தலையங்கம்:
‘‘ நான் பழிவாங்குவதைப் பற்றியும் பேசவில்லை மன்னிப்பதைப் பற்றியும் பேசவில்லை : ஒரே பழிவாங்கல், ஒரே மன்னித்தல் , மறப்பது மட்டும்தான்’’ என்றார் ஜோர்ஜ் லூய் போர்ஹே. மறதி என்பது மன்னிப்பின் ஒரு வடிவமாக இருக்கலாம் ஆனால் அது எப்படி பழிவாங்கலாக இருக்க முடியும் ? ‘பாதிக்கப்பட்டவர்களின் போராட்டங்கள் யாவும் ஒரு வகையில் மறதிக்கு எதிரான ஞாபகங்களின் போராட்டங்களாகவே‘ இருக்கும்போது நாம் எப்படி மறதியைப் பழிவாங்கலின் வடிவமாகக் கொள்ளமுடியும் ? போர்ஹே அடுத்த வரியிலேயே இப்படிச் சொன்னார் : ‘‘உங்கள் எதிரியை ஆசீர்வதித்தல் என்பது நன்னடத்தையை எடுத்துக்காட்டுவதாக இருக்கலாம் அதில் சிரமம் எதுவும் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் எதிரியை நேசிப்பது தேவதைகளின் பணி, மனிதர்களுடையதல்ல’’. மிகப்பெரிய அழித்தொழிப்பை எதிர்கொண்டு இன்னும் அதிலிருந்து மீண்டுவர முடியாமல் தவிக்கும் ஈழத் தமிழர்கள் எதை ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள் எதை மறந்தார்கள் என்று தெரியவில்லை.
எல்லாமே பண்டங்களாய் சீரழிக்கப்படும் இன்றைய உலகமயமாதல் சூழலில், வெறுப்பை ராஜதந்திர ரீதியிலான மொழிக்குள் மறைத்துக்கொண்டு அரசியல் விளையாட்டுகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது சர்வதேச சமூகம். அதன் பரிவர்த்தனையில் மனித உயிர்கள் எண்களாகக்கூடக் கருதப்படுவது இல்லை. பியர் பூர்தியூ எடுத்துக் காட்டியதைப்போல ‘‘ சமூகத்திலிருந்து விலக்கப்பட்ட, வரலாற்று நீக்கம் செய்யப்பட்ட கோட்பாடு முன் எப்போதைவிடவும் தன்னை உண்மையானதாக இன்று முன்வைத்து வருகிறது. தாராளவாதக் கதையாடல் என்பது பல்வேறு கதையாடல்களுள் ஒன்று அல்ல. மாறாக அது வலிமையான கதையாடல். மனநோய் விடுதியில் உளவியல் கதையாடல்போல. அது வலிமையானதாகவும் வெல்லமுடியாததாகவும் இருக்கிறது. ஏனெனில் உலகில் உள்ள அனைத்துவிதமான உறவுகளையும் அது தனக்கு சார்பாக வைத்திருக்கிறது. பொருளாதார உறவுகளை மேலாதிக்கம் செய்கிறவர்களின் பொருளாதார விருப்பங்களை இயைபு படுத்துவதன்மூலம் இதை அது சாதிக்கிறது. அதன்மூலம் இந்த சக்திகளின் உறவுகளில் தனது குறியீட்டு அதிகாரத்தை அது இணைக்கிறது’’.
ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்குப்பிறகு சிறிய அளவிலாவது தமிழ் மக்கள்மீதான அடக்குமுறை குறையும் என்று நினைத்தோம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்தத் தீர்மானம் உண்மையில் ஈழத் தமிழர்களுக்கு உதவுமா? என்று ஆராய்ந்து பார்த்தால் நம்பிக்கையாக எதையும் சொல்லமுடியவில்லை. இலங்கை அரசு அரங்கேற்றிய கண்துடைப்பு நாடகத்தின் ஒரு அங்கமாய் இருக்கின்ற ‘‘நல்லிணக்கக் குழு ( லிலிஸிசி ) தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் பரிந்துரைகளை நிறைவேற்றவேண்டும்’’ என்பதுதான் அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானத்தின் முக்கியமான பகுதி. இது நமக்கு எவ்வித நம்பிக்கையையும் தரவில்லை. இந்தத் தீர்மானம், ஈழத் தமிழ் மக்களின் பிரச்சனையை சர்வதேச கவனத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறது. அதுமட்டுமின்றி இலங்கையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டிருக்கின்றன எனவும் அந்தத் தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.அவ்வளவுதான்.
