அன்பின் ரவிக்குமார்,
திரு ராஜ் கௌதமனின் நூலை நான் படித்ததில்லை. இனிப் படிக்கவும் வாய்ப்பும் நேரமும் கிடைக்காது -- உடல் நலக் குறைவைச் சரிசெய்யவும் ஏற்கனவே மேற்கொண்ட இலக்கண ஆராய்ச்சிக்கும் நேரம் தேவை. ஆனால் இங்கே அவர் கூறியதாக எடுத்துச் சொல்லப்பட்ட கருத்து அவ்வளவு பொருந்துவதாக இல்லை என்று தோன்றியதால் இந்தப் பதிவு. இதற்குமேல் அடிக்கடிப் பங்குகொள்ள இயலாத நிலை. அன்புடன் பொறுத்துக்கொள்ளவேண்டும். பிறவற்றைத் தனிமடலில் எழுதுகிறேன்.
ராஜ் கௌதமன் கூறியுள்ள ஒரு கருத்தை இத்துடன் இணைத்துப் பார்க்கவேண்டும், “ சங்க காலத்தில் பிராமணர்கள் தனிக் குடியிருப்புகளில் வாழ்ந்தார்கள்.’பார்ப்பனச் சேரி’ என இவர்கள் மட்டும் வாழ்ந்த இடம் சுட்டப்பட்டது.வீட்டில் சமஸ்கிருதமும் வெளியே தமிழும் பேசினார்கள்.
இதுபற்றி என்னுள் எழுந்த கேள்விகள்:
------------------------------ --------------
1. "சங்க காலம்" என்பதை ராஜ் கௌதமன் எப்படி வரையறுக்கிறார்? அதாவது அவர் கருத்துப்படி, எந்த நூற்றாண்டிலிருந்து எந்த நூற்றாண்டு வரை "சங்க காலம்"?
2. "சங்க காலம்" பற்றிக் கருத்துக்கள் சொல்ல எந்த வகை ஆவணங்களை இவர் பயன்படுத்துகிறார்? கல்வெட்டுகளா? இலக்கியமா? எந்தக் கல்வெட்டுகள்? எந்த இலக்கியங்கள்?
3. "சங்க காலத்தில் பிராமணர்கள் தனிக் குடியிருப்புகளில் வாழ்ந்தார்கள்" என்பதற்கு இவர் காட்டும் சான்று என்ன?
4. " 'பார்ப்பனச் சேரி’ என இவர்கள் மட்டும் வாழ்ந்த இடம் சுட்டப்பட்டது." -- இந்தக் குறிப்பைச் சங்க இலக்கியங்களில் எங்கே பார்க்கலாம்?
5. "வீட்டில் சமஸ்கிருதமும் வெளியே தமிழும் பேசினார்கள்" -- இதற்குச் சங்க இலக்கியங்களில் என்ன சான்று இருக்கிறது?
இந்தக் கேள்விகளுக்குத் துல்லியமான விடைகள் கிடைத்தால் நன்றியுடன் மகிழ்வேன்.
எனக்குத் தெரிந்த அளவில்...
------------------------------ ---
6. "சேரி" என்ற நல்ல தமிழ்ச்சொல்லின் பொருள் பிற்காலத்தில் பிறழ்ந்து உணரப்பட்டிருக்கிறது -- 'சேரி என்பது தாழ்த்தப்பட்டவர் வாழும் இடம்' என்று.
7. முதன் முதலாக, தொல்காப்பியச் சொல்லதிகார இளம்பூரணர் உரையில் "பார்ப்பனச் சேரி" என்ற வழக்கு காணப்படுகிறது. (சங்க இலக்கியத்தில் இல்லை.)
இளம்பூரணர் உரை: "சேரி என்பது பலர் இருப்பதுமன். ஆயினும், ஆண்டுச் சில பார்ப்பனக் குடி உளவேல், அதனைப் பார்ப்பனச் சேரி என்பது."
இளம்பூரணர் சங்க காலத்தவர் இல்லை.
அன்புடன்,
ராஜம்