7-5-2010
காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்
திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தான் பொறுப்பு வகிக்கின்ற உள்ளாட்சித் துறையிலும், அதுபோல தொழில் துறையிலும், எங்களைப் போன்ற உறுப்பினர்கள் எழுப்பிய நியாயமான கோரிக்கைகளையெல்லாம் ஏற்று, உடனுக்குடன்அதற்கான அறிவிப்புகளை வெளியிட்ட மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள், இன்றைக்கு இந்தக் காவல் துறை மானியத்திற்குப் பதிலளிக்க இருக்கின்ற இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, முதலிலே சில கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகின்றேன்.
டாஸ்மாக்கில் பணிபுரிகின்ற ஊழியர்கள், பல ஊழியர்கள் நல்ல கல்வித் தகுதி பெற்றவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுடைய ஊதியம் மிக, மிகக் குறைவாக இருக்கிறது. அவர்களுடைய பணியை நிரந்தரம் செய்து, அவர்களுடைய கல்வித் தகுதிக்கேற்ப வேறு பணிகளுக்குச் செல்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.
தீயணைப்புத் துறையிலே அனுமதி பெறுகிறபோது, சான்றிதழ் பெறுகிறபோது, லைசென்ஸ் பெறுகிறபோது, தற்போது இருக்கின்ற நடைமுறைகள் மிகவும் சிக்கலானவையாக இருக்கின்றன. அவற்றை எளிமையாக்கி, வெளிப்படையான தன்மையோடு மாற்றியமைத்து, குறிப்பாக கணினிமூலம் விண்ணப்பித்து, அனுமதி பெறக்கூடிய வசதிகள் செய்யப்பட்டால், அதிலே முறைகேடுகள் நிகழாமல் தடுக்க முடியும். எனவே, அத்தகைய முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று நான் வேண்டிக் கேட்டுக்கொள்கின்றேன்.
இன்றைக்கு நம்முடைய காவல் துறையிலே எந்த ஒரு பதவியிலே நியமனம் பெற்றாலும் அவர் பணி ஓய்வு பெறுகின்ற இடைப்பட்ட காலத்திலே ஏறத்தாழ, 4, 5 பதவி உயர்வுகளைப் பெறுகின்ற வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் உதவி ஆய்வாளர்களாக நேரடியாக நியமனம் பெற்றவர்கள் இன்றைக்கு வேறு பதவி உயர்வுகளைப் பெற முடியாத நிலையிலே இருக்கின்றார்கள். 1987 ஆம் ஆண்டிலே உதவி ஆய்வாளர்களாக நியமனம் பெற்றவர்கள், கடந்த 23 ஆண்டுகளில் வெறும் இன்ஸ்பெக்டர்களாக மட்டும்தான் பதவி உயர்வு பெற்றிருக்கின்றார்கள். அவர்களில் பெரும்பாலோர் D.S.P-க்களுடைய ஊதியத்தைப் பெற்றாலும், அவர்களுடைய பதவி என்பது இன்ஸ்பெக்டர்களாகவே இருக்கின்றது. எனவே, அவர்களை எல்லாம் D.S.P.-க்களாக பதவி உயர்வு செய்தால் அரசுக்கு எந்தவிதச் செலவும் கிடையாது, ஒரு ரூபாய் கூட அதில் நிதி இழப்பு கிடையாது. எனவே, அவர்களுக்கு, குறிப்பாக, பத்தாண்டுகளாக இன்ஸ்பெக்டர்களாக இருப்பவர்களை D.S.P-களாகப் பதவி உயர்வு செய்து அறிவிக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கேட்டுக்கொள்கின்றேன்.
