Showing posts with label classical tamil. Show all posts
Showing posts with label classical tamil. Show all posts

Friday, October 18, 2013

செம்மொழி நாள்

ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல்தேதியை செம்மொழி நாளாகக் கடைப்பிடிக்க கேரள அரசு முடிவுசெய்திருக்கிறது. மலையாள மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் கொடுக்கப்பட்டதையடுத்து இந்த முடிவை கேரள அரசு அறிவித்திருக்கிறது.

கேரள மாநில கலாச்சாரத் துறையும் கேரள சாகித்ய அகாதமியும் இணைந்து மாவட்டம்தோறும் நிகழ்ச்சிகளை இதற்காக ஏற்பாடு செய்யவிருக்கின்றன. கேரள சாகித்ய அகாதமி மலையாளத்தில் இருக்கும் பழமையான ஆயிரம் நூல்களை எண்வயத் தொழில்நுட்பத்தின்மூலம் ( Digitisation)பிரதியெடுத்து நூலகங்களுக்கு இலவசமாக வழங்க முடிவுசெய்திருக்கிறது. மொழிபெயர்ப்புக்கென தனியாக ஒரு பிரிவும் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்தத் தகவல்களை கேரள கலாச்சாரத் துறை அமைச்சர் கே.சி.ஜோசப் தெரிவித்திருக்கிறார்.

தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் வழங்கப்பட்டதுகுறித்துப் பெருமைபடப் பேசி மகிழும் நாம் அந்த அங்கீகாரம் கிடைத்த நாளை நினைவுகூரும் விதமாக எதையும் செய்யவில்லை என்பதை  நினைத்தால் வருத்தமே எஞ்சுகிறது.அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி  தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்கும் ஆணையை  மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது( அரசாணை எண்: IV-14014/7/2004-NI-II dated 12.10.2004.) அந்த நாளை நாம் ஏன் கேரள அரசு செய்வதுபோல செம்மொழி நாளாகக் கடைபிடிக்ககூடாது? இதை மாநில அரசாங்கம்தான் செய்யவேண்டும் என்பதுகூட இல்லை. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமே அந்த நாளை செம்மொழி நாள் எனக் கடைபிடித்து ஒரு கருத்தரங்காவது நடத்தலாமே! அவர்களிடம் நிதி நல்கை பெற்று கல்லூரிகளிலும் , பல்கலைக்கழகங்களிலும் உருப்படியில்லாத கருத்தரங்குகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். வெறும் செலவுக் கணக்கு காட்டுவதற்கே பெரும்பாலும் இந்தக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன என்று எல்லோருக்கும் தெரியும். அந்தக் கருத்தரங்குகளில் சிலவற்றை ஏன் அக்டோபர் 12 ஆம் தேதி நடத்தச் சொல்லக்கூடாது?

 இப்படி எதுவும் செய்யாமல் , சென்னையில் அமைக்கப்பட்ட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்ன செய்கிறது என்பது எவருக்கும் புரியாத மர்மம்.இந்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் தொகையைக்கூட செலவழிக்க வகை தெரியாமல் திருப்பி அனுப்புகிற அவலநிலையே அங்கு நிலவுகிறது என்கிறார்கள்.முதல் கோணல் முற்றும் கோணல் என்பதுபோல அந்த நிறுவனம் அமைக்கப்பட்டபோது செய்யப்பட்ட தவறுகள் இப்போதும் அதை அரித்துத் தின்கின்றன.

 விருதுகள் வழங்குவது மட்டும்தான் செம்மொழி நிறுவனத்தின் மூலம் நடைபெறும் ஒரே வேலை எனத் தோன்றுகிறது. அதுவாவது உருப்படியாக நடக்கிறதா என்றால் அதிலும் ஏராளமான குளறுபடிகள். அந்த நிறுவனத்தின்மூலம் ஆண்டுதோறும் எட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. தொல்காப்பியர் விருது ஒருவருக்கும், குறள்பீடம் விருது இருவருக்கும் இளம் அறிஞர் விருது ஐந்துபேருக்கும் வழங்கப்படும் என மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கு குறள் பீடம் விருது அயல்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டும்தான் வழங்கப்படுகிறது. முதல் மூன்று விருதுகளுக்கும் தலா ஐந்து லட்சம் ரூபாயும் இளம் அறிஞர் விருதுகளுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும் வழங்கப்படுகின்றன. முதல் மூன்று விருதுகளும் தமிழ் ஆய்வுகளுக்காக ஒருவரது ஆயுட்காலப் பங்களிப்பைக் கணக்கில்கொண்டு வழங்கப்படுகின்றன. இளம் அறிஞர் விருது பெறுவதற்கு ஒருவர் முப்பது முதல் நாற்பது வயதுக்குள் இருக்கவேண்டும் என்பதுதான் தகுதியாகக் குறிக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை விருது வாங்கிய மூத்த அறிஞர்களின் பட்டியலையும் இளம் அறிஞர்களின் பட்டியலையும் ஒப்பு நோக்கினால் இளம் அறிஞர்களைத் தேர்வு செய்வதில் பெரிய முறைகேடு நடந்துகொண்டிருப்பதை நாம் உணரலாம். அந்த விருதுகளுக்கானவர்களைத் தேர்வு செய்வதில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரது முடிவுதான் செல்லுபடியாகிறது என்கிறார்கள்.இந்த முறைகேட்டைச் சீர்செய்யவில்லையென்றால்  கலைமாமணி விருதுகளைப் போலத்தான் செம்மொழி  விருதுகளும் மதிப்பிழந்துபோகும். 