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் கூடிய ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தின்போது நிச்சயம் இலங்கை அரசின் போர்க் குற்றங்களை உலக நாடுகள் கண்டிக்கும், அவற்றை விசாரிக்க சுயேச்சையான விசாரனைக்குழு நியமிக்கப்படும் என்று ஈழத் தமிழர்கள் எதிர்பார்த்தனர். அப்படி எதுவும் நடக்கவில்லை.அன்று அமெரிக்கா அந்தக் கவுன்சிலில் உறுப்பினராக இல்லை. ஆனல் அமெரிக்காவின் ஆதரவு நாடுகள் இலங்கையை ஆதரித்தன. கியூபா இன்னும் ஒரு படி மேலே சென்று இலங்கையைப் பாராட்டவும் செய்தது.இந்தியாவின் ஆலோசனைப்படிதான் கியூபா அவ்வாறு நடந்துகொண்டது இந்தமுறையும் அதே மாதிரிதான் நடக்கும் எனப் பலரும் எண்ணிவந்த நேரத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
பனிப்போர் நாட்களின்போது அமெரிக்காவின் எதிர்முகாமைச் சேர்ந்ததாக இருந்த இந்தியா இப்போது அமெரிக்காவின் நேச நாடுகளில் ஒன்றாக மாறிவிட்டது. எனவே அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்று கருதப்பட்டது. ஆனால், தீர்மானம் வாக்கெடுப்புக்கு வருவதற்கு ஓரிரு நாட்கள் முன்பு வரை இந்தியா தனது நிலையைத் தெளிவுபடுத்தவில்லை. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் யாவும் ஒரே குரலில் வலியுறுத்தியதாலும், உத்தரப் பிரதேசத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தனது கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லவேண்டிய நிலையில் காங்கிரஸ் இருப்பதாலும் கடைசியில் தனது நிலையை அது மாற்றிக்கொண்டது. அப்போதும்கூட இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தில் சில திருத்தங்களைச் செய்ய இந்தியா காரணமாக இருந்திருக்கிறது.
பிம்பங்களின் யுகம் என வர்ணிக்கப்படும் இன்றைய சூழலில் அழிவும் துயரமும்கூட பிம்பங்களாய் மாற்றப்பட்டு நுகர்பொருளாக்கப்படுகின்றன. அப்படித்தான் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின் காட்சிகள் ஊடகங்களில் அவ்வப்போது வெளிப்பட்டு வருகின்றன.ஆதாரங்கள் என்ற விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் இந்தக் காட்சிகள் இன்னொரு பக்கம் நம்மை இந்த வன்முறைக்குத் தகவமைக்கவும் செய்கின்றன.எனவே, இதுபற்றிய விழிப்புணர்வு தமிழ் மக்களுக்குத் தேவை.
இன்றைய உலகச்சூழலில் ‘மன்னித்தல்‘ என்ற சொல் பெற்றிருக்கும் அரசியல் பரிமாணத்தை ழாக் தெரிதா தனது உரை ஒன்றில் சுட்டிக்காட்டுகிறார் ( சிஷீsனீஷீஜீஷீறீவீtணீஸீவீsனீ ணீஸீபீ திஷீக்ஷீரீவீஸ்மீஸீமீss ). ‘‘மன்னித்தல் என்பது ‘குற்றமிழைத்தவர்‘ ‘ பாதிக்கப்பட்டவர்‘ என்ற இரு தனித்துவங்களைக் கையாள்கிறது.அதில் மூன்றாம் தரப்பு நுழையும்போது பொது மன்னிப்பு, நல்லிணக்கம்,செப்பனிடல் முதலானவற்றைப் பற்றிய பேச்சு ஆரம்பித்துவிடுகிறது’’ என்கிறார் தெரிதா. ஈழப்பிரச்சனையில் சர்வதேச சமூகம்தான் இப்போது மூன்றாம் தரப்பாக இருக்கிறது. நல்லிணக்கத்தை உருவாக்குவது என்ற பெயரால் சிறுபான்மையினத்தவரை அடிமையாகவே இருங்கள் என்று அது சொல்ல முயற்சிக்கிறது. இதுகுறித்தும் நாம் விழிப்புடன் இருக்கவேண்டும்.
ரவிக்குமார்
ஆசிரியர் , மணற்கேணி
No comments:
Post a Comment