பிற்பகல் 1-50
இன்றைக்கு நம்முடைய அரசு சமூக நீதிப் பிரிவு என்று காவல் துறையிலே ஒன்றை உருவாக்கி, மிகச் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்திலே 174 கிராமங்கள் வன்கொடுமைகள் நடைப்பெறக்கூடிய ஆபத்துள்ள கிராமங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதென்று நம்முடைய கொள்கை விளக்கக் குறிப்பிலே கூறப்பட்டுள்ளது. இந்தச் சமூகப் பிணக்குகளைத் தீர்க்க வேண்டுமென்கின்ற உயரிய நோக்கத்தோடுதான் நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள், சமூகச் சீர்திருத்தக் குழு என ஒன்றை அறிவித்தார்கள். அதிலே பல உறுப்பினர்கள், நான்கூட அதிலே உறுப்பினராக இருக்கின்றேன். ஆனால், அந்தக் குழு இப்பொழுது செயல்படமால் இருக்கின்றது. அந்தக் குழுவிற்கு செயல்படக்கூடிய தலைவர் ஒருவரை நியமித்து, இந்த 174 கிராமங்களிலும் தனிக் கவனம் செலுத்தி, அங்கே இருக்கின்ற சமூகப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
தேர்தல் வருவதற்கு ஒரு ஆண்டே இருக்கின்ற நிலையிலே, சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தி, அதிலே அரசியல் இலாபம் பெற சில சக்திகள் முயற்சிக்கலாம். அத்தகைய நிலைமைக்கு இடம் கொடுக்காமல், நாம் இத்தகைய பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
குறிப்பாக, அரசியல் தலைவர்களுக்கு நாம் இன்னும் கூடுதலான பாதுகாப்பு அளிக்க வேண்டும். அண்மையிலே தஞ்சை அருகிலே ஒரு கிராமத்தில் எங்களுடைய தலைவருடைய வாகனம் தாக்கப்பட்டது. ஆகவே, அவருக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று சொல்லி மாண்புமிகு துணை முதல்வர் அவர்களிடத்திலே நேரடியாக ஒரு மனு ஒன்றை அளித்திருக்கின்றேன். எனவே, எங்களுடைய தலைவருக்குக் கூடுதலான பாதுகாப்பு அளிக்க வேண்டுமென நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
இன்றைக்கு மத்திய அளவிலே தொழிற்சாலைப் பாதுகாப்புப் படை இருக்கிறது. ஆனால், மாநில அளவிலே அத்தகைய படை என்று எதுவுமில்லை. நம்முடைய மாநிலம் தொழில்மயமாகி வருகிறது. தொழில்மயத்திலே, இந்தியாவிலேயே முன்னிலை வகிக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. எனவே, இந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, State Industrial Security Force என்று தனியாக ஒரு படையை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அத்தகைய படையை உருவாக்கி, தொழிற்சாலைகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
அதைப்போல, நம்முடைய மாநிலம் என்பது பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு ஆளான ஒரு மாநிலமாகவும் இருக்கிறது. நீண்ட கடற்கரையைக் கொண்ட ஒரு மாநிலமாகவும் இருக்கிறது. இத்தகைய நிலைகளையெல்லாம் எதிர்கொள்ள வேண்டும் என்றுதான் தேசிய அளவிலே தேசியப் பாதுகாப்புக் குழு என்று ஒன்றை உருவாக்கி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற பதவியும் உருவாக்கப்பட்டு, இன்றைக்கு அத்தகைய பிரச்சினைகள் கையாளப்படுகின்றன. அதேபோல மாநில அளவிலும் பாதுகாப்புக் குழு ஒன்றை உருவாக்கி, அதாவது Security Advisory Board என்று ஒன்றை உருவாக்கி, State Security Advisor என்ற பதவியை உருவாக்கி, இத்தகைய பயங்கரவாத அச்சுறுத்தலை எவ்வாறு கையாளலாம் என்பதனை நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு எடுத்துக் கூறக்கூடிய ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
காவலர்களின் எண்ணிக்கை அண்மையில் நடைபெற்ற பிரதமர் தலைமையிலான மாநாட்டிலேகூட இந்தக் காவலர்களுடைய பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும், அவர்களுடைய எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டுமென்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களே எடுத்துச் சொல்லியிருந்தார்கள். தமிழகத்தில் இருக்கக்கூடிய காவலர்களுடைய எண்ணிக்கையைப் பார்த்தால், 1,05,000 பேர்கள்தான் இருக்கிறார்கள் என்று நம்முடைய அறிக்கையிலே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதிலும் குறிப்பாக, மாநகரங்கள், இன்றைக்கு மும்பையிலே இருக்கின்ற காவலர்களுடைய எண்ணிக்கை 43,242; டெல்லியில் இருக்கின்ற காவலர்களுடைய எண்ணிக்கை 25,345; கொல்கத்தாவில் 25,877 காவலர்கள் இருக்கிறார்கள். ஆனால், சென்னையிலே 13,953 காவலர்கள்தான் இருக்கின்றார்கள். அதிலும் ஏறத்தாழ 2,020 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. ஆக, இங்கே கூடுதலாகக் காவலர்களை நியமிக்க வேண்டும்.
