Thursday, August 30, 2012

மலையாள அதிகார வர்க்கம் ஈழத்துக்கு எதிராக இருப்பது ஏன்? -சிவா சின்னப்பொடி




பொதுவாகவே மலையாள அதிகார வர்க்கம் தமிழர்களை மதிப்பதில்லை. தமிழர்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற மமதை அவர்களுக்கு உண்டு.தமிழர்களை 'பாண்டி' என்று இழிசனர்களாக  சுட்டும் இடுகுறிப் பெயரால் அழைக்கும் வழக்கம் கேரளாவில் பொதுவாக உள்ளது.மலையாள மொழி என்பதே தமிழுடன் சமஸ்கிரதம் சேர்ந்து உருவான மொழி.அவர்கள் அதை சமஸ்கிரதத்தோடு தமிழி என்ன ஆதித் திராவிட மொழி சேர்ந்து உருவானது என்று தான் சொல்வார்கள்.பண்டைய சேர நாடு தான் இன்றைய கேளரா என்பதைக் கூட சேர நாடு தமிழர்களுடைய நாடு என்று சொல்லமாட்டார்கள்.தமிழி என்ற தழிழுக்கு முந்திய மொழி பேசியவர்களின் நாடு என்று தான் சொல்வார்கள்.
 இத்தனைக்கும் பாண்டியர்களும் சோழர்களும் மோதிக்கொண்ட அளவுக்கு சேரர்களும் பாண்டியர்களும், சேரர்களும் சோழர்களும் மோதிக் கொண்டது  குறைவு.
தமிழர்கள் மலையாளிகளுக்கு போட்டியாக இருந்ததும் கிடையாது.  கேரளாவுக்குத் தேவையான இறைச்சி முதல் கொண்டு மரக்கறி அரசி வரையிலான உணவுப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து தான் செல்கின்றன. 
ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கியதில் சிங்கள அதிகார வர்க்கத்தின் பங்கை விட மலையாள அதிகார வர்க்கத்தின் பங்கு மிக முக்கியமானது.
வட இந்திய அதிகார வர்க்கத்துக்கு எப்படி சோழர்களையும் அவர்களது புலிச்சின்னத்தையும் பிடிப்பதில்லையே அது போல இந்த மலையாள அதிகார வர்க்கத்துக்கு ஈழம் என்ற சொல் எட்டிக்காயை விட கசப்பானதாக இருக்கிறது.
அதற்குக் காரணம் மலையாள அதிகார வர்க்கத்துக்கு ஈழவர்களை பிடிக்காது.அதனால் ஈழத்தையும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதேயாகும்! 
ஈழவர்கள் என்பது கேரளாவில் வாழும் ஒரு பிரிவு மக்களாகும்.இவர்கள் மொத்த கேரள மக்கள் தொகையில் 23 வீதமாகும்(73 இலட்சம் பேர் )
ஒரு 60 முதல் 70 ஆண்டுகளுக்கு முன்னர் கேளர ஆதிக்க சாதியினரான நம்பூதிரிகள் வீதியில் வரும் போது இவர்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.நாயர்கள் விதியில் வந்தால் இவர்கள் அவர்களுக்கு 15 அடி தள்ளியே ஓரமாக நடந்து செல்லவேண்டும் என்று பணிக்கப்பட்டிருந்தார்கள்.ஒரு நம்பூதிரி அல்லது நாயரை ஈழவன் தொட்டுவிட்டால் அவனுக்கு மரணதண்டனை வழங்கப்படும் என்ற அளவு கொடிய ஒடுக்குமுறை இருந்தது.
