நிகரி சமத்துவ ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர் த.பாலு ஆற்றிய ஏற்புரை
அனைவருக்கும் எனது வணக்கம்!
நான்,பேராசிரியர் கல்யாணி,ரவிக்குமார்,பேராசிரியர் பழமலை,ரவிகார்த்திகேயன் எல்லோரும் ஒரே வட்டத்தில் புள்ளிகளாய் செயல்பட்டு வந்தோம். காலப்போக்கில் ஒவ்வொரு புள்ளியும் ஒரு வட்டமாகச் செயல்படத் தொடங்கிவிட்டது. எழுத்தாளர் ரவிக்குமார் அவர்கள் எப்பொழுதும் தேடல் உள்ளவர்.நிறைய சிந்தித்து நிறைய எழுதுபவர். கலை,இலக்கியம், அரசியல் திறனாய்வு , ஆய்வுகள் என்று பல்வேறு தளங்களில் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். அவரது பரந்த வாசிப்பு, அறிவாற்றல், கூர்மையான தெளிவான எழுத்தாற்றல், மொழித்திறன் முதலானவற்றின் விளைவாக அவரது ஆளுமை பரந்து விரிந்து போகிறது. என்னைப் போன்றவர்கள் ரவிக்குமாரை மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் பார்க்கிறோம். அவர் நடத்தும் மணற்கேணியின் தரம் குறித்து எவருக்கும் மாற்று அபிப்ராயம் இருக்காது. ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அறிவியல் கருத்தை, சமத்துவத்தைப் பேசிய வள்ளுவர் காலத்தில் ஊரில் உள்ள பொதுவான கேணி எல்லோருக்கும் பொதுவானதாக இல்லை, தண்ணீர் எடுப்பதில் சமத்துவம் நிலவவில்லை, கல்வி கற்கும் வாய்ப்பிலும் சமத்துவமில்லை என்கிற உண்மைகளையும் மணற்கேணி என்ற சொல் நினைவுபடுத்துகிறது. தமிழகம் தற்போது சந்திக்கும் தண்ணீர் சிக்கலையும் அது சுட்டிக்காட்டுகிறது.
ரவிக்குமார் எந்த தளத்தில் செயல்பட்டாலும் அங்கே அடித்தளத்து மக்களுக்காக , யாரும் கண்டுகொள்ளாத மக்கள் தொகுதிக்காக, ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கிறார் என்பது முக்கியம். எனவேதான் அவர் கல்வித் தளத்தைத் தேர்ந்தெடுத்து அதில் பாகுபாடுகளுக்கு எதிராகச் செயல்படும் பள்ளி ஆசிரியருக்கும், கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும் நிகரி என்கிற விருதைத் தனது சொந்த பங்களிப்பில் வழங்குகிறார்.
விருதுகள் என்றாலே ஒத்த கருத்துகளுக்கு இடமில்லாமல் பெரும்பாலும் சர்ச்சைகள் எழுவது உண்டு. பாரத் ரத்னா விருதை அளித்ததில்கூட எம்.ஜி.ஆருக்குப் பிறகுதான் அண்ணல் அம்பேதகருக்கு வழங்கினார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது அத்தகைய விருதுகளுக்குப் பின்னாலிருக்கும் அரசியல் விருப்பு வெறுப்புகள் நமக்குத் தெரிகிறது.ஆனால் ரவிக்குமார் ஒரு அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தும் கட்சி அரசியல் அடையாளம் ஏதுமில்லாமல் இந்த நிகழ்வை நடத்துகிறார்.
என்னிடம் நற்கூறுகள் ஏதேனும் இருக்கிறதென்றால் அவை பலராலும் ஏற்படுத்தப்பட்டவை. குறிப்பாக பழமலையும் கல்யாணியும், கோச்சடை, ரகமத்துல்லா கான், லோகியா போன்ற பேராசிரியர்களும் ஏற்படுத்திய தாகம்தான் அதற்குக் காரணம்.குறிப்பிட்ட சிந்தனைப் போக்கும், இயக்கச் சூழலும் களச் செயல்பாடுகளும் சேர்ந்து உருவாக்கிய கூட்டு மனம்தான் நான். நிறைய செவிலித் தாய்களால் உருவாக்கப்பட்ட எனக்கு அளிக்கப்படும் விருது அவர்கள் அனைவருக்கும் அளிக்கப்படும் விருதுதுதான். இந்த விருதை அவர்கள் அனைவரின் சார்பில் நோபல் பரிசாக நினைத்து ஏற்றுக்கொள்கிறேன்.
இப்போது அரசுப் பள்ளிகள் ஒடுக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த ஏழைகளின் இறுதிப் புகலிடமாக உள்ளது. இதே காரணத்தினால்தான் சமூகக் கண்காணிப்பும் தலையீடும் இல்லாமல் அந்தப் பள்ளிகள் கிடக்கின்றன.அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் தமிழில்கூட எழுதவோ,வாசிக்கவோ தெரியாமலும், கணிதத்தில் கூட்டல் பெருக்கல் போன்ற அடிப்படைகளைக்கூட அறியாமலும்தான் உயர்நிலைப் பள்ளிக்கு வருகிறார்கள். இதுவொரு சமூகக் கேடு, சமூகத்துக்குச் செய்யும் துரோகம். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொறுப்புணர்வுடன் கடமையைச் செய்வதே நல்ல சமூகப் பணிதான். சமூக இயக்கங்களின் கண்காணிப்பு இருந்தால் அரசுப் பள்ளிகளை குறிப்பாகத் தொடக்கப் பள்ளிகளை சீர்படுத்திவிடலாம்.
விருது கொடுப்பது ஒருவரை ஊக்கப்படுத்திச் செயல்பட வைக்கும் என்பதால் இளைஞர்களுக்கு விருது கொடுப்பதே அதிகப் பயன் தரும். இங்கு வந்திருக்கும் நண்பர் ஜனகராஜ் உட்பட அனைவருக்கும் நன்றி!
No comments:
Post a Comment