அப்படி நியமிக்கப்படும்போது, அப்படி நியமிக்கப்படுகின்ற காவலர்கள் எல்லாம் Armed Reserve Police–-ல் வைக்கப்பட்டு, பிறகுதான் காவல் நிலையங்களுக்கு நியமனம் பண்ணப்படுகிறார்கள். இந்த முறை மாற்றப்பட வேண்டும். பயிற்சி முடிந்தவுடன், அவர்களை நேரடியாக காவலர்களாக அனுப்பினால்தான், அவர்கள் பெற்ற பயிற்சியை முழுமையாகப் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும். எனவே, காவலர்களை Armed Reserve Police லே முதலிலே வைத்து, அதன்பிறகு
காவல் நிலையங்களுக்கு
அனுப்புகிற முறையை மாற்ற வேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன்.
இரயில்வே பாதுகாப்புப் படையைப் பொறுத்தவரையில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு பேர்கள் நியமிக்கப்பட்டார்களோ, அதே அளவு எண்ணிக்கையில்தான் இன்றும் இருந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு இரயில்வே துறை எவ்வளவோ வளர்ச்சியைப் பெற்றுவிட்டது. மின்சார இரயில்வந்து விட்டது. மெட்ரோ இரயில் வரப் போகிறது. ஆனாலும்கூட, இரயில்வே பாதுகாப்புப் பணியில் இருக்கக்கூடிய காவலர்களுடைய எண்ணிக்கை அதே அளவாகத்தான் இந்த 25 ஆண்டுகளாக இருக்கின்றது. எனவே, அதிலும் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டுமென்று நான் வலியுறுத்துகின்றேன்.
அதுபோல பயங்கரவாத எதிர்ப்புக் குழு என்று ஒன்றை மாநில அளவிலே உருவாக்க வேண்டுமென்று அண்மையிலே மத்திய அரசிலே ஒரு யோசனை கூறப்பட்டிருக்கிறது. அதற்காக Anti–terrorist Squad ஒன்று மாநில அளவிலே உருவாக்க வேண்டும். அதற்கான நிதியை மத்திய அரசு கொடுக்குமென்று சொல்லப்பட்டது. நம்முடைய மாநிலத்தைப் பொறுத்தவரையில் 100 கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் என்றெல்லாம் அறிவித்தார்கள். ஆனால், இதுவரையில் ஒரு ரூபாய்கூட மத்திய அரசிலிருந்து மாநிலத்திற்கு வந்ததாகத் தெரியவில்லை. எனவே, மாநில அளவில் அந்த Anti–terrorist Squad-ஐ உருவாக்குவதற்கான நிதியை நேரடியாக மத்திய உள் துறை அமைச்சரிடத்திலே பேசி, அந்த 100 கோடி ரூபாயை மாநிலத்திற்குப் பெற வேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன்.