இந்த ஈழவர்கள் சேரர் பரம்பரையை சேர்ந்த வில்லவர்கள் என்ற இனத்தின் வழித் தோன்றல்கள் என்றும் ஈழத்தை சேர்ந்த ஈழவா அல்லது திய்யா என்ற மன்னர் பரம்பரையை சேர்ந்தவர்களும் அவர்களது குடி மக்களும் என்றும் இவர்களின் பூர்வீகம்பற்றி இரண்டு கருத்துக்கள் இருக்கின்றன.
கேரள அதிகார வர்க்த்தைச் சோந்த நம்பூதிரிகளினதும் நாயர்களினதும் ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறையில் இருந்து இந்த ஈழவர் சமூகம் விடுதலை பெறுவதற்கு காரணமாக இருந்தவர் நாராயண குரு.
அவர்  அறிவு ஒன்றுதான் மனித குலத்துக்கு உரியது என்றும் அதைக் கொண்டு முன்னேற்றம் காண்பதுதான் வாழ்க்கை என்றும் சொன்னார். இந்த அறிவுக்கு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை என்றும் எதையும் நிராகரிக்காமல் அனைத்தையும் நேர்வழியில் பயன்படுத்தி அறிவைக்கொண்டு முன்னேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆலங்களுக்குள் ஈழவர்கள் செல்லக் கூடாது என்று என்று அதிகார வர்க்கம்  சொன்னபோது அவர் ஈழவர்களுக்கான ஆலயங்களை நிறுவினார்.
1888 ம் ஆண்டு திருவனந்தபுரத்துக்கு அருகிலுள்ள அருவிப்புரம் என்ற இடத்தில் அவர் முதலாவது சிவன் கோவிலை நிறுவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து அவர் சிவன், விஷ்ணு, சுப்பிரமணியர் முதலான தெய்வங்களுக்கான கோவில்களை உருவாக்கியதுடன் வள்ளலாரின் வழியில்  இறைவன் ஒயிமயமானவன் என்பதை விளக்குவதற்காக  விளக்கை கருவறை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்து கோவில்களை அமைத்தார்;, பின்பு சத்யம்-தர்மம்-தயவு எனும் சொற்களை கருவறை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்தும் கோவில்களை அமைத்தார். அதன் பின்னர் மனிதனது மனச்சாட்சிதான் மிகப்பெரிய தெய்வும் என்பதை வலியுறுத்தும் வகையில் களவங்கோடு எனும் பகுதியில் நிலைக் கண்ணாடியை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்து புதிய கோவில் ஒன்றை அமைத்தார்.
அத்துடன் இந்தக் கோவில்களை ஒட்டி பாடசாலைகளும் களரி முதலான பாரம்பரிய விளையாட்டுகளை பழகும்  இடங்களையும் அவர் அமைத்தார்.ஈழவர்களால் மரபுரீதியாக செய்யப்பட்டு வந்த ஆயுர் வேத மருத்துவத்தை வளப்படுத்துவதற்காக ஆயுர் வேத மருத்துவமனைகளையும் அதை முறையாகக் கற்பதற்கான கல்விக் கூடங்களையும் அவர் அமைத்தார்.
இந்த நடவடிக்கைகள் காலாகாலமாக சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டிருந்த ஈழவர் சமூகத்தை அந்த ஒடுக்கு முறையில் இருந்து விடுவித்தது.அந்த சமூகத்தை கல்வி அறிவும் முற்போக்கு சிந்தனையுமுள்ள ஒரு சமூகமாக மாற்றியது.
நாராயண குரு ஈழவர் சமூகத்தில் இந்த மாபெரும் பாச்சலை உருவாக்க உந்து சக்தியாக இருந்தவர் ஒரு தமிழர்.

