நிதி உதவி
*699-திரு. து. ரவிக்குமார்:
மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா-
ஆதிதிராவிட மக்கள் மழலையர் பள்ளிகளைத் தொடங்கி நடத்துவதற்கு, தாட்கோ மூலமாக நிதியுதவி வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா?மாண்புமிகு திருமதி ஆ. தமிழரசி, ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
சிறப்பு நிதியுதவியின் வழிகாட்டுதலின்படி மழலையர் பள்ளிகள் துவக்கி நடத்த தாட்கோமூலம் நிதியுதவி செய்ய வழிவகை இல்லை.
திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டினுடைய கல்வி கற்றோர் விகிதம், 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 73.45 விழுக்காடு. இதிலே தாழ்த்தப்பட்ட பழங்குடியினருடைய கல்வியறிவு விகிதம் 63 விழுக்காடுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, அந்தச் சமூகத்தைச் சார்ந்த பெண்களை எடுத்துக்கொண்டால் பொதுவான கல்வியறிவு விகிதத்திற்கும், அதற்கும் 20 விழுக்காடு வேறுபாடு இருக்கிறது. இந்தக் குறைகளைப் போக்க வேண்டும் என்பதற்காக சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழே, ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்த குழந்தைகளுக்கு, குறிப்பாக Pre–School , அதாவது, பள்ளிகளிலே சேர்வதற்கு முன்னாலே மழலையர் பள்ளியிலே படிக்கின்ற நிலையிலே இருக்கின்ற குழந்தைகளுக்குச் சிறப்புக் கவனம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கென்று திட்டங்களை வகுக்க வேண்டும் என்று வழிகாட்டுதல் தரப்பட்டு, கடந்த 2003 ஆம் ஆண்டிலே 5,000 நர்சரி பள்ளிகள் அப்போது அங்கன்வாடிகளாக இருந்தவை, நர்சரி பள்ளிகளாக உயர்த்தப்பட்டன. இப்பொழுது தமிழ்நாட்டிலே சுமார் 31,000 மழலையர் பள்ளிகள் இருக்கின்றன. அதிலே ஏழு இலட்சம் குழந்தைகள் படிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையிலே இந்த ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள், சரியான கல்வி வசதி இல்லாமல் சிரமப்படுகின்ற இந்த நேரத்திலே, தாட்கோமூலமாகக் கொடுக்கப்படுகின்ற கடன் வசதிகளிலே, இப்படியான பள்ளிகளைத் துவக்கி நடத்துவதற்கு, கடன் வசதி தந்தால் இந்தக் கல்வியிலே இருக்கின்ற ஏற்றத் தாழ்வைக்...
மாண்புமிகு பேரவைத் தலைவர்: கேள்வியை மாத்திரம் கேளுங்கள்.
திரு. து. ரவிக்குமார்: குறைப்பதற்கு வசதியாக இருக்கும். எனவே, இதை அரசு பரிசீலித்து, இனியாவது இதற்காக நிதி உதவி செய்யுமா என்று உங்கள்மூலமாக அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
மாண்புமிகு திருமதி ஆ. தமிழரசி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஆதி திராவிடர்களுக்கு துவக்கப் பள்ளி 759-ம், பழங்குடி மாணவர்களுக்குத் துவக்கப் பள்ளி 200-ம் ஆக மொத்தம் 959 பள்ளிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. தாட்கோமூலமாக மழலையர் பள்ளிகள் நடத்துவதற்கு வாய்ப்புகள் ஏதும் இல்லை.
No comments:
Post a Comment