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பணிகளைச் சீராய்வு செய்வதற்கு சமூகத் தணிக்கை( Social Audit) மேற்கொள்ளப்படவேண்டும் என நான் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறேன்.அரசாங்கத்தின் திட்டங்கள் பலவற்றையும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பல சமூகத் தணிக்கைக்கு உட்படுத்தி அறிக்கை வெளியிட்டு வருகின்றன. அந்தத் திட்டங்களை மேம்படுத்த அவை உதவுகின்றன. அதுபோல செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் சமூகத் தணிக்கைக்கு உட்படுத்தப்படவேண்டும். அதற்குத் தமிழ்மீது பற்றுகொண்ட அறிஞர்கள் முன்வரவேண்டும்.

Thursday, October 18, 2012

' தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் - 1961 - 2011 '





அன்புடையீர் வணக்கம் 

தமிழ் நாடு தொல்லியல் துறை துவக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன ( 1961 - 2011). அந்தத் துறையாலும் அத்  துறையில் ஆர்வம் கொண்ட அறிஞர்களின் தனிப்பட்ட முயற்சிகளாலும் தமிழகத்தில் பல்வேறு அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன, ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுப் படியெடுக்கப்பட்டு அவற்றில் பல  பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பணிகளின் விளைவாகத் தமிழின் தொன்மை உலகறியச் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக வரலாறு குறித்த ஆய்வுகளுக்கு இவை பெருமளவில் பங்களிப்பைச்  செய்திருக்கின்றன. 

இந்திய அளவிலும் உலக அளவிலும் தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் அறியப்பட்டிருந்தாலும்  போதுமான நிறுவன ஆதரவுகளைப் பெறுவதிலும் புதிய ஆய்வாளர்களை ஈர்ப்பதிலும் பல்வேறு சிக்கல்களை இத் துறை சார்ந்த அறிஞர்கள் சந்தித்து  வருகின்றனர். 
 
தொல்லியல் துறையில் நிகழ்ந்துவரும் ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் பிற துறைகளைச் சேர்ந்த கல்வியாளர்களுக்கு அவ்வளவாகத் தெரியாத காரணத்தால் இந்தத் துறைகளுக்கிடையில் பரஸ்பர கொடுக்கல் வாங்கல் நிகழவில்லை. இதனால் ஒருங்கிணைந்த விதத்தில் தமிழ் இலக்கியம், வரலாறு , பண்பாடு முதலானவற்றை ஆராய்வதில் பின்னடைவு காணப்படுகிறது. புதிய ஆய்வாளர்கள தொல்லியல் துறை நோக்கி வராமல் போவதற்கு அது ஒரு காரணமாக இருக்கிறது. 

இந்த நிலையை மாற்றி தமிழகத் தொல்லியல் , கல்வெட்டியல் துறைகளில் நடைபெற்று வரும் ஆய்வுகளை மேலும் பரந்த தளத்துக்கு எடுத்துச் செல்வதில் மணற்கேணி எப்போதும் ஆர்வம் காட்டி வருகிறது. இத் துறையைச் சேர்ந்த அறிஞர்களான  திரு. நடன. காசிநாதன், பேராசிரியர் விஜய வேணுகோபால் , பேராசிரியர் கா.ராஜன், பேராசிரியர் சு.ராஜவேலு உள்ளிட்டப் பலரது கட்டுரைகளை மணற்கேணி வெளியிட்டிருக்கிறது. பொருந்தல், கொடுமணல் அகழ்வாய்வுகள் குறித்தும் பதிவுகளைச் செய்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக 
'  தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் - 1961 - 2011 ' என்னும் தலைப்பில்  ஆய்வரங்கு ஒன்றை மணற்கேணி நடத்தத் திட்டமிட்டிருக்கிறது . 24.11.2012  சனிக்கிழமை அன்று  பாண்டிச்சேரியில் இந்த ஆய்வரங்கு நடைபெறும். 