திருவனந்தபுரத்தில்  அப்போதைய  பிரித்தானிய அரசாங்கப் பணியாளராகப் பணிபுரிந்த தைக்காடு அய்யா என்ற தமிழரே அவராகும். சிலம்பு, யோகக் கலைகள் போன்றவைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆசானாகவும் திகழ்ந்த அவரிடம் நாராயண குரு தியானம், யோகா போன்ற கலைகளுடன் தமிழில் ஆழமான அறிவையும் பெற்றார். திருமூலரின் திருமந்திரம் திருக்குறள் போன்ற தமிழ் நூல்களையும் கற்று அறிந்தார்.
தைக்காடு அய்யாவை தான் சந்தித்ததும் திருமூலரின் திருமந்திரமும் தான் தனது வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியதாக நாராயண குரு கூறியிருக்கிறார்.
இது காலாகாலமாக கேரளத்தில் வானளாவிய அதிகாரங்களை கொண்டிருந்த நம்பூதிரிகள் மற்றும் நாயர்களை உள்ளடக்கிய மலையாள அதிகார வர்க்கத்துக்கு கோபத்தை எற்படுத்தியதுடன் தமிழர்கள் மீதான வன்மத்தை வளர்க்கவும் காரணமாக அமைந்தது.
1980 களின் ஆரம்பத்தில் நான்  கேரள இடதுசாரி தோழர்களோடு அரிவிப்புரம்,நெய்யாற்றின் கரை, கொட்டாரக்கரை,காயங்குளம், கோட்டயம் சங்கணாஞ்சேரி முதலான முன்னாள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளிலுள்ள ஈழவர் கிராமங்களில் களப்பணியாற்ற சென்ற போது எனக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.
இந்த கிராமங்களின் அமைப்பு முறை குறிப்பாக ஒழுங்கைகள் வேலிகள் குடிசைகள் மற்றும் கல் வீடுகளின் அமைப்பு முறை தோட்டம் கிணற்றடி அமைப்பு முறை மா பலா தென்னை கமுகு முதலான மரங்கள் வளர்ப்பு கோவில்கள் அவற்றின் பூசை முறை என்பன அச்சொட்டாக எமது தென்மாரட்சி பகுதி(மீசாலை எழுதுமட்டுவாள் பளை பகுதி) கிராமங்களைப் போலவே இருந்தன.
உணவு முறையும் கூட புட்டு அப்பம் கழி சொதி குளம்பு என்பன கூட எமது உணவு முறையைப்போலவே இருந்தது. தோங்காய் பாலை பிரதானமாக பயன்படுத்தி குழம்பு சொதி வைப்பது மாங்காய் போட்டு தீயல் வைப்பது இவையெல்லாம் அச்சொட்டாக எங்கள் சமையல் முறையைப் போலவே இருந்தது.(தமிழகத்தில் இந்த சமையல்முறை கிடையாது)
பேச்சு வழக்கிலே கூட மோனே! மோளே! வெய்யலத்தை போகாதை! மழையத்தை போகாதை! பறையாம இரு!!எவட போற! உறைப்பு கூட! இப்ப பல சொற்கள் நாங்கள் யாழ்ப்பாணத்தில் பேசுகின்ற சொற்களை அதே உச்சரிப்புடன் இந்த ஈழவ மக்கள் பேசுவதை கேட்கக் கூடியதாக இருந்தது.
எமது வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள நாகர்கோவில் குடத்தனை மாமுனை குடாரப்பு முதலான ஊர்களில்  'பார் அவரை' என்பதை 'பேப்பார்' என்றுற சொல்வார்கள்.இதை நான் யாழ்ப்பாணத்தில் வேறெந்த பகுதியிலும் கேட்டதில்லை.
ஆனால் தமிழக கேரள எல்லையிலுள்ள களியக்காவளை பகுதியில் இதைக் கேட்டபோது எனக்கு அளவுகடந்த ஆச்சரியமாக இருந்தது.

