Showing posts with label obituary. Show all posts
Showing posts with label obituary. Show all posts

Wednesday, April 10, 2013

ஸ்ரீகாந்த் ஐ பி எஸ் : துயரங்களின் குறுகிய கணவாய் வழியே துணையேதுமில்லாமல் பயணம் செய்தவர்




ஐ.பி.எஸ் அதிகாரியும் எழுத்தாளருமான திரு ஸ்ரீகாந்த் அவர்கள் அந்தமானில் கார்நிக்கோபார் என்னுமிடத்தில் மாரடைப்பால் இன்று ( 10.04.2013 புதன் ) காலை  மரணம் அடைந்தார். புதுவை மாநிலக் காவல்துறையில் முதுநிலை காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய  டாக்டர் ஸ்ரீகாந்த் அவர்கள் ஐ.பி.எஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்று கடந்த 2012 மே மாதத்தில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு போய் ஓராண்டு நிறைவெய்துவதற்கு முன்பே அவர்  மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஸ்ரீகாந்த் அவர்கள் இன்று காலை கார்நிக்கோபாரில் கடலோரக்  காவல் படையினருக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்திருக்கிறார். காலை  6.30 மணிக்கு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது . எனவே அவரே காரை ஓட்டிக்கொண்டு அருகில் உள்ள டாக்டர் ஒருவர் வீட்டுக்கு சென்றுள்ளார் . அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த போதே அவர் திடீரென மரணம் அடைந்திருக்கிறார் . மருத்துவ வசதி போதுமான அளவில் இல்லாத  கர்நிக்கொபர் என்னும் இடத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதால்  அவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. அவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். மகன் தற்போது புனேவில் எம்.பி.ஏ படித்து வருகிறார். 

தமிழ்நாட்டில்  தற்போதைய திருப்பூர் மாவட்டத்தில் மூத்தாம்பாளையம் என்ற சிறிய கிராமத்தில் 15.02.1964 இல் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஸ்ரீகாந்த் . கால்நடை மருத்துவப் படிப்பை முடித்து சில காலம்  டாக்டராக பணியாற்றினார். 1990ல் மத்திய தேர்வாணையம் நடத்திய  தேர்வில் டி.பி.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு புதுவை போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் ஐ.பி க்கு மாற்றல் செய்யப்பட்டார். மத்திய உளவுத் துறையில் (ஐ.பி) பல ஆண்டுகள் பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு ஒரு தேசந் தழுவிய பார்வையைத் தந்தது. இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த அவர் தீவிரமானதொரு வாசகர். பொதுப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என்ற தாகம் கொண்டவர். பிறருக்கு உதவி செய்வதை கடமையாகக் கொண்டிருந்தவர் அவர். 

 கேட்பவர்களைக் கிறங்க வைக்கும் விதமாக சுவாரஸ்யத்தோடு எதையும் சொல்லக்கூடிய வல்லமை பெற்றவர்கள் நம் கதை சொல்லிகள். அந்த மரபின் நல்ல கூறுகளைத் தன் பேச்சில் பயன்படுத்துபவர் டாக்டர் ஸ்ரீகாந்த். அவர் பேச ஆரம்பித்தால் கேட்பவர்களுக்குக் காலம், இடம் எல்லாமே மறந்துவிடும். புதுவை மாநிலத்தில் அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. படித்தது மருத்துவமும், சட்டமும். பார்த்தது  போலீஸ் வேலை . என்றாலும் அவரது மனதில் நிறைந்திருந்தது என்னவோ ஒரு படைப்பாளியின் உத்வேகம்தான் . 
‘உங்களுக்குப் பிடித்த ஹீரோ யார்?’ என்று நமது இளைய தலைமுறையிடம் கேட்டால் அவர்களில் பெரும்பாலோர் சினிமா ஹீரோக்களைத் தாண்டி சிந்திக்க மாட்டார்கள். அது அவர்களின் தவறு அல்ல. வீரத்துக்கும் ரவுடித் தனத்துக்கும் வேறுபாடில்லாமல் போய்விட்ட காலமிது. நமது கல்வி முறையும்கூட நமது காவிய நாயகர்களை  இளைய தலைமுறைக்கு எடுத்துச்சொல்லத் தவறிவிட்டது. அதன் மோசமான விளைவுதான் இது. நாம் போற்றவேண்டிய தேசம் என்பது மலைகள், நதிகள், மரங்கள் மட்டுமே கொண்ட நிலப்பரப்பு அல்ல. அது ஒரு கொள்கை. அதை ஏற்றுக்கொள்வதே தேச பக்தி.  தேச பக்தியை வலியுறுத்தி  அவர் ஜூனியர் விகடனில் ' மறத்தல் தகுமோ '  என்ற தலைப்பில் எழுதிய தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. விகடன் பதிப்பகம் மூலம் நூலாகவும் வெளிவந்து ஆயிரக் கணக்கில் விற்பனையானது. 

ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள பல நண்பர்கள் இருப்பார்கள்.ஆனால் துயரத்தைச் சிலரோடு மட்டுமே நாம் பகிர்ந்துகொள்ள முடியும் . நான் எனது குடும்பக் கவலைகளையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய நண்பர்களில் ஒருவராக ஸ்ரீகாந்த் இருந்தார். காவல்துறையில் அவர் அர்ப்பணிப்போடு பணியாற்றினாலும் அவருக்கு அந்த வேலை மனதுக்கு உகந்ததாக இல்லை. ஆந்திராவில் ஒருவர் ஒரு ரூபாய்க்கு ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகிறாராம். அதைப் போல பாண்டிச்சேரியில் செய்யவேண்டும் என அவர் ஆசைப்பட்டார். சலவைத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த சில இளைஞர் களை  ஒன்றிணைத்து 'இன்டஸ்ட்ரியல் லாண்டரி' ஒன்றைத் துவக்கினார் .அதில் அவர்களைப் பங்காளிகளாக்கி ஊக்குவித்தார். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட பலருக்கு இலவசமாக சிகிச்சை பெற அவர் உதவி செய்தார்.

என்னை அந்தமானுக்கு வரச் சொல்லி   வற்புறுத்திக்கொண்டே இருந்தார். ஒரு மாதம் வந்து தங்கியிருந்து ஒரு புத்தகம் எழுதுங்கள் என்றார். அந்தமானில் இருக்கும் தமிழர்கள் படும் துயரங்கள் தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரிடம் பேசினேன். மீண்டும்  ஐ.பி யில் சேர்வதற்கு முயற்சித்து வருவதாகச் சொன்னவர் டெல்லிக்கு வரும்போது நேரில் சந்திப்போம் என்றார். இப்போது அவரது குரல் மட்டும்தான் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. 

புதுச்சேரியிலிருந்து மாற்றலாகிச் செல்வதற்கு முன்பு கிழக்குக் கடற்கரைச் சாலையில் பல வருடங்களாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த சாலை நேரடியாகப் போகும்படி ஏற்பாடு செய்தார். நேரு வீதியில் பழைய சிறைச்சாலை இருந்த இடத்தை வாகனங்கள் நிறுத்துமிடமாக மாற்றினார். புதுச்சேரிக்கு எத்தனையோ ஆளுநர்கள் வந்தாலும் புதுவை மக்கள் சேத்திலால்  காலத்தைப் பொற்காலம் என்பார்கள் அதுபோல எத்தனையோ போலிஸ் அதிகாரிகள் வந்தாலும் ஸ்ரீகாந்த் காலத்தை புதுவை மக்கள் மறக்கவே மாட்டார்கள். 