இந்த ஆய்வரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர்  தங்களது ஒப்புதலை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது எனது அலைபேசியில் ( எண் 9443033305 ) தொடர்புகொண்டோ தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 

அன்புடன் 
ரவிக்குமார் 
ஆசிரியர் , மணற்கேணி 


காலை துவங்கி மாலை வரையில் இரு அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்த ஆய்வரங்கில் கலந்துகொண்டு  ஆய்வுரை  வழங்கிச்  சிறப்பிக்குமாறு அழைக்கப்பட இருப்பவர்கள் : 

திரு.ஐராவதம் மகாதேவன்  , திரு.ஒய் .சுப்பராயலு , திரு.இரா.நாகசாமி , திரு.எஸ்.ராசு   , திரு.விஜய வேணுகோபால் , திரு.நடன.காசிநாதன் , திரு.கா.ராஜன் , திரு.தயாளன் , திரு.சு.ராஜவேலு ,திரு. எஸ் . சாந்தலிங்கம் , திரு. கலைக்கோவன் 

Tuesday, October 16, 2012

தமிழ்ப் பல்கலைக்கழகத்தைக் காப்போம்




தஞ்சாவூரிலுள்ள தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்குச் சொந்தமான நிலத்தில் அறுபது ஏக்கரை மாவட்ட ஆட்சியர்அலுவலகம்   கட்டவும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டவும் தமிழக அரசு கையகப்படுத்தியுள்ளது. அதை எதிர்த்து சென்னையில்15.10.2012 அன்று  உண்ணாநிலை அறப்போராட்டம் ஒன்றை தமிழ் அமைப்புகள் நடத்தின அதில் ரவிக்குமார்  ஆற்றிய உரை  : 

அனைவருக்கும் வணக்கம் 

தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதற்கு ஆயிரம் ஏக்கர் நிலத்தை அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் ஒதுக்கித் தந்தார் என்பது நமக்கெல்லாம் தெரியும் இப்போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தைக் காப்போம் என நாம் சொல்லும்போது அங்கிருக்கும் நிலத்தைக் காப்பது மட்டுமல்ல அந்தப் பல்கலைக் கழகத்தைப் பாதுகாப்பது என்றுதான் நான் பொருள் கொள்கிறேன். தமிழ் நாட்டிலிருக்கும் பல்கலைக்கழகங்கள் எல்லாம் உயர்கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்றன. ஆனால் தமிழ்ப் பல்கலைக்கழகம் மட்டும் தமிழ் வளர்ச்சித் துறையின்கீழ் இயங்குகிறது. பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் பொதுவாக அமைச்சகத்தின் செயலாளரோடுதான் தொடர்புகொள்வார்கள். ஆனால் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மட்டும் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநரைத்தான் தொடர்புகொள்ளவேண்டும் என்று உள்ளது. இது அவரை இழிவுபடுத்துவதாக இருக்கிறது. இந்த நிலையை நாம் மாற்றுவதற்குக் குரல் தரவேண்டும். உயர்கல்வித் துறையின்கீழ் இல்லாத காரணத்தால் பல்கலைக்கழக மானியக்குழு அனுப்புகிற சுற்றறிக்கைகளைக்கூட அவர்கள் பெற முடியாத நிலை. 

உயர்கல்வித் துறை யின் கீழ் இல்லாததால் ஆண்டுதோறும் பட்ஜெட்டில் உயர்கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி இந்தப் பல்கலைக்கழகத்துக்குக் கிடைப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் நிதிக்காகக் காவடி தூக்கும் நிலை. இப்போதுகூட அங்கிருக்கும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப் பணம் இல்லை. ஒய்வு பெற்றவர்களுக்கு அவர்களது பணி ஓய்வுப் பலன்களைக்கூடத் தரமுடியாத மோசமான  நிலை உள்ளது . 

நான் கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக இருந்தேன். அப்போது இருபது ஆண்டுகளாகப் பணி நிரந்தரம் செய்யப்படாதிருந்த ஐம்பத்தைந்து விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டுமென நேரடியாக முதல்வரிடம் எடுத்துச் சொல்லி அவர் கையில் அதற்கான கோப்பைக் கொண்டுபோய்க் கொடுத்து அவர்களை  நிரந்தரம் செய்யவைத்தேன். அவர்களது ஊதிய பாக்கி சுமார் இரண்டுகோடி இருந்தது அதையும் பல்கலைக்கழகத்துக்கு வழங்கச் செய்தேன்.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தை சீர்செய்வதற்காக திரு.அனந்தகிருஷ்ணன் தலைமையில் சீராய்வுக்குழு ஓன்று அமைக்கப்பட்டு அதுவும் தனது அறிக்கையை வழங்கியது. அந்த அறிக்கையை நடைமுறைப்படுத்தவேண்டும் தமிழ்ப் பல்கலைகழகத்துக்கு ஆண்டுக்குக் குறைந்தது பத்து கோடி ரூபாயாவது நிதி வழங்கவேண்டும் என்று சட்டப் பேரவை யில் பேசி 2010 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒன்பதரை கோடி ரூபாய் ஒதுக்கச் செய்தேன். கடந்த ஆட்சிக்காலத்தில் அந்தப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட அதிகபட்ச நிதி அதுதான். 