அதைப் போலவே பண்பாட்டு அடிப்படையிலும் அவர்கள் எம்மைப் போல தாய் வழி சமூகக் கூறுகளை முதன்மையாக கொண்டவர்களாக இருந்தார்கள்.தாய் வழி சொந்தங்களுக்கு முன்னுரிமை.பெண் திருமணமாகி கணவனோடு தாய் வீட்டில் இருப்பது(தமிழகத்தில் இது வீட்டோடு மாப்பிளை என்று இழிவாகக் கருதப்படுகிறது)

தொழில் ரீதியாக தென்னந்தோட்டங்களில் அலவாங்கில் தேற்காயை குத்தி உரிப்பது தென்னோலை ஊற வைத்து கிடுகு பின்னவது.பாய் பெட்டி மூடல்கள் இழைப்பது எல்லாமே எங்கள் ஊரைப் போன்றது தான். 
இந்த ஒற்றுமைகள் நாயர்கள் நம்பூதிரிகள் வாழும் கிராமங்களில் கிடையாது என்பது தான் இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்
ஆனால் இதேவேளை மலபார் என்று சொல்லுகின்ற வட கோரளத்திலுள்ள ஈழவர் கிராமங்கள் மாத்தறை தங்காலை கதிர்காமம் முதலான பகுதிகளிலுள்ள சிங்களக் கிராமங்களை போல இருந்தன.அந்தப் பகுதிப் பெண்கள் சிங்கள கிராமியப் பெண்களைப் போலவே உடையணிந்தாhhர்கள். தென்னம் பொச்சை நிர்நிலைகளில் ஊறவைப்பது.பின்னர் அதிலிருந்து தும்பு எடுப்பது.அதன் பின் கயிறு திரிப்பது என்று இந்தத் தொழில் சிங்களக் கிராமங்களில் நடைபெற்ற அதே பாணியிலேயே நடைபெற்றது.