Thursday, July 7, 2011

பேராசிரியர் கா சிவத்தம்பியின் மறைவு குறித்து எம் ஏ நுஃமான்



  (பி.பி.சி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.கேட்டு எழுதியவர்: ரவிக்குமார் )


பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி நேற்று மாலை(06.07.2011) தனது எண்பதாவது வயதில் கொழும்பில் தனது  மகளின் வீட்டில் காலமானார் . சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகிலும் தமிழ்ப்  புலமைத் துறையிலும் மிகப்பெரிய ஆளுமைகளுள் ஒருவராக செயல்பட்டுவந்தவர் அவர். பேராசிரியர்கள் வையாபுரிப் பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரம், வ.அய்.சுப்ரமணியம் போன்றவர்களின் பின்னர் தமிழியல் துறையில் உலகளாவிய நிலையில் பாரிய செல்வாக்கு செலுத்திய இரு தமிழ்ப் பேராசிரியர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் கைலாசபதி, மற்றவர் சிவத்தம்பி. கைலாசபதி தனது நாற்பத்தொன்பதாம் வயதில் காலமானார். அவரைவிட முப்பது ஆண்டுகள் அதிகம் வாழ்ந்து சிக்கலான சமூக அறிவியல் சூழலில் உயிர்ப்புடன் செயல்பட்டவர் பேராசிரியர் சிவத்தம்பி.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆறுமுக நாவலர் ,சி.வை.தாமோதரம்பிள்ளை ஆகியோரைப்போல் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இலங்கையைத் தாண்டி தமிழ்நாட்டிலும் ஆழமான செல்வாக்கு செலுத்தியவர்கள் பேராசிரியர் கைலாசபதியும், சிவத்தம்பியுமே என்பது மிகையான  கூற்று அல்ல. 1956இல் கொழும்பு சாஹிரா கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய சிவத்தம்பி இலங்கை பாராளுமன்றத்தில் சமகால மொழிபெயர்ப்பாளராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.பின்னர் வித்யோதய பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக 1965இல் இணைந்தார்.1978 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிப் பின்னர் ஓய்வுபெற்றார்.கிழக்குப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இவர் வருகைதரு பேராசிரியராக பணிபுரிந்திருக்கின்றார். சர்வதேசப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் அவர் ஒரு வருகைதரு பேராசிரியராக கௌரவம் பெற்றிருக்கின்றார்.

1950களில் இலங்கையில் முற்போக்கு இலக்கிய இயக்கத்தைக் கட்டியெழுப்பியவர்களில் சிவத்தம்பியும் ஒருவர். மார்க்சிய சிந்தனையில் அவருக்கிருந்த ஈடுபாடு பல்துறை சிந்தனையாளனாக அவர் வளர்ச்சி அடைவதற்கு அடிப்படையாக அமைந்தது. இலக்கியம்,பண்பாடு,சமூகம்,அரசியல் என்பவற்றுக்கிடையே இருந்த ஊடாட்டத்தை அவர் தம் ஆய்வுகளில் விளக்க முயன்றார்.இந்தவிதத்தில் தமிழியல் துறையின் செழுமைக்கு பேராசிரியர் சிவத்தம்பியின் பங்களிப்பு முக்கியமானது. சங்க இலக்கியம் , தொல்காப்பிய கவிதையியல் பற்றிய அவரது ஆய்வுகளும் முக்கியமானவை. நவீன இலக்கிய வடிவங்களான சிறுகதை, நாவல், நாடகம் ,கவிதை என்பன தொடர்பாக அவர் அதிகம் எழுதியுள்ளார். கடந்த முப்பது ஆண்டுகளாக இலங்கையில் மேலோங்கியிருந்த இனத்துவம், இன முரண்பாடு, அரசியல் தொடர்பாக அவர் தொடர்ச்சியாக எழுதிவந்தார்.

