Thursday, March 17, 2011

வெளியாட்களால் சீரழியும் விடுதிகள்




     அழகான கிராமம் ஒன்றில் வறுமையின் குறியீடாகத் திகழும் ஒரு பகுதியை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் அங்குள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புக்குச் செல்லவேண்டும்.  கண்கவரும் நகரம் ஒன்றில் சேறும் சகதியுமாக ஒரு இடத்தைப் பார்க்கவேண்டும் என்றால் நீங்கள் அங்குள்ள சேரிப்பகுதிக்குச் செல்ல வேண்டும்.  பிரமிக்கவைக்கும் கட்டிடங்களைக் கொண்ட கல்விக்கூடங்கள், உலகத் தரம் வாய்ந்த ஹாஸ்டல்கள் இவற்றுக்கிடையே மனிதர்கள் வசிக்கவே முடியாத மாணவர் விடுதி ஒன்றைப் பார்க்கவேண்டும் என்றால் நீங்கள் ஆதிதிராவிட நலத்துறை மாணவர் விடுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு அறைகளில் ஜன்னல் இருந்தால் அதற்குக் கதவிருக்காது.  கதவிருந்தால் அதை மூடமுடியாது.  தரை பெயர்ந்துபோய் கிடக்கும்.  மின் விளக்குகள் உடைந்துபோய் இருக்கும்.  கதவுகளே இல்லாத கழிவறைகள்,தண்ணீரே வராத குளியலறைகள்.  
ஆதிதிராவிட நலத்துறையால் 1229 மாணவர் விடுதிகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் 84886 மாணவர்கள் தங்கிப்படிக்கின்றனர். இவைதவிர பழங்குடியினருக்கென நடத்தப்படும் 40 விடுதிகள் மற்றும் 296 உண்டி உறைவிடப் பள்ளிகளில் 42648 மாணவர்கள் தங்கிப் படிக்கிறார்கள். ஆதிதிராவிட நலத்துறையின் பட்ஜெட்டில் இந்த ஆண்டு 81 விழுக்காடு தொகை அதாவது 721 கோடி ரூபாய் கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் விடுதிகளுக்கென்று செலவிடப்படும் தொகை எவ்வளவு என்பதை அரசாங்கம் குறிப்பிடவில்லை.
      இந்த விடுதிகளின் நிலை மோசமாக இருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் முதன்மையானது நிதிப் பற்றாக்குறை.மாணவர்களுக்கென்று ஒதுக்கப்படுகிற நிதி தற்போதைய விலைவாசியை ஒப்பிடும்போது யானைபசிக்கு சோளப்பொரியாகவே இருக்கிறது.  ஆறாம் வகுப்பு முதல் ப்ளஸ்டூ வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா 450 ரூபாய் உணவுக்கென்று ஒதுக்கப்படுகிறது.அதாவது ஒரு மாணவனுக்கு நாள் ஒன்றுக்கு 15 ரூபாய். இந்தத் தொகையைக் கொண்டுதான் அரிசி, பருப்பு, எண்ணெய், எரிபொருள் எல்லாவற்றையும் வாங்க வேண்டும்.  மாதத்துக்கு இரண்டு முறை ஆட்டு இறைச்சியும், இரண்டு முறை கோழி இறைச்சியும் போட வேண்டும்.கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 550 ரூபாய்தான் உணவுக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.இந்தத் தொகையில் மாணவர்கள் விரும்புகிற அளவுக்கோ, தரத்துக்கோ உணவை வழங்குவதென்பது எவருக்குமே சாத்தியமில்லை.இன்னொரு குறைபாடும் மாணவர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.  வீட்டில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்குத் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தின் கீழ் வாரம் ஐந்து முட்டைகள் வழங்கப்படுகின்றன.  ஆனால் ஆதிதிராவிடர் நல விடுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கோ வாரம் மூன்று முட்டைகள்தான் கொடுக்கப்படுகின்றன.    
       விடுதிகளுக்கென்று ஒதுக்கீடு செய்யப்படும் தொகையும்கூட ஒழுங்காக மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. சமையலர்கள், விடுதிக்காப்பாளர்கள் என பல ஓட்டைகளிலும் ஒழுகியதுபோக மிச்சம்தான் மாணவர்களின் தட்டுகளுக்கு வரும்.அந்த உணவாவது மாணவர்களால் சாப்பிடப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. காரணம், இந்த விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர் அல்லாத வெளி ஆட்கள். சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் விடுதிகளில் மாணவர்களைவிட இப்படி சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளியாட்களின் எண்ணிக்கையே அதிகம்.இவ்வாறு தங்கியிருப்பவர்களும் விடுதிகளிலேயேதான் சாப்பிடுகிறார்கள். அவர்களுக்குத் தமது அறைகளில் அங்கிருக்கும் மாணவர்களே அடைக்கலம் அளித்துவருகின்றனர்.இதனால், 100 மாணவர்களுக்குத் தயாரிக்கப்படும் சாப்பாட்டை  200 பேர் சாப்பிடவேண்டிய நெருக்கடி. பலசாலிகள் உணவைக் கபளீகரம் செய்துகொண்டு போவதும், பலவீனமான மாணவர்கள் பட்டினியாகக் கிடப்பதும் இந்த விடுதிகளின் நடைமுறை.