இது இந்த மக்களின் வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஒரு ஆர்வத்தை எனக்கு எற்படுத்தியது.
எனது இந்த முயற்சிக்கு உதவுவதற்கு கேரளாவின் புரட்சிகர பொதுவுடமை இயக்கத்தை சோந்த 4 தோழர்கள்  முன்வந்தனர்.
அதில் முக்கியமானவர் அப்போது திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில்  கல்வி கற்று வந்த தோழர் எமிலியாசாகும்.
நாங்கள் திருவனந்தபுரம் பல்கலைக்கழகம், திருவனந்தபுரத்திலிருந்த நாராணாய குரு மன்றம் திருவிதாங்கூர் சமஸ்தான நூலகம் என்பவற்றிலிருந்து ஈழவர்கள் பற்றிய வரலாற்று தகவல்களை திரட்டியதுடன் நெய்யாற்றின் கரையில் இருந்து ஆரம்பித்து மேற்குத் தொடர்ச்சி மலையேரக் கிராமங்கள் மற்றும் வடக்கே காசர் கோடு வயநாடு ஈறாக நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் 18 மாதங்கள் பல்வேறு ஈழவர் சமூக பெரியார்களை சந்தித்து தகவல்களை திரட்டி  கள ஆய்வு செய்ததில் ஈழவர்களுக்கும் ஈழத்திற்கும் தொடர்பிருந்ததை உறுதி செய்ய முடிந்தது.
முக்கியமாக சேரர்களுடைய ஆட்சிக்காலத்தில் படைவீரர்களாகவும் படைதளபதிகளாவும் மெய்காப்பாளர்களாவும் வணிகர்காகவும் இருந்த இவர்கள் ஈழத்திலும் பரவி வாழ்ந்திருக்கிறார்கள்.கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் கோவில் கட்டியதாக சொல்லப்படும் காலத்தில் ஈழத்திலும் இவர்களே கண்ணகிக்கு கோவில் கட்டியிருக்கிறார்கள்.(கண்ணகிக்கு இலங்கையில் கோவில் கட்டப்பட்ட செய்தி சிங்கள்  வரலாற்று நூல்களிலும் உள்ளது) தமிழகத்துடன் மண உறவுகளை வைத்துக்கொண்ட ஈழத்து மன்னர்கள்(ஈழம் என்பது அப்போது முழு இலங்கைத் தீவையும் குறித்தது) இவர்களையே படைத்தளபதிகளாகவும் மெய்காப்பாளர்களாகவும் நிமித்திருக்கிறார்கள்.
ஆச்சரியப் படத்தக்க விதத்தில் இவர்களில் ஒரு பகுதியினர் சிறு தெய்வ வழிபாட்டை மேற்கொள்பவர்களாகவும் மற்றொரு பகுதியினர் தமிழகத்தில் நிலவிய மாகாயான பௌத்தத்தை கடைப்பிடிப்பவர்களாகவும் இருந்தார்கள்.ஈழத்திலும் இவர்களே தேரவாத பௌத்தத்துக்கு எதிரான மகாயான பௌத்தத்தை கடைப்பிடிப்பவர்களாக இருந்தார்கள்.
கி.பி 6ம் நூற்றாண்டில் ஆதிசங்;கரருடைய எழுச்சி தமிழ் நாடான சேரநாட்டை ஆரிய சமஸ்கிரத கலப்புக்குள்ளாக்கி லிங்ங வழிபாடு  பத்தினி தெய்வ வழிபாடு (கண்ணகிவழிபாடு) முதலான தமிழ்  வழிபாட்டு மரபுகளை அழித்து அறுவகை சமையம் என்ற வைதீக கட்டுக்குள் கொண்டுவந்தது.சேரநாடு பரசுராமர் தன்னுடைய ஆயுதமான கோடரியை கடலுக்குள் எறிந்ததால் உருவான நாடு  விஷ்ணுவால் ஆட்கொள்ளப்பட்ட வாமண மன்னரால் ஆளப்பட்ட புனித பூமி என்பது போன்ற ஆரியம் சம்பந்தப்பட்ட புராணக் கதைகள் முதன்மைப்படுத்தப்பட்டன.
சேரர்களுடைய ஆட்சிக்காலத்தில் அதிகார முடையவர்களாக இருந்த வில்லவர்கள் எனப்படும் இந்த ஈழவர்கள் சமஸ்கிரத மேலாதிக்க அலையில் அதிகாரம் இழந்து அடிமைகளாக்கப்பட்டார்கள் 
அதேநேரம் தமிழகத்தில் சைவ நாயன்மார்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட   சமண பௌத்த மதங்களுக்கு எதிரான இயக்கம் சோழ பாண்டிய மன்னர்களின் ஆதரவைப் பெற சமண பௌத்த மதத்தினரை கழுவேற்றிக்  கொலை செய்யும் அளவுக்கு வெறி கொண்டதாக மாறுகிறது.இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் மாகாயான பௌத்தம் (சமணமும் கூட)  துடைத்தழிக்கபடுகிறது.அந்த மதத்தை சேர்ந்த விகாரைகள் இடித்தழிக்கப்பட்டு அங்கிருந்த  பிக்குகள் கழுவேற்றிக்  கொல்லப்பட அந்த மதத்தை கடைப்பிடித்த ஏனையோர் அவர்களது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டவர்களில் ஒரு சிறு தொகையினர்  ஈழத்துக்கு தப்பியோட ஏனையோர் அந்த காலத்தில் வலுவிழந்த அரசை கொண்டிருந்த வேளிர் நாட்டுப் பகுதிக்கு (பின்னாளிள் திருவிதாங்கூhர்) சென்று தஞ்சமடைகின்றனர்.