தமிழ்ப் பல்கலைக்கழகம் மட்டுமல்ல உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆகியவையும் சரிசெய்யப்படவேண்டும். அவற்றுக்கு நிரந்தரமான இயக்குனர்கள்கூட  இல்லை.செம்மொழி நிறுவனத்துக்கு இயக்குனராக நியமிக்கத் தகுதியுள்ள  ஒருவர் கிடைக்கவில்லை என்பது நாமெல்லோரும் வெட்கப்படவேண்டிய செய்தி .  ஆட்சியாளர்கள் தமிழுக்காக இப்படி நிறுவனங்களை உருவாக்குகிறார்கள். ஆனால் அப்படி உருவாக்கும்போதே அதை கொல்வதற்கான நஞ்சையும் அதற்குள் வைத்து விடுகிறார்கள் இவற்றையெல்லாம் காப்பாற்றவேண்டிய பொறுப்பு நமக்கும் இருக்கிறது. இங்கு வந்திருக்கும் தமிழறிஞர் இளங்குமரனார் முனைவர் பொற்கோ உள்ளிட்டவர்கள் முன்முயற்சி எடுத்து இந்த நிறுவனங்களை சமூகத் தணிக்கைக்கு உட்படுத்தும் பணியைச் செய்வதற்கு தமிழ் அறிஞர்களைக் கொண்ட  ஒரு குழுவை உருவாக்க வேண்டும்.இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கவனித்து அவற்றைத் திறம்பட இயங்க வைக்கவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. 

தமிழைப் போல செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் சமஸ்கிருதத்துக்கு இந்தியாவில் பதினாறு பல்கலைக்கழகங்களை அரசு நடத்துகிறது  பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளை நடத்துகிறது.ஆனால் தமிழுக்கு இருப்பது இந்த ஒரேயொரு பல்கலைக்கழகம் மட்டும்தான் இதைக் காப்பாற்ற எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும்  நான் சார்ந்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உங்களோடு உடன் நிற்கும் என்ற உறுதியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

Sunday, July 22, 2012

மணற்கேணி மூன்றாம் ஆண்டின் முதல் இதழ்

 


வணக்கம்
மணற்கேணி மூன்றாம் ஆண்டின் முதல் இதழ் தமிழ்ச் செவ்வியல் ஆய்வுகள் குறித்த சிறப்பிதழாக வெளியாகிறது.
சிறப்புப் பகுதியில் கி.நாச்சிமுத்து,கோ.விசயவேணுகோபால், செ.வை.சண்முகம், வா.செ.குழந்தைசாமி,இரா.கோதண்டராமன், வீ.அரசு,பெ.மாதையன்,இந்திரா பார்த்தசாரதி , செ.ரவீந்திரன் உள்ளிட்ட பதினேழு பேர் அது குறித்து எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
ஷார்ல் போதலேரின் கவிதைகள்
பாகிஸ்தான் எழுத்தாளர் சபின் சாவேரி ஜிலானி , தேன்மொழி, ரவிக்குமார், ஆகியோரின் சிறுகதைகள்
பூலாங்குறிச்சி கல்வெட்டுகள் குறித்து விசயவேணுகோபால், எடக்கல் , சமணர் மலை கல்வெட்டுகள் குறித்து ராசவேலு கட்டுரைகள்
சங்க காலத்தில் கல்வி குறித்த க.ப.அறவாணனின் கட்டுரை
இ.அண்ணாமலை அவர்களின் நேர்காணல்

புகழ்பெற்ற பெண்ணியக் கோட்பாட்டாளர் லூஸி இரிகாரே வின் ' நமது உதடுகள் ஒன்றாகப் பேசும்போது ' என்ற கட்டுரை
ஈழம் தொடர்பான இரண்டு நூல்கள் குறித்து எம்.எஸ்.எஸ் .பாண்டியன் , துவாரகன் ஆகியோரின் கட்டுரைகள்
120 பக்கங்கள் விலை 60 ரூபாய் .

பிரதி வேண்டுவோர் manarkeni@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

Thursday, June 7, 2012

செவ்வியல் இலக்கிய ஆய்வுகள் இன்று




செவ்வியல் இலக்கிய ஆய்வுகள் இன்று
கலந்தாய்வரங்கம் 
10.06.2012
ஞாயிறு காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை 
கருத்தரங்கக் கூடம் , பாண்டிச்சேரிப் பல்கலைக் கழக விருந்தினர் மாளிகை 
பாண்டிச்சேரி 