இன்றைக்கு காவல் துறையினர், ஏராளமான குடும்ப உறவுகள் தொடர்பான வழக்குகளை, புகார்களைக் கையாள வேண்டிய ஒரு நிலையிலே இருக்கின்றார்கள். அப்படி வழக்குகளைப் பரிசீலிக்கும்போது அந்தப் புகார்களைச் சொல்பவர்கள் அந்த வழக்குகளில் ஈடுபட்டிருக்கின்றவர்களுக்கு கவுன்சலிங் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. அத்தகைய
கவுன்சலிங்
செய்வதற்குத் தகுதி பெற்றவர்கள் இன்றைக்கு நம்முடைய காவல் துறையில் இருக்கிறார்களா என்றால், இல்லை. இதற்கான படிப்பு நம்முடைய பல்கலைக்கழகங்களிலோ, கல்லூரிகளிலோ கிடையாது. இன்றைக்கு இந்திய அளவிலே, பெங்களுரூவிலே இருக்கிற NIMHANS லேதான் இதற்கான ஒரு படிப்பு இருக்கிறது,
ஆக, இந்த
கவுன்சலிங் இ
ன்றைக்கு மிக அதிக அளவிலே தேவைப்படுகிறது என்பதனால், நம்முடைய பல்கலைக்கழகங்களிலே இதற்கான படிப்பை உருவாக்க வேண்டும். இத்தகைய பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் கவுன்சலிங்
குக்கென்று ஒரு தனிப் பிரிவை உருவாக்கி, அதற்கான நபர்களை நியமித்து, இந்தக் குடும்ப உறவுகள் தொடர்பான புகார்களைக் கையாள்வதற்கு நாம் தனிக் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.பிற்பகல் 1-55
மாண்புமிகு பேரவைத் தலைவர்: அடுத்து திரு. ம. இராஜ்குமார். (குறுக்கீடு) திரு. ரவிக்குமார், சீக்கிரம் பேசி முடியுங்கள்.
திரு. து. ரவிக்குமார்: அண்மையிலே உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. உண்மை அறியும் சோதனைகள் தடை செய்யப்பட வேண்டுமென்று சொல்லியிருக்கிறது. Brain Mapping போன்ற அந்த முறைகளைப் பயன்படுத்திப் பெறப்படுகின்ற கருத்துகளெல்லாம் எந்த வழக்கிலும் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாது, அது ஒரு மனிதனுடைய அடிப்படை உரிமைக்கே எதிரானது என்று அண்மையிலே மிகச் சிறந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. அந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நம்முடைய காவல் துறை ஆணையாக வெளியிட வேண்டும். இத்தகைய சட்ட விரோதமான முறைகளை நம்முடைய காவல் துறை கையாளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் இதற்கான சட்டம் என்பதை உருவாக்க வேண்டுமென்று சொன்ன உச்ச நீதிமன்றத்தினுடைய ஆணைக்கேற்ப-நாம் ஒரு மசோதாவை இங்கே சட்டப் பேரவையிலே அறிமுகப்படுத்தினோம். அந்த மசோதா இப்போது செலக்ட் கமிட்டியினுடைய பரிசீலனையில் இருக்கிறது. அந்த மசோதா சட்டமாக்கப்படுகின்ற நேரத்திலே குறிப்பாக உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிற அந்த redressal-அதற்கான ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும். காவல் துறையின்மீது சொல்லப்படுகிற புகார்களை விசாரிப்பதற்கென்று தனி அமைப்பை உருவாக்க வேண்டுமென்பதுதான் உச்ச நீதிமன்றத்தினுடைய அறிவுறுத்தலில் மிக முக்கியமான அம்சம். அது இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதாவில் இல்லை. அந்த மசோதாவிலே அதையும் இடம் பெற வைக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. து. ரவிக்குமார், அது ஆய்வுக் குழுவில் இருக்கிறது, அதைப் பற்றிப் பேசாதீர்கள். உரையை முடியுங்கள். இன்னும் இரண்டு உறுப்பினர்கள் பேச வேண்டியிருக்கிறது.
திரு. து. ரவிக்குமார்: குறிப்பாக நம்முடைய மாநிலத்தினுடைய சட்டம்-ஒழுங்கு நிலைமை இப்போது மிகச் சிறப்பாக இருந்து கொண்டிருக்கிறது. இதை மேலும் சிறப்பாக வைக்க வேண்டுமென்று சொன்னால், நம்முடைய உளவுத் துறை இன்னும் கடுமையாக, நல்ல முறையிலே சீர்படுத்தப்பட வேண்டும், நல்ல முறையிலே கட்டமைக்கப்பட வேண்டும். எனவே, உளவுத் துறைக்கென்று பயிற்சி பெற்ற நல்ல காவலர்கள் வேண்டுமென்கிற அந்த நிலையை எதிர்கொள்வதற்கு உளவுத் துறைக்கு நேரடியாக நியமனம் செய்கின்ற, பணி அமர்த்தம் செய்கின்ற முறையை நம்முடைய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டு, வாய்ப்புக்கு நன்றி சொல்லி, அமர்கிறேன். வணக்கம்.
No comments:
Post a Comment