ஈழத்திலும் இந்த மதப் போர் சைவ பௌத்தப் போராகவும் மாகாயான தேரவாதப் போராகவும் வெடிக்கிறது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் கந்தரோடை என்ற கதிரமலையில் இருந்த தமிழ் பௌத்த(மகாயான) தலைநகரம் கைவிடப்படுகிறது.அந்த நகரத்தின்  கடைசி மன்னனான உக்கிரசிங்கன் சோழ இளவரசியான மாருதப்புர வல்லி (மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவிலை கட்டியவள்)யை மணம் புரிந்து சைவ சமயத்தக்கு மாறியதுடன் தனது மனைவியின் பேரால் வல்லிபுரம் என்ற நகரத்தையும் உருவாக்கி தனது அரசை அங்கு மாற்றுகிறான்.
தெற்கே மாகாயான பௌத்தத்தை கடைப்பிடித்த (அனுராதபுரத்திலிருந்த அபயகிர விகாரை உட்பட) அனைத்து விகாரைகளும் தேர வாத பௌத்த பிரிவினரால் அழித்தொழிக்கப்படுகிறது.தேரவாத பௌத்தமானது  தமிழ் எதிர்ப்பு தமிழ்நாட்டு எதிர்ப்பு ஆரிய தூய்மைவாதம் என்ற முழக்கங்களை முதன்மைப்படுத்தி தன்னை இலங்கையின் ஆதிக்க மதமாக நிறுவிக்கொள்கிறது.  தென் இலங்கை முழுவதும் பரவி வாழ்ந்த மகாயான பௌத்தத்தை கடைப்பிடித்த வில்லவர்கள் அவர்களது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர்.மகாயான பௌத்தமும் துடைத்தளிக்கப்படுகிறது.
இவ்வாறு அன்று ஈழம் என்று அழைக்கப்பட்ட இலங்கைத் தீவு முழுவதிலும் இருந்து விரட்டியடிக்கப்பட்ட வில்லவர்கள் அன்றைய சேரநாட்டில் தஞ்சமடைகிறார்கள்.அவர்கள் ஈழத்தில் இருந்து வந்தவர்கள் என்கின்ற படியினால் அப்போது சேரநாட்டில் தலையெடுத்த ஆதிக்க சாதியனரான (ஆரிய வம்சாவழி) நம்பூதிரிகளும் நாயர்களும் அவர்களை ஈழவா அல்லது ஈழவர் என அழைத்தனர். இதுவே பின்னர் அவர்களது சாதிப் பெயராக ஆகிவிட்டது.
இதிலே முக்கியமான விடயம் ஈந்த ஈழவர்கள் அல்லது வில்லவர்களில் ஈழத்தில் ஒரு அரச பரம்பரையை சோந்தவர்களும் இருந்திருக்கிறார்கள்.அது எந்த அரச பரம்பரை என்பதற்கு உரிய சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லலை.திய்யா என்று அழைக்ப்படும் இந்த மன்னர் பரம்பரை மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் அனுராதபுரத்தை ஆண்ட சேனன் குந்திகன் பரம்பரையின் வழித்தோன்றல்களா?அல்லது யாழ்ப்பாணக் குடாநாட்டை ஆண்ட உக்கிரசிங்கனின் அரச வம்சத்தை சோந்தவர்களா? அல்லது வேறெந்த அரசும் அவர்களுக்கு இருந்ததா? என்பது அராயப்பட வேண்டும்.
நாங்கள் இந்த வரலாற்று கள ஆய்வை மேற்கொண்ட காலத்தில் நவீன தொழில் நுட்ப வசதிகளோ இணைய வசதிகளே ,உரிய போக்குவரத்து வசதிகளோ எமக்கு இருக்கவில்லை.கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்த பல கிராமங்களுக்கு நாங்கள் கால்நடையாகவே சென்றிருக்கிறோம்.
இன்று நவீன தொழில் நுட்ப வசதிகளும் இணயத்தின் வருகை உலகை கணனியின் விசைப்பலகைக்குள் அடக்கும் அளவுக்கு சுருக்கிவிட்ட நிலையில் தமிழர்களின் வரலாறு பற்றிய ஆர்வமுள்ளவர்கள் இந்;த ஈழவர்களின் வரலாறு பற்றிய ஆய்வை துறைசார் ரீதியில் மேற்கொள்ள வேண்டும்.
1983ல் நாங்கள் இந்த கள ஆய்வை முடித்த போது தோழர் எமிலியாஸ் சொன்னார் 'தோழர் ஈழவிடுதலைக்காக போராடும் உங்களுக்கு சிங்கள அதிகார வாக்கம் மட்டும் எதிரியல்ல,இன்னொரு 10 வருடம் பொறுத்திருந்து பாருங்கள் இந்த மலையாள அதிகார வாக்மும் உங்களை எதிர்க்கும்,அவர்களுக்கு ஈழவர்களை பிடிக்காது.அதனால் ஈழத்தையும் பிடிக்காமல் போகும் கவனமாய் இருங்கள்'என்று.
அவர் சொன்னது இன்று நூற்றுக்கு நூறு வீதம் உண்மையாகி இருக்கிறது.