 வணக்கம் 
எதிர்வரும்  10.06.2012 ஞாயிறு அன்று காலை பத்து மணி முதல் மாலை ஐந்து வரை '' செவ்வியல் இலக்கிய ஆய்வுகள் இன்று '' என்ற தலைப்பில் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றை பாண்டிச்சேரியில் ஏற்பாடு செய்திருக்கிறேன். மணற்கேணி இதழ் 11 இல் வெளியான கட்டுரைகளில் செவ்வியல் இலக்கிய ஆய்வுகள் தொடர்பாக பேராசிரியர்  இ.அண்ணாமலை மற்றும்  , ஷெல்டன் போல்லாக் ஆகியோர் முன்வைத்திருக்கும்   கருத்துகளை மேலும் விவாதிக்கவும், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த் துறைகளில் நடைபெற்றுவரும் தமிழ்ச் செவ்வியல் இலக்கிய ஆய்வுகளை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறியவும், முந்தைய தலைமுறைத் தமிழ் அறிஞர்களின் அறிவு வளங்களை இன்றையத் தலைமுறை ஆய்வாளர்களிடம் கொண்டுவந்து சேர்ப்பதற்கான வழிவகைகளைக் கண்டறியவும் தான் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. . 
இதில் பேராசிரியர்கள் கி.நாச்சிமுத்து(டெல்லி  )  , சோ.ந.கந்தசாமி(தஞ்சை ), செ.வை.சண்முகம்(சிதம்பரம் ) , பெ.மாதையன்(சேலம் ) , து.மூர்த்தி (அலிகார் ) வீ.அரசு(சென்னை ), மதிவாணன் (திருச்சி ) ஜெயராமன்(வேலூர் ), விஜயவேணு கோபால்(புதுச்சேரி ) , ஆர்.கோதண்டராமன்(சென்னை ) , இ.சுந்தரமூர்த்தி (சென்னை ) ஆ.கார்த்திகேயன் (தஞ்சை ) ,உதயசூரியன்(தஞ்சை ) , கா.ராஜன்(புதுவை ), பெருமாள் முருகன்( நாமக்கல் ) ,ஜெய்கணேஷ்(சென்னை ) புதுச்சேரியைச்  சேர்ந்த  ,பக்தவத்சல பாரதி , இரா.சம்பத், பழனிவேலு, கே.ஏ.குணசேகரன், திருநாகலிங்கம், க.பஞ்சாங்கம், அறிவுநம்பி,சி.காந்தி(திருச்சி ),குணசேகரன்(கும்பகோணம் ) பொ.வேல்சாமி (நாமக்கல் )  உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் மற்றும் சென்னை, புதுவை பகுதிகளைச் சேர்ந்த ஆய்வு மாணவர்கள் பங்கேற்கின்றனர்.  நிகழ்ச்சி முழுவதையும் வீடியோ செய்து அதை இணையத்தில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தில்  முன்வைக்கப்படும் கருத்துகளைத் தொகுத்து கல்லூரிகள் /பல்கலைக்கழகங்களில் இருக்கும் தமிழ்த் துறைத் தலைவர்களோடு விவாதிக்கலாமென முடிவுசெய்யப்பட்டுள்ளது. 
செவ்வியல் இலக்கிய ஆய்வு மாணவர்கள் பயன்பெறவேண்டும் என்பதே இதன் முதன்மையான நோக்கமாகும். 
மணற்கேணி இதழ் சார்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த முயற்சிக்குத் தங்களின் ஆதரவை நாடுகிறேன். இந்த நிகழ்வில் தாங்களும்  கலந்துகொள்ள இயலுமெனில் மகிழ்வேன். தங்களது நண்பர்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவியுங்கள். 
அன்புடன் 
ரவிக்குமார் 
ஆசிரியர் ,மணற்கேணி 

Friday, September 30, 2011

முனைவர் சோ.ந.கந்தசாமி



அறிஞர் சோ.ந.கந்தசாமி எனத் தமிழறிஞர்களாலும் S.N.K என ஆங்கிலம் வல்லாராலும் அழைக்கப்பெறும் கந்தசாமியார் அவர்கள் 15.12.1936ல் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் செயங்கொண்டசோழபுரம் அருகில் உள்ள இலையூர் என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் வை.சோ.நடராச முதலியார், மீனாம்பாள் அம்மாள். கந்தசாமியார் அவர்கள் தொடக்கக் கல்வியை இலையூரிலும், உயர்நிலைக் கல்வியை உடையார்பாளையம் பள்ளியிலும் பயின்றவர். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை- பொருளாதாரம் பயின்றவர்.

சோ.ந.கந்தசாமியார் அவர்கள் முதுகலைத் தமிழ் இலக்கியம் தண்ணார் தமிழளித்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்(1958). எம்.லிட் (1963), முனைவர் (1971) பட்ட ஆய்வையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டவர். மொழியியல் பட்டயம், வடமொழிப் பட்டயம் உள்ளிட்ட கல்வியையும் அண்ணாமலையில் பயின்றவர்கள்.

தாம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணியைத் தொடர்ந்து நடத்தினார். பின்னர் மலேசியாப் பல்கலைக்கழகத்திலும் (1979-85) தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் (1985-1997), சில காலம் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் தம் தமிழ்ப்பணியை அழுத்தமாகச் செய்தவர். இவர் அறிஞர் அ.சிதம்பரநாதன் செட்டியார், தெ.பொ.மீ ஆகியோரின் மேற்பார்வையில் கற்றமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பாலிமொழிப் பாடல்கள் பலவற்றை மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றலுடையவர். கல்வெட்டுகளிலும் நல்ல புலமையுடையவர்.

சோ.ந. கந்தசாமியார் அவர்கள் நாற்பதாண்டுகள் கல்விப் பணியாற்றியுள்ளார். இவரிடம் கற்றவர்களும், இவருடன் கற்றவர்களும் இவர் கல்வி கண்டு மருள்வது உண்டு. நினைவாற்றலில் வல்லவர். எடுத்துரைப்பதில் ஆற்றலாளர். மேடையை, வகுப்பறையத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்படியான பேச்சாற்றல் வல்லவர். எதுகைகளும்,மோனைகளும் இவர் பேச்சில் சிந்திச் சிதறும்.

'அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அன்னைப் பல்கலைக்கழகமாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகம்' என்றும், 'எங்கள் மனசைக் கவர்ந்த பனசைக் கல்லூரி' என்றும் இவர் விளிக்கும் பாங்கு கற்றவர்களால் என்றும் நினைவுகூரத்தக்கன. இத்திறம் கண்ட கற்றார் களிப்புறுவர். இவர் தமிழ் ஆளுமைகளுள் குறிப்பிடத் தகுந்த மேலோர். நூலோர்.

கந்தசாமியார் அவர்கள் மருதூரில் புகழ்பெற்ற விடுதலைப் போராட்ட வீரர் முத்துக்குமாரசாமி அவர்களின் புதல்வியார் சமுனாதேவி அவர்களை இல்வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொண்டவர். கந்தசாமியார் அவர்களுக்கு ஆண்மகன் ஒருவரும், பெண்மக்கள் நால்வரும் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். இவர்கள் அனைவரும் உயர்கல்வி கற்று நல்ல நிலையில் உள்ளனர்.

அறிஞர் சோ.ந.கந்தசாமி அவர்கள் வகுப்பறையில் மட்டும் புலமை புலப்படும்படி விளங்கினார் என்று இல்லை. இவர் இயற்றிய நூல்களும் என்றும் பயன்படுத்தத் தக்கன. தரத்தன. இவர் இந்து நாளிதழில் முப்பத்தந்து ஆண்டுகளாக எழுதும் நூல் மதிப்புரைகள் அறிஞர் உலகால் என்றும் போற்றி மதிக்கப்படுவனவாகும்.

இவர் இயற்றிய நூல்களை இலக்கியம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு, இலக்கணம், மொழியியல், தத்துவம் என்னும் வகைகளில் அடக்கிப் பார்க்கலாம்.

இலக்கிய நூல்கள்:

1.சங்க இலக்கியத்தில் மதுரை
2.திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்
3.இலக்கியமும் இலக்கிய வகையும்
4.தமிழிலக்கியச் செல்வம் (ஐந்து தொகுதிகள்)
5.திருமுறை இலக்கியம்
6.திருமுறையில் இலக்கிய வகை
7.உலகத் தமிழிலக்கிய வரலாறு (கி.பி.501-கி.பி.900)
8.மணிமேகலையின் காலம்
9.பரிபாடலின் காலம்
10.இலக்கியச்சோலையிலே

திறனாய்வு:

11.Bharathidasan As a Romantic Poet
12.Anthology of Book Reviews
13.தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்

மொழிபெயர்ப்பு:

14.English Translation of Sundarar Devaram Volume I (patikam 1-50)
15.Volume II (patikam 51-100) (Total 1026 verses)
16.16.திருமந்திரம் எட்டாம் தந்திரம் English Translation of Tirumantiram (Total 527 verses)

இலக்கணம்:

17.தமிழிலக்கணச் செல்வம் (இரு தொகுதிகள்)
18.தொல்காப்பியம் - எழுத்ததிகாரத் தெளிவு
19.புறத்திணை வாழ்வியல்
20.தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் (மூன்று தொகுதிகள்)
21.கலித்தொகை யாப்பியல்

மொழியியல்:

22. A Linguistics Study of Paripatal (M.Lit.Thesis)
23.A Linguistis of Manimekalai

தத்துவம்:

24.தமிழும் தத்துவமும்
25.தமிழிலக்கியத்தில் பௌத்தம்
26.தமிழிலக்கியத்தில் அறிவாராய்ச்சியியல்
27.இந்தியத் தத்துவக் களஞ்சியம் (மூன்று தொகுதிகள்)
28.Budhism As Expounded in Manimekalai (Ph.D. Dissertation)
29.Indian Epistemology as Expounded in the Tamil Classics
30.Tamil Literature and Indian Philosophy
31.The Yoga of Siddha Avvai (Published in Canada)
32.Advaitic Works and Thought in Tamil
33.The Encounter Between saiva sidhanta and Advaita vedanta

அறிஞர் சோ.ந.கந்தசாமி அவர்கள் பல்வேறு நூல்களை எழுதியதுடன் அமையாமல் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பல பொறுப்புகளை வகித்துக் கல்விப் பணியாற்றியுள்ளார். சாகித்திய அகாதெமியின் உறுப்பினராகவும், பல்கலைக்கழ ஆட்சிக்குழு உறுப்பினர், ஆய்வுக்குழு உறுப்பினர், தேர்வுக்குழுத் தலைவர், பாடத்திட்டக் குழுத்தலைவர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ஏற்றுத் திறம்படப் பணிபுரிந்துள்ளார்.இந்திய நடுவண் தேர்வாணையத்தின் (U.P.S.C.) முதன்மைத் தேர்வாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

