Thursday, March 22, 2012

சரஸ்வதி சம்மான் 2011 விருதுக்கு பேராசிரியர் அ.அ.மணவாளன் தேர்வு

 சரஸ்வதி சம்மான் 2011 விருதுக்கு பேராசிரியர் அ.அ.மணவாளன் தேர்வு 

கே.கே.பிர்லா அமைப்பு வழங்கும் உயரிய இலக்கிய விருதான சரஸ்வதி சம்மான் விருது பெற பேராசிரியர் அ.அ. மணவாளன் (வயது 75) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2005ல் இவர் எழுதிய 'ராமகாதையும் ராமாயணங்களும்" என்ற ஆராய்ச்சித் தொகுப்பு நூல் இவருக்கு இந்த விருதைப் பெற்றுத் தந்துள்ளது.தமிழ் மொழியில் இரண்டாவதாக இந்த விருதை இவர் பெறுகிறார். 1999 ஆம் ஆண்டு இவ்விருத்து எழுத்தாளர்  இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சரஸ்வதி சம்மான் விருது ரூ.7.5 லட்சம் பணமுடிப்பும் பதக்கமும் கொண்டது. இவர் எழுதிய ஆய்வு நூல், உலகம் முழுதும் வழங்கும் 48 ராமாயணங்கள் குறித்த ஆராய்ச்சித் தொகுப்பாகும். பாலி, சம்ஸ்கிருதம், ப்ராக்ருதம், திபெத்தியன், தமிழ், பழைய ஜாவா மொழி, ஜப்பானிய மொழி, தெலுங்கு, அஸாமி, தாய் மற்றும் காஷ்மீரி ஆகியவற்றில் வழங்கப் படும் ராமாயணக் கதைகளுடன் ஒப்பிட்டுப் படைக்கப்பட்டது இந்த நூல்.

சங்க இலக்கியத்தின்மீது தொடுக்கப்பட்டுவரும் தாக்குதல்களைத் தமது அறிவார்ந்த ஆராய்ச்சிகளின்மூலம் எதிர்கொண்டுவரும் ஒருசில தமிழ்ப் பேராசிரியர்களில் இவரும் ஒருவர். தொல்காப்பியம் குறித்த இவரது பார்வை முக்கியமானது.  தொல்காப்பியத்தில் சில விடுபடல்களும், இடைச்செருகல்களும் இருக்கின்றன என்ற கருத்தை அறிஞர்கள் சிலர் வெளிப்படுத்தியுள்ளனர்.பேராசிரியர் மணவாளன் அவர்களும் அத்தகைய கருத்துகளை முன்வைத்திருக்கிறார். '' ஆதியும் அந்தமுமாக இருக்கவேண்டிய நூற்பாக்கள் பொருளதிகாரத்தில் காணப்பெறவில்லை'' என்கிறார் பேராசிரியர் அ.அ.மணவாளன்.'' பொருளதிகார நூலின் இடையிலேயும் சில நூற்பாக்கள் விடுபட்டிருக்கக் காண்கிறோம். சான்றாக அகத்திணையியலில் தலைவி கூற்றுக்கான நூற்பா காணப் பெறவில்லை... சூத்திரங்களின் விடுபடல் ஒருபுறமிருக்க சில இடைச் செருகல்களும் நிகழ்ந்திருக்கலாமோ என்னும் ஐயம் தோன்றுகிறது. சான்றாக , தாதப்பக்கம், தாபதநிலை, மூதானந்தம், தபுதாரநிலை போன்ற சொற்றொடர்களைக் கூறலாம். இவையெல்லாம் தமிழ்ச் சொல்லும் வடசொல்லும் சேர்ந்த கூட்டுப் பெயர்கள். தொல்காப்பிய இலக்கணப்படி இருமொழிக் கூட்டுச் சொற்கள் அமைவது தொல்காப்பியக் காலத் தமிழ் மரபில் இல்லை.. '' என்கிறார் அவர். இப்படியான தொடரமைப்புகள் பதினெண்கீழ்க்கணக்கு காலத்தில்தான் காணப்படுகின்றன என்று கூறும் பேராசிரியர் மணவாளன் இத்தகைய பாடச் சிக்கல்களை நீக்கித் தொல்காப்பியத்துக்கு செம்பதிப்பு ஒன்றை உருவாக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். ( உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, ஆய்வரங்கச் சிறப்பு மலர், 2010 பக்கம் 92& 93). பேராசிரியர் மணவாளனைப் போலவே தொல்காப்பியத்தில் காணப்படும் இடைச்செருகல்கள் குறித்து பேராசிரியர் சோ.ந.கந்தசாமி அவர்களும் சுட்டிக்காடியிருக்கிறார். ( உலகச் செம்மொழிகள் இலக்கியம், தமிழ்ப் பல்கலைக் கழகம், 2010 பக்கம் 16 - 20 )

செவ்வியல் இலக்கியப் பிரதிகள் குறித்து ஆய்வு மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுவரும் இந்த நேரத்தில் பேராசிரியர் மணவாளன் அவர்களே முயன்று தொல்காப்பியத்துக்கான செம்பதிப்பை உருவாக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.விருது பெற்றிருக்கும் பேராசிரியரை மனமார வாழ்த்துவோம்.   


No comments:

Post a Comment