2 comments:

  1. அன்பு சிவா
    ஈழவர் ஈழம் குறித்த உங்கள் கட்டுரையை தமிழ்மன்றம் என்ற இணையக் குழுவிலும் இட்டேன். அதற்கு ஏதேனும் பதில் வந்தால் அனுப்புகிறேன். நீங்கள் ஆராய்ந்திருக்கும் தொடர்பு மேலும் ஆழமான ஆய்வினைக் கோருகிறதென எண்ணுகிறேன். ஆனால் டெல்லியில் இருக்கும் கேரள அதிகாரிகள் ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதற்கான காரணம் இதுவென்று சொல்லமுடியவில்லை. பிரதமர் அலுவலகம் வெளியுறவுத் துறை முதலானவற்றில் அவர்களது செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கிறது என்றாலும் அவர்களது நிலைபாடு பெரும்பாலும் இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு ஒப்பவே இருக்கிறது என்பது என் கருத்து. அந்த இடங்களில் காஷ்மீரைச் சேர்ந்தவர் இருந்தாலும் பெருமளவில் வித்தியாசம் எதுவும் இருக்காது. இந்திய அமைதிப் படையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பலர் இருந்தனர் என்பதைக்கொண்டு பஞ்சாபியர் எல்லோரும் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்பதாக அப்போது பேசப்பட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
    கேரளப் பகுதிக்கும்ஈழத்துக்குமான உறவை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள பௌத்த சமண மதங்களின் வரலாற்றையும் நாம் அறிந்தாகவேண்டும். புத்தம் குறித்த மிகவும் எதிர்மறையான மனநிலைத் தமிழர்களிடம் உருவாக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் அதற்கான வாய்ப்பு ஈழத்தில் இருப்பதாக நான் எண்ணவில்லை.
    உடனடி அரசியல் பணிகள் கடந்து இத்தகைய ஆர்வங்களில் நீங்கள் மனம் செலுத்துவது பாராட்டத்தக்கது.
    அன்புடன்
    ரவிக்குமார்

    ReplyDelete
  2. ஈழக் கோரிக்கை பின்னடைவு அடைந்துள்ளதற்கு பல கரணியங்கள் உண்டு. அதில் இதுவும் ஒரு முக்கிய கரணியம்தாம். ஆனல் ஈழ எதிர்ப்பின் அடிப்படை கரணியம் தமிழ்நாடுதான். அதற்கான விதை இங்கு விதைக்கப் பட்டு தில்லிக்கு கொண்டு செல்லப் பட்டது. இதுதான் மறுக்கபடமுடியாத உண்மை.

    அங்குள்ளவர்களிடம் ஈழம் மலர்ந்தால் இந்தியா உடைந்து விடும் என்ற கருத்து ஆழமாக பதிக்கபட்டது மிக மிக முக்கியக் கரணியம். இதை விதைத்தவர்களின் அச்சமெல்லாம் ஈழம் மலர்ந்தால் தமிழன் விழித்துக் கொள்வான், அவர்களது பிடியிலிருந்தும் ஆரியத்தின் பிடியிலிருந்தும் தமிழும், தமிழரும் விடுபட்டுவிடுவார்களென்ற அச்சம் தான்.

    தமிழ் நாட்டை திராவிடத்தின் பெயரால் ஆண்டுவரும் வந்தேறிகள் ஆரிய எதிர்ப்பை வாயலவில் மட்டும் பேசி , செயல் என்று வரும் பொழுது ஆரிய அடிமைகளாய் செயல் படுகின்றவர்கள். தமிழ், தமிழர் நலன்களைத் தங்கள் தன் நலனுக்காக நடுவண அரசிற்கு விற்றுவிட்டதும் ஒரு கரணியம். இவை எல்லாவற்றையும் விட தமிழன் இன்னும் அடிமைத்தனத்தைலிருந்து மீளாததுதான் மிகப் பெரியக் கரணியம்.

    பிலிப்

    ReplyDelete