இவர்தம் தமிழ்ப்பணியறிந்த பல்வேறு நிறுவனங்கள் இவருக்குப் பல சிறப்புகளைச் செய்துள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஆராய்ச்சிப் பரிசுகள் இவருக்குக் கிடைத்துள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழாக் கவிதைக்கு முதற்பரிசாகத் தங்கப் பதக்கம் பெற்றவர். திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்கள் என்னும் இவர்தம் நூலுக்கும், இந்தியத் தத்துவக்களஞ்சியம் என்ற நூலுக்கும் தமிழக அரசு சிறந்த நூலுக்கான பரிசு வழங்கிச் சிறப்பித்துள்ளது. இவர் அண்ணாமலை செட்டியார் தமிழிலக்கிய விருது பெற்ற பெருமைக்கு உரியவர். தருமபுர ஆதீனத்தின் சித்தாந்தக் கலாநிதி, குன்றக்குடி ஆதீனத்தின் தமிழாகரர், திருவாவடுதுறை ஆதீனத்தின் சித்தாந்தச் செம்மணி, மெய்யப்பன் அறக்கட்டளையின் சிறந்த தமிழறிஞர் விருது உள்ளிட்ட பல பட்டங்களையும் விருதுகளையும் தன் தகுதியால் பெற்றுள்ளார்.

அலுவல் முறையில் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஆராய்ச்சிப் பணிகளிலும்,எழுத்துப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள பேராசிரியர் அவர்கள் மைசூரில் உள்ள செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனத்தின் முதுநிலை ஆய்வறிஞராகப் பணிபுரிகின்றார்.

சோ.ந.கந்தசாமியார் அவர்களின் தொடர்பு முகவரி:

முனைவர் சோ.ந.கந்தசாமி அவர்கள்
61,ஐந்தாம் தெரு,
நடராசபுரம்(தெற்கு).
தஞ்சாவூர் - 613007
தொலைபேசி : 04362 241027

கட்டுரை ஆக்கம் : முனைவர் மு.இளங்கோவன் 

Thursday, July 7, 2011

பேராசிரியர் கா சிவத்தம்பியின் மறைவு குறித்து எம் ஏ நுஃமான்



  (பி.பி.சி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.கேட்டு எழுதியவர்: ரவிக்குமார் )


பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி நேற்று மாலை(06.07.2011) தனது எண்பதாவது வயதில் கொழும்பில் தனது  மகளின் வீட்டில் காலமானார் . சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகிலும் தமிழ்ப்  புலமைத் துறையிலும் மிகப்பெரிய ஆளுமைகளுள் ஒருவராக செயல்பட்டுவந்தவர் அவர். பேராசிரியர்கள் வையாபுரிப் பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரம், வ.அய்.சுப்ரமணியம் போன்றவர்களின் பின்னர் தமிழியல் துறையில் உலகளாவிய நிலையில் பாரிய செல்வாக்கு செலுத்திய இரு தமிழ்ப் பேராசிரியர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் கைலாசபதி, மற்றவர் சிவத்தம்பி. கைலாசபதி தனது நாற்பத்தொன்பதாம் வயதில் காலமானார். அவரைவிட முப்பது ஆண்டுகள் அதிகம் வாழ்ந்து சிக்கலான சமூக அறிவியல் சூழலில் உயிர்ப்புடன் செயல்பட்டவர் பேராசிரியர் சிவத்தம்பி.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆறுமுக நாவலர் ,சி.வை.தாமோதரம்பிள்ளை ஆகியோரைப்போல் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இலங்கையைத் தாண்டி தமிழ்நாட்டிலும் ஆழமான செல்வாக்கு செலுத்தியவர்கள் பேராசிரியர் கைலாசபதியும், சிவத்தம்பியுமே என்பது மிகையான  கூற்று அல்ல. 1956இல் கொழும்பு சாஹிரா கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய சிவத்தம்பி இலங்கை பாராளுமன்றத்தில் சமகால மொழிபெயர்ப்பாளராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.பின்னர் வித்யோதய பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக 1965இல் இணைந்தார்.1978 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிப் பின்னர் ஓய்வுபெற்றார்.கிழக்குப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இவர் வருகைதரு பேராசிரியராக பணிபுரிந்திருக்கின்றார். சர்வதேசப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் அவர் ஒரு வருகைதரு பேராசிரியராக கௌரவம் பெற்றிருக்கின்றார்.