1950களிலிருந்து இன்றுவரை அவர் எழுதியவை ஏராளம்.தமிழிலும் ஆங்கிலத்திலுமாக சுமார் ஐம்பது நூல்கள் வெளிவந்துள்ளன.இன்னும் ஏராளமான அவரது கட்டுரைகள் நூல்வடிவம் பெறவேண்டியுள்ளன.சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகால அவரது பல்கலைக்கழக சேவையில் அவர் ஏராளமான மாணவர்களை உருவாக்கியிருக்கின்றார்.தன் கல்வி சேவைக்காக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அவர் அதிகம் கௌரவிக்கப்பட்டிருக்கின்றார்.தமிழ் மொழி ,இலக்கியம்,தமிழர் பண்பாடு அரசியலென்று எத்துறை தொடர்பாகவும் ஆழமான கருத்துகளைச் சொல்லக்கூடிய ஒருவராக கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் இருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி மட்டுமே. பலதுறை ஆளுமைமிக்க அவரது மறைவு ஒரு பெரிய இடைவெளியை விட்டுச்சென்றுள்ளது.

கா சிவத்தம்பியின் மறைவு குறித்து ஜார்ஜ் எல் ஹார்ட்




பேராசிரியர் கா சிவத்தம்பியின் மறைவு குறித்து ஜார்ஜ் எல் ஹார்ட் அவர்கள் சி தமிழ்(ctamil) மடல் குழுமத்தில் எழுதியிருக்கும் குறிப்பு:


 சில ஆண்டுகளுக்கு முன்னர்  சிவத்தம்பி அவர்கள் சுமார் ஒருமாத காலம் பெர்க்லிக்கு வந்திருந்தபோது அவரோடு கணிசமான நேரத்தைச் செலவிடும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரை அறிந்த எவரும் மறக்க முடியாத அளவுக்கு அணுக்கமும் வசீகரமும் நிரம்பிய அசாதாரணமான மனிதர் அவர்.உருவத்தை வைத்து மட்டுமல்ல மற்ற விதங்களிலும் அவரை ஒரு ’பிரம்மாண்டமான ஆளுமை’ என்று குறிப்பிடலாம்.சங்கத் தமிழில் அரசன் என்பதைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு சொற்களைப் பற்றியும் அவை எவ்வாறு துல்லியமாக வேறுபடுகின்றன என்பதைப் பற்றியும் தான் எழுதியிருந்த கட்டுரை ஒன்றை அவர் வாசித்துக் காட்டியது எனக்கு நினைவிலிருக்கிறது. அங்கு நானும் ரிச் ஃப்ரீமெனும் மட்டும்தான் பார்வையாளர்களாக இருந்தோம்.  அசாதாரணமான சிந்தனையாளர் ஒருவரின் முன்னால் அமர்ந்திருக்கிறோம் என நாங்கள் இருவருமே உணர்ந்தோம். அவர் பெர்க்லியை விட்டுப் போன பிறகு இலங்கையில் யுத்தம் தீவிரம்பெற்றுவிட்டது. சிந்தனையாளராக மட்டுமின்றி ஒரு அரசியல்வாதியாகவும் இருந்த அவரும் தாக்குதலுக்கு இலக்காகக்கூடும்  என நான் கவலையுற்றேன். அடுத்து அவரை நான் சந்தித்தது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போதுதான். அன்றைய முதல்வரை அவர் தங்கியிருந்த விடுதியின் அறையில் சந்திக்கப் போயிருந்தபோதுதான் நாங்கள் சந்தித்துக்கொண்டோம். சிவத்தம்பி மாறவே இல்லை. முதல்வருக்கு உவப்பளிக்காத ஆனால் சொல்லியே ஆகவேண்டிய பல விஷயங்களை அவர் பேசிக்கொண்டே போனார்.முதல்வரிடம் பேசியபோது சிவத்தம்பியின் ஆளுமை எப்படி வெளிப்பட்டது  என்பது இப்போதும் என் நினைவில் இருக்கிறது.   அவரது மறைவு இலங்கைக்கும் தமிழுக்கும் பேரிழப்பாகும்.

ஜார்ஜ் எல் ஹார்ட்  

( தமிழில் : ரவிக்குமார் )