுகிறது.படிக்க வைப்பதுதான் நோக்கம் “ என்று ‘என்னுரை’ பகுதியில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.இத்தகைய அனுபவம் எனக்கும் உண்டு.’பார்ப்பனர்’ என்று குறிப்பிட்டு எழுதுகிறவர்களின் எழுத்துக்களைத் தான் படிப்பதே இல்லையென்று ஒரு பத்திரிகையாளர் என்னிடம் குறிப்பிட்டார். ஏன் என்று கேட்டபோது அதுவொரு வசைச் சொல்லாகவே தமிழில் பயன்படுத்தப்படுகிறது என்றார். எப்படி என்பதை அவரால் விளக்க முடியவில்லை. அப்படி யாரோ ராஜ் கௌதமன் அவர்களிடத்திலும் புகார் செய்திருக்கிறார்கள் போலும்.

’பிராமணர் என்ற வட சொல்’ என ராஜ் கௌதமன் குறிப்பிட்டிருக்கிறார். இதைப்பற்றி அயோத்திதாசப் பண்டிதர் கூறியிருப்பதை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாயிருக்கும். “ தன்னைப்போல் சருவ உயிர்களையும் பாதுகார்த்தலும் சாந்தகுணம் பெருக்கமுற்று சகல பற்றுக்களும் அற்று சமண நிலை கடந்து பிரமமணத்தால் சருவ சீவர்களுக்கும் உபகாரியாக விளங்குவார்கள்.இவர்களையே எதார்த்த பிராமணரென்று கூறப்படும்..... அங்ஙனமின்றி பெண்டுபிள்ளைக் கூட்டத்தினின்று பொருளாசை மிகுதி கொண்டு தன்னவர்களை ஏற்றியும் அன்னியர்களைத் தூற்றியும் சீவகாருண்ணியமற்று தன்னையொற்ற மக்களைக் கொல்லாமல் கொன்று பத்துக் குடிகள் நாசமடைந்த போதிலும் தன் குடி சுகமடைந்தால் போதும் என்னும் பொறாமெயெ ஓருருவாகக் கொண்டுள்ளார்கள் தங்களை பிராமணரென்று சொல்லித் திரிவது வேஷ பிராமணமேயாகும் “ என்று அவர் கூறுகிறார்.  (அயோத்திதாசர் சிந்தனைகள்- தொகுதி 1, பக்கம் 535- 536).

ராஜ் கௌதமன் கூறியுள்ள ஒரு கருத்தை இத்துடன் இணைத்துப் பார்க்கவேண்டும், “ சங்க காலத்தில் பிராமணர்கள் தனிக் குடியிருப்புகளில் வாழ்ந்தார்கள்.’பார்ப்பனச் சேரி’ என இவர்கள் மட்டும் வாழ்ந்த இடம் சுட்டப்பட்டது.வீட்டில் சமஸ்கிருதமும் வெளியே தமிழும் பேசினார்கள்.சமண -பௌத்த துறவியர் வடநாட்டாராயினும் தமிழகத்தில் அவர்களது போதனையால் சமண- பௌத்த மதங்களில் சேர்ந்து துறவிகளாகத் தமிழினத்தார் ஆகியதுபோல பிராமணியத்தின் போதனைகளால் தமிழர் பிராமணராக ஆகியிருக்க முடியாது. தமிழ் பிராமணர் எனப்படுவோ பிராமணராக மாறிய தமிழர் அல்லர் “ என்கிறார் கௌதமன். பிராமணர் என்பது பிறப்பின் அடிப்படையால் தீர்மானிக்கப்படுவதால் அவர் அப்படிக் கூறுகிறார். பிராமணர் ஆவதற்குத்தான் பிறப்பு அடிப்படை. தமிழராக ஆவதற்கு அப்படியல்லவே. எனவே தமிழ்ப் பிராமணர் என்போர் தமிழராய் மாறிய பிராமணர் எனக் கொள்ளலாமா ? அல்லது பிராமணரையும் ,பறையரையும் விலக்கித்தான் இப்போதும் தமிழர் என்பதை வரையறுக்கிறோமா ?
தமிழ்ப் பேரகராதியில் தமிழர் என்பதற்குத் தரப்பட்டிருக்கும் விளக்கம் இதோ:
தமிழர் tamiḻar
n. < E. Tumbler, drinking cup; விளிம்பில்லாத தீர்த்தபாத்திரம். Loc.