1950களில் இலங்கையில் முற்போக்கு இலக்கிய இயக்கத்தைக் கட்டியெழுப்பியவர்களில் சிவத்தம்பியும் ஒருவர். மார்க்சிய சிந்தனையில் அவருக்கிருந்த ஈடுபாடு பல்துறை சிந்தனையாளனாக அவர் வளர்ச்சி அடைவதற்கு அடிப்படையாக அமைந்தது. இலக்கியம்,பண்பாடு,சமூகம்,அரசியல் என்பவற்றுக்கிடையே இருந்த ஊடாட்டத்தை அவர் தம் ஆய்வுகளில் விளக்க முயன்றார்.இந்தவிதத்தில் தமிழியல் துறையின் செழுமைக்கு பேராசிரியர் சிவத்தம்பியின் பங்களிப்பு முக்கியமானது. சங்க இலக்கியம் , தொல்காப்பிய கவிதையியல் பற்றிய அவரது ஆய்வுகளும் முக்கியமானவை. நவீன இலக்கிய வடிவங்களான சிறுகதை, நாவல், நாடகம் ,கவிதை என்பன தொடர்பாக அவர் அதிகம் எழுதியுள்ளார். கடந்த முப்பது ஆண்டுகளாக இலங்கையில் மேலோங்கியிருந்த இனத்துவம், இன முரண்பாடு, அரசியல் தொடர்பாக அவர் தொடர்ச்சியாக எழுதிவந்தார்.

1950களிலிருந்து இன்றுவரை அவர் எழுதியவை ஏராளம்.தமிழிலும் ஆங்கிலத்திலுமாக சுமார் ஐம்பது நூல்கள் வெளிவந்துள்ளன.இன்னும் ஏராளமான அவரது கட்டுரைகள் நூல்வடிவம் பெறவேண்டியுள்ளன.சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகால அவரது பல்கலைக்கழக சேவையில் அவர் ஏராளமான மாணவர்களை உருவாக்கியிருக்கின்றார்.தன் கல்வி சேவைக்காக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அவர் அதிகம் கௌரவிக்கப்பட்டிருக்கின்றார்.தமிழ் மொழி ,இலக்கியம்,தமிழர் பண்பாடு அரசியலென்று எத்துறை தொடர்பாகவும் ஆழமான கருத்துகளைச் சொல்லக்கூடிய ஒருவராக கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் இருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி மட்டுமே. பலதுறை ஆளுமைமிக்க அவரது மறைவு ஒரு பெரிய இடைவெளியை விட்டுச்சென்றுள்ளது.

கா சிவத்தம்பியின் மறைவு குறித்து ஜார்ஜ் எல் ஹார்ட்




பேராசிரியர் கா சிவத்தம்பியின் மறைவு குறித்து ஜார்ஜ் எல் ஹார்ட் அவர்கள் சி தமிழ்(ctamil) மடல் குழுமத்தில் எழுதியிருக்கும் குறிப்பு:


 சில ஆண்டுகளுக்கு முன்னர்  சிவத்தம்பி அவர்கள் சுமார் ஒருமாத காலம் பெர்க்லிக்கு வந்திருந்தபோது அவரோடு கணிசமான நேரத்தைச் செலவிடும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரை அறிந்த எவரும் மறக்க முடியாத அளவுக்கு அணுக்கமும் வசீகரமும் நிரம்பிய அசாதாரணமான மனிதர் அவர்.உருவத்தை வைத்து மட்டுமல்ல மற்ற விதங்களிலும் அவரை ஒரு ’பிரம்மாண்டமான ஆளுமை’ என்று குறிப்பிடலாம்.சங்கத் தமிழில் அரசன் என்பதைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு சொற்களைப் பற்றியும் அவை எவ்வாறு துல்லியமாக வேறுபடுகின்றன என்பதைப் பற்றியும் தான் எழுதியிருந்த கட்டுரை ஒன்றை அவர் வாசித்துக் காட்டியது எனக்கு நினைவிலிருக்கிறது. அங்கு நானும் ரிச் ஃப்ரீமெனும் மட்டும்தான் பார்வையாளர்களாக இருந்தோம்.  அசாதாரணமான சிந்தனையாளர் ஒருவரின் முன்னால் அமர்ந்திருக்கிறோம் என நாங்கள் இருவருமே உணர்ந்தோம். அவர் பெர்க்லியை விட்டுப் போன பிறகு இலங்கையில் யுத்தம் தீவிரம்பெற்றுவிட்டது. சிந்தனையாளராக மட்டுமின்றி ஒரு அரசியல்வாதியாகவும் இருந்த அவரும் தாக்குதலுக்கு இலக்காகக்கூடும்  என நான் கவலையுற்றேன். அடுத்து அவரை நான் சந்தித்தது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போதுதான். அன்றைய முதல்வரை அவர் தங்கியிருந்த விடுதியின் அறையில் சந்திக்கப் போயிருந்தபோதுதான் நாங்கள் சந்தித்துக்கொண்டோம். சிவத்தம்பி மாறவே இல்லை. முதல்வருக்கு உவப்பளிக்காத ஆனால் சொல்லியே ஆகவேண்டிய பல விஷயங்களை அவர் பேசிக்கொண்டே போனார்.முதல்வரிடம் பேசியபோது சிவத்தம்பியின் ஆளுமை எப்படி வெளிப்பட்டது  என்பது இப்போதும் என் நினைவில் இருக்கிறது.   அவரது மறைவு இலங்கைக்கும் தமிழுக்கும் பேரிழப்பாகும்.

ஜார்ஜ் எல் ஹார்ட்  

( தமிழில் : ரவிக்குமார் )