      ஆதிதிராவிட நலத்துறை போலவே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும் விடுதிகளை நடத்துகிறது. 1207 விடுதிகள் அந்தத் துறையால் நடத்தப்படுகின்றன. அந்த மாணவர்களுக்கும் இதே தொகைதான் உணவுக்காக வழங்கப்படுகிறது. ஆனால் அங்கே இப்படியான பிரச்சனைகள் எழுவதில்லை. காரணம் அங்கே வெளி ஆட்கள் விடுதிகளில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஆதிதிராவிட மாணவர் விடுதிகளில் வெளியாட்கள் தங்குவதைத் தடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை, அதற்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டியது மாணவர்களின் பொறுப்பு.மாணவர்கள் ஒத்துழைக்கமாட்டேன் என்கிறார்கள் என்று சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டிருந்தால் அரசாங்கத்துக்குத்தான் கெட்டபெயர் உண்டாகும். 
       இந்த விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் பெரும்பாலோர் கிராமப்புறங்களிலிருந்து வருகிறவர்கள்தான்.  விடுதி வாழ்க்கை குறித்த அனுபவமோ, புரிதலோ அவர்களில் பலருக்கு இருப்பதில்லை.  ஒரு மாணவனை நற்பண்பு உள்ளவனாக வளர்த்தெடுக்கக்கூடிய தன்மை நமது கல்வி முறையில் இல்லை. அதை எடுத்துச் சொல்லும் நிலையில் இக்கால ஆசிரியர்களும் இல்லை. நீதிநெறிப் பாடங்களைப் போதிப்பதற்கென ஒதுக்கப்பட்டிருந்த பாடநேரம் இப்போது வேறு பாடங்களுக்கென ஒதுக்கப்பட்டாயிற்று.  நீதிநெறி என்றாலே அது மதம்சார்ந்த கருத்தியலோடு தொடர்புகொண்டதுதான் என்று நினைத்ததாலும், பாடங்கள் யாவும் மதிப்பெண்களைப் பெறுகின்ற ஒற்றை நோக்கத்தோடே வடிவமைக்கப்பட்டதாலும் வந்த வினை இது. இந்த அணுகுமுறையால் எல்லா மாணவர்களுமே பாதிக்கப்படுகிறார்கள் என்றபோதிலும் ஆதிதிராவிட மாணவர்கள்தான் அதிகமான பாதிப்புக்கு ஆளாகின்றனர்.நல்ல விழுமியங்களும், மதிப்பீடுகளும் தெரியாமல் ஆன்மீக வறுமைக்கு ஆளாகும் இந்த மாணவர்கள் ஒருவிதமான கும்பல் கலாச்சாரத்துக்குப் பலியாகிறார்கள். அதனால் விடுதிகளைப் பராமரிப்பதிலோ, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதிலோ அக்கறையற்றவர்களாக அவர்கள்  உள்ளனர்.  கதவுகளையும், மின் விளக்குகளையும், தண்ணீர்க் குழாய்களையும் உடைத்துவிடுவது, ஜன்னல் கம்பிகளை அறுத்துவிடுவது போன்ற குறும்புகளில் சில மாணவர்கள் ஈடுபடுவதால் மற்றவர்கள் பாதிப்படைகிறார்கள்.  
ஆதிதிராவிட மாணவ விடுதிகளை சரிசெய்ய வேண்டும் என்றால் அரசாங்கம் இரண்டு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.  மாணவர்களுக்கு நற்பண்புகளை, யோகா போன்ற பயிற்சிகளை அளிப்பதற்கு உடனடியாக ஏற்பாடு செய்யவேண்டும்.  உணவுக்கான நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயும், கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ஆயிரத்து ஐநூறு ரூபாயும் நிர்ணயிக்கப்படவேண்டும்.  இவையெல்லாவற்றையும்விட மிக முக்கியமானது ஆசிரியர்களை விடுதிக் காப்பாளர்களாக நியமிக்காமல் அதற்காகத் தனியே பணியமர்த்தம் செய்திடவேண்டும்.ஆசிரியர்களை விடுதிக் காப்பாளர்களாய் நியமிப்பதால் பள்ளியும் பாழாகிறது, விடுதியும் வீணாகிறது.
     ஆதிதிராவிட மக்களுக்காக இந்தியாவில் வேறு எங்குமே இல்லாத பல நலத்திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டிருக்கும் முதல்வர் கலைஞர் அவர்கள் ஆதிதிராவிட மாணவர்களின் அவல நிலையைக் களைவதற்கு எதிர்வரும் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வழிசெய்வார் என நம்புகிறேன்.  
.

No comments